ராய்கார் அருகில் உள்ள மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமங்கள் ரத்துச் செய்யப்பட்டுவிட்டன. இருந்தபோதிலும், மண்ணும் நீரும் பாழானதற்கு யார் பொறுப்பென்று தீர்மானிக்கமுடியாமல் திணறுகிறது பசுமைத் தீர்ப்பாயம்.
சத்திஸ்கர் மாநிலத்தின் கோசாம்பாலி, சரஸ்மால் கிராமங்களையொட்டி ஒரு குன்று. அதன் அருகில் ஆழமானதொரு பெரும் பள்ளம். நீல வண்ண நீர் பள்ளத்தில் நிரம்பித் தேங்கியிருக்கிறது. ஊர்த் தலைவர் ஷிவ்பால் பகத் குன்றின் மேல் நிற்கிறார். அவருக்குப் பின்னால் கிராமங்களின் மக்கள் வசிக்கிற சின்னஞ்சிறு குடிசைகள்.
அந்தப் பள்ளம் உண்மையில் ஒரு நிலக்கரிச் சுரங்கம். அந்த மக்களின் குடிசை வாசல்கள் வரையில் தோண்டப்பட்ட சுரங்கம்.
திரும்பிப் பார்க்கும் ஷிவ்பால், சுட்டிக்காட்டுகிற பக்கமெல்லாம் ஜிண்டால் ஸ்டீல் அன் பவர் லிமிட்டெட் (ஜேஎஸ்பிஎல்), சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிட்டெட் (எஸ்இசிஎல்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் எப்படியெல்லாம் கிராம மக்களின் உடல் நலம், சுற்றுச் சூழல், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மீறியுள்ளன என்பதற்கான சாட்சியங்கள் காட்சியளிக்கின்றன.
நீண்டு பரவியிருக்கும் சுரங்கங்களை நாங்கள் பார்வையிட்டுக்கொண்டிருக்க, தனக்கு அருகில் உள்ள ஒரு மரக்கன்றை அவர் காட்டுகிறார்.
“மூன்றடி உயரமே இருக்கிற இந்த மரக்கன்றைப் பாருங்கள். சுரங்கக்காரர்கள் இதைத்தான் அவர்களுடைய பசுமை வளையம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுரங்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து ஊர் மக்களைப் பாதுகாப்பதற்காகவாம் இது. இந்த ஒல்லியான கன்று எந்த விதத்தில உதவும், சொல்லுங்கள்,” என்று கேட்கிறார் அவர்.
அங்கிருக்கும் “வேலி” அமைப்புகளைப் பார்க்குமாறு சைகை செய்கிறார். கிராம மக்களோ, அவர்களது கால்நடைகளோ சுரங்கக் குன்றுகளிலிருந்து கீழே தவறி விழாமல் தடுப்பதற்கான வேலியாம் அது. “உண்மையில் இந்த வேலி இந்தக் குன்றின் மேல், நம் இடது பக்கமிருக்கிற வீடுகளுக்குப் பக்கத்தில் இருக்கணும். ஆனால், இவ்வளவு அடியில பள்ளத்தில் இருக்கிறது,” என்கிறார். சில வேலிகளில் பச்சை வண்ணப் பாதுகாப்பு வலைத்துணிகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாமே பிய்ந்துபோய், எவ்வகையிலும் பயனளிக்காதவையாகக் கிடக்கின்றன.
இங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களுக்கு கேர் பால்மா 4/2 என்றும் கேர் பால்மா 4/3 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 964 ஹெக்டேர் பரப்பில் உள்ள இந்தப் பகுதியிலிருந்து நிலக்கரி தோண்டி எடுப்பதற்கு ஜிண்டாலின் ஜேஎஸ்பிஎல் நிறுவனத்திற்கு 2005ல் உரிமம் தரப்பட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) இவ்வாண்டு ஜூலையில் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம், கோசாம்பாலி, சரஸ்மால் கிராம மக்களுக்கு ஒரு சிறு வெற்றி கிடைத்தது. எஸ்இசிஎல் நிறுவனம், சுரங்க வட்டாரத்திலேயே, கிராம மக்களுக்காக நிரந்தரமாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும், அவருக்கு ஒரு வாகனமும் அளிக்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரை செல்லுபடியாகும் என்று தீர்ப்பாயம் அறிவித்தது. கிராம மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை விலையின்றி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது.
