நீதிபதி மரணம் தொடர்பான சர்ச்சை குஜராத் காவல் துறை மீது கவனத்தை குவிக்கிறது
மூன்று பேரைச் சட்ட விரோதமாகக் கொலை செய்த வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்தது ஏன் என்று ஹர்ஷ் மந்தர் விளக்குகிறார்.
2015, நவம்பர் 26 அன்று, சொராபுதீன் ஷேக் எனும் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் குஜராத் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். சொராபுதீன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் சேர்ந்து குஜராத்தில் செல்வாக்கு மிக்க தலைவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் காவல் துறை கூறியது. அவர்களின் இலக்கு நரேந்திர மோடி எனக் கருதப்பட்டது. இந்தச் சதித் திட்டம் பற்றி ராஜஸ்தான் காவல் துறை குஜராத் காவல் துறைக்குத் தகவல் கொடுத்து, அந்தத் தீவிரவாதியை பிடிக்க உதவி செய்யவும் செய்தி வந்திருந்தது. அகமதாபாத் அருகே விஷாலா சர்கிளில் சொராபுதீன் பைக்கில் செல்வதைக் காவல் துறை குழு ஒன்று பார்த்ததாக கூறப்பட்டது. அவரை நிறுத்த முயன்றதாகவும், ஆனால் கேட்கவில்லை என்றும் கூறப்பட்டது. அவர் தப்பிக்க நினைத்துக் காவலர்களை நோக்கிச் சுட்டிருக்கிறார். தற்காப்புக்காகத் திரும்பிச் சுட்டு அவரைக் கொலை செய்ததாகக் காவல் துறை தெரிவித்தது.
2002 குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு, மாநில காவல் துறையுடனான என்கவுண்டரில் ஆண்களும் பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான செய்திகள் அவ்வப்போது நாளிதழ்கள் முதல் பக்கத்திலும், டிவி திரைகளிலும் வெளியாகிவந்திருக்கின்றன. இந்த ஆண்களும் பெண்களும் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய எண்ணியிருந்த பயங்கர தீவிரவாதிகள் எனக் காவல் துறை கூறி வந்தது. ஆனால், ஒவ்வொரு நிகழ்விலும், குறித்த நேரத்திற்கு முன், காவல் துறையால் அவர்கள் சதி திட்டம் தொடர்பான எல்லா தகவல்களையும் முன்கூட்டியே சேகரிக்க முடிந்து, அவர்களை அதிசயப்படும் வகையில் (அல்லது அவ்வளவு தொழில்முறை தன்மை) பிடிக்கவும் முடிந்திருக்கிறது. தப்பிச்செல்ல முயன்று காவல் துறையினரை நோக்கி சுட்டதால் இந்த ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டனர் என்பதே அதிகாரிகள் தரப்பு விளக்கமாக எப்போதும் அமைந்தது.
சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த குஜராத் அரசு, 2003 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், மாநில காவல் துறையால், 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அரசு ஒப்புக்கொண்டது. இவை என்கவுண்டர்கள் எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படலாயின. ஆனால் குஜராத் அரசின் பதிலில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை.
“என்கவுண்டர்கள்” என்பவை, காவல் துறையின் விசாரணையில் – சட்டபூர்வமாக அல்லது சட்டவிரோதமாக – இருக்கும் நபர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் வகையில் கொல்லப்படுவதாகும். குஜராத்தில் என்கவுண்டர்கள் நடைபெற்ற சூழல் தொடர்பாக காவல் துறை தெரிவித்த கதைகள் பெரும்பாலும் சிக்கலானவை, நம்ப முடியாதவை. கொலை செய்யப்பட்டவர்களில் ஆறு பேர், அவர்கள் இறந்தபோது காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்துள்ளனர். விசாரணையில் இருக்கும்போது, காவலர்கள் தற்காப்பிற்காகக் கொல்லும் அளவுக்கு ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. இந்தச் சம்பவங்களில் கொல்லப்பட்ட நபர்கள் அனைவருமே, ஆபத்தான தீவிரவாதிகள், மோடி அல்லது வேறு தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் அல்லது தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்று கூறப்பட்டதே தவிர, இந்தக் குற்றச்சாட்டுகளை நிருபிக்கக்கூடிய வலுவான ஆதாரங்கள் இருக்கவில்லை. இந்தக் கொலைகளுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை அல்லது மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறவில்லை.
