முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அப்போது குஜராத் காவல் துறையில் முக்கியமான அதிகாரியாக இருந்த, டி.ஜி. வன்சாரா அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளி அசம் கான், இம்மாதத் தொடக்கத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டில், இத்தகவலை சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், அதை அவர்கள் தன்னுடைய சாட்சியில் சேர்க்கவில்லை என்றும், அசம் கான் சொல்லியிருக்கிறார்.
சொராபுதீன் – கௌசர் பி – துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை விடுவித்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சிபிஐ தன் முடிவை நியாயப்படுத்தியதற்குச் சில வாரங்களுக்குள் அசம் கானின் இந்த அறிக்கை வெளியாகிறது. அதே வேளையில், கொலை வழக்கு, மிரட்டல் செய்து பணம் வாங்கியது, கொலை செய்யத் திட்டம் தீட்டியது, ஆதாரங்களை அழித்தது மற்றும் சொராபுதீன் மற்றும் கௌசரைக் கடத்தியது ஆகிய வழக்குகளில் சிபிஐ குழுதான் ஷாவை 2010ஆம் ஆண்டு கைது செய்தது.
சொராபுதீன் மற்றும் துளசிராம் பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில்தான் ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
சிபிஐயின் வழக்கு இதுதான்: பாண்டியா அகமதாபாத்தில் லா கார்டனுக்கு வெளியில் அஸ்கர் அலியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அஸ்கர் அலி மாருதி 800 காரில் அமர்ந்திருந்தார். அந்த வழக்கை மேலும் வலிமையாக்க, அனில் யாத்ராம் என்பவரைச் நேரில் சம்பவத்தைப் பார்த்த சாட்சியாக முன்னிறுத்தினர். 2011ஆம் ஆண்டில், அலியை விடுதலை செய்த உயர் நீதிமன்றம், சிபிஐ வழக்குகளின் நிச்சயமற்ற தன்மையின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது.
இந்த என்கவுண்டர்கள் குறித்த என்னுடைய விசாரணையின்போதுதான், இக்கொலை வழக்கை முதன் முதலில் விசாரணை செய்த ஒய்.ஏ. ஷேக் எனும் குஜராத் காவல் அதிகாரியுடன் நடந்த உரையாடலில், பாண்டியாவின் கொலை வழக்கில் சில சங்கடமான, சிக்கலான விஷயங்கள் தெரியவந்தன. அப்போது நான் டெஹல்காவில் நிருபராக இருந்தேன். இந்த வழக்கில் எவ்வித சாட்சியும் முன்வருவதாகத் தெரியவில்லை, எனவே நான் ஷேக்கின் உரையாடலைப் பதிவு செய்ய நினைத்தேன். என்னுடைய குஜராத் ஃபைல்ஸ் என்ற புத்தகத்தில் நான் பதிவு செய்த இந்த வலிமையான உரையாடல், அசம் கானின் சாட்சியத்திற்குப் பிறகு புதிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
என்னுடைய புத்தகம் வெளியாகி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. இவ்வேளையில், நான் வெளியிட்டது தவறென்று ஷேக் சொல்லவில்லை. அரசாங்கமும் அதை மறுக்கவில்லை. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர், எல்கே.அத்வானியின் உந்துதலின் பெயரில் பாண்டியா கொலை வழக்கு சிபிஐக்குச் செல்வதற்கு முன்பு, அவ்வழக்கின் முதற்கட்ட விசாரணைகளை நடத்தியதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததும், ஷேக் எனும் குஜராத் காவல் அதிகாரிதான்.
