அந்த நவம்பர் 8 அன்று, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் வடக்குக் கட்டடத்தில் உள்ள எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பப்பில், பிரதமர் ரூ.500, ரூ.1,000 ஆகிய இரண்டு உயர் மதிப்பு நோட்டுகளும் இனி சட்டப்பூர்வ ஒப்பந்தமாக இருக்காது, அதாவது அவை இரண்டும் இனி அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்ட பணப்பட்டுவாடா வழிமுறையாக இருக்காது என்று அதிரடியாக அறிவித்தார். அண்மைக் காலத்தில் எந்தவொரு நாடும் சாதாரணமான சூழலில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்ததில்லை. பொதுவாக, சாதாரணமான காலகட்டத்தில் (2016இல் ஐரோப்பிய மத்திய வங்கி 500 யூரோ நோட்டுகளை அகற்றியது போல) படிப்படியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அல்லது போர், மிதமிஞ்சிய பணவீக்கம், பணநோட்டு நெருக்கடி அல்லது (2016இல் வெனிசுலாவில் நடந்தது போன்ற) அரசியல் குழப்பம் ஆகிய அசாதாரணச் சூழல்களில்தான் உடனடிப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலோட்டமாகச் சொல்வதென்றால் இந்திய நடவடிக்கை தனித்துவமானது. நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக எளிதில் இரையாகக்கூடிய மக்களிடையே, இதற்கு மேலும் இழுக்க முடியாது என்கிற அளவுக்கு விரிக்கப்பட்டுவிடலாம் என்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக அது வந்தது. பெருமளவுக்கு ரொக்கப்பரிமாற்றத்தையே சார்ந்திருக்கிற முறைசாராத் துறையினர் விரிவாக இருக்கிற பொருளாதார அமைப்பில் இரண்டு பெரும் அதிர்ச்சிகள் வர இருந்த நிலையில், முதல் அதிர்ச்சியாக வந்தது பணமதிப்பழிப்பு. அடுத்த அதிர்ச்சி ஜிஎஸ்டி.இரண்டாண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அது இப்போதும் விமர்சகர்களின் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. அதற்கு ஒரு பகுதிக் காரணம் அது ஏன் வந்தது என்பதைச் சுற்றியுள்ள மர்மப் புதிர்கள்தான். மூன்று பொருளாதார ஆய்வறிக்கைகளை நான் படித்தேன். அவற்றைத் தாண்டி இந்த நடவடிக்கையின் பொருளாதாரப் பின்னணி பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.
ஆனால் எனக்கு பொருளாதாரம், அரசியல் ஆகியவை சார்ந்த இரண்டு புதிர்கள் பற்றிய சில புதிய சிந்தனைகள் எனக்கு எழுகின்றன.
புதிர் 1: பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியபோதிலும் அது விரிவான வரவேற்பைப் பெற்றது ஏன்?
குறிப்பாக, இவ்வளவு விரிந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு இவ்வளவு பெரிய சுமையைக் கொடுத்தது என்றால் குறுகிய காலத்தில் (2017இல் உத்தரப் பிரதேச மாநிலத்தில்) அது தேர்தல் வெற்றிக்குக் காரணமானது எப்படி? இன்று, பணமதிப்பழிப்பின் அரசியல் கண்ணோட்டம் 2016 நவம்பருக்குப் பிந்தைய தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் நிகழ்வுப் போக்குகளால் குழம்பிப்போயிருக்கிறது, வாக்காளர்களின் கண்ணோட்டங்களில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன, முடிவுகளைப் பாதிக்கின்றன, காரணங்களையும் விளைவுகளையும் கிழிகிழியென்று கிழிக்கிற விமர்சனங்களை நம்ப முடியாததாக்குகின்றன என்பது தெளிவு. ஆயினும், எது எது எப்படி எப்படி நடந்தது என்ற வரலாற்றை மறந்துவிடக் கூடாது.
இந்தியாவின் மக்கள்தொகை மிகுந்த மாநிலமும், உலகத்தின் எட்டாவது பெரிய ‘இல்லாத நாடு’ என்று சொல்லக்கூடியதுமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் (2017 முற்பகுதி) பணமதிப்பழிப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. அது ஒரு ஆக்கபூர்வமான கொள்கை நடவடிக்கை என்று பிரதமர் தனிப்பட்ட முறையிலும் வலுவாகவும் முன்வைத்ததன் மீதான தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றாய்வாளர் தாமஸ் ஃபிராங்க் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘கன்சாஸ்காரர்களுக்கு என்ன ஆச்சு’ (What’s the Matter with Kansas?). அந்தப் புத்தகம், மனிதர்களின் வாழ்வில் ஊடுருவுகிற, ஈர்ப்பாகவும் அமைகிற உலகலாவிய தோற்றப்பாடுகள் பற்றிப் பேசுகிறது. பணமதிப்பழிப்பு அனுபவம் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது. குடிமக்கள் தங்களுடைய பொருளாதார நலன்களுக்கே எதிராக வாக்களிக்கிற விசித்திரம் பற்றி அந்தப் புத்தகம் விசாரிக்கிறது. எடுத்துக்காட்டாக, குடியரசுக் கட்சிக்கும் அதிபர் டிரம்புக்கும் ஆதரவாக, (வசதிக்காரர்களுக்கு வரிச்சலுகை போன்ற) அரசின் கொள்கைத் திட்டங்களால் தங்களுக்குப் பலனில்லை என்றபோதிலும், (ஒபாமா கொண்டுவந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் நலத்திட்ட நன்மைகளையும் தள்ளுபடி செய்வது போன்ற) நிச்சயமாகப் பாதகமான விளைவுகளே ஏற்படும் என்றபோதிலும் ஏழை வெள்ளை ஆண்கள் வாக்களிப்பது ஏன்?
உ.பி. மாநிலத் தேர்தலில் பாஜக கூட்டணி அரசுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் இந்தக் கேள்வி இங்கேயும் பொருந்துகிறது. பொதுவாகத் தெரிய வந்துள்ள தகவல்களை மட்டுமே துணையாகக் கொண்டு அந்தத் தேர்தல் முடிவுகளை விருப்புவெறுப்பற்ற ஒரு பார்வையாளராக ஆராய்கிற முயற்சிதான் இக்கட்டுரை. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கங்களை விளக்குகிற கட்டுரை அல்ல இது, மாறாக, அதன் பிறகு வந்த அரசியல் விளைவின் விசித்திரம் பற்றிய ஒரு எளிய பதிவுதான். கோடிக்கணக்கான மக்கள் ரொக்கப் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்திருக்கிறார்கள் என்ற நிலையில், ஏராளமான இந்தியர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கக்கூடிய அந்த நடவடிக்கை, அதனால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் பேராதரவைப் பெற்றது எப்படி?
முரண்பாடான ஊகக் கருத்தொன்றை இங்கே முன்வைக்கிறேன். விரிவான, பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த மக்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