கடந்த வெள்ளிக் கிழமை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி. தமிழகத்தில் உள்ள 95 சதவிகித ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் சொத்துக் கணக்கை தாங்களாகவே முன் வந்து உள்துறை அமைச்சக இணைய தளத்தில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும், விரைவில் அந்தப் பட்டியல் வெளியிடப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த முடிவை எடுத்திருப்பது ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம். இதை தெரிவித்திருப்பது யார் தெரியுமா ? வேறு யாருமல்ல. நமது ஜாபர் சேட்தான். அவர்தான் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராம். ஜாபர் சேட் தலைவராக இருக்கிறார் என்றாலே இந்த சங்கம் எப்படிப் பட்ட சங்கம் என்பதை சவுக்கு வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
அந்த ஐந்து சதவிகிதம் யாரேன்பதை இப்பதிவில் இறுதியில் பார்ப்போம். முதலில், இந்த 95 சதவிகிதத்தினர் தரும் பட்டியல் உண்மையாக இருக்குமா ? இந்த அதிகாரிகள் இப்பட்டியலை வெளியிடுவதில், ஏன் இவ்வளவு தாமதம் ? இவர்கள் உச்சநீதிமன்றத்திற்கும் மேலானவர்களா, என்பது போன்ற கேள்விகளை முதலில் அலசி ஆராய்வோம்.
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தாலும், அவர்களின் சொத்துக் கணக்கை மட்டும் தாக்கல் செய்ய மாட்டோம் என்று அப்படி ஒரு பிடிவாதம் பிடித்தார்கள்.
இது குறித்து சில நீதிபதிகள் வெளிப்படையாக பேசத் தொடங்கியவுடன் மக்கள் மத்தியில் நீதிபதிகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகத் தொடங்கியவுடன் வேறு வழியின்றி தங்களின் சொத்துப் பட்டியல்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இணையத் தளத்தில் வெளியிட்டார்கள்.
நீதிபதிகளே வெளியிட்டாலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் சொத்துக் கணக்கை இது வரை வெளியிடாமல் மவுனம் சாதித்தே வந்திருக்கின்றனர்.
அந்த வகையில், சொத்துக்களை வெளியிடலாம் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவை சவுக்கு வரவேற்கிறது. இது போல பொது வாழ்க்கையில் ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதைத் தான் சவுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இதன் படி வெளியிடப்படும் சொத்து கணக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்த நடவடிக்கை வெளிப்படைத் தன்மையின் முதல் கட்டம் என்றே சவுக்கு பார்க்கிறது.
ஆனால், இந்த தகவலை ஜாபர் சேட் வெளியிட்டதுதான் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ஜாபர் சேட் ஒரு கபட வேட தாரி. மிகச் சிறந்த நடிகர். சிவாஜி கணேசனின் சிலை டிஜிபி அலுவலகத்திற்கு அருகே ஏன் வைக்கப் பட்டுள்ளது தெரியுமா ? ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன், டி.கே.ராஜேந்திரன் போன்ற சிவாஜி கணேசனை மிஞ்சக் கூடிய நடிகர்கள் பலர் டிஜிபி அலுவலகத்தில் இருப்பதால் தான், அவர்களை கவுரவப் படுத்த அந்த இடத்தில் சிலை வைக்கப் பட்டுள்ளது.
தனது சொத்துப் பட்டியலை ஜாபர் சேட் வெளியிடுவதற்கு முன்பே, சவுக்கு வாசகர்களுக்காக ஜாபர் சேட் சொத்துப் பட்டியல் ஏற்கனவே வெளியிடப் பட்டது. மீண்டும் ஜாபர் சேட் சொத்து ஏதாவது வாங்கினால் அதுவும் இத்தளத்தில் வெளியிடப் படும் என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவார்கள்.
இருப்பினும், ஜாபர் சேட் எப்படிப் பட்ட ஒரு கபட வேடதாரி என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
ஜாபர் சேட் தற்போது குடியிருக்கும் இடம் ஐஜிக்களின் குடியிருப்பான வாலாஜா சாலையில். வாலாஜா சாலையில் ஃப்ளாட் எண் 5ல் 06.02.2009 முதல் ஜாபர் சேட் குடியிருந்து வருகிறார்.
22.05.2008ல் காவல்துறை தலைமை இயக்குநரின் சுற்றறிக்கையில் சென்னையிலோ, அல்லது சென்னைக்கு அருகிலோ, தங்கள் பெயரிலோ, அல்லது தங்கள் மனைவி பெயரிலோ, அல்லது தங்களைச் சார்ந்திருப்பவரின் பெயரிலோ வீடு இருந்தால், அவர்களுக்கு குடியிருப்புக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜாபர் சேட்டின் மகள் செல்வி ஜெனிபர் அரசுக்கு “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு கேட்டு செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி எண்.23, ராஜா தெரு, கல்யாணி நகர், திருவான்மியூர், சென்னை 41.
ஜாபரின் மனைவி பர்வீன் ஜாபர் வீட்டு “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் அரசுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி பழைய எண் 61, புதிய எண் 6, R பிளாக், 14வது தெரு, அண்ணா நகர், சென்னை.40.
