அவர் இந்தக் குடியரசை உருவாக்கி, ஜனநாயகம் ஆழமாக பரவ மற்றும் அரசியல் அடுக்கு செயல்பட தேவையானவற்றை அழுத்தமாக சுட்டிக்காட்டினார்
நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் மீதும் உலகின் மீதும் தனது முத்திரையைப் பதிய வைத்த வரலாற்று நாயகரான ஜவகர்லால் நேருவை அங்கீகரிப்பதில் உலகிற்கு எந்தத் தயக்கமும் இல்லை. 1964இல் நேரு இறந்தபோது, நியூயார்க் டைம்ஸ், நவீன இந்தியாவை உருவாக்கியவர் என வர்ணித்தது. நேரு இல்லாத உலகம் எனும் தலைப்பில் எக்கனாமிஸ்ட் முகப்புக் கட்டுரை வெளியிட்டது. வெகுமக்கள் மீது அவர் கொண்டிருந்த மாயப் பிடியை நினைவுகூர்ந்த அந்தக் கட்டுரை, இந்த மகத்தான மனிதர் இல்லாமல் உலக அரங்கு ஏழ்மையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவில் நேரு மீதான அபிப்ராயத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்டார் என்றாலும், இப்போது அவரை மறக்கும் அல்லது அவரது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் போக்கு இருக்கிறது. “பண்டிட் நேருவினால்தான் காங்கிரஸ் விரும்பிய ஜனநாயகம் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் 8ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து நேரு நீக்கப்பட்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான தேசிய ஆவணக் காப்பகக் கண்காட்சியில் அவர் இடம்பெறவில்லை. கலாச்சார அமைச்சகம், நேருவின் அதிகாரபூர்வ இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அனைத்து இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அரங்காக மாற்ற தீர்மானித்திருக்கிறது. இப்படி எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் செயல் வேறு எங்கும் நடந்திராதது. லிங்கன் நினைவிடத்தில், மற்ற தலைவர்களின் சிலைகள் திடீரெனத் தோன்றினால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
நேரு குறி வைக்கப்படப் பல காரணங்கள் இருக்கின்றன. மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு அந்த இயக்கத்தைத் தடை செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். அவரை நீண்ட காலமாக வெறுத்துவருகிறது. அவர் அரசு கொள்கையாகக் கடைப்பிடித்த மதச்சார்பற்ற தன்மையின் வடிவத்துடன் அது தீவிரமாக முரண்படுகிறது. 1962இல் சீனாவுடனான போரில் பெற்ற தோல்விக்காக நேருக்கு எதிரான மக்கள் உணர்வை தட்டி எழுப்புவது மிகவும் எளிதாக இருக்கிறது. அணி சாராத தன்மை கொண்ட நேருவின் வெளியுறவுக் கொள்கையும் அரசு திட்டமிடலில் அவரது நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
மகத்தான தன்மைக்கான எழுச்சி
நேரு அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு என்னவாக இருந்தார், இப்போது நாட்டுக்கு அவர் என்ன அளித்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கையைத் திரும்பி பார்ப்பது பொருத்தமானது. நேருவுக்கு இருக்க வேண்டியதைவிடக் குறைவான வாழ்க்கை வரலாறு நூல்களே இருக்கின்றன. புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் உரைகள் என அவர் எவ்வளவு எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது இது எத்தனை கடினமான பணியாக இருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வரலாற்று ஆசிரியரான ஜூடித்.எம்.பிரவுனின் வாழ்க்கை வரலாறு நூலான ’நேரு; ஏ பொலிடிகல் லைப்’ (2003) இந்த வகையில் உதவுகிறது. தற்போதுள்ள ஆவணங்கள், சோனியா காந்தி அணுக அனுமதி அளித்த 1947க்குப் பிந்தைய ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம், நேருவின் வாழ்க்கையை நடுநிலையோடு அலசுகிறது.