அதிகார முறைகேடுகளின் புழுதி படிந்த கோப்புகளுக்குக் கீழ் புதைக்கப்பட்ட எண்ணற்ற பல என்கவுண்டர் கொலைகள் போலவே, சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் ஒரு வருடம் கழித்து அவரது கூட்டாளி துளசிராம் பிராஜாபதி ஆகியோர் எப்படிக் கொல்லப்பட்டனர் எனும் கதை வெளியே வராமலே போயிருக்கும். ஆனால் இந்த என்கவுண்டர்களின் மறைக்கப்பட்ட உண்மைகள், தற்செயல் நிகழ்வுகள், திறமை வாய்ந்த பத்திரிகையாளரின் வழக்கத்திற்கு விரோதமான புலனாய்வு உத்திகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் இடைவிடாத நியாயத்திற்கான போராட்டம், எல்லாவற்றுக்கும் மேல், எதிர்பாரத துணிச்சல், நேர்மையை வெளிப்படுத்திய அதிகாரிகள் ஆகிய அம்சங்களால் அம்பலமாயின.
இந்த வழக்குகளுக்கான விசாரணை, குஜராத் காவல் துறையால் பலர் கொல்லப்பட்ட விதத்தையும், இந்த மரணங்கள் எப்படித் தற்காப்புக்கானவை எனக் கூறப்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, பல மூத்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சட்டத்தை மீறிய கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டிற்காகச் சிறையில் வைக்கப்பட்டனர்.
உண்மையைக் கக்கிய அதிகாரிகள்
சொராபுதீன் ஷேக் வழக்கில் இரண்டு விஷயங்கள் குறுக்கிட்டன. 2005 டிசம்பரில் அவரது சகோதரர் ருபாபுதீன், தனது சகோதரர் மரணம் தொடர்பாக காவல் துறை சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றும், சொராபுதீன் இறந்த அதே நேரத்தில் காணாமல் போன தனது மைத்துனி கவுசர் குறித்தும் கவலையாக இருப்பதாக இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். சொராபுதீன் எப்படிக் கொல்லப்பட்டார் என்று கண்டறியவும், கவுசர் பீக்கு என்ன ஆச்சு என்று கண்டறியவும் குஜராத் காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிக சர்குலேஷன் கொண்ட நாளிதழான திவ்யா பஸ்காருக்காகப் பணியாற்றிய, வண்ணமயமான வரலாறு கொண்ட பத்திரிகையாளரான பிரசாந்த் தயாளுடன், சில காவல் துறை ஆய்வாளர்கள் மது அருந்தியபடி பேசியிருக்கவில்லை எனில், இப்போதும்கூட எதுவும் வெளிவந்திருக்காது. காரேஜில் பணியாற்றி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பின்னர் புலனாய்வு பத்திரிகையாளராக தயால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் அவர் காவல் துறை அதிகாரிகளுக்கு மது பாட்டில்களை அளித்து செய்திகளைக் கறந்துகொண்டிருந்தார். அன்றைய தினம் மாலை, ரத்தத்தில் நன்றாக மது கலந்ததும், காவல் துறை அதிகாரிகள், தேச விரோத ஆசாமிகளைத் தாங்கள் எப்படி அப்புறப்படுத்தினோம் எனப் பெருமை அடித்துக்கொண்டனர்.
அந்த பத்திரிகையாளர் மேற்கொண்டு விசாரித்தார். அவரது விசாரணையில் இரண்டு பேரும் பர்தா அணிந்த பெண்மணி ஒருவரும் பண்ணை வீட்டில் இருந்தது தெரியவந்தது. 2006 நவம்பரில், சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ கொலை செய்யப்பட்ட பரபரப்பான கதையைச் செய்தியாக வெளிக்கொணர்ந்தார் (2008இல் அவர் மீது குஜராத் காவல் துறையால் தேசவிரோத வழக்கு தொடரப்பட்டது; 2013இல்தான் அவர் விடுவிக்கப்பட்டார்). தயாளின் செய்தி தொடர் விளைவுகளை ஏற்படுத்தி, சொராபுதீன் மற்றும் மற்றவர்கள் கொலைக்காக, குஜராத் காவல் துறை அதிகாரிகள் டிஜி.வனஜரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன், ராஜஸ்தான் காவல் துறை அதிகாரி தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட வழிவகுத்தது.
