இந்திய வெகுஜன ஊடகங்கள், குறைந்தபட்சம் 2014க்குப் பிறகேனும், நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பது எப்படி என மறந்துவிட்டன அல்லது மென்மையான முறையில் மட்டுமே கேட்கின்றன.
அமெரிக்காவில், சி.என்.எஸ். வெள்ளை மாளிகை நிருபர் ஜிம் அகோஸ்டாவின் செய்தியாளர் அனுமதி அட்டையை ரத்து செய்த அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கு எதிராக ஓரணியில் நின்ற 13 செய்தி நிறுவனங்களின் அறிக்கை, அவற்றுக்கு எச்சரிக்கையாக இல்லாவிட்டாலும், நினைவூட்டலாகவாவது அமையும். “இந்த அதிபர் அல்லது எந்த அதிபரையும் கேள்வி கேட்பதற்கான அரசியல் சாசன உரிமைக்கு ஆதரவாக எங்கள் செய்தி நிறுவனம் இருக்கிறது (அக்டோபர் 15, டிரம்பிற்கு எதிரான சி.என்.என். வழக்கில் ஆதரவு தெரிவித்த 13 செய்தி நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ் நியூஸ்). அகொஸ்டாவுக்கு அனுமதி அட்டை திரும்பி அளிக்கப்பட்டது. இது ஒன்றாக இருப்பதன் அருமையை உணர்த்துகிறது.
ஒரு அமைப்பின் அளவுக்கு மீறிய அதிகாரம்- இந்த பிரச்சனையில் வெள்ளை மாளிகை, இங்கு நரேந்திர மோடி அரசு), அல்லது மீடியா நிறுவனங்களின் கொள்கை சார்புகள், எந்த ஒரு ஊடக தளமும் செயல்படக்கூடிய செயல்முறை வடிவை பாதித்துவிடக் கூடாது.
ஊடகம், அதிகாரத்தைக் கேள்வி கேட்க வேண்டும், அதற்குப் பணிந்துவிடக் கூடாது எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த செயல்முறை வடிவம் அமைந்துள்ளது. இதற்கு உதவ மூன்று கோட்பாடுகள் உள்ளன: தொலைவு, தொலைவு, தொலைவு. நாம்காம் தூண், இரண்டாம் தூணான அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு, ஜனநாயகத்தின் சுமையைத் தாங்குவதாக கூற முடியாது.
இப்போது அமெரிக்கா எதிர்கொண்டிருப்பது போன்ற தேர்தல் நேரத்தில் இந்தத் தூணின் ஆற்றல் சோதிக்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் ஊடகங்கள் கேட்க வேண்டிய முதன்மை கேள்விகளில் ஒன்று: தேர்தல்கள் எந்த அளவுக்கு சுதந்திரமான சூழலில் நடைபெறுகின்றன?
புனே காவல்துறை தாக்கல் செய்த 5,000 பக்க குற்றப்பத்திரிகை போன்ற வழிகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்படும் அச்சுறுத்தலான சூழலை உருவாக்குவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான முதல் அச்சுறுத்தலாகும் (பீமா கோரேகான் வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகையில் காவல்துறை, செயல்பாட்டாளர்கள் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர்). இதன் வழக்கத்திற்கு விரோதமான தன்மையே அதன் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது.
அது மராத்தியில் இருப்பது, அதில் உள்ள சாதிய மற்றும் அரசியல் சார்புகளை அம்பலப்படுத்துவதற்குத் தடையாக இருக்கக் கூடாது. ஆனால் எந்த வெகுஜன பத்திரிகையும் இதை செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக, அவற்றில் சில, பாதையில் இருந்து விலகி, அரசியல் நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்ட சொல்லான நகர்புற நக்ஸல் எனும் பொய்யான கூற்றை மேலும் முன்னெடுக்கும் வகையில் அதற்கு நம்பகத்தன்மை அளிக்க முயன்றுள்ளன. (‘மோடி நகர்புற மாவோயிஸ்ட்கள் மீது பழி போடும் நிலையில், சிபிஐ ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறை வழக்குகளை மூடி மறைக்கிறது. நவம்பர் 9).