பெரும் செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் நேரு. அவர் தந்தை மோதிலால் நேரு ஒரு வழக்கறிஞர், பிரவுன் சொல்வது போல, காலனிய ஆட்சி, படித்த இந்தியர்களுக்கு பொருளியல் மற்றும் அரசியல் வாய்ப்புகளை அளித்த நிலையில் இந்தியாவின் மத மற்றும் சமூக மரபுகளை கேள்விக்குள்ளாக்கிய காலத்தில் ஜவஹர்லால் நேரு வளர்ந்தார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நேருவின் அரசியல் கருத்துக்களை வடிவமைத்தன. இங்கு அவர் ஏகாபத்தியத்திற்கு எதிரான அதிருப்தியை வளர்த்துக்கொண்டார். இந்தியா திரும்பியதும் ஆர்வம் இல்லாமல் இருந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு காந்தியாலும் 1919-20இல் நடந்த போராட்டத்தாலும் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார். அப்போது தேசியவாத இயக்கம், மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலவிதமான கருத்து வேற்றுமகள் சார்ந்த போன்ற விவாதங்களைக் கண்டுவந்தது. சுதந்திரம் பெறுவதற்கான உத்திகள், வியூகங்கள், ஒத்துழையாமையைப் பயன்படுத்துவது, முழு சுதந்திரத்திற்குப் போராடுவதா அல்லது படிப்படியாக முயற்சிப்பதா எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்தப் பிளவுபட்ட சூழலில் காந்தி பக்கம் நின்ற நேரு, மகாத்மாவின் அரசியல் அணுகுமுறையிலும் தார்மீக மாற்றத்தை வலியுறுத்திய தன்மையிலும் அதிருப்தி கொண்டிருந்தாலும், அவரை இந்திய சுதந்திரத்திற்கான பாதையின் மையமாகப் பார்த்தார். நேருவின் பார்வை மற்ற அம்சங்களாலும் தீர்மானிக்கப்பட்டது. ஒன்று, அவர் இந்து- முஸ்லிம்களின் கலாச்சாரக் கலப்புச் சூழலில் வளர்ந்தார். மோதிலால் ஆரம்பக் கல்வியை முஸ்லிம் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அரேபிய, பாரசீக மொழிகளில் பெற்றார். அலகாபாத்தில் வசித்த காஷ்மீர் குடும்பம் என்ற முறையில் அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படவில்லை. அரசுக்கு விசுவாசம் கொண்டவர்களாக கருதப்பட்டனர். நேரு எப்போதுமே அன்னியராகவே கருதப்பட்டார். தீவிர தேசியவாதியாக இருந்தாலும் கலாச்சார நோக்கில் ஆங்கிலேயர்களைப் போற்றினார். இந்தியா அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்தாலும், அதன் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஏற்கவில்லை.
நேரு மிக விரைவிலேயே அரசியலிலும் காங்கிரஸ் விவகாரங்களிலும் மூழ்கினார். ஓயாமல் படிக்கவும் செய்தார். சிறைச்சாலையில் இருந்ததும் இதற்கு உதவியது. 1923 முதல் 1945 வரை 23 ஆண்டுகளில் அவர் 12 நாட்கள் முதல் 1041 நாள் வரை 9 முறை சிறைக்கு அனுப்பபட்டார். ஆக மொத்தம் 3,259 நாட்கள். இது அவரது வாழ்க்கையின் 9 ஆண்டுகள். சிறை வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டவர், தான் ஏற்படுத்திக்கொண்ட நட்பு மற்றும் பழக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தனக்கென்று தனிப்பட்ட வெளி இல்லாதது பற்றியும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். “படிப்பதே அவருக்கு மிகவும் ஆறுதலாக அமைந்தது” என்று பிரவுன் எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் மற்றும் சமகால பிரச்சினைகள் பற்றி அவர் படித்தார். “சிறையில் தீவிர வாசிப்பு மிகவும் அவசியம். இது இல்லாமல் மனது தேக்கம் அடைந்து, அழுகிவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், 1934 பிப்ரவரி முதல் 1935 செப்டம்பர் வரை அவர் மாதம் 15 -20 புத்தகங்கள் என 188 புத்தகங்கள் வாசித்தார்.
