மறைந்த எழுத்தாளர் சின்னக் குத்தூசி அவர்களுக்கு நேற்று நக்கீரன் இதழ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி பெரியார் திடலில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலானோர் சின்னக் குத்தூசியை கடவுளுக்கு நிகராக புகழ்ந்து பேசினர். அவருடைய நினைவாற்றலைப் பற்றியும், அரசியல் அறிவைப் பற்றியும் வானளாவப் புகழ்ந்தனர். ஆனால் விமர்சனப் பார்வை என்பது இல்லை. திமுக தலைவர் கருணாநிதியை யாராவது ஒரு வார்த்தை குறை கூறினால் கூட, சின்னக் குத்தூசிக்கு கடும் கோபம் வந்து விடும் என்று பலர் குறிப்பிட்டனர். சின்னக் குத்தூசி தூக்கிப் பிடித்த கருணாநிதியால் தான் இன்று திராவிட இயக்கம் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை பேசிய அனைவரும் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.
இணையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், சின்னக் குத்தூசியைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“சின்னக்குத்தூசி அவர்களை நான் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. ஆனால் நான் அறிந்தவரை ஒரு சராசரி தமிழ் வணிக-கட்சி இதழாளர். எந்தத் துறையிலும் நீண்டநாள் இருந்தால் அதைப்பற்றிய தகவல்கள் நினைவில் இருக்கும். அவ்வளவுதான் அவரது திறமை. அந்தத் திறமையைக் கண்மூடித்தனமான தனிநபர் விசுவாசத்துக்காக மட்டுமே செலவிட்டவர், அதுதான் அவரது தகுதி.
மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதி பற்றி நான் என் கருத்துக்களைச் சொன்னபோது சின்னக்குத்தூசிதான் அந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஒருநாள் முன்னர் என் நண்பரிடம் கூப்பிட்டு நான் யார், என்ன எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் ஐந்துநிமிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அதற்கு முன் அவருக்கு என் பெயர் அறிமுகமில்லை. என் நண்பர் கொடுத்த தொலைபேசி அறிமுகத்துக்கு அப்பால் எதையும் தெரிந்துகொள்ளவும் அவர் முயலவில்லை. அவர் எழுதிவந்த வசைமாரி கட்டுரைகளுக்கு அவ்வளவே போதுமென அவருக்குத் தெரிந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவருக்கு அவ்வளவுதான் அறிமுகம். அவரது கட்டுரைகளை வாசித்தால் தெரியும்.
அவருக்கு வரும் அஞ்சலிக் கட்டுரைகளைப் பார்க்கையில் தமிழ் இதழாளர்களின் தரம் என்னவென்று தெரிகிறது. குருநாதரே இந்த லட்சணத்தில் இருக்கிறார்.
தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்திலே சொன்னார். கருணாநிதி அவர்களுக்காக இரவுபகலாக அவர் மேடையிலே பேசியநாட்கள். பெண்ணுக்குக் கல்யாணம் வைத்திருந்தார். யாரோ சொன்னார்கள் ‘முப்பது வருஷம் கட்சிக்காகப் பேசியிருக்கிறாயே, கட்சி உனக்கு என்ன தந்தது? பெண் கல்யாணத்துக்காகப் போய் உதவி கேள்’ என்று.
சென்னை சென்றார் தீப்பொறி ஆறுமுகம். கருணாநிதி அவர்களைச் சந்தித்தார். தீப்பொறியைக் கண்டதுமே கருணாநிதி கேட்டார். ‘’ஏய்யா கட்சியிலே முப்பது வருஷமா இருக்கியே, இந்தான்னு ஒரு ஆயிரம் ரூபா கொண்டாந்து எனக்கு குடுத்தியாய்யா நீ ?’ “
இந்த இரண்டு நிலைபாடுகளேமே, இரண்டு எக்ஸ்ட்ரீம்கள் என்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் சின்னக் குத்தூசி கடவுளா, சராசரியான மனிதரா ?
தமிழகத்தில் இன்று அரசியல் ஆய்வாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும், நுணிப் புல் மேய்பவர்களாகவும், ஆழ்ந்த பார்வை இல்லாதவர்களாகவுமே பெரும்பாலும் இருக்கின்றனர்.