பேரணிகள், மேடை பேச்சுகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவை மூலமான தகவல்கள் இந்திய தேர்தல்களின் பிரதான பாத்திரங்களாக இருந்த காலம் உண்டு. இன்று, தவறான தகவல்கள், அவை வாய்ப்புள்ள வாக்காளகளுக்கு தொலைக்காட்சி மூலம் செல்கின்றனவோ அல்லது வாட்ஸ் அப் செய்தியாக செல்கிறதோ, அவையே தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கின்றன.
இந்தியாவில் பொய் செய்திகள் அதிகரித்திருப்பது தொடர்பான பிபிசி செய்தி நிறுவனத்தின் அண்மை ஆய்வில் இரண்டு அம்சங்கள் முக்கியமாக அமைந்துள்ளன: ஒரு பக்கம் தேசியவாதத்தின் எழுச்சி மற்றும் மறுபக்கம் வெகுஜன ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்திருப்பது. அரசியல் நோக்கத்திற்காக பொய்யான உள்ளடக்கத்தை உருவாக்குவது எந்த அளவுக்கு பரவலாக இருக்கிறது எனில், லோக்னீதி நடத்திய ஆய்வு, வாட்ஸ் அப் பயனாளிகளில் ஆறு ஒரு பங்கினர் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் உருவாக்கிய குழுக்களில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கிறது (எதை நம்புவது- எதை நம்பாமல் இருப்பது – இந்தியாவில் பொய் செய்திகள், நவம்பர் 14).
தரவுகள் திருட்டு மற்றும் திருடப்பட்ட தேர்தல்கள் ஆகியவற்றின் ஒன்றிணைவே, 2016 டிரம்ப் வெற்றியின் விளைவாக தெளிவாக தெரிந்த நிகழ்வாக அமைந்தது. இருப்பினும், இரண்டு ஆண்டுகள் கழித்து, தரவுகளோடு விளையாடுவது நியாயமான தீர்ப்புக்கு எந்த அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பது பற்றி நாம் கவலைப்படாதவர்களாக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதற்காக ஆதார் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டைச் சார்ந்திருக்கும் தேர்தல் கமிஷனின் ஆரோக்கியமில்லா அணுகுமுறையால் தேர்தல் செயல்முறைக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அண்மையில் நான் பார்த்த விசாரணை கட்டுரைகளில் ஒன்றாக, ‘சில மாதங்களில் தேர்தல் கமிஷன் எப்படி 300 மில்லியன் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தது (நவம்பர் 9) எனும் கட்டுரை அமைகிறது. வாக்காளர்களுக்கு முறைப்படி தெரிவித்து ஒப்புதல் பெறாமல் இது நடந்துள்ளது என்பதை மோசடி என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசு நோக்கத்தை கேள்வி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் இந்தக் கவலை தரும் ஊடகப் போக்கு, தேர்தல்களை ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில் செலுத்தும் தாக்கமானது, அதை டி-20 கிரிக்கெட் வர்ணனையில் இருந்து வேறுபடுத்திக்கொள்ள முடியாத வகையில் மாற்றும் அளவுக்கு இருக்கிறது. எல்லாமே, பளபளப்பு, கோஷங்கள், வெற்றி தோல்விக்கான எளிமையான கூற்றுகளாகச் சுருக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக்கொள்வது கூட கணிக்க கூடியதாக மாறிவிட்டது. எவ்வளவு காலம்தான் காங்கிரஸ்காரர்கள் பிரதமரை பார்த்து டீக்கடைக்காரர் என்று கூறுவார்கள். எவ்வளவு காலம்தான் பிரதமரும் அதை தீவிரமாகப் பற்றிக்கொண்டு – இந்த வாரம் இதை மீண்டும் செய்தார் – தன்னைத்தானே பெருமைபடுத்திக்கொள்ள முயற்சிப்பார்.