ஹரேன் பாண்டியா கொலை சம்பந்தமான எங்களுடைய உரையாடலில் சில பகுதிகள்தான் இவை. அவரை முன்பு ஒரு முறை சந்தித்ததால் நான் சிபிஐ துறையால் கண்காணிக்கப்படுவதாக எச்சரித்துவிட்டுத்தான், பேசத் தொடங்கினார். மாநில அரசின் இந்த ஆர்வத்திற்குகான காரணத்தை அவர் விளக்கினார். “ஹரேன் பாண்டியா வழக்கு எரிமலை போன்றது” என்றும் உண்மை வெளியில் வருமாயின் மிகப் பெரிய நிலையில் இருக்கும் நபர்களின் பெயர்களும் வரும் என்றும் சொன்னார். “இதைக் கவனியுங்கள், அசம் கானின் அறிக்கைக்குள் பார்க்க வேண்டும் என்று ஜக்ருதி பாண்டியா வேண்டுகோள் விடுத்த இரண்டாம் நாள், உதய்பூரில் அவர் சுடப்படுகிறார். அவர் உயிர் பிழைத்ததால், மிரட்டப்பட்டதோடு அரசியல் ரீதியாக அழுத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது”.
அதன் பிறகான எங்கள் உரையாடல்:
நான்: எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிய வந்தது?
ஷேக்: மேடம், ஏனென்றால் அவர்கள் மோடிக்கு வேலை செய்கிறார்கள். நீங்கள் ஏன் அந்த சாட்சி சொன்ன யாத்ராம் விஷயத்தில் உண்மையை வெளியே கொண்டுவர மறைமுக நடவடிக்கையில் (sting operationl) ஈடுபடக் கூடாது? (இதை ஷேக் சொன்னதற்கான காரணம், டெஹல்காவில் இதற்கு முன்பு இம்மாதிரி sting operationஇல் ஈடுபட்டுள்ளனர்).
நான்: ஏன்? அவனிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ஷேக்: அட, அவன் உண்மையான கதையைச் சொல்வான், யார் அவனிடம் முதலில் சென்றது, அவனுக்கு என்ன தெரியும், அவனிடம் என்ன சொல்லச் சொன்னார்கள் என்று அனைத்தையும் சொல்வான். சுதாஸ்மாவும் (ஆபே சுதாஸ்மா) இவ்வழக்கில் ஈடுபட்டுள்ளார். அவருக்குப் பல குற்றவாளிகளுடன் தொடர்புள்ளது. சுதாஸ்மாவும் பிற அதிகாரிகளும் இதை பரோட் (தருண் பரோட்) போன்ற இன்ஸ்பெக்டர்களுடன் இணைந்து செய்கிறார்கள். பரோட், அடிநிலை வேலை செய்பவர்.
நான்: ஏன் அந்த அனில் யாத்ராம் தவறான சாட்சியைச் சொன்னார்?
ஷேக்: மேடம், அவனைக் காவலில் வைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். கொலை நிகழ்வதற்கு முன்னால் அவர்கள் அஸ்கர் அலியைக் காவலில் வைத்திருந்தனர். அதனால் கொடுமைப்படுத்தினர்.
நான்: அவர்கள் ஏன் அஸ்கரைக் காவலில் வைத்திருந்தனர்?
ஷேக்: அவர்கள் பழியை ஒரு முஸ்லிம் மீது போட வேண்டும், அவன் சட்ட விரோதமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்தான். அவன் அதற்குப் பின் தன்னுடைய தரப்பு நியாயமாக எதைச் சொல்ல முடியும்? அது மட்டுமல்லாமல், அஸ்கர் அலியின் வாக்குமூலம் நமக்குத் தேவையில்லை. நமக்குத் தேவை சாட்சி மட்டுமே.
நான்: அப்படியென்றால், தருண் பரோட், சுதாஸ்மா, வன்ஸாரா ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தனர் எனச் சொல்கிறீர்களா?
ஷேக்: ஆமாம். சுஷீல் குப்தா, சிபிஐ அதிகாரி, குஜராத் காவல் துறை உருவாக்கிய கதையை நிரூபித்துவிட்டார். குப்தா சிபிஐ வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.
நான்: அப்படியென்றால், சிபிஐ இவ்விசாரணையை நடத்தவில்லை?
ஷேக்: அது வெறும் ஒட்டு வேலைகளைத்தான் செய்தது. குஜராத் காவல் துறையினர் சொன்ன கதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது.
நான்: அப்படியென்றால், இது அரசியல் கொலை என்று சொல்ல வருகிறீர்களா?