சொராபுதீன் கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை காவல் துறை ஐ.ஜி. கீதா ஜோகாரியால் மேற்கொள்ளப்பட்டது. அவரது விசாரணை, காவல் துறை சொன்ன கதை அப்பட்டமான ஜோடனை என்றும், எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சொராபுதீன் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் நிரூபித்தது. சொராபுதீன் பயணம் செய்ததாகக் காவல் துறையால் சொல்லப்பட்ட பைக் உண்மையில், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவலர் ஒருவரின் சகோதருடையது என தெரியவந்தது. இது பொய்யான என்கவுண்டர் என குஜராத் அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
2005 நவம்பர் 22ஆம் தேதி, சொராபுதீன், கவுசர் பீ, துளசிராம் பிராஜாபதி ஆகியோர் ஒரு சொகுசு பஸ்ஸில் ஐதராபாத்திலிருந்து சங்லிக்குச் சென்றுகொண்டிருந்த போது, காவல் துறை அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர்களைப் பிடித்துச் சென்ற காவலர்கள் குஜராத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் அவர்கள் சென்றிருந்தனர். காவல் துறை முதலில் சொராபுதீன் மற்றும் பிராஜபதியை மட்டுமே கைது செய்தது. ஆனால் கவுசர் பீ, கணவரைத் தனியே அழைத்துச்செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். மூன்று பேரும் காவலர்களால் பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டனர். குஜராத்தைச் சென்றடைந்ததும், கவுசர் பீ தனியே பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டார். பிராஜபதி பின்னர் ராஜஸ்தான் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2005 நவம்பர் 26 அன்று சொராபுதீன் காவல் துறைக் குழுவால் கொல்லப்பட்டார்.
கொடூரமான கொலை
கொலை செய்யப்பட்ட கவுசர் பீயின் உடல், 2005, நவம்பர் 29இல் எரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. காவல் துறை அவர் கொலை செய்யப்பட்டதை அறிவிக்கவும் இல்லை, அவரை தீவிரவாதி எனச் சொல்லவும். இல்லை. சிபிஐயிடம் காவல் துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் என்ன நடந்திருக்கும் என்பதை மனித உரிமைகள் வழக்கறிஞர் தெளிவாகப் புரிய வைத்தார்: “2005 நவம்பர் 26 முதல் 28 வரை கவுசர் பீ, அர்ஹம் பண்ணை எனும் பண்ணை வீட்டில் தங்க அடைக்கப்பட்டார்… சவுபே எனும் எஸ்.ஐ அவரைக் காவல் காக்க நிறுத்தப்பட்டார். .. ரவீந்திர மக்வானா சப் இன்ஸ்பெக்டர்… 25.8.2010 ல் சிபிஐ முன் … ‘கவுசர் பீயைக் காவல் காக்கப் பணிக்கப்பட்ட சவுபே பண்ணை வீட்டில் அவரை வன்புணர்ச்சி செய்தார்…’. கவுசர் பீயின் இறுதி முடிவு இன்னும் கோரமாக இருந்தது. நவம்பர் 29இல் அவர் சவுபேவால், சாஷிபாகில் உள்ள ஏ.டி.எஸ். அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். டிஜி வனஜரா டி.ஐ.ஜி மற்றும் ராஜ்குமார் பாண்டியன் அவரிடம் சமரசம் பேசினர். அமைதியாக இருந்தால் பணம் தருவதாகக் கூறினர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். சொராபுதீன் மரணம் பற்றிக் கூறியதும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கு முன்னர் டாக்டராக இருந்த குற்றப் பிரிவு எஸ்.பி நரேந்திர அமீன் வன்ஜராவால் மாலை 4 மணிக்கு அழைக்கப்பட்டார். அந்த அலுவலகத்திலேயே கவுசர் பீ விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
கவுசர் பீ கொலை செய்யப்பட்டதை சொராபுதீன் கூட்டாளியான பிராஜபதி தெரிந்துகொண்டதும், இவர்கள் பிடித்து வரப்பட்டதற்கு சாட்சி என்பதால் தானும் கொல்லப்படுவோம் என உணர்ந்துகொண்டார். தான் மட்டுமே மிஞ்சியிருக்கும் சாட்சி என்பதால் தனக்கும் இதே கதிதான் ஏற்படும் என அஞ்சினார். தனது வழக்கறிஞர், மற்றும் விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட பலரிடம் அவர் தனது பயம் பற்றிப் பேசியிருக்கிறார். தன்னுடைய உயிரைக் காக்குமாறு தேசிய மனித உரிமை கமிஷனுக்கு அவர் கடிதம் எழுதினார். தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கொல்லப்படலாம் என அஞ்சினார். மற்ற இடங்களுக்கு அவர் மாற்றப்பட்டபோது, தனது குடும்பத்தினரை அதே ரயிலில் வருமாறு கேட்டுக்கொள்வார். அவர் முன்னெச்சரிக்கையுடன் இருந்தார்.