தேர்தல் விவாதங்களில் எத்தனை முறை கோழை (நீச்) எனும் வார்த்தை நுழைந்திருக்கிறது. அயோத்தியாவில் அழகான ராமர் கோயில் எனும் வாசகம், கூட்டத்தினர் சுவைக்கப் பிறந்தநாள் கேக் போல முன்னிறுத்தப்படும். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளிலும், மேஜையில் உள்ளவற்றைத் தயார் செய்து பரிமாறுவது ஊடகம்தான். ராமர் கேக் வெட்டப்பட்டபோது, ஊடகம்தான் அதைப் பார்வையாளர்களிடம் விநியோகம் செய்கிறது.
சராசரி வாக்காளருக்கு இந்த வெற்றுக் குரல் பதிவுகள் முக்கியம் அல்ல, பல்வேறு வகையான வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில், தேர்தல் போன்ற ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வுகளை ஓரளவுக்குத் தங்களுக்காகச் செயல்படக்கூடியதாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதுதான் முக்கியம்.
எனில் தேர்தல்கள் தொடர்பாக சிறந்த செய்தி சேகரிப்பு என்பது, மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை வாக்குப்பதிவு எனும் முப்பட்டகம் மூலம் புரிந்துகொண்டு, நகர்புற இந்தியா மற்றும் கிராமப்புற இந்தியா இடையிலான அதிகரிக்கும் இடைவெளிக்கு பாலம் அமைப்பதாகும். இந்த செயல்முறையின் போது, உள்ளூர் மக்களின் குரலை வெளிக்கொணர்ந்து, அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதையும் உணர்த்த முடிந்தால், அதை போனசாகக் கருதலாம்.
களத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் எதிர்ச் சுழிப்புகள் எவை? அவற்றுக்கான காரணங்கள் எவை? சில நேரங்களில் தேர்தல் தொடர்பான சிறந்த செய்தி சேகரிப்புக்கு இவற்றை வெளிக்கொணரும் சக்தி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மைவாதம் என்பது பொதுவாக அறியப்பட்ட விஷயமாகியிருக்கிறது. சிறுபான்மையினருக்காகப் பேசி அவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களுக்கான அரசியல் வெளி மிகவும் குறைவாகவே இருப்பது (ஒருகாலத்தில் முதல்வராக இருந்த, திக்விஜய் சிங் மத்தியப் பிரதேசத்தில் ஒரங்கப்பட்டவராக உணர்கிறார்) இதில் ஒன்று.
காங்கிரஸ் கட்சி வேறு வழியில்லாமல், அரசியல் மருந்துக் கடையில் உள்ள மருந்துகளையும் முயற்சித்துவிட்டு, நாடு முழுவதும் இந்துத்வாவை விதைத்துள்ள காவி எதிரியை எட்டிப்பிடிப்பதற்கான ஒரே வழி அச்சுறுத்துவதுதான் எனத் தீர்மானித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமல் போகலாம், அதன் திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது. ஊடகம் இதன் சாத்தியத்தைப் பிரகாசமாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பான உள்ளூர் பத்திரிகை செய்திகள் எப்படி மத வாக்குறுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி, மதச்சாரபற்ற அம்சங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் பின்னுக்குத்தள்ளிவிட்டன என்று அக்கட்சி தலைவர் ஒருவர் கூறுகிறார்.
காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மிகவும் நொந்து போய் சொன்ன கருத்து இது: “ஊடகம் முன்னிறுத்தும் கூற்றை ஒட்டிச் செயல்படுவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, ஏனெனில் இதிலிருந்து விலகினால் எங்களை இந்து விரோதி அல்லது போலி இந்து என பாஜக முத்திரை குத்த வழிவகுத்துவிடும்.”
இந்துத்வா உருவகம் மீதான மிகையான அழுத்தம், துணை நிலையில் உள்ளவர்களின் மதச்சார்பபற்ற நலன்கள் அதிக அழுத்தம் கொடுக்கப்படுபதில்லை. வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன, கடன்படுவதற்கான முக்கியக் காரணமாக, மருத்துவம் தொடர்கிறது. அரசு பள்ளிக்கல்வி என்பது உடைந்த கரும்பலகைகள் மற்றும் வராத ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறது.
