மாமா ஜி வீட்டுக்கு ஆமா ஜி வருகிறார்
மாமா ஜி: வாங்க ஜி வாங்க, உங்களை பெயிலில் எடுக்கறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.
ஆமா ஜி : ரொம்ப நன்றி ஜி, சுத்தமா முடியல
மாமா ஜி: அடி பின்னிட்டாங்களா ஜி ?
ஆமா ஜி : அடிச்சா கூட பரவா இல்ல ஜி சோறு எல்லாம் கொட்ட கொட்டையா இந்த சேட்டனுக எப்படி தான் சாப்பிடறானுகளோ?
மாமா ஜி : குழம்பு நல்லா இருந்துச்சா.
ஆமா ஜி : குழம்பை விடுங்க ஜி. கருணை கிழங்கு பொறியல் மாதிரி ஒன்னு போட்டாங்க. செம்ம டேஸ்ட் ஜி. அருமையா இருந்துச்சி.
மாமா ஜி : யோவ், அது கருணை கிழங்கு பொறியலா இருக்காது. மாட்டுக் கறியா இருக்கும். கண்ட கருமத்தையெல்லாம் தின்னுட்டு வந்துருக்க.
ஆமா ஜி : ஜி தெரிஞ்சுதான் தின்னேன். செம்ம டேஸ்டு ஜி. அதை போயி நம்ப ஆளுங்க எதுக்குறாங்கன்னு நெனைச்சா வேதனையா இருக்கு ஜி.
மாமா ஜி : சரி சரி. வெளியில சொல்லாதீங்க.
ஆமா ஜி : நான் ஏன் வெளியில சொல்லப் போறேன். ஆட்சி மாறுனா, நம்ப ஆளுங்க முக்காவாசி பேரு ஜெயில்லதான் இருக்கப் போறாங்கன்னு நினைச்சா…..
மாமா ஜி : தொண தொணனு பேசாம கிளம்புங்க ஜி ரஜினி ஜியை பார்க்க போலாம்
ஆமா ஜி : ரஜினி ஜியை யா? சூப்பர் ஜி எதுக்கு?
மாமா ஜி: பேட்டி எடுக்கறேன்னு அவரை குழப்பி விட்டுட்டானுக, அதனால நம்மள பேட்டி எடுத்து அதை எல்லா பத்திரிகைக்கும் குடுத்திடலாம்னு கட்சி மேலிட உத்தரவு.
ரஜினி ஜி : வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா? உக்காருங்க பேட்டி ஆரம்பிக்கலாமா ?
மாமா ஜி: பேஷா ஆரம்பிக்கலாம் ஜி , நீங்க எப்போ பேட்டி கொடுத்தாலும் ஒரே பிரச்னையா இருக்கே ஜி ?
ரஜினி ஜி : எனக்கு ஏர்போர்ட்ல கண்டம்னு ஒரு கம்னாட்டி சொன்னான் நான் கூட பிலைட்ல போகும் போது தானு நெனெச்சேன் பார்த்தா ஏர்போர்ட் வாசல்ல தான் கண்டம் போல.
ஆமா ஜி : பெண்கள் தங்களுக்கும் சம உரிமை வேணும்னு கேக்கறாங்களே ஜி, ஆண்கள் போகும் இடத்துக்கு நாங்களும் போவோம்னு சொல்லறாங்களே அதை பத்தி உங்க கருத்து என்ன ஜி ?
மாமா ஜி: ஜி நீங்க இதுக்கு பதில் சொல்லாதீங்க
ரஜினி ஜி : நல்ல கேள்வி தானே அவர் கேட்கட்டும். அதாவது ஜி பெண்கள் நம் கண்கள், சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸு தான்னு பாரதியாரே சொல்லிருக்கார். நானே என்னோட படையப்பா படத்துல இதை பத்தி பேசியிருக்கேனே.
மாமா ஜி: ஜி அவரு சபரிமலை விஷயத்தை கேட்கறார்
ரஜினி ஜி : பழனி மலை வேற. மருத மலை வேற. நான் நடிச்சது அண்ணாமலை. அர்ஜுன் நடிச்சது மருதமலை. சபரிமலைன்னு இன்னும் படம் எடுக்கல.
மாமா ஜி: இதுக்கு தான் உங்களை சொல்ல வேண்டாம்னு சொன்னேன்
ஆமா ஜி: அத விடுங்க ஜி. அந்த மூணு பேர் விடுதலையை பத்தி என்ன நினைக்கிறீங்க ?
ரஜினி ஜி : கண்ணா மூணு பேர் இல்ல. ஏழு பேர்.