அவரது மன்றாடல்களை மீறி, இன்னொரு என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டார். 2006 டிசம்பர் 26இல் ராஜஸ்தான் காவல் துறை அவரை ரயிலில் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தது. அகமதாபாத்தில் இருந்து இரவு ரெயிலில் உதய்பூருக்கு சென்றார். டிசம்பர் 28ஆம் தேதி காலை, குஜராத் – ராஜாஸ்தான் எல்லை நெடுஞ்சாலை அருகே சப்ரி எனும் கிராமத்தில் அவர் குஜராத் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் அவர் தப்பிச் சென்றதாகக் காவல் துறை கூறியது. இந்த என்கவுண்டர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்றது. இங்கு தான் கொலை நடப்பதற்கு 13 நாட்களுக்கு முன் வன்ஜரா மாற்றலாக வந்திருந்தார். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, பிராஜாபதி அகமாதாபாத்தில் பிடித்து செல்லப்பட்டதாகத் தெரிவித்தது. வன்ஜரா மற்றும் இன்னொரு அதிகாரி விபுல் அகர்வால் உத்தரவின் பேரில் என்கவுண்டர் நடைபெற்றதாக சிபிஐ தெரிவித்தது.
காவல் அதிகாரி வாக்குமூலம்
சொராபுதீன் மற்றும் கவுசர் பீ கொலை விசாரணையில் முக்கிய கட்டத்தில், அவரை விசாரிக்க புலனாய்வு அதிகாரி வி.எல்.சோலங்கி அனுமதி கேட்டிருக்கக்கூடிய கட்டத்தில் பிராஜாபதி கொல்லப்பட்டார். பின்னர் சிபிஐயிடம் காவல் துறை அதிகாரி ஜி.சி.ரெய்கர் அளித்த தகவல்படி, 2006 டிசம்பர் கடைசி இரண்டாவது வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். காவல் துறை இயக்குனர் ஜெனரல் பி.சி.பாண்டே, சொராபுதீன் கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜி கீதா ஜோகாரி ஆகியோருடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக ரெய்கர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார் (இருவரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்). ரெய்கர் வாக்குமூலம் படி, துளசிராம் பிராஜாபதியை விசாரிப்பதன் மூலம், அதற்கு அவர் அனுமதி கோரியிருந்தார், இந்த வழக்கை மேலும் இழுக்க விரும்பும் சோலங்கியை வழிக்கு கொண்டுவர முடியாததற்காக எங்களைக் கடிந்துகொண்டார். இதை விரைந்து முடிக்குமாறு கூறினார்”.
பிராஜாபதி விசாரிக்கப்படக் கூடாது மற்றும் சோலங்கியின் விசாரணை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஷா குறிப்பாக உத்தரவிட்டதாக, ரெய்கர் வாக்குமூலம் தெரிவிக்கிறது. விசாரணை அதிகாரி சோலங்கி, தனது விசாரணையை மேற்பார்வை செய்யும் மூத்த அதிகாரியான ஜோகாரி, அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கும் வகையில் வழக்கு ஆவணங்களை மாற்றி வைக்குமாறு கூறியதாகவும் சிபிஐயிடம் கூறினார். இது ஷாவின் உத்தரவு எனக் கூறியதாகவும் தெரிவித்தார். சோலங்கி மறுத்துவிட்டார்.
2007 மார்ச்சில், இந்த விசாரணை காவல் துறை துணை ஐஜி ரஜ்னிஷ் ராயிடன் ஒப்படைக்கப்பட்டது. ராயிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது, அவர் மாநிலக் காவல் துறை மற்றும் அரசியல் சக்திகளைப் பாதுகாப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, 2007 ஏப்ரலில் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள், வன்ஜரா, பாண்டியன், தினேஷ் வி.என் ஆகியோரைக் கைது செய்து சகாக்களைத் திகைக்கவைத்தார். பாண்டியன், ரஜ்னிஷுடன் பயிற்சி வகுப்பு மாணவர் மற்றும் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றாலும், ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும், உண்மை, நேர்மையின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அமித் ஷா மற்றும் அவருக்கு விசுவாசமான காவல் துறை அதிகாரிகள் போலி என்கவுன்ட்டரை மறைக்க எல்லா விதங்களிலும் முயற்சிப்பதாக ரஜ்னிஷ் தெரிவித்தார். இந்தச் சதியின் ஒரு அங்கம் பிராஜாபதியின் கொலை என்றும் அவர் கூறினார்.