பணமதிப்பு நீக்கம் என்பது, கொட்டும் சக்தியை இழந்துவிடாத தேனீ போல ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. இந்தூர் துணி வியாபாரிகளிடம் பேசியபோது இந்தியா டுடேவின் ராஜ்தீப் சர்தேசாய் தெரிந்துகொண்டது போல, பாரம்பரிய பாஜக வாக்காளர்கள்கூட இதை ஒப்புக்கொள்கின்றனர். எனினும், இது எப்படி இழப்பின் விளைவாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி இல்லை.
எப்போதாவது முக்கிய புரிதல் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பூண்டு விவசாயிகளின் இன்னலை புரிந்து கொள்ள முயற்சிக்கும் கட்டுரை. தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களின் நெருக்கடியால் தவிக்கும் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை இதை வாசிக்கும்போது உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
ராஜஸ்தான் விவசாயி ஒருவர் குறிப்பிடுவதுபோல, “இந்தப் பகுதி விவசாயிகளுக்கு பூண்டு தங்கம் போன்றது. உயர்தரமான பூண்டு, ஒரு குவிண்டாலுக்கு ரூ.13,000 (கிலோ ரூ 130) கிடைக்கும். மற்ற பயிர்களில் ஏற்படும் இழப்பைச் சரி செய்யலாம் என்பதால் பல விவசாயிகள் இதைக் காப்பீடு போலப் பயிர் செய்வார்கள்” என்று சொல்கிறார் ராஜஸ்தான் விவசாயி ஒருவர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தக் கனவு தகர்ந்தது, இன்று இந்தத் தங்கமான பயிர் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.”
மத்தியப் பிரதேசம் மற்றும் சதீஸ்கருடன் தேர்தலைச் சந்திக்கும் மிசோரம் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை அல்லது சொற்பமாகப் பெறுகிறது. அதன் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சஷாங், அதிகப்படியாக நடந்துகொண்டு, திரும்பி அழைக்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருக்காவிட்டால், தேசிய செய்தி பரப்பில் மாநிலத்திற்கு இந்த இடமும் கிடைத்திருக்காது. தேர்தல் காலத்தில் திரிபுரா மற்றும் அசாம் தொடர்பாக அருமையான கட்டுரையை வெளியிட்ட தி வயர் இதழின் செய்திகளும் சொற்பமாகவே இருக்கிறது வேதனையானது.
ரஃபேல் தொடர்பான செய்தி வெளியீட்டை பொருத்தவரை, இந்த ஒப்பந்தத்தில் மோடி அரசின் கூற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான பல கட்டுரைகளை மற்ற ஊடகங்களைவிட, தி வயர் துடிப்புடன் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவுக்கு இறையாண்மை உறுதியை வழங்க பிரான்ஸ் மறுத்துவிட்டது என்பதை அது தான் முதலில் வெளியிட்டது. ( ரஃபேல் திருப்பம்: இந்தியாவுக்கு இறையாண்மை உறுதி அளிக்க பிரான்ஸ் மறுத்தது ஏன்? நவம்பர் 14).
ஹாலண்டே விவகாரத்தில் அது பாஜகவின் பாசாங்குதனத்தை சுட்டிக்காட்டியது (ரபேலில் பெரிய, சின்ன பொய்களால், மோடி அரசு துரோக பாதையில் செல்கிறது, அக்டோபர் 31). ரபேலில் அருண் ஜேட்லி பதிலில் இருந்த ஓட்டைகளைச் சுட்டிக்காட்டியது. (ஜேட்லியின் 15 கேள்விகள் மோடியின் ரஃபேல் ஒப்பந்தத்தின் சந்தேகமான தன்மையை உறுதி செய்கிறது, ஆகஸ்ட் 30), மற்றும் எல்லாருடைய மனதில் இருக்கும் கேள்வி ஆனால் வெகுஜன ஊடகங்கள் கேட்காத, ரபேலில் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா எனும் கேள்வியை எழுப்பியது. (மாற்றி அமைக்கப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி தண்டிக்கப்படலாமா? அக்டோபர் 23).