ஆமா ஜி : ரஜினி ஜி. இது விடுதலையான மூணு பேர். ஏழு பேர் இன்னும் விடுதலை ஆகல.
ரஜினி ஜி : அப்போ மொத்தம் பத்து பேரா ?
ஆமா ஜி : இல்ல ஜி. மூணு பேர் தனி. ஏழு பேர் தனி.
ரஜினி ஜி : அப்போ பத்து பேரு தானே ?
ஆமா ஜி : ஏங்க மாமா ஜி. இந்த ஆளுக்கு விளக்கி சொல்லுங்க.
மாமா ஜி : ரஜினி ஜி. உங்களை மாட்டி விடப் பாக்குறான். கவனமா பேசுங்க.
ஆமா ஜி : அந்த 7 பேரை விடுதலை செய்யலாமா கூடாதா
ரஜினி ஜி : அதான் விடுதலை பண்ணிட்டதா ஆளுனர் மாளிகையில அறிக்கை கூட விட்ருக்காங்களே.
ஆமா ஜி : மாமா ஜி. என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு.
ரஜினி ஜி : இதைத்தான் நானும் சொல்றேன். எல்லையில ராணுவ வீர்ர்கள் எவ்வளவு கஷ்டப் பட்றாங்க தெரியுமா ? நீங்க எல்லையை பத்தி எல்லையில்லாம பேசறீங்க.
ஆமா ஜி : நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் ஜி. அதை விடுங்க. நீங்க பிஜேபியை ஆதரிக்கிறீங்களா இல்லையா ?
ரஜினி ஜி : யாரு பலசாலின்னு மொதல்ல முடிவு பண்ணனும். அதுதான் ரொம்ப முக்கியம். இப்போ காலா படத்தை எடுத்துக்கங்க.
ஆமா ஜி : யோவ். அவ்வளவுதான் மரியாதை. நான் என்ன கேக்கறேன். நீ என்ன சொல்லுற ?
ரஜினி ஜி : திடீர்னு கேட்டுட்டீங்களா ? ரெண்டு நிமிஷம் தலை சுத்திடுச்சி.
மாமா ஜி: எதிர் கட்சி எல்லாரும் சேர்ந்து எதிர்க்கறதால பாஜக மோசமான கட்சியா தான் இருக்கும்னு சொன்னீங்களே.
ரஜினி ஜி : அப்படியா சொன்னேன் ? அதை அப்படி புரிஞ்சுக்க கூடாது.
ஆமா ஜி : வேற எப்படி புரிஞ்சுக்கணும் ?
ரஜினி ஜி : புரிஞ்சுக்கவே கூடாது. நான் என்ன புரிஞ்சா பேசறேன். நேத்து ஒன்னு, இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு ஒன்னுன்னு பேசல ?
ஆமா ஜி : அப்போ மோடியை கெட்டவர்னு சொல்றீங்களா ? என்ன ஜி
ரஜினி ஜி : மோடி ஜி பலசாலி. அதை மறந்துடாதீங்க.
மாமா ஜி : சரி ஜி சரி ஜி. இலவசம் கொடுத்து தான் நாடு சீரழிஞ்சிடுச்சுனு ராஜா ஜி சொல்றார் ஆனா நீங்க இலவசம் தப்பு இல்லைனு சொல்றீங்க
ரஜினி ஜி : ஒரு குட்டி கதை, ஒரு பையன் இருந்தான் அவன் அப்பா நிறையா சிகரெட் பிடிப்பார் அதை பார்த்த அவங்க தாத்தா ஒரு ரூம் புல்லா சிகரெட் வாங்கி வச்சு அதை புகைச்சு முடிக்க சொன்னார். அவங்க அப்பா அத்தனையும் புகைச்சதுக்கு அப்பறம் சிகரெட் புகைப்பதையே வெறுத்துட்டார்.
ஆமா ஜி : செம ஜி இதே மாதிரி இலவசத்தை நிறையா மக்களுக்கு கொடுத்தா அவங்க வெறுத்திடுவாங்க அப்படி தானே ஜி
ரஜினி ஜி : இது கூட நல்லா இருக்கே நானே பதில் தெரியாம அருணாச்சலம் கதையை சொல்லிட்டு இருந்தேன் அதுல இருந்து இதுக்கு விடை எடுத்துடீங்க. ஹாட்ஸ் ஆப் டு யு ஆமா ஜி
ஆமா ஜி : குத்து மதிப்பா தான் சொன்னீங்களா அதானே பார்த்தேன் பட் தேங்க்ஸ் ஜி
மாமா ஜி : இது சரி வராது நாம வேற கேள்விக்கு போவோம். பெட்ரோல் விலை இப்போ கொஞ்ச நாளா குறைஞ்சிட்டு வருதே அதை பத்தி என்ன நினைக்கறீங்க ?