மருத்துவர் வருவார் என்று கிராம மக்கள் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிராமத்தினர் எதிர்கொள்ளும் உடல் நலக் கேடுகள்
2014ஆம் ஆண்டில், இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சுரங்கக் கம்பெனிகளுக்கு சுரங்கப் பகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டினார். நிலக்கரி ஊழல் என்றே அது பெயர் பெற்றது. பல நிலக்கரி வட்டாரங்களுக்கான உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் கேர் பால்மா 4/2, கேர் பால்மா 4/3 உள்ளிட்ட பல்வேறு சுரங்கங்களுக்கான காப்பாளராக நியமிக்கப்பட்டது. கோல் இந்தியாவின் ஒரு துணை நிறுவனம்தான்
எஸ்இசிஎல். சுரங்கங்களின் காப்பாளராக நியமிக்கப்பட்ட கோல் இந்தியா சார்பிலான காப்பாளர் என்ற பொறுப்பு எஸ்இசிஎல் நிறுவனத்திற்குத் தரப்பட்டது.
2017இல் ஒரு வல்லுநர் குழுவைப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. நிலக்கரித்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட அந்தக் குழு, சுற்றுச் சூழல் விதிகளை ஜிண்டால் நிறுவனமும் சௌத் ஈஸ்டர்ன் நிறுவனமும் பின்பற்றாததன் விளைவுகள் பற்றிய ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படலாமா என்றும் வல்லுநர் குழுவைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டது.
ஜிண்டால் குழுமம் நிலக்கரி தோண்டியெடுப்பதற்கான சுற்றுச் சூழல் அனுமதிகளைப் பெறவில்லை என்று வல்லுநர் குழு கண்டறிந்தது. வன நிலங்களைச் சுரங்கத்திற்காகத் தோண்டுவதற்கு முன், பாதிக்கப்படும் ஊர்களின் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி ஒப்புதல் பெறவில்லை என்றும் குழு கண்டுபிடித்தது. ஜிண்டால் குழுமம் செய்த தவறுக்கு (சார்புக் காப்பாளர் என்ற முறையில்) எஸ்இசிஎல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குழுவினர் கூறினர்.
இவ்வாண்டு ஜூலையில் வல்லுநர் குழு அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டது. சுரங்க எல்லைக்கும் கிராமத்திற்கும் இடையே குறைந்தது 500 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்ற குழுவினரின் பரிந்துரையையும் அங்கீகரித்தது.
சுற்றுச்சூழல் தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்வதிலும், அனுமதிகளை வழங்குவதிலும் இந்தியா சில வழிமுறைகளைக் கையாளத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலும் நடப்பது என்னவென்றால், அந்த மதிப்பீடுகள் போதாமையோடு செய்யப்படுவதும், அனுமதி நடைமுறைகள் சொதப்பலாகப் பின்பற்றப்படுவதும், பொறுப்புகள் தட்டிக்கழிக்கப்படுவதும்தான். இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயம் ஜூலையில் பிறப்பித்த ஆணை தனித்துவம் வாய்ந்ததாகிறது, அது சுரங்கம் தோண்டப்படுவதன் விளைவுகள் பற்றி நேரடியாகப் பேசுகிறது. குறிப்பாக, பெரிய சுற்றுச் சூழல் பார்வைகளோடு நின்றுவிடாமல், மனிதர்களின் உடல்நலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிப் பேசுகிறது.
2017 நவம்பரில் சுயேச்சையான ஆய்வாளர் குழு ஒன்று இந்தச் சுரங்கங்கள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘சத்திஸ்கர் சுரங்கங்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, அந்த வட்டாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும் கசடுப் படிமத்தையும் ஆராய்ந்ததில் அவற்றில் “கவலையளிக்கக்கூடிய அளவுக்கு மனிதர்களின் உடல்நிலையை மோசமாகப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருள்கள்” கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறுகிறது. மாதிரிக்காக எடுக்கப்பட்ட நீரிலும் மண்ணிலும் கசடுப்படிமத்திலும் பாஷாணம் எனப்படும் ஆர்செனிக், ஈயம், கந்தகக்குழு தனிமமாகிய செலனியம், துத்தநாகம், குரோமியம் ஆகியவை உள்ளிட்ட 12 வகையான நச்சு உலோகங்கள் கலந்திருப்பதைக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
2017 ஆகஸ்ட்டில் “நஞ்சாக்கப்பட்டுவிட்டது” என்ற தலைப்பில் மற்றொரு ஆய்வறிக்கை வெளியானது. கோசாம்பாலி, டோங்காமாஹூவா, கோட்கேல், கூஞ்சேமூரா, ராகாவுன் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மண், நீர் இரண்டுமே “பல்வேறு கனரக நச்சு உலோகங்களால் கெட்டுப்போயுள்ளன,” என்று அந்த அறிக்கையும் கூறியது. சில நச்சு உலோகங்கள் புற்றுநோய்க் காரணிகளாக இருக்கின்றன அல்லது புற்றுநோய்க் காரணியாவதற்கான வாய்ப்புகளோடு இருக்கின்றன. சில உலோகப் பொருள்கள் மனிதர்களின் இனப்பெருக்கத் திறன், சுவாசம், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு உடல்சார் இயக்கங்களைப் பாதிக்கக்கூடியவை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
உடல் நலப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வும் இல்லை
“இங்கே வாழ்வதால் எதிர்காலத்தில் மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கிற பிரச்சனைகள் ஏற்படலாம். அது எப்படி இருக்கும் என்று இப்போது நம்மால் பார்க்க முடியாமல் போகலாம்” என்று கவலையோடு சொல்கிறார் ஷிவ்பால்.