2010 ஜனவரியில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. 2010 ஏப்ரலில், குஜராத்தின் மூத்த காவல் துறை அதிகாரி அபய் சுடாசாமா, சொராபுதீனுடன் சேர்ந்து பணம் பறித்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சுடாசாமா கைதிற்குப் பிறகு, தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு வந்து, பிறகு நீக்கப்பட்ட 331 தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில், அமித் ஷாவும் உடந்தை என சிபிஐ குற்றம்சாட்டியது.
சொராபுதீன் கிரிமினல் கும்பலின் உறுப்பினராக இருந்தார் எனும் திடுக்கிடும் தகவல் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கும்பல், குஜராத் காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவைப் பெற்று ராஜஸ்தானில் பணம் பறித்தலில் ஈடுபட்டிருந்தது. எனினும் உதய்பூரில் நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்த மார்பிள் வர்த்தகர் ஒருவரை இந்தக் கும்பல் மிரட்டியபோது சிக்கல் ஏற்பட்டது. சொராபுதீனின் காவல் துறை மற்றும் அரசியல் எஜமானார்கள், அவர் கட்டுப்படுத்த முடியாதவராகிவிட்டார் என்பதால் அவர் அழிக்கப்பட வேண்டும் என நினைத்தனர். அவர் தனது சக்திவாய்ந்த எஜமானர்களையும் கூட்டாளிகளையும் காட்டிக்கொடுத்துவிடுவார் என்பதால், அவர் செய்த குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான குலாப் சந்த் கத்தாரியா ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. 2013, மார்ச் 6ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகை, ஆர்.கே.மார்பில்ஸ் உரிமையாளர் விமல் பட்னி மற்றும் குலாப் சந்த் கத்தாரியா, ஆர்.கே.மார்பிள்சிடமிருந்து பணம் கேட்டு மிரட்டியதால் சொராபுதீனைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டியது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுடன் ஆலோசனை செய்த பிறகு, கொலை செய்வதற்கான வேலை குஜராத் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என சிபிஐ மேலும் குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் அமித் ஷா மீது குற்றம்சாட்டப்பட்டு, 10க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டார். பணம் பறிப்பு செயல்களிலும் ஷா உடந்தை என சிபிஐ மேலும் குற்றம்சாட்டியது.
வன்ஜராவின் பங்கு
குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவரான தயாஜி கோபரான் வன்ஜரா, தொடர் சட்ட விரோதக் கொலைகளைச் செய்ததற்காக, 2007இல் கைது செய்யப்பட்டு, 2015இல் பெயில் கிடைக்கும்வரை சிறையில் இருந்தார். சொராபுதீன், கவுசர், பிராஜாபதி ஆகியோரைக் கொலை செய்தததாகக் குற்றம் சாட்டப்பட்டதுடன், சமீர் கான் கொலை (2002 அக்டோபர்), மும்பை கல்லூரி மாணவி இஷரத் ஜஹான் மற்றும் மூவர் கொலை (2004, ஜூன் 15இல் சுட்டுக் கொலை) மற்றும் சாதிக் ஜமால் கொலை (2003) ஆகிய வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டார். குஜராத் காவல் துறை அதிகாரிகள் ஆறு பேர் உள்பட, 32 காவல் துறை அதிகாரிகள் போலி என்கவுண்டர் வழக்குகளில் உள்ள தொடர்புக்காகச் சிறைவாசம் அனுபவித்த்தாக 2013 செப்டம்பரில் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் வன்ஜராவின் கீழ் பணியாற்றியவர்கள்.
