ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது.
ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் போபாலிலும் முஸ்லிம்கள் அதிகம் என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, உத்தரப் பிரதேசம் (19.3 சதவிதம்) அல்லது பிகாரின் (16.9 சதவீதம்) முஸ்லிம் மக்கள்தொகையோடு ஒப்பிட முடியாது. அசாம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற, நான்கில் ஒரு பங்கு முஸ்லிம்களைக் கொண்ட மாநிலங்கள் பற்றிக் கேள்வியே இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தானில், பசுப் பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற பெயரில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடக்கவே செய்துள்ளன என்றாலும், இங்கும் மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், 2002 குஜராத் கலவரங்கள் மற்றும் 2013 முசாபர்நகர் கலவரங்கள் போலப் பெரிய அளவிலான மதக் கலவரங்கள் நடைபெற்றதில்லை.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அல்லது தேர்தலில் ஏதேனும் ஒரு வகையில் முஸ்லிம்கள் முக்கிய சக்தியாக இருக்கும் மாநிலங்களில் பாஜக தேர்தல்களில் நல்ல முடிவைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இதன்படி பார்த்தால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அல்லாமல், இந்த மாநிலத்தைவிடக் குறைவான முஸ்லிம்களைக் கொண்ட கர்நாடாகவிலும் திப்பு சுல்தான் பிறந்த நாள் நிகழ்ச்சியை கட்சி, சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தது.
வெளிப்படையாகத் தெரியக்கூடிய வகையில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டிருக்கவில்லை. ரூபாய் நோட்டு விவகாரம், ஜிஎஸ்டியின் மோசமான செயலாக்கம் போன்ற பிரச்சினைகள் எதுவும் வாஜ்பாய் அரசிடம் இல்லை. என்றபோதிலும், வாஜ்பாய் அரசு சோனியா தலைமையிலான காங்கிரசிடம் தோற்றது.
அது மட்டும் அல்ல, பாஜக தேர்தலைச் சந்திக்க உள்ள மூன்று மாநிலங்களில் நகரங்கள், ஊர்களின் பெயர் எதுவும் மாற்றப்படவில்லை. பெயரை வைத்தும் உணர்ச்சியைக் கிளப்ப முடியாது. எனவே, ரூபாய் நோட்டு மதிப்பழிப்பு, வியாபம் ஊழல், விவசாயிகள் பிரச்சினை ஆகியவை முக்கியத் தேர்தல் பிரச்சனைகளாக இருக்கின்றன.
இந்தச் சவாலின் தீவிரத்தை உணந்த பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பு நீக்கம் பற்றிய தனது மவுனத்தைக் கலைத்து, தனது சாதனைகள் என்று அவர் கூறிக்கொள்பவை பற்றி பேசத் துவங்கியிருக்கிறார்.
ஆளும்கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் மூலம் ஆதரவாளர்களை ஒன்று திரட்ட கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையும் இல்லை. இந்தக் காரணத்தால் 2017இல் பஞ்சாபில் ஷிரோமனி ஆகாலி தளம் – பாஜக ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் குஜராத் மாநிலமும் காவிக் கட்சியிடம் இருந்து கிட்டத்தட்ட நழுவ இருந்தது. இதன் பிறகே மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சி பற்றிய பிரச்சனையை எழுப்பினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் முன்னாள் ராஜங்க அதிகாரிகள் ஆகியோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். பாகிஸ்தான் அரசியல்வாதியான குர்ஷித் முகமது கசூரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்தியாவுக்கான அந்நாட்டு தூதரும் இருந்தார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். பாஜகவை வீழ்த்த பாகிஸ்தான் தூதர் முன்னிலையில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறினார்.
இதுவரை மோடி- ஷா கூட்டணி இப்படி உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கவில்லை. பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்பது போன்ற அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை.
இந்த மூன்று மாநிலங்களில் 2003இல் நடைபெற்ற தேர்தல் நினைவுகள் பசுமையாக இருப்பதால் காவிப் படை மிகவும் கவனமாக இருக்கிறது. தில்லியோடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. தில்லியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியே 2004 மக்களவைத் தேர்தலை ஆறு மாதங்கள் முன்கூட்டியே சந்திக்க வைத்தது. இது தற்கொலைக்கொப்பான முடிவாக அமைந்து, வாஜ்பாய் அரசு எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது.
இப்போது சூழ்நிலை மாறியிருக்கிறது. இந்த மாநிலங்களில் பாஜக வலுவான நிலையில் இல்லை. கட்சி நிர்வாகிகள் நடுக்கத்தில் உள்ளனர். இந்த மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை எனில் மோடி அரசுக்கான கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிடும் என்பதை அறிந்து நடுங்குகின்றனர்.
இப்போது இருப்பதுபோல, வெளிப்படையாகத் தெரியக்கூடிய வகையில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டிருக்கவில்லை. பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி பிரச்சனைகளும் வாஜ்பாய் அரசில் இல்லை. என்றாலும், வாஜ்பாய் அரசு தோற்றது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்கள் கூட்டணியில் இருந்தபோதும், 1999இல் காங்கிரசிலிருந்து சரத் பவார் வெளியேறிச் சென்ற நிலையிலும் இவ்வாறு நிகழ்ந்தது. உபியில்கூட பாஜகவுக்கு எதிரான கூட்டணி இல்லை. பிகாரில் மட்டும்தான், ஆர்.ஜே.டி., காங்கிரசுக்கு ஆதரவு அளித்து இரண்டும் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்தன.
கடந்த மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் பாஜகவின் பலவீனமான அம்சங்களை உணர்த்திய நிலையில், இந்த முடிவுகள் தேரதலை எதிர்கொள்ள உள்ள மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆட்சியில் உள்ள மூன்று மாநில தேர்தலுக்கான பிராசத்தில் நிழல் போலப் படிந்திருக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து மோடி- ஷா கூட்டணி குழப்பமடைந்துள்ளது. ராமர் சிலை வைப்பதற்கான திட்டம் அல்லது நகரங்களின் பெயர் மாற்றத்தை வெளிப்படையாகப் பாராட்டினால், யோகி ஆதித்யநாத்தின் முக்கியத்துவம் கூடிவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. ஆக, முன் போல இல்லாமல் இப்போது சங் பரிவாருக்குள் முரண்களும், மோதல்களும் அதிகமாக உள்ளன.
சுரூர் அகமது
நன்றி; நேஷனல் ஹெரால்டு
https://www.nationalheraldindia.com/opinion/2019-lok-sabha-polls-modi-shah-are-confused-over-strategy-with-nothing-in-their-favour