சுயசரிதையிலும் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலிலும், அவர் எழுதிய சிந்தனையைத் தூண்டும் கடிதங்கள், உரைகளில் அவருடைய அற்புதமான உரைநடையைக் காணலாம். அவர் வாசித்த நூல்களே இந்த நடையை வடிவமைத்தது. இந்தியாவிலும் பிரிட்டனிலும் இருந்த ஆண்டுகள், ஐரோப்பியப் பயணங்கள், மற்ற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள் ஆகியவை வாயிலாக நேரு, காலனிய ஆதிக்கம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையிலும் நிலவ வேண்டிய சமத்துவம், நிலச் சீர்த்திருத்ததிற்கான அவசியம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அரசின் தலையீடு, தேசத்தில் வாழ்க்கையில் அறிவியலுக்கான இடம் (மத நம்பிக்கைகளை அவர் ஏற்கவில்லை), தேசத்தின் உருவாக்கத்தில் பெண்களின் அதிக பங்களிப்பு, உலகில் இந்தியாவின் இடம் முதலானவை தொடர்பாக வலுவான நம்பிக்கைகளை உருவாக்கிக்கொண்டார்.
1930களில் காங்கிரசில் நேரு முக்கியத்துவம் பெற்ற நிலையில் இந்த வகையான அறிவார்ந்த வளர்ச்சி இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. 1930களில் நேரு கட்சியின் தலைவரானார். போராட்டம், அரவணைப்பு, கோஷ்டிப் பிளவு, தேக்கம் ஆகியவற்றை காங்கிரஸ் இயக்கம் அப்போது எதிர்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நேருவின் விசாலமான அறிவு பெரிதும் கைகொடுத்தது. இந்த தசாப்தத்தில் காந்தி தீவிர அரசியல் தலைவர் என்பதிலிருந்து விலகி, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் அதிக கவனம் செலுத்திவந்தார். 1936 ஆகஸ்ட்டில் தனது வாரிசு நேரு என காந்தி வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கியிருந்தார். குறுகிய குறிக்கோள் அல்லது தனிப்பட்ட குறிக்கோளை முன்னெடுக்காமல் இந்தியாவுக்கான முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு திறமைகளால் காங்கிரசில் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவராக அவரை காந்தி கருதினார். இந்தக் கட்டத்தில் நேரு கட்சி ஆலோசனைகளில் முக்கிய அங்கம் வகித்ததோடு, பொதுமக்களையும் பெருமளவு வசீகரிக்கத் துவங்கியிருந்தார்.
1946இல் இடைக்கால அரசுக்கு தலைமை வகித்ததோடு, சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கு வழிவகுத்த ஆலோசனைகளில் மவுண்ட்பேட்டன், ஜின்னா ஆகியோருடன் பங்கு கொண்டார். பூரண சுதந்திரத்துக்காகப் அதற்காக போராட காந்தி தயாராவதற்கு முன்பே முழு சுதந்திரத்தை வலியுறுத்திய நேரு, அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் மாகாணங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மவுண்ட்பேட்டன் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். இந்தியா சிதறுண்டு போக இது வழி வகுக்கும் என அஞ்சினார். மவுண்ட்பேட்டன் தன் முடிவிலிருந்து பின்வாங்கினார். ஆயினும், நேருவும் அவரது சகாக்களும் சுதந்திரத்திற்கு முந்தைய வாரங்களில், தீவிர வகுப்புக் கலவரம், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது குறித்த மாகாணங்களின் தேர்வு, பிரிட்டிஷ் இந்தியாவின் பாகப் பிரிவினை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு காஷ்மீர் பிரச்சினை, சுதந்திரம் அடைந்த ஆறு மாதங்களில் மகாத்மா படுகொலை ஆகியவற்றையும் நேரு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மூன்று முக்கியப் பங்களிப்புகள்
1946க்குப் பிந்தைய வாழ்க்கையே நேருவின் மதிப்பிற்கு அதிக காரணமாகிறது. குடியரசாக இந்தியா உருவாவதற்கான மூன்று தீர்மானகரமான தலையீடுகளை அவர் மேற்கொண்டார்.