சிறையிலிருந்து அவர் ராஜினாமா கடிதம் எழுதினார். அதில் அவர் சிறிதளவுகூட வருத்தம் தெரிவிக்கவில்லை. “போலி என்கவுண்டர்கள் மேற்கொண்டதற்காக என்னையும், என் அதிகாரிகளையும் சிஐடி / சிபிஐ கைது செய்தது” என அவர் எழுதினார். “இது உண்மை எனில், நான்கு வழக்குகளுக்கான சிபிஐ விசாரணை அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும், ஏனெனில் அதிகாரிகள் என்ற முறையில் நாங்கள் இந்த அரசின் கொள்கை முடிவுகளைத்தான் செயல்படுத்தினோம், இவை ஊக்குவிக்கும் வகையில் வழிகாட்டும் வகையில் இருந்தது, எங்கள் செயல்களை நெருக்கமாகக் கண்காணித்துக்கொண்டிருந்தனர்” என்றார். அவர் தன்னை இந்து தேசியவாதி என்றும் நரேந்திர மோடியைக் கடவுள் என்றும் கூறினார், ஆனால் கைவிடப்பட்டவராக, அதிருப்தியில் உள்ளவராக உணர்ந்தார். 2015 பிப்ரவரில் பெயிலில் விடுதலையானவர், வீடு திரும்பிய போது நல்ல வரவேற்பை பெற்றார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014 மே மாதம் தில்லியில் ஆட்சி அமைத்ததும் காற்று மாறி வீசத் துவங்கியது. ஷா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் நிலை தலைகீழாக மாறியது. ஆரம்பத்தில் சில தடங்கல்கள் இருந்தாலும், அவை சரி செய்யப்பட்டன. விசாரணை நீதிபதி ஜே.டி. உத்பத், 2014 ஜூன் 26இல் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதற்காகக் கண்டனம் தெரிவித்தார். 2014, ஜூன் 26க்குள் ஆஜராகுமாறு அவர் ஷாவுக்கு உத்தரவிட்டார். ஆனால் விசாரணை தினத்திற்கு ஒரு நாள் முன் உத்பத் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பி.எ.லோயா எனும் நீதிபதி நியமிக்கப்பட்டார். நீதிபதி லோயாவும், அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாதது குறித்து கவலை தெரிவித்தார். ஆனால், 2014 நவம்பர் 30 இரவு அல்லது டிசம்பர் 1 அன்று காலை இந்த நீதிபதி, சந்தேகத்திற்குரிய சூழ்நிலை என அவர் குடும்பத்தினர் கூறும் நிலையில் இறந்தார். தி கேரவன் வெளியான கட்டுரையில் பத்திரிகையில் இந்தக் குடும்பத்தினர் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீதிபதி லோயா இறந்த சில வாரங்களில், 2014 டிசம்பர் 30 அன்று, மூன்றாவது நீதிபதி, எம்.பி.கோசவி, சொராபுர்தின் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை விடுவித்தார். அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என கூறிய நீதிபதி, சிபிஐ அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது எனும் அவரது பிரதான வாதத்தில் அர்த்தம் இருப்பதாக கருதுவதாக தெரிவித்தார். இப்படி கூறியதன் மூலம் நீதிபதி, அமித் ஷா விசாரணையில் குறுக்கிட்டார் மற்றும் தொலைபேசி ஆதாரங்கள் தொடர்பான காவல் துறை அதிகாரி ரெய்கரின் முக்கிய வாக்குமூலத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டார்.
ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கத்தாரியாம், ராஜஸ்தான் வர்த்தகர் விமல் பட்னி, குஜராத் முன்னாள் காவல் துறை தலைவர் பி.சி.பாண்டே, காவல் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் கீதா ஜோகாரி, குஜராத் காவல் துறை அதிகாரிகள் அபய் சுடாசமா, ராஜ்குமார் பாண்டியன், என்.அமீன் ஆகியோரும் இந்த வழக்கில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்பட்டனர். இதே போல, அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மூத்த அதிகாரிகள் யஷ்பால் சுடாசமா, அஜய் பட்டேல் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். ராஜ்குமார் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி இல்லை, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனும் பலவீனமான கருத்தின் அடிப்படையில் கோசாவி அவரை விடுவித்தார். ஆனால் கொலை வழக்கில் ஒரு அதிகாரி குற்றம்சாட்டப்படும்போது இத்தகைய அனுமதி தேவையில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பதவியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மீண்டும் நியமிக்கப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
