பணமிதப்பிழப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், பிரதமர் தெரிவித்தது போல ‘கறுப்புப் பணம்’ எரிக்கப்படவோ ஆறுகளில் கொட்டப்படவோ இல்லை என்பது தீர்மானமாகத் தெரிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர், நரேந்திர மோடி அமைதியாகிவிட்டார்.
“பத்து மாதங்களுக்கு முன்பு, ஒரு மிகப் பெரிய வேலையைச் செய்ய ஒரு சிறிய குழு ஒன்றை அமைத்தேன். நாணய நோட்டுகளை அச்சடித்து, வெவ்வேறு வங்கிகளுக்குக் கொடுப்பதென்பது ஒரு பெரும் பணி: 2016, நவம்பர் 13 அன்று கோவாவில் வைத்து நரேந்திர மோடி பேசியது. ரூபாய் நோட்டுகளைத் தடை செய்ததன் மூலம், ஒரே அடியில், தீவிரவாதம், போதைப் பொருள் மாஃபியா, மனிதக் கடத்தல் மற்றும் நிழல் உலகம் ஆகியவற்றை அழித்துவிட்டோம்”, என்று 2016 டிசம்பரில் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
2016, நவம்பர் 8இல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் சொல்லிய ஒரு விஷயம், “நான் அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்துவிட்டேன். இது தவறாகப் போனால் என்னைத்தான் குற்றம்சாட்ட வேண்டும்”. அவர் சொற்களில் அவருடைய ஏகாதிபத்திய முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. பொதுக் கணக்குக் குழுவிடம் (Public Accounts Committee – PAC), “சில மாதங்களாக” இது குறித்த விவாதங்கள் நடந்துவந்ததாகவும், நவம்பர் 7 அன்றுதான் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ய மத்திய வங்கி (Central Bank) விரும்புவதாக அரசாங்கத்திலிருந்து குறிப்பு வந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அடுத்த நாளே, அதாவது நவம்பர் 8 அன்று மாலை 5.30 மணிக்கு, ரிசர்வ் வங்கிக் குழு (RBI board) சந்திக்கிறது!
அந்தச் சந்திப்பில் யாரெல்லாம் பங்கெடுத்தனர் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர், இரு துணை ஆளுனர்கள், இந்தியாவிலுள்ள கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் குஜராத்தின் முன்னாள் தலைமைச் செயலர் உட்பட மூன்று அதிகாரிகள்) என்று நமக்குத் தெரிகிற போதிலும், அக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது, எவ்வளவு நேரம் நடந்தது போன்ற தகவல்கள் இப்போது வரை தெரியவில்லை. அந்தச் சந்திப்பு குறித்த தகவல்களைக் கேட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அனுப்பப்படும் மனுக்களை, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிராகரித்துவருகிறது. ஆனால், அச்சந்திப்பு வெகுநேரம் நீண்டிருக்க வாய்ப்பில்லை, காரணம் 8 மணிக்கு தொலைக்காட்சியில் அமைச்சரவையின் முடிவைக் குறித்து சுருக்கமாகச் சொல்லிவிட்டு நாட்டுடன் உரையாடிக்கொண்டிருந்தார் நம் பிரதமர். சூழ்நிலை ஆதாரங்கள் பிரதமருக்கு எதிராக இருக்கையில், பின்வரும் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை:
- 86% பணத்தை மதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்று யார் தீர்மானித்தது?
- ஏன் 2016, நவம்பர் 8 தேர்ந்தெடுக்கப்பட்டது? யாரால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது?
- யாருடைய ஆலோசனையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது?
நாடாளுமன்றத்தில் அமைச்சர் பியுஷ் கோயல், ஆர்பிஐதான் நாட்டின் பணவியல் கொள்கைக்குப் பொறுப்பு என்றும், அரசாங்கம் ஆர்பிஐயின் பரிந்துரையின் பெயரில்தான் இப்படிச் செயல்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இது, ஆர்பிஐ, பொதுக் கணக்குக் குழுவிடம் எழுத்து மூலமாகத் தெரிவித்த தகவலுடனும், பிரதமரே நவம்பர் 13 அன்று கோவாவில் சொன்ன கருத்துடனும் முரண்படுகிறது (மேலே பார்க்க). யாரெல்லாம் அந்தச் ‘சிறிய குழு’விலுள்ள உறுப்பினர்கள் என்பதை இப்போது வரை அவர் சொல்லவில்லை.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அரசாங்கம் அவரிடம் பணமதிப்பிழப்பு குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர் அதை ‘வாய்மொழியில்’ கடுமையாக எதிர்த்ததாகவும் தெரிவித்தார்.
மறுபக்கம், பணமதிப்பிழப்பு குறித்து அனைத்துமே முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும், வீழ்ச்சி குறித்து தெரிந்ததாகவும், பணமதிப்பிழப்பிற்குப் பிறகு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வரையிலும் அனைத்தும் முன்முடிவு செய்யப்பட்டதாகவும் 2017, ஏப்ரலில் ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் ஆர். காந்தி ஒரு நேர்காணலில் கூறினார்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்குப் பல காலம் முன்பே ரிசர்வ் வங்கி 2000 தாள்களை அச்சடிக்கத் தொடங்கிவிட்டதாக ஆர். காந்தி தெரிவித்தார். ஆனால், விசித்திரமாக, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ராஜன், உர்ஜித் பட்டேலிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது, அவர் கொடுக்க வேண்டிய கட்டாய அறிக்கையில், ஆகஸ்ட் 29 அன்று, பணமதிப்பிழப்பு குறித்தோ, 2000 தாள்கள் அச்சடிக்கப்படுவது குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. நவம்பர் 8க்கு முன்பும் பின்பும் என்ன நிகழ்ந்தது என்று நாட்டிற்குத் தெரியவில்லை.
உத்தம் செங்குப்தா
நன்றி: நேஷனல் ஹெரால்ட்
https://www.nationalheraldindia.com/opinion/pm-modi-the-architect-of-the-disaster
தமிழில்: ஆஸிஃபா