ஷேக்: இதில் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். மோடியின் வழிகாட்டியான அத்வானியின் ஆணைக்கிணங்கத்தான் இவ்வழக்கு சிபிஐக்குச் சென்றது. மோடி குற்றமற்றவர் என்பதைக் காட்டவே இப்படிச் செய்யப்பட்டது. மக்கள் உள்ளூர் காவல் துறையின் கதையை நம்ப மாட்டார்கள், ஆனால் சிபிஐயின் கதையை நம்புவார்கள். எனவே இது சிபிஐக்கு மாற்றப்பட்டது.
நான்: இதில் யாருடைய பங்கு இருக்கிறது? பரோடுடையதா அல்லது வன்ஸாராவுடையதா?
ஷேக்: மூன்று பேருடையதும்தான். பரோட் எங்கோ இருந்ததால் சுதாஸ்மா இங்கே கொண்டுவரப்பட்டார். அவர் அரசாங்கத்திற்கு வேலை செய்கிறார். இந்த என்கவுண்டர் வழக்கில், போர்பந்தர் தொடர்பும் இருக்கிறது. இது கண்மூடித்தனமான வழக்கு. இதில் அஸ்கரையும் சாட்சியத்தையும் சரியாக இவர்கள் பொருத்திவிட்டனர்.
நான்: ஏன் சிபிஐ இந்தக் கதையை ஏன் ஏற்றுக்கொண்டது?
ஷேக்: இவ்வழக்கில் சிபிஐதான் மோடியைக் காப்பாற்றியது.
அஸம் கான் அந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் ஒய்.ஏ.ஷேக்கின் இந்த உரையாடல் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதே 2010இல், இந்தப் போலி என்கவுண்டர்கள் குறித்த உண்மையை நான் அம்பலப்படுத்தியதோடு, அமித் ஷாவின் தொலைபேசிப் பதிவுகளையும் முக்கியமான குறிப்புகளையும் வெளியிட்டதால், ஷா சிறைவைக்கப்பட்டார். அப்போதுதான் ஹரேன் பாண்டியாவின் மனைவி, ஜக்ருதி பாண்டியா, என்னிடம் பேசினார். அவருக்கு இக்கொலையில் அரசியல் அதிகாரம் விளையாடியிருக்கிறதென்றும், உச்ச நீதிமன்றத்தில் மறு விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், போலி என்கவுண்டர்களை விசாரிக்கும் சிபிஐயில் எனக்குத் தகவல் தெரிவிக்கும் நபர்கள், இந்தப் புலன் விசாரணையில் ஹரேன் பாண்டியா தொடர்பான விஷயங்களும் அம்பலமாவதாகத் தெரிவித்தனர். மேலும், அஸம் கான் என்ற சாட்சி, ஹரேன் பாண்டியா வழக்கில் வன்ஸராவும் அபை சுதாஸ்மாவும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தபோது, பாண்டியா கொலை வழக்கை விசாரிக்க வேண்டியது தங்கள் வேலை இல்லை என்று கூறி, அந்த சாட்சியை அறிக்கையில் வெளியிட மறுத்துவிட்டனர். ஒரு மாதம் கழித்து, அஸம் கான் உதய்ப்பூரில் சுடப்பட்டார்.
இம்மாதத் தொடக்கத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில், அசம் கான் தனது வாக்குமூலத்தை மீண்டும் சொல்லும் வரை, ஹரேன் பாண்டியா வழக்கில் அசம் கான் சொன்னது மறந்து போயிருந்தது. அது மட்டுமில்லாமல், “சொராபுதீனுடன் நான் பேசிக்கொண்டிருக்கையில், நயீம் கான் மற்றும் ஷாஹித் ராம்புரி ஆகியோருடன் இணைந்துதான், குஜராத் உள்துறை அமைச்சர், ஹரேன் பாண்டியாவைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைத் தான் பெற்றதாகத் தெரிவித்தான். எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் அவர்கள் ஒரு நல்ல மனிதனைக் கொன்றுவிட்டதாக சொராபுதீனிடம் தெரிவித்தேன். அப்போது, சொராபுதீனிடம் அந்த ஒப்பந்தம் வன்ஸாராவால் வழங்கப்பட்டது என்று சொன்னான்”, என்றார் அஸம் கான்.