2015 பிப்ரவரியில் பி.பி.பாண்டே ஜாமீனில் விடுதலை ஆனார். மூன்று நாளில் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டு, பாண்டே மீது குற்றம் சாட்டிய சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரி சதீஷ் வர்மாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் அவரிடம் அளிக்கப்பட்டது. 2016 ஏப்ரலில், அவர் குஜராத்தின் பொறுப்பு இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.- இந்தியாவிலேயே கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற ஒரு காவல் துறை அதிகாரிக்கு இத்தகைய உயர் பொறுப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை. காவல் துறை அதிகாரி ஜூலியோ ரிபைரோ இந்தப் பதவி உயர்வு மற்றும் நியமனத்தை எதிர்த்தாலும், வெற்றி பெற முடியவில்லை. “நான்கு பேர் கொலை வழக்கு போன்ற மோசமான குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், அதிலும் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மாநில காவல் துறைக்கு தலைமை வகிக்க முடியாது என அவர் கூறினார். இடைப்பட்ட காலத்தில் ஏழு அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்தது. மூன்று பேர் ஓய்வு பெற்றனர். மற்றவர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
இதற்கு மாறாக, அமித் ஷா மற்றும் பல மூத்த காவல் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கைது செய்யப்படும் வகையில் அச்சமில்லாமல், துணிச்சலாக விசாரணை நடத்திய ரஜ்னிஷ் ராய் தொடர்ந்து தண்டிக்கப்பட்டார். 2007க்குப் பிறகு, ஐஏஎஸ் அதிகாரியான அவர் மனைவி இருக்கும் அதே இடத்தில் அவர் ஒருமுறைகூட பணியில் அமர்த்தப்படவில்லை. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரது ரகசிய அறிக்கைகள் சந்தேகிக்கப்பட்டு, அவரை விட அனுபவம் குறைந்தவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. தான் சரியென நம்பிய ஒன்றைச் செய்ததற்கான தனிப்பட்ட விலை என இதை ஏற்றுக்கொண்டார்.
தானும் சதிஷ் வர்மாவும் (இஷரத் ஜஹான் வழக்கு) விசாரணை மேற்கொண்ட பிறகு குஜராத்தில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நின்றுபோயின என்பது தனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக ரஜ்னிஷ் ராய் என்னிடம் கூறினார். காவல் துறை விசாரணையில் நடைபெறும் கொலைகளுக்கு குற்றவியல் விசாரணையிலிருந்து பாதுகாப்பு எனும் நடைமுறையை இந்த இரு அதிகாரிகளும் உடைத்திருக்காவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது. இது ஒன்று மட்டுமே, அவர்கள் பணி வாழ்க்கையில் இழந்ததையும் அனுபவித்த இன்னல்களையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
இதனிடையே, 2014இல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பல மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி அமித் ஷாவை பாஜக தலைவராக்கினார். மோடியின் இந்தியாவில் ஷா இரண்டாவது செல்வாக்கு மிக்க நபராகக் கருதப்படுகிறார். 2005இல், சொராபுதின், அவரது மனைவி கவுசர், துளசிராம் பிராஜாபதி ஆகியோர் கொலை, இஷரத் ஜஹான் உள்ளிட்டோரின் சட்ட விரோதக் கொலைகள் தொடர்பான சதித் திட்டம் திட்டியது, உத்தரவிட்டது ஆகியவற்றுக்காக ஷா மீது குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் என்பது மோடிக்கு ஒரு பொருட்டே அல்ல.
எந்த கிரிமினல் வழக்கிலும் தனது குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ முறையீடு செய்யாமல் இருப்பது மிகவும் அரிதானது. ஏனெனில் தனது விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தவறானது என ஒப்புக்கொள்வதுபோல இது ஆகிவிடும். ஆனால். சொராபுதீன் வழக்கில், அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ முறையீடு செய்யவில்லை. சொராபுதீனின் சகோதரர் ருபாபுதின் ஷேக்தான், மும்பை நீதிமன்றத்தில் அமித் ஷா விடுவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் சில விசாரணைகளுக்கு பிறகு அவரும் வழக்கை வாபஸ் பெற்றார். தனக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதால் உயிருக்கு பயந்து இவ்வாறு செய்ததாகப் பேட்டிகளில் கூறினார்.