சில சங்கடமான கணக்குகள் வெளிக்கொண்டு வரப்பட்டன (டசால்ட்டின் முந்தைய வாய்ப்பைவிட மோடியின் ரஃபேல் ஒப்பந்த விமான விலை 40 சதவீதம் அதிகமானது: செய்தி, நவம்பர் 10). ரஃபேல் விவகாரம் போன்றவற்றில் மோடி அரசின் எதையும் கவனிக்காத அணுகுமுறை தொடர்பான சங்கடமான உண்மைகள் வெளியிடப்பட்டன. ( மோடியின் ஆட்சியின் காபினெட் விதிகளுக்கு பாதிப்பு, நவம்பர் 12).
முப்பது ஆண்டுகளுக்கு முன், தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு நாளிதழ்கள், போபர்ஸ் செய்தியை கையில் எடுத்துக்கொண்டு, அதில் நேரம் மற்றும் மனிதவளத்தை செலவிட்டு, வாரந்தோறும் புதிய தகவலை வெளிக்கொணர்ந்து பொதுமக்களை திகைப்பிலும், கோபத்திலும் ஆழ்த்தின. இது போன்ற வெகுஜன ஊடக பாதுகாவலர்கள் இல்லாத காலத்தில், பரவலான ஊடக அச்சுறுத்தல் மற்றும் ஒத்துப்போதல், பலகோடி அவதூறு அச்சுறுதல்கள் உள்ள காலத்தில் ரஃபேல் விவகாரம் வெடித்துள்ளது. முந்தைய ஊழல்களைவிட இது பற்றி செய்தி வெளியிட அதிக துணிச்சல் தேவை.
1998இல் அரசைக் கவிழ்க்க போபர்ஸ் உதவியது போல இது உதவினால், இது பற்றி துணிந்து செய்தி வெளியிட்ட சிறிய ஊடகங்களுக்கே அதன் பெருமை சேரும்.
தலித்களை அழித்துவிட முடியாது
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல், தலித் விஷயங்கள் தொடர்பான செய்தி வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் அபத்தமான முயற்சியாக அமைந்தது. அது, ஊடகங்களை தலித் எனும் வார்த்தையை பயன்படுத்தாமல், பட்டியல் இனம் எனும் வார்த்தையை பயன்படுத்துமாறு கூறியது. பாம்பே கோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
இந்த முறை, பிரஸ் கவுன்சில் சிந்தனையையும் முதுகெலும்பையும் உணர்த்தியது. இந்த ஆலோசனையைப் பணிவாக மறுத்துவிட்டு, இத்தகைய கட்டுப்பாடு தேவையில்லாதது மற்றும் செயல்படுத்த முடியாதது என தெரிவித்தது. தலித் பத்திரிகையாளர் எழுதிய தீவிரமான கட்டுரை (தலித் எனும் வார்த்தையை பயன்படுத்த முடியாது, ஆனால் பிராமணர் உள்ளிட்ட 6,000 சாதி வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும், செப்டம்பர் 14,) உள்ளிட்ட, இந்த தளத்தில் வெளியான பல கட்டுரைகள் இது பற்றி விவாதித்தன. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை, “ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தையைத் தடை செய்வதே சாதி ஒடுக்குமுறைதான் என வாதிட்டது. உண்மையில் தலித்களை அவமானப்படுத்துவது தலித் எனும் வார்த்தை அல்ல, பிராமணர் எனும் வார்த்தை என வாதிட்ட கட்டுரை, “எண்ணற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் அரசும், நீதிமன்றமும் பிராமனர் எனும் வார்த்தையைத் தடை செய்யுமா? என கேள்வி எழுப்பியது.
’காலம் மற்றும் நேரத்தின் ஊடே புழுதியின் கதை (நவம்பர் 9), தில்லி புகையில் சிக்கிச் தவித்த நேரத்தில் எழுதப்பட்ட நல்ல தலையங்கம் என நினைக்கிறேன். அறிவியல் செய்திகள், சராசரி வாசகனுடன் தொடர்பு கொள்ள முடிந்தால், தினசரி வாழ்க்கையின் மாய குணங்களை கைப்பற்றும் தன்மை கொண்டது என நம்புகிறேன்.
பமீலா பில்போஸ்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/media-india-state-elections-rafale