ஜாபர் சேட் குடியிருப்பதோ, ஐஜிக்களுக்கான அரசுக் குடியிருப்பு. தற்போது சவுக்கு முன் வைக்கும் கேள்விகள்… …
1) சென்னையில் இரண்டு வீடுகள் ஜாபர் சேட் வைத்திருக்கிறாரா
2) அப்படி வைத்திருந்தால், சட்ட விரோதமாக அரசுக் குடியிருப்பில் ஏன் இருக்கிறார் ?
3) சொந்த வீடு வைத்துக் கொண்டு அரசுக் குடியிருப்பில் இருக்கும் ஜாபர் சேட் மீது கருணாநிதி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
4) ஜாபர் சேட் குடும்பத்தோடு இல்லாமல் தனியாக இருக்கிறாரா ?
5) ஜாபர் சேட்டின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து அண்ணா நகரில் தனியாக இருக்கிறாரா ?
6) ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர் தன் பெற்றோரோடு இல்லாமல் திருவான்மியூரில் தனியாக இருக்கிறாரா ?
7) தனியாக இருப்பது போல ஆளாளுக்கு ஒரு முகவரியை கொடுத்திருந்தாலும், ஒற்றுமையான குடும்பம் போல குமுதத்தில் பேட்டியளித்தது ஏன் ?
8) ஒற்றுமையாக இல்லாமல் தனித் தனியாக பிரிந்து இருக்கும் ஒரு குடும்பத்தை ஒற்றுமையாக இருப்பது போல சித்தரித்து பேட்டி போட்டதற்கு “நமது நிருபர்“ என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்ட, அந்த நிருபருக்கு வழங்கப் பட்ட தொகை எவ்வளவு ?
9) இந்தப் பொய்யான பேட்டி வெளியாவதற்காக ஜவகர் பழனியப்பனுக்கு ஜாபர் சேட் செய்த கைமாறு என்ன ?
10) இப்படி எதைத் தொட்டாலும், பொய்யும் புரட்டும் செய்து வரும் ஜாபர் சேட்டை உளவுத் துறை அதிகாரியாக கருணாநிதி தொடர்ந்து வைத்திருப்பதன் மர்மம் என்ன ?
இந்தக் கேள்விகளுக்கு ஜாபர் சேட் பதிலளித்தால், அந்தப் பதில்களை பிரசுரிக்க சவுக்கு தயாராகவே இருக்கிறது. இப்படிப் பட்ட கபட வேடதாரியான ஜாபர் சேட், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்துப் பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறார்கள் என்பது எப்படிப் பட்ட கயமைத் தனம் ? இதனால்தான் சவுக்கு ஜாபர் சேட்டை கைதேர்ந்த நடிகர் என்று கூறுகிறது.
இது போன்ற வெட்டி பந்தாவையெல்லாம் விட்டு விடுங்கள் ஜாபர். குரான் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு சவுக்கு புனித குரானிலிருந்தே மேற்கோள் காட்ட விரும்புகிறது.
அத்தியாயம் 4. அன்னிஸா.
49-50 தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா ? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப் படமாட்டாது. பாருங்கள் ! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துக்க சற்றும் தயங்குவதில்லையே ! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.
அதனால் முதலில் உங்கள் இதயத்தை தூய்மையாக்குங்கள். பிறகு ஊரில் உள்ள தூய்மையைப் பற்றிப் பேசலாம். நீங்கள் தூய்மையானவர் என்று ஊர் சொல்ல வேண்டும். நீங்களே சொல்லிக் கொள்ளக் கூடாது.
இப்போது சொத்துக் கணக்கை வெளியிடக் கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்திருக்கும் மீதம் உள்ள அந்த ஐந்து சதவிகித அதிகாரிகள் யாராக இருக்கக் கூடும் என்று பார்ப்போம்.
முதலில் சவுக்கின் நினைவுக்கு வரும் பெயர்
கே.ராதாகிருஷ்ணன். மீதம் உள்ள ஐந்து சதவிகிதத்தினர் யாராக இருப்பார்கள் என்று உத்தேசமான பட்டியலை சவுக்கு வெளியிடுகிறது. வேறு யார் இந்த ஐந்து சதவிகிதத்தில் இருக்கக் கூடும் என்பதை சவுக்கு வாசகர்கள் ஆலோசனையாக சொல்லலாம்.
2) நரேந்தர் பால் சிங்
3) முத்துக் கருப்பன்
4) கண்ணாயிரம்
5) கே.பி.மகேந்திரன்
6) டி.கே.ராஜேந்திரன்
7) கே.துக்கையாண்டி
8) எஸ்.ராஜேந்திரன்
9) சங்கர் ஜிவால்
10) சிவனாண்டி
11) ஜி.துரைராஜ்
12) ஆர்.ஆறுமுகம்
13) வி.ஏ.ரவிக்குமார்
டிஐஜிக்களோடு நிறுத்திக் கொள்ளலாம். எஸ்.பிக்கள் பட்டியலை எடுத்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இந்தப் பட்டியலில் இல்லாத மற்ற அதிகாரிகளைப் பற்றிய விபரங்களை சவுக்கு வாசகர்கள் வெளியிடலாம்.