சொராபுதீன் மற்றும் தளசிராம் பிரஜாபதி வழக்கில், அனைத்து சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு எதிராகச் செயல்பட்டுவந்த வேளையில், அஸம் கான் மட்டுமே ஹரேன் பாண்டியா குறித்த தனது வாக்குமூலத்தில் சீரான ஒரு நிலையில் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த முன்னாள் அதிகாரி ஒருவரே இதை அரசியல் கொலை என்று சொன்ன பிறகு, சிபிஐயோ அல்லது நீதிமன்றங்களோ, இந்த வாக்குமூலத்தை மறுக்க முடியாது.
ஹரேன் பாண்டியா, 2003ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து, அவ்வழக்கு மர்மமாகவே இருந்துவருகிறது. அவருடைய தந்தை, விதல் பாண்டியா, தொலைக்காட்சியில் தன் மகன் கொலை ஒரு அரசியல் கொலை என்றும் அது சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மும்பையில், 2008ஆம் ஆண்டில் நான் மற்றொரு பயங்கரமான விசாரணையில் இருந்தபோது, பிரபலமான ‘என்கவுண்டர் நிபுண’ரான தயா நாயக், இந்தியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் கொலைகளில் ஹரேன் பாண்டியா கொலை முக்கியமான ஒன்று எனத் தெரிவித்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2011ஆம் ஆண்டில், சாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் காவல் துறைக்கு உதவி செய்ததற்காக சிபிஐயால் நாயக் விசாரணை செய்யப்பட்டார். நாயக்குக்கு மட்டும்தான் உண்மை தெரியுமா?
பாண்டியா வழக்கில் கிடைத்துள்ள சாட்சியங்களை ஆராய்ச்சி செய்ய இக்கேள்விகள் என்னைத் தூண்டின. இத்திட்டத்தின் தலைவர் என்று சொல்லப்படு முஃப்தி சூஃபியானின் குடும்பத்தைச் சந்தித்ததிலிருந்து, அவரைச் சுட்ட நபர் என்று கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி, போலி அடையாளத்துடன் இருக்கும் முக்கியமான ஆதாரமான அணில் யாத்ராம் என அனைவரையும் நான் சந்த்தித்தற்குக் காரணம் இக்கேள்விகள்தான்.
தடயவியல் அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களில் உள்ள கொலை தொடர்பான விவரங்கள் பல புலன் விசாரணை அறிக்கைகள் மூலம் ஆராயப்பட்டன. 2010ஆம் ஆண்டில், நான் எடுத்து வெளியிட்ட பாண்டியாவின் அலைபேசி அழைப்புகளின் தரவுகளில், அவர் கொலை நிகழ்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு எண்ணில் இருந்து அளவிற்கு அதிகமான அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்தது. அவர் கொலை நிகழ்வதற்குச் சில நாட்கள் முன்பு வரை அடிக்கடி பேசிய இந்நபரிடம் CBI விசாரணை நடத்தவில்லை என ஒப்புக்கொண்டது.
தெருவில் வணிகம் செய்யும் அனில் யாதவ், கொலையாளி கார் அருகே வந்து ஹரேன் பாண்டியாவைச் சுட்டதைக் கண்ட முக்கியமான சாட்சி. அவரிடம் நான் பேசினேன். சிபிஐயிடம் கொலை குறித்த விவரங்களைத் துல்லியமாகத் தெரிவித்த யாத்ராமிற்கு, என்னைச் சந்திக்கும்போது ஞாபக மறதி ஏற்பட்டுவிட்டது. மூன்று சந்திப்புகளில் மூன்று வெவ்வேறு கதைகளைச் சொன்னார், நான்காவது சந்திப்பில், அவர் பார்த்தது சினிமா காட்சி போல இருந்ததால் என்ன பார்த்தேன் என்பதை அதிர்ச்சியில் மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பாண்டியா கொலை வழக்கின் சதித் திட்டத்திற்குப் பினால் இருக்கும் மாஸ்டர் மைண்ட், முஃப்தி சூஃபியான் எனச் சொல்லப்பட்டது. வளர்ந்து வரும் மதகுருவான சூஃபியான், அகமதாபாத் லால் மஸ்ஜித்தில் நிகழ்த்திய ஆவேசத்தைத் தூண்டும் சில உரைகள் மூலம் வேகமாகப் பிரபலமாகிவிட்டார். அவருக்கு நிழல் உலகத்துடன் பல தொடர்புகள் இருப்பதாகத் தெரிந்தது. அத்தொடர்பின் மூலம்தான், பாண்டியாவைச் சுட்டுக் கொல்வதற்காக அஸ்கர் அலியை அவர் நியமித்திருக்கிறார்.