கிராம மக்களைப் பொறுத்தவரையில், தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்கின்றன. சுற்றுச்சூழலைக் கண்காணிப்பதிலோ, மக்களின் உடல்நலத்திலோ இரு நிறுவனங்களுக்குமே அக்கறையில்லை, அதற்கான உணர்வுமில்லை. இது போன்ற பகுதிகளில் பொதுமக்களின் உடல்நல நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து – குறிப்பாக சீர்கேடுகள் குறித்து – ஒரு நீண்டகால அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படுவதே முறை. அத்தகைய ஆய்வுகள்தான் மக்கள் உடல்நலக் கேடு பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவுகிற கொள்கைகளை அரசுகள் உருவாக்க இட்டுச்செல்லும்.
ஆனால், அரசு, தனியார் இரு தரப்பினருமே இதற்கு முன்வரத் தயாராக இல்லை. இந்தியாவில் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கான நடைமுறைகளின் ஒரு பகுதியாகச் சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய ஆய்வு நிபந்தனைகளும் அனுமதி விதிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நிறுவனங்களும் ஏதோ ஒரு குறைந்த அளவுக்காவது அவற்றைப் பின்பற்றுகின்றன. ஆனால் இங்கே மக்களின் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மதிப்பிடுவதற்கோ, அதன் அடிப்படையில் அனுமதிகளைப் பெறுவதற்கோ எவ்வித சட்டப்பூர்வக் கட்டாயங்களும் இல்லை.
இந்த இரண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் சார்ந்த உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்போரில் ஒருவர் ரிஞ்ச்சின். அவர் ஒரு ஆய்வாளரும் கூட. நீதிமன்றத்தில் உள்ள இரண்டு மனுக்களில் பொதுமக்களின் உடல்நலம் என்ற கோணம் கூர்மையாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே தங்களது சொந்த உடல்நலப் பிரச்சனைகள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். “ஆண்கள் பெரும்பாலும் தங்கள் நிலங்களுக்கான இழப்பீட்டுப் பணம் பற்றியும் வேலை தரப்படுவது பற்றியுமே பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் உடல்நலப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்கள்,” என்றார் ரிஞ்ச்சின். “நிலமும் வேலையும் தீர்க்கப்பட வேண்டிய உடனடிப் பிரச்சனைகள்தான். ஆனால் மோசமான உடல்நலக்கேடுகள் நாளாக நாளாகத்தான் வளர்கின்றன. எப்போதுமே அவை கண்ணுக்குப் புலப்படுவதுமில்லை,” என்கிறார் அவர்.
அரசாங்க மருத்துவ வசதிகள் எதுவும் பக்கத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் ஷிவ்பால். கிராமத்தினர் பெரும்பாலும் தனியார் மருத்துவர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்காக நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்தாக வேண்டியிருக்கிறது.
இதனிடையே, நிலக்கரி எடுக்கும் வேலைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டது போல 500 மீட்டர் தள்ளியல்ல, கிராமத்திற்கு மிக நெருக்கமாகவே அந்த வேலைகள் நடக்கின்றன.
“பசுமைத் தீர்ப்பாயம் இந்த ஆணையைப் பிறப்பிக்கச் செய்வதற்கு நாங்கள் நான்காண்டு காலம் வழக்கு நடத்திப் போராட வேண்டியிருந்தது. இப்போது அந்த ஆணை செயல்படுத்தப்படுகிறதா என்று கவனிக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் ரிஞ்ச்சின்.
கோசாம்பாலி கிராமத்திற்கு இட்டுச் செல்லும் ஷிவ்பால், வயல்களுக்கும் கிராமத்திற்கும் ஏற்பட்டுள்ள வெளிப்படையான சேதங்களைக் காட்டுகிறார்.