முதலில் அவர் இந்தியாவுக்கான தனது தொலைநோக்கு, அரசியல் சாசனத்தில் இடம்பெறுவதை உறுதி செய்தார். அரசியல் நிர்ணய சபையில், மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெறும் குடியரசாக இந்தியாவைப் பிரகடனம் செய்தது உள்ளிட்ட, அதன் நோக்கங்களை வரையறை செய்த வரைவை உருவாக்கி சமர்ப்பித்தார். எல்லோருக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சம அந்தஸ்து, வாய்ப்பு ஆகியவை அளிக்கப்படும். அனைவருக்கும் கருத்து சுதந்திரம், தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்று சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் ஆகியவை அளிகப்படும். சிறுபான்மையினர். பழங்குடிகள், பிற்பட்ட வகுப்பினருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். இவை அனைத்தும் சாதாரணமானது அல்ல. 1937 மாகாண சபைத் தேர்தலில், சொத்துரிமை அடிப்படையில் வரையறுக்கப்பட்டு, 3 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951 தேர்தலில் 17.3 கோடிப் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். “நம்முடைய ஜனநாயகத்தின் முதன்மைச் சிற்பி நேரு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேறு எந்த தேசியவாதியையும்விட அவர் தான், அனைவருக்குமான வாக்குரிமை மற்றும் பல கட்சி அமைப்பை முன்வைத்தார்” என்று வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, தனது ‘பாட்ரியாட்ஸ் அண்ட் பார்டிசன்ஸ்’ புத்தகத்தில் எழுதுகிறார்.
துணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு மத மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களிலிருந்து பல நூறாண்டுகளாகப் பெற்றுக்கொண்ட நாகரிகத்திலிருந்து பிறந்த கலைவயான தேசம் எனும் நம்பிக்கையே இந்தியாவுக்கான நேருவின் தொலைநோக்கின் மையமாக இருந்தது என பிரவுன் எழுதுகிறார். மாற்று அரசியல் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளுக்கும் தயாராக இருந்த சமஸ்தான மாநிலங்கள் மற்றும் பிற சமூகங்களை அங்கமாக கொண்ட அரசியல் தொகுப்பாக, இந்தியா ஒரு சுதந்திர நாடாக உருவான சூழலிலும் நேரு செயல்பட வேண்டியிருந்தது. அனைவருக்கும் அடிப்படை உரிமை, மதச்சார்ப்பற்றதன்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிளவுகளைக் கருத்தில் கொண்ட அரசுக் கொள்கை மூலம் இந்திய ஒன்றியத்தை ஒன்றாக வைத்திருக்க முடியும். மாறுபட்ட அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கு அரசியல் சாசன ஜனநாயகம் ஏற்றது என்பதை நேரு புரிந்துகொண்டிருந்தார். அம்பேத்கர், பட்டேல், மவுலானா ஆசாத், ராஜாஜி போன்ற சிறந்த தலைவர்களை இந்தியா அதிர்ஷ்டவசமாகப் பெற்றிருந்தது. அவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் தனிப்பட்ட அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியர்கள் ஒன்றாக இருந்து, நாட்டிற்கான கனவைக் கொண்டிருக்க வழிசெய்யும் அரசியல் வரைவை நேரு உருவாக்கினர்.
இரண்டாவதாக, உலக அரசியலில் நேருவின் தாக்கம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனவாதம், காலனி ஆதிக்கம் ஆகியவற்றின் விமர்சகராக, உறுதியான குரலாக, ஆசிய ஒற்றுமை, ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை மற்றும் உலக அமைதியின் ஆதரவாளராக அவர் விளங்கினார். குஹா குறிப்பிடுவது போல, இரண்டு பக்கத்திலிருந்தும் நன்மையைப் பெறும் வகையில், இரண்டு அதிகார மையங்களிலிருந்தும் விலகி நிற்கும் அணிசேரா நாடுகளுக்கான கொள்கையை அவர் தொலைநோக்குடன் உருவாக்கினார். இது இந்தியாவை நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்தராகவும், வளரும் நாடுகளின் தலைவராகவும் உருவாக்கியது. பிரவுன் சொல்வது போல, வெளியுறவுக் கொள்கையில் நேருவுக்கு இருந்த புரிதல், நாட்டுக்கு தனித்துவமான, சுயேச்சையான சர்வதேச அடையாளத்தை உருவாக்கியது.