ரஜினி ஜி : எச் எச்ச எச் எச்ச, கச் சச்ச கச் சச்ச
ஆமா ஜி : எச்.ராஜா கிட்ட கச்சா எண்ணையை பத்தி கேக்க சொல்லறாருனு நினைக்கறேன்
மாமா ஜி : இதோட பேட்டியை முடிச்சுக்கலாம் ஜி நீங்க முன்ன குடுத்த பேட்டியே பரவா இல்ல இது ரொம்ப மோசமா இருக்கு. நான் தமிழிசை அக்கா கிட்ட கேட்டு நீங்க கொடுத்ததா எழுத்திக்கறேன்
ரஜினி ஜி : தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் ஏதாவது செய்யணும் ஜி
ஆமா ஜி : இது வரைக்கும் நீங்க வச்சி செஞ்சது போதும் ஜி.
ரஜினி ஜி : ஓகே ஜி, நம்ம ரசிகர்களுக்கு என் கையாலேயே பிரியாணி சமைச்சி விருந்து வைக்கலாம்னு இருக்கேன் நிச்சயம் நீங்களும் வரணும்
ஆமா ஜி: யோவ். தனுஷ் கல்யாணத்துக்கு பிரியாணி போட்றேன்னு சொன்ன. போடல. அரசியல்ல இறங்குறேன்னு சொன்னப்போ பிரியாணி போட்றேன்னு சொன்ன. போடல. இன்னும் நாங்க இதை நம்பணும் ?
மாமா ஜி : யோவ் ஆமா ஜி பேச்சு குடுக்காம வாயா, எஸ்கேப் ஆகலாம்
இருவரும் தமிழிசை அக்காவை சந்திக்க விரைகிறார்கள்
மாமா ஜி : அக்கா என்ன இப்படி அவர் கிட்ட மாட்டி விட்டுடீங்க, சம்பந்தம் இல்லாம ஏதோ பேசிகிட்டு இருக்கார்
அக்கா ஜி : ஒரு மருத்துவராக சொல்கிறேன் நீங்கள் கேட்ட கேள்வியை அவர் சரியாக உள்வாங்காததால் ஏற்பட்ட பிழை இது. மீண்டும் ஒருமுறை கேட்டால் அவர் வேறு பதில் அளித்திருப்பார்
ஆமா ஜி: காது செவுடாயிருச்சா டாக்டர் ? நீங்க ட்ரீட்மென்ட் குடுக்கலாமே.
அக்கா ஜி: நீங்கள் சரியாக நான் சொல்வதை புரிந்து கொள்ளவில்லை. நான் விருது வாங்க அமெரிக்கா சென்றிருந்தபோது ….
ஆமா ஜி : அங்கயும் எல்லாம் செவுடா டாக்டர் ?
அக்கா ஜி : ஒரு பெண்ணாக நான் தனியாக நின்று.
ஆமா ஜி : ஸ்டூல் மீது நின்றுன்னு சொல்லுங்க டாக்டர்.
மாமா ஜி : யேய் இருப்பா. அக்காவை பெர்பார்ம் பண்ண விடு.
ஆமா ஜி : என்னய்யா பெர்பார்ம் பண்ணுவாங்க. தாமரை மலர்ந்தே தீரும் னு அடிச்சி விடுவாங்க. அதானே ?
மாமா ஜி : சும்மா இருங்க ஜி அக்கா கிட்ட வம்பு பண்ணீட்டு. உங்களுக்கு விருது கொடுத்திருக்காங்களாம் பாராட்டுகள் ஜி
அக்கா ஜி : பதவிக்கு கூஜா தூக்கும் இந்த காலத்தில், தினம் கஜா புயலை தனி ஒருவராக சந்தித்து வரும் என்னை இந்த உலகமே வியந்து பார்த்து வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை அளித்துள்ளது, இது பெண்குலத்துக்கே கிடைத்த பெருமை அல்லவா.
ஆமா ஜி : இன்னுமா வளர்ந்துக்கிட்டு இருக்கீங்க. அதை விடுங்க. இந்த கஜா புயல் வேற வரும் நேரத்தில் பொது கூட்டம் வைக்கலாம்னு சொல்றீங்களே, மழை வந்திடும் ஜி.