குழாய்களில் கெட்டுப்போன தண்ணீர்தான் வருகிறது என்பதால் உள்ளூர்ப் பள்ளியிலும் கிராமத்திலும் உள்ள மோட்டார் பம்ப்புகளும் ஆழ்துளைக் கிணறுகளும் இயக்கப்படுவதில்லை.
நிலம் கருப்பாக மாறி, விரிசல் விட்டிருக்கிற ஒரு வயலைக் காட்டுகிறார் ஷிவ்பால். வயலுக்குள் கெட்டுப்போன தண்ணீரைப் பாய்ச்சுகிற குழாய்களைக் காட்டுகிறார். இருந்தபோதிலும் கிராம மக்கள் இந்த வயல்களில் பயிரிடத்தான் செய்கிறார்கள். சில இடங்களில் சுத்திகரிக்கப்படாத இந்த நீர் நேரடியாகக் குளங்களுக்கு வந்து சேர்கிறது. அந்தக் குளங்களில்தான் பெண்கள் குளிக்கிறார்கள்.
கருத்த நிலமும் பொய்த்த வானமும்
நீதிமன்றத்தில் மக்களின் உரிமைகள், அவர்களது உடல்நலப் பிரச்சனைகள் தொடர்பாகப் பொறுப்பேற்பது பற்றிய கேள்வி வருகிறபோதெல்லாம், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் இரு தரப்பாருமே ஒரே பக்கத்தில்தான் நிற்கிறார்கள்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாய விசாரணையின்போது ஜேஎஸ்பிஎல் போன்ற தனியார் நிறுவனங்கள், கிராம மக்களின் உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டிருக்கும் சேதத்திற்கோ, அவர்களுக்கு வேலை தரப்படாததற்கோ தங்களால் பொறுப்பேற்க முடியாது என்று கூறின. நிலக்கரி ஊழல் விவகாரத்தைத் தொடர்ந்து சுரங்கங்களைத் தாங்கள் இயக்கவில்லை என்று ஜிண்டால் கம்பெனி அதற்குக் காரணம் கூறுகிறது. கோல் இந்தியா நிறுவனமோ, தனது பங்கிற்கு, சுரங்க உரிமங்கள் தன்னால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதால் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தன்னால் பொறுப்பேற்க இயலாது என்று கூறுகிறது.
பசுமைத் தீர்ப்பாயம் ஜூலையில் பிறப்பித்த ஆணையில் இதற்குப் பதில் சொல்லியிருக்கிறது. “நிலக்கரிச் சுரங்க உரிமம் பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என்ற காரணத்துக்காக, சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புக்கும் பொறுப்பேற்பதைத் தள்ளிவிட முடியாது, தவிர்க்கவும் முடியாது,” என்று ஜிண்டால் கம்பெனிக்குத் தீர்ப்பாயம் சொன்னது. கோல் இந்தியா நிறுவனம்தான் தற்போதைய காப்பாளர் என்பதை நினைவூட்டிய தீர்ப்பாயம், இந்தப் பிரச்சனையிலும் அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பு இருக்கிறது என்று கூறியது.
எல்லாத் துறைகளுக்கும் பொதுவான விதியாக, “சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும், அந்தச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நபரால் சரிசெய்யப்பட்டாக வேண்டும்,” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
உடல்நலக் கேடுகளுக்கோ சுற்றுச் சூழல் கேடுகளுக்கோ இழப்பீடு கோருவதோ போதாது என்பதை இந்தக் கிராமங்களின் மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்கிறார் ரிஞ்ச்சின். இழப்பீடு கோருகிறபோது நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கிச் சிறு தொகைகளை வீசிவிட்டுத் தப்பித்துக்கொள்கின்றன. அந்தத் தொகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுமில்லை, தொடரும் சேதங்களைத் தடுப்பதுமில்லை.
பொதுத்துறை நிர்வாகங்களும் தனியார் நிர்வாகங்களும் ஊழல் விவகாரங்களிலும் யாருக்குப் பொறுப்பு என்பதிலும் மோதிக்கொண்டிருக்கின்றன. கோசாம்பாலி, சரஸ்மால் கிராமங்களின் மக்களோ நிச்சயம் ஒருநாள் மருத்துவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நில உரிமைகள், வன உரிமைகள், உடல் நல நிலைமைகள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. அரசாங்கக் கொள்கைகளாலும் தனியார் துறையினரின் தவறுகளாலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறவர்கள் ஏழையிலும் ஏழையாக இருப்பவர்கள்தான்,” என்கிறார் ரிஞ்ச்சின்.
அனு புயன்
நன்றி: தி வயர்
https://thewire.in/health/chhattisgarh-villagers-health-left-to-gods-mercy-as-coal-india-shirks-its-duty