மூன்றாவதாக, நேரு உள்நாட்டுச் சமூக மாற்றத்திலும் கவனம் செலுத்தினார். வளர்ச்சிக்கான உந்துக்சக்தியாகவும் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்வதற்கான சாதனமாகவும் அரசின் திட்டமிடலை அவர் பார்த்தார். கலப்புப் பொருளாதாரத் தன்மை கொண்ட சோஷலிச அரசு, புதுமை மற்றும் வளர்ச்சியை முடக்கியதற்காக அண்மைக் காலங்களில் விமர்சிக்கப்பட்டாலும், நேரு காலத்துக் கொள்கைகளுக்கு ஆதரவு இருக்கவேசெய்தது. உதாரணமாக இந்தியத் தொழிலதிபர்கள் போட்டியிலிருந்து பாதுகாப்பை விரும்பினர். தலைவர்களை அவர்கள் காலத்து அளவுகோல்களுக்கு ஏற்பவே எடை போட வேண்டும். பிரவுன் குறிப்பிடுவது போல, அப்போது தேர்வு செய்யப் பல நிர்வாக மாதிரிகள் நேருவுக்கு இருக்கவில்லை. சோவியத் தொழில்மயமாக்கலால் ஈர்க்கப்பட்டவர், அதனுடன் இணைந்த வன்முறை இல்லாமல் அதை இந்தியாவில் பிரதியெடுக்க முயன்றார்.
இந்தியா எங்கிருந்து துவங்கியது என்பதை நினைவில் கொள்வது அவசியம்: சுதந்திரத்தின்போது கல்வி அறிவு 14 சதவீதமாக இருந்தது,. வறுமை அதிகமாக இருந்தது. பல்வேறு துறைகளில் அரசின் தலையீடு அவசியமாக இருந்தது. உதாரணமாக, அணுசக்தித் திட்டம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் அரசின் தலையீடு முக்கியப் பலன்களை அளித்தது.
தவறுகளும் தோல்விகளும்
அதே நேரத்தில் நேரு பல தோல்விகளையும் கண்டிருந்தார். சீனாவின் நோக்கத்தை முற்றிலுமாக அவர் தவறாகப் புரிந்துகொண்டார். 1962ஆம் அண்டில் மாவோ தாக்குதல் நடத்துவார் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. தனது அனுமானம் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை பாதிக்கவும் அவர் அனுமதித்தார். தனது நண்பரான கிருஷ்ண மேனனை, அவர் இருக்க வேண்டிய காலத்தைவிட நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பு அமைச்சராக இருக்க அனுமதித்தார். பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்காமல் இருந்தது, அரசியல் திறமையை பாதித்து இந்தியாவுக்குப் பல விதங்களில் பாதகத்தை ஏற்படுத்தியது. நிலச் சீர்திருத்தம் போன்ற அவரது உள்நாட்டு சீர்திருத்தங்கள் பல, கிராமப்புற நிலச்சுவான்தார்களோடு நெருக்கமான தொடர்புகொண்டிருந்த மாநிலத் தலைவர்களால் முடக்கப்பட்டது. வலதுசாரிகள் அவர் மிகவும் சோஷிலிசவாதியாக இருந்தார் என்றும் இடதுசாரிகள் அவர் அதிக அளவில் செயல்படவில்லை என்றும் நினைக்கின்றனர் என்கிறார் குஹா. அவர் துவக்கி வைத்த பெரிய அணைகள் உள்ளூர் சமூகத்தை பாதித்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் அந்நியப்பட்டது ஷேக் அப்துல்லாவின் நீண்ட கைதில் இருந்து துவங்குகிறது. அதே நேரத்தில் நேரு தன் நாட்டு மக்களுடன் முரண்பட்டிருந்தார். நிர்வாகச் செயல்திறமையின்மையைக் கண்டு வருந்தினார். வகுப்புவாத கோஷங்கள், காங்கிரசில் இருந்த விலைபோகும் தன்மை, தேசத்தை உருவாக்கும் முயற்சியில் பொருந்தாமல் இருந்த குறுகிய மாநில, சாதிய நலன்கள் ஆகியவற்றால் அவர் அதிருப்தி அடைந்தார்.