இந்த விஷயம் கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் இருக்கக்கூடிய அளவுக்கு மிகவும் முக்கியமானது எனக் கருதியதால், என்னுடைய நண்பர்களான மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் ஆகியோர் உதவியுடன் இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளேன். ஷா அல்லது குஜராத் காவல் துறை அதிகாரிகள் குற்றம் செய்தவர்கள் என நான் கூறவில்லை (அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை). சிபிஐ அவர்களுக்கு எதிராக குற்றப்பதிரிகை தாக்கல் செய்ததால், பொது நலன் கருதி, குஜரத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு எதிரான ஆதாரங்கள் கேட்கப்பட்டு நியாயமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், மும்பை உயர் நீதிமன்றம் முகாந்திரம் இல்லை எனும் அடிப்படையில் எனது மனுவைத் தள்ளுபடி செய்தது. அதாவது கொலை செய்யப்பட்ட மனிதருடன் தொடர்பு இல்லாதவன் என்பதால், இதில் தலையிட எனக்கு உரிமை இல்லை எனும் அடிப்படையில் இவ்வாறு செய்தது. ஆனால் இது தனிப்பட்ட இழப்பு அல்லது சொராபுதீன் சகோதரர் ருபாபுதீன் ஷேக் இழப்பு தொடர்பானது அல்ல என நம்புகிறேன். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மற்றும் இப்போது ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் மீது பல்வேறு கொலைகள் தொடர்பான தீவிர குற்றச்சாட்டுகள் இருப்பதால், எனக்கும் இந்திய மக்களுக்கும், சொராபுதீன் ஷேக், கவுசர், துளசிராம் ஆகியோர் கொலைகளில் அவருக்கு அல்லது அவருக்குக் கீழே இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை அறியும் உரிமை இருக்கிறது.
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞரான கபில் சிபல், நீதிமன்றம் முன் இந்த கேள்வி எழுப்பும் என் உரிமை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை என்பதற்கு ஆதாரவான கருத்துக்களை நீதிபதிகள் முன் எடுத்து வைத்துள்ளார். நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரு சட்டம்தான் இருக்கிறது, செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை என்பதை நீதிமன்றம் உணர்த்த வேண்டிய தேவை பற்றியும் அவர் வாதிட்டார். காரணம் குறிப்பிடாமல் நீதிமன்றம் என் மனுவையும் தள்ளுபடி செய்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சிபிஐ முயற்சிக்காதது அது எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் சார்பு நிலையுடன் நடந்துகொள்ளும் தன்மையையும் நன்கு உணர்த்துகிறது. அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகளை விடுவிக்கும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகு வெளியான பல செய்திகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அமித் ஷா குற்றமற்றவர் என தெரிவித்தாகக் குறிப்பிடுகின்றன. இது உண்மை அல்ல. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை எதிர்க்கும் மனுதாரரின் வாய்ப்பைத் தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே மறுத்துள்ளன. இன்றைய தேதி வரை ஷாவுக்கு எந்த நீதிமன்றமும் குற்றமற்றவர் என்னும் சான்றிதழை வழங்கவில்லை.
(பின் குறிப்பாக ஒரு நினைவுகூரல்: குஜராத் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் தேர்தல் பிரச்சார உரை ஒன்றில் மோடி, “மோடி சட்ட விரோதக் கொலைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர், சொராபுதீனை மோடி கொலை செய்ததாக கூறுகின்றனர். காங்கிரஸ் நண்பர்களே மத்தியில் உங்கள் அரசு இருக்கிறது. உங்களுக்குத் துணிவு இருந்தால் மோடியைத் தூக்கு மேடைக்கு அனுப்புங்கள்” என்று முழங்கினார். சொராபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும் என அவர் கேட்டபோது, கூட்டம் “அவரைக் கொல்லுங்கள், அவரைக் கொல்லுங்கள்” என பதில் அளித்தது.)
ஹர்ஷ் மந்தர்
நன்றி; தி ஸ்க்ரால்
https://scroll.in/article/859017/who-killed-sohrabuddin-debate-around-judges-death-puts-focus-back-on-murders-by-gujarat-police
சொராபுதின் சேக்தான் ஜோத்பூரில் இருந்து சவுக்கிற்க்கு ரெகுலராக நாய் பிரியாணீ அனுப்பி
கொண்டிருந்தவர்.
இவர்மீது 1995ல் காங்கிரஸ் அரசால் ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்தாக முதன் முதலாக வழக்கு பதிவு செய்யபட்டது.
இவர் மீது மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஏகப்பட்ட கொலை
கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த உத்தமர்க்காகத்தான் நமது உள்ளுர் உத்தமர் சவுக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
Hi anna this comment is not related to this article. Whats wrong with ponmanickavel ips. Every one believe he is straight forward officer including me .But your tweet and fb post are totally opposite. What he done wrong. Please explain details #ponmanickavelSeries 🙄🙄
விரிவான ஆதாரப்பூர்வமான கட்டுரையாக உருவாகியுள்ளது.
விரிவான ஆதாரப்பூர்வமான கட்டுரை.