புலந்த்சஹார் கூட்ட வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்துத்வா தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
யோகி ஆதித்யநாத் அரசின் முக்கிய கூட்டணி கட்சியை சேர்ந்த ஓ.பி.ராஜ்பஹார் இந்த சம்பவம் தொடர்பாகத் தெரிவித்த எதிர்வினையே இதனால் உணரக்கூடிய அரசியல் சிக்கலுக்கான அறிகுறியாக அமைந்துள்ளது.
“விஎச்பி, பஜ்ரங் தள் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமிட்ட சதி இது. இப்போது காவல் துறையினர் பாஜகவைச் சேர்ந்த ஒருவருடைய பெயரையும் குறிப்பிடுகின்றனர். முஸ்லிம்களின் மத நிகழ்வு நடைபெற்ற அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏன்?” என்று சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்.பி.எஸ்.பி) தலைவர் கேட்டதாக ஏஎன்.ஐ செய்தி வெளியிட்டது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறிய நகரான புலந்த்சஹாரில், பசு வதை தொடர்பாக இந்துத்துவச் செயற்பாட்டாளர்களைக் கொண்ட கும்பல் ஒன்று காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு காவல் அதிகாரி கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். ஆயுதங்களை வைத்திருந்த அந்தக் கும்பல் நெடுஞ்சாலையை முடக்கி வைத்திருந்தது.
பசுவதை போன்ற பிளவுபடுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டாம், நகரில் மத நிகழ்வுக்காக முஸ்லிம்கள் குவிந்திருந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்றே அனுமதிக்கப்பட்டது, இரு சமூகங்கள் இடையே பதற்றத்தைத் தூண்டுவதற்கான திட்டமிட்ட சதி எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரப் பிரதேச முக்கிய அமைச்சர் ஒருவர் பாஜகவுக்கு எதிராகப் பேசியுள்ள நிலையில், இத்தகைய கருத்துகள் வலுப்பெறுகின்றன.
தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறை அமைச்சராக இருக்கும் ராஜ்பஹாருடனான கூட்டணி, மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தலித சமூகமான ராஜ்பஹார் சமூகத்தின் வாக்குகளைப் பெற பாஜகவுக்கு உதவியது.
எனினும் கடந்த சில மாதங்களில் இந்த தலித் தலைவர் ஆதித்யநாத் அரசு எடுக்கும் தீவிரமான நிலைப்பாடு தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில் அவர், மாநிலத்தில் உள்ள நகரங்களின் பெயர்களை இந்துப் பெயர்களாக மாற்றும் மாநில அரசின் முயற்சிக்கு ஆட்சேபம் தெரிவித்தார். மாநில நகரங்கள் பெயரை மாற்றும் முன் பாஜக முதலில் தன் கட்சி முஸ்லிம் தலைவர்கள் பெயரை மாற்ற வேண்டும் என அவர் கூறினார்.
மற்றொரு சந்தர்பத்தில், ஆதித்யநாத் அனுமானை ஒரு தலித் என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது கடவுகளில் சாதிப் பிரிவினையை உருவாக்கும் செயல் என கூறினார்.
இதற்கு முன்னார், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என அறிவித்த மோடி அரசு முடிவை அவர் விமர்சித்தார்.
தற்போது, பாஜக மற்றும் இந்துவா அமைப்புகள் கிரிமினல் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என ராஜ்பஹார் தெரிவித்துள்ள கருத்து, ராஜ்பஹார் மற்றும் பாஜக இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறை விசாரனையில் தெரியவந்துள்ள முதல் கட்டத் தகவல்கள் ராஜ்பஹார் குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்த பகுதியில் மதரீதியான பதற்றத்தை உண்டாக்கவே இந்த கும்பல் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாகக் காவல் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாட்சிகள் கூறுவதாக நியூஸ் 18 செய்தி தெரிவிக்கிறது.
வன்முறைச் சம்பவம் நடைபெற்றபோது மஹாவ் கிராமத்தில் இருந்த தாசில்தார் ராஜ்குமார் பாஸ்கர் கருத்துகள் இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளது. “இறந்த பசுவின் மாமிசம் கரும்பு வயலில் தொங்கிக்கொண்டிருந்தது. துணிகள் தொங்குவது போல பசுவின் தலையும் தோலும் தொங்கிக்கொண்டிருந்தது. மாநிலத்தில் உள்ள நிலையை அறிந்த யாரும் பசு வதையில் ஈடுபட்டு இப்படிப் பொதுவெளியில் காட்சிபடுத்தியிருப்பார்கள் என்பது விநோதமாக உள்ளது. தொலைவில் இருந்தே அதை பார்க்க முடிந்தது’ என அவர் கூறியிருந்தார்.
இந்து யுவ வாஹினி, சிவ சேனா, மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் திடீரென அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தத் துவங்கினர் என்றும் அவர் கூறியிருந்தார். “அந்த கும்பல் பசு சடலத்தை டிராக்டரில் போட்டு, புலந்த்சஹார் நெடுஞ்ச்சாலைக்குக் கொண்டுசென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது’ என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சிங்கார்வதியில் இருப்பவர்கள் 15 முதல் 20 பசு சடலங்களை கண்டெடுத்து வைத்திருப்பதாகவும், இவற்றை டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் மாநிலச் சாலைகளுக்குக் கொண்டு செல்வதாகவும் டிசம்பர் 3 ம்தேதி காலை 11 மணிக்குத் தனக்கு தகவல் வந்ததாக மாவட்ட மாஜிஸ்திரேட் அனூஜ் ஜா கூறியதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது.
காவல் துறை நான்கு பேரைக் கைது செய்துள்ளது. அனைவரும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். பஜ்ரங்க தள் தலைவர் மற்றும் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டவருமான யோகேஷ் ராஜ் (22) இன்னமும் தலைமறைவாக இருக்கிறார்.
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/bjp-faces-the-heat-as-ally-questions-its-role-in-bulandsahr-violence