சூஃபியான் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அருகில்தான் வசித்துவந்தார், ஆனால் கொலை நிகழ்ந்து இரு வாரங்களில் எப்படியோ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். குஜராத் காவல் துறை சந்தேகத்திற்குரியவர்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும்போதுதான் இது நிகழ்ந்தது. அவர் தப்பித்த ஓராண்டில், அவருடைய மனைவியும் குழந்தைகளும் நாட்டை விட்டு வெளியேரினர். உள்ளூர் இண்டெலிஜென்ஸ் பீரோவும் சிபிஐயும் அவர் குடும்பத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்தாலும், சூஃபியான் குறித்த எந்த ஒரு தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
சூஃபியான் குடும்பத்தினரிடம் சுகாதாரப் பணியாளராக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்களுக்கு குஜராத் காவல் அதிகாரி அபை சுதாஸ்மா மீதிருந்த பாசம் எங்கள் உரையாடல்களில் வெளியானது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுதாஸ்மா தங்கள் குடும்பத்தின் மீட்பர் என்றனர். சூஃபியானைத் தப்பிக்கச் செய்யத்தான் சுதாஸ்மா இந்த வழக்கிற்குள் கொண்டுவரப்பட்டார் என்ற கூற்று இதன் மூலம் உண்மையாக்கப்படுமா? மேலும், சூஃபியானைத் தேடுவதற்காக அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட வேண்டிய கோரிக்கைக் கடிதத்தையும் (Rogatory letter) அனுப்ப சிபிஐ மறுத்துவிட்டது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
குஜராத் காவல் துறையும் சிபிஐயும், ஹரேன் பாண்டியவைச் சுட்டதாகச் சொன்ன அஸ்கர் அலியை, உயர் நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்தது. அப்படியென்றால், ஹரேன் பாண்டியாவைச் சுட்டது யார்?
சொராபுதீன், துளசிராம் பிரஜாபதி வழக்கில் அனைத்து முக்கியமான சாட்சிகளும் பிறழ்சாட்சியாகிவிட்ட நிலையில், அஸம் கான் மட்டும் பாண்டியா கொலை வழக்கில் தான் உண்மையெனக் கருதுவதில் நிலையாக நிற்கிறார். நாட்டிலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு கொலை வழக்கின் விசாரணை அதிகாரி, இந்த வழக்கில் அரசு உடந்தையாக இருப்பது குறித்த குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறார். மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டுவிட்டாலும், இவ்வழக்கை ஒரு முடிவிற்குக் கொண்டுவர, தனித்த, சுதந்திரமான விசாரணை வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு போதாதா?
ராணா அயூப்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/haren-pandya-murder-gujarat-sohrabuddin-azam-khan
ராணா அயூப் டெஹல்காவின் முன்னாள் ஆசிரியர். தற்போது தற்சார்புள்ள புலனாய்வு இதழாளராகப் பணிபுரிகிறார். ‘குஜராத் கோப்புகள்: மூடிமறைக்கப்பட்ட விவகாரத்தின் விவரங்கள்’ என்னும் பொருள்படும் ‘குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆஃப் எ கவர் அப்’ (Gujarat Files: Anatomy of a Cover-Up) என்னும் நூலை எழுதி அவரே பதிப்பித்திருக்கிறார். இது இணையத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.