அக்கா ஜி : திமுக கூட்டத்துக்கு தான் மழை வரும் நம் மாநாட்டுக்கு மழை கூட அஞ்சி ஒதுங்கி விடும்
ஆமா ஜி : மனுசங்க தான் நம்ம கூட்டத்துக்கு வர மாட்றாங்க இப்போ மழை கூட வராதா? என்ன சோதனை அக்கா இது
மாமா ஜி : சும்மா இருங்க ஜி. முதலில் ரஜினி 10 பேர் சேர்ந்து யாரை துரத்துகிறார்களோ அவர் தான் பலசாலின்னு சொன்னாரா அக்கா ?
அக்கா ஜி : உண்மை தான்
மாமா ஜி : பாம்பை கண்டால் படையும் நடுங்கும் அதனால் பாம்பு நல்லதானு திருமாவளவன் கேட்டாரா ?
அக்கா ஜி : அது அகந்தை பேச்சு
மாமா ஜி : பதிலுக்கு திருப்பதி நாராயணன் பன்னி தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா தான் வரும்னு சொன்னாரா
அக்கா ஜி : இது சரியான பதிலடி
ஆமா ஜி : இப்போ நீங்க மெகா கூட்டணி அமைச்சு தேர்தலை சந்திப்போம்னு எதுக்கு அக்கா பேட்டி குடுத்தீங்க ? இப்போ யாரு பன்னி யாரு சிங்கம் ஒரே குழப்பமா இருக்கே
அக்கா ஜி : ஒரு பெண் என்றும் பாராமல்…
ஆமா ஜி : ஆளை விடுங்க பேட்டியும் வேண்டாம் ஒரு ஹை கோர்ட்டும் வேண்டாம்.
மாமா ஜி : என்ன ஜி சுப்ரீம் கோர்ட்டு சிபிஐ மேட்டர்ல நம்ப கட்சியை பின்னி எடுக்கறாங்க ?
ஆமா ஜி : வர வர சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியெல்லாம் நீதிபதி மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு முன்னாடி இருந்தவரெல்லாம் எப்படி இருந்தாரு ? சினிமா தியேட்டர்ல தேசிய கீதம் பாடுனா தேசபக்தி வளரும்னு எப்படி அற்புதமான தீர்ப்பு கொடுத்தாரு. இப்ப இருக்குற ஆளு என்னன்னா நாம மிட்நைட்ல போட்ட டைரக்டரை வேலை செய்ய விடாம தடுக்குறாரு.
மாமா ஜி : கரெக்டா சொன்னீங்க. அதுக்குத்தான் புது டைரக்டரு நாகேஸ்வர ராவ், ஸ்ரீஸ்ரீ சாமியாரை வைச்சி பூஜை போட்டாரே.
ஆமா ஜி : அது பூஜை இல்லங்க. யோகா பயிற்சி.
மாமா ஜி : என்ன எழவு பயிற்சியோ. அது என்ன சிபிஐ ஆபீஸா இல்ல சாமியார் மடமா ? பணமதிப்பிழப்புக்கு மோடி ஜி புது விளக்கம் குடுத்துருக்காரு கவனிச்சீங்களா ?
ஆமா ஜி : ஆமா. ஊழலை ஒழிக்கத்தான் னு சொல்லிருக்காரு.
மாமா ஜி : எப்படி கலக்கிட்டாரு பாத்தீங்களா ?
ஆமா ஜி : புடுங்குனாரு. வாரா வாரம் ஒரு விளக்கமா ? நம்ப கட்சி மந்திரியே லஞ்சம் வாங்கிருக்காருன்னு சிபிஐ அதிகாரி சொல்றாரு.
மாமா ஜி : அந்த அதிகாரி காங்கிரஸ் கட்சியை சேந்தவரு ஜி. இதுக்கெல்லாம் காரணம் ஜவஹர்லால் நேருதான்.
ஆமா ஜி : இதைத்தான் இந்த தேர்தல்லயும் சொல்லப் போறோமா ?
மாமா ஜி : வேற சொல்லிக்கிற மாதிரி நம்பகிட்ட என்ன இருக்கு ? வாங்க கௌம்பலாம். அடுத்த வாரம் சந்திக்கலாம்.
ஹ ஹா அருமை சார்….
nice
பிரமாதம். தொடரட்டும், வாழ்த்துக்கள்
சூப்பர்… சூப்பர்… ஜி.
ரஜினிஜியும் அக்காஜியும் ஒன்னு சேர்ந்தால் தமிழகம் உருப்பட்டுரும்ஜி.
நமக்கு வேற என்னவேனும்ஜி.
கருணை கிழங்கு பொறியல் செம்ம டேஸ்ட்…Super
அருமையோ அருமை!
EXCELLENT !!