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், தர்க்க ரீதியாக விவாதித்து, அலசி ஆராய்ந்து, அந்த விஷயத்தின் பின்னணியோடு விளக்கும், விவாதிக்கும் திறமை அறுகி வருகிறது. சின்னக் குத்தூசி அப்படிப் பட்ட திறமை வாய்ந்தவர். ஆனால், ஜெயமோகன் குறிப்பிடுவது போல, தனது திறமையை கண்மூடித்தனமான தனிநபர் வழிபாட்டுக்கு அவர் பயன்படுத்தினார் என்பதே உண்மை.
நடுநிலையான விமர்சனம் என்பதே இருக்க முடியாது என்பதே குத்தூசியின் வாதம். குத்தூசியின் வார்த்தைகளில் “எனது எழுத்துக்களில் ஒரு போதும் நடுநிலைக்கு இடமேயில்லை. அரசியல் கட்சிகளுக்கு கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ, அப்படியே அரசியல் விமர்சகர்களுக்கும், கொள்கைகள் இருப்பது மிக மிக அவசியம். இல்லாவிடில் அவர்களது விமர்சனம் அரசியல் விமர்சனமாக இருக்காது; அரட்டைக் கச்சேரியாகத் தான் இருக்கும்.”
குத்தூசியின் இந்த வாதம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. இந்தியாவின் சிறந்த நான் ஃபிக்ஷன் எழுத்தாளராக அறியப்படும், அருந்ததி ராய்க்கு என்ன அரசியல் சார்பு இருக்கிறது ? மக்களை நேசிக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சார்பு இருக்கிறது ? மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும், மிகச் சிறந்த எழுத்தாளர் சாய்நாத்துக்கு என்ன அரசியல் சார்பு இருக்கிறது ?
கருணாநிதியை கண்மூடித்தனமாக ஆதரித்து எழுதியும், அவரிடமிருந்து எந்த சலுகையையும் எதிர்ப்பார்க்காமல், வாழ்ந்தார் என்பதனால், குத்தூசி இது போல பக்கச் சார்போடு எழுதும் மற்றவர்களையும் கருதக் கூடாது. கருணாநிதிக்கு தேர்தல் முடிவுகள் வரும் வரை ஜால்ரா போட்ட, வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகிய அனைவரின் பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் பின்னால், சுயநலம், சுயலாபம் என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
ஆனால், இது போன்ற சுயநலங்களைக் கூட விமர்சனம் செய்ய குத்தூசி மறுத்தார் என்பதுதான் வேதனை. திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கடைசி வரை விமர்சிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த குத்தூசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பார்ப்பனர் என்று குத்தூசியால் தரக்குறைவாக விமர்சனம் செய்யப் பட்ட ஜெயலலிதாவுக்கு, சமூக நீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து, வீரவாள் பரிசளித்த வீரமணியையும் விமர்சிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இது குறித்த கேள்விக்கு, “இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ப எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதைக் கணித்து, அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் சரியாக இருக்கும்” என்று வீரமணியின் அந்த நிலைபாட்டுக்கு சப்பைக் கட்டு கட்டினார் குத்தூசி.
திக, மற்றும் திமுகவை விமர்சிக்க மாட்டேன் என்று தெளிவாகவே சொன்னார் குத்தூசி. “குறைகளைச் சொல்ல நிறைய பேர்கள் இருப்பதால், நிறைகளை மட்டும் விதந்தோதுவதையே எனது கடமையாக கருதுகிறேன்” என்று தனது நிலைபாட்டினை தெளிவாகவே எடுத்துரைத்தார்.
“தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் ஊழல், வன்முறை, தகுதியற்றவர்கள் பதவிகளுக்கு சுலபமாக வருதல் போன்ற சீரழிவுகள் திராவிட இயக்கத்தின் எழுச்சியோடு சம்பந்தப்பட்டதாக ஒரு குரல் தொடர்ந்து இருந்து வருகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?” என்ற கேள்விக்கு, கருணாநிதி பாணியிலேயே, உத்திரப்பிரதேசத்தில் ஊழல், பீஹாரில் ஊழல், காங்கிரஸ் கட்சியின் ஊழல் என்று சுற்றி வளைத்து மழுப்புகிறாரே ஒழிய நேரடியாக பதில் சொல்லவே இல்லை.
தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரோடும் நெருங்கிப் பழகிய குத்தூசி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை விட, திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகிய கொள்கைகளே தன்னை பெரிதும் ஈர்த்ததாக தெரிவிக்கிறார். குத்தூசியின் இந்தப் பிடிப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஏற்பட்டிருக்குமே யானால், தனி நபர் துதிபாட வேண்டிய தேவை ஏற்படாமல், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவராக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருப்பார்.
ஆனால் குத்தூசி தன்னை ஈர்த்ததாக குறிப்பிடும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய அனைத்துக் கொள்கைகளையுமே திமுக கைவிட்டு விட்டது என்பது நிதர்சனம். சமத்துவபுரம் என்று கட்டி, அனைத்து சாதியினரையும் அங்கே குடியேற்றுவது போன்ற முகப் பூச்சு நடவடிக்கைகளைத் தவிர, வேறு எந்த உருப்படியான காரியத்தையும் திமுக செய்திதில்லை. சாதி பார்க்காமல் வேட்பாளர்களை எந்தத் தேர்தலிலும் நிறுத்தியதில்லை.
மதுரவாயல் போன்ற பொதுத் தொகுதிக்கு, தலித்தை வேட்பாளராக நியமிக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சல், திமுகவுக்கு என்றுமே இருந்ததில்லை. மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதையெல்லாம் எப்போதோ மூட்டை கட்டி விட்டார்கள். அரசுக் கட்டிடமான புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட, பூமி பூஜை போட்டு, அதில் அமைச்சர் கலந்து கொள்வது வரை, இவர்களின் மூடநம்பிக்கை எதிர்ப்பு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
கடவுள் மறுப்பு என்பது, கடவுளை வணங்குவதையும் தாண்டி, தந்திரம் செய்யும் சாமியாரை வீட்டுக்கு வரவழைத்து, அந்த நபரிடம் தன் மனைவி மோதிரம் வாங்குவதை வேடிக்கை பார்த்து, தன் பிள்ளையை அந்த நபரிடம் ஆசி வாங்க புட்டபர்த்திக்கு அனுப்பி, அந்த சாமியார் இறந்ததற்கு, திமுக இரங்கல் தீர்மானம் போடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இதையெல்லாம், பார்த்து விமர்சனம் செய்யத் தவறியவர் குத்தூசி. இது ஒரு வகையில் சமூகத்துக்கு இவர் செய்த தீங்கே…. குத்தூசி போன்ற மதிக்கத் தக்க எழுத்தாளர், கருணாநிதியின் தவறுகளையும், 2ஜி ஊழலையும், குடும்ப அரசியலையும், நளினியை விடுதலை செய்ய மறுப்பதையும், நியாயப் படுத்தி எழுதுகையில், அப்பாவித் திமுக தொண்டனுக்கு உண்மையை தெளிவுபடுத்த மறுப்பதோடு பொய்யை எழுதுகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஒரு எழுத்தாளனுக்கு தன்னளவில் நேர்மை உணர்ச்சி வேண்டும். தன்னளவில் நேர்மை உணர்ச்சி இல்லாத எழுத்தாளன் சோரம் போனவனாகவே கருதப்படுவான். ஆனால், குத்தூசியிடம் இது போன்ற குற்றச் சாட்டை சுமத்த முடியாது. திமுகவில் நேற்று முளைத்த காளான்கள், காவல்நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், நிலத்தை ஆக்ரமிப்பு செய்வதும், மிரட்டிப் பணம் பறிப்பதும் என்று அலைகையில், கருணாநிதிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத சேவையைச் செய்த குத்தூசி, கருணாநிதியிடம் எந்தச் சலுகையையும் கடைசி வரை எதிர்ப்பார்க்காமல் இருந்தார் என்பதே அவரை சிறந்த மனிதராக ஆக்குகிறது.
பல கோடி ரூபாய்களை ஸ்பெக்ட்ரத்தில் சுருட்டிய, சலுகை விலையில் வீட்டு மனை பெற்ற காமராஜ், கருணாநிதிக்கு துதி பாடுவதும், எதுவுமே பெறாமல், உள்ளார்ந்த அன்போடு சின்னக் குத்தூசி கருணாநிதிக்கு துதி பாடுவதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா ?
ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசியைப் பற்றிக் கூறியதைக் குறிப்பிட்டு, இந்தக் கட்டுரையை முடிப்பது சிறப்பு.
HE REMAINED AN EXTRAORDINARILY UNSLEFISH MAN IN THESE TIMES OF EXTRAORDINARY GREED.