எனினும் அவருடைய அபாரமான சாதனைகளின் மதிப்பு இதனால் பதிக்கப்படவில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்குப் பின் இருக்கும் மிக முக்கியமான தார்மிக சக்தி நேரு என நீரத் சவுத்ரி எழுதிய நினைவு குறிப்பை குஹா சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் நேருவுக்கு வாரிசு இருக்க முடியாது, அவரது கலவையான தலைமையின் பல்வேறு அம்சங்களுக்கான வாரிசுகள் மட்டுமே இருக்க முடியும் என அவர் எழுதினார். இது அவரது வீச்சின் பரப்பை உணர்த்துகிறது.
காந்தி ஒரு துறவியாகக் கருதப்பட்டார். ஆனால், நேருவும் இந்தியாவுக்கு வழிகாட்டுவதில் குறைந்தவர் இல்லை. அதன் அரசியல் மற்றும் சமூகத்திற்கான கொள்கைகளின் திசை குறித்து அவர் ஆலோசனை வழங்கிக்கொண்டே இருந்தார். அவர் ஊக்கம் அளித்தார், தாஜா செய்தார், மறுத்தார். அவர் தோல்வியும் அடைந்தார். களைத்துப்போகும் கட்டம்வரை அவர் தன் வாழ்நாளில் பலமுறை உழைத்திருக்கிறார். “நேரு அவர்களுக்கு உதவ விரும்பினார், ஆனால் பதிலுக்கு எதையும் பெற விரும்பவில்லை என்பதைப் பலர் உணர்ந்துள்ளனர்” என்று ஆஸ்திரேலியத் தூதர் வால்டர் குரோகர் கூறுவதை குஹா சுட்டிக்காட்டுகிறார்.
அவர் வாழ்க்கையானது இந்தியாவுக்காக வாழப்பட்ட முழு வாழ்க்கையாகும். இந்தியாவில் நேரு தாக்கம் செலுத்தாத அல்லது வடிவமைக்காத ஒரு பொது அமைப்பு அல்லது குடியரசின் அம்சத்தை காண்பது அரிது. அவரது செயல்களில், விட்டுச் சென்ற முத்திரைகளில், கொண்டாடவும் விமர்சிக்கவும் நிறைய இருக்கின்றன. ஆனால், அவரது பங்கைச் சிறுமைப்படுத்துவது அல்லது மறப்பது என்பது இந்தியாவின் சீரழிவை அம்பலப்படுத்துமே தவிர, வரலாற்றில் நேருவின் இடத்தை மாற்ற முடியாது.
சுஷில் ஆரோன்
சுஷில் ஆரோன் சுயேச்சை பத்திரிகையாளர். அவரது டிவிட்டர் முகவரி @SushilAaron
நன்றி: தி வயர்
https://thewire.in/history/nehru-india-cannot-forget
மறுக்கமுடியாத மறக்ககூடாத வரலாற்றை பேசிய கட்டுரை. நன்று!
good article bjp has no eligbile to spoke about nehru
எனக்கு நேரு பிடிக்காது.. அவரை ஆதரித்தால் ஒருதலைப்பட்சமான காந்தியையும் பிடிக்காது.
He is a great man. Thank u ….
romba kashtam……aarvamaaga savukku padikka aarambithen …ippoluthu ella pathirikkai polavum side edukka aarambithaayitru……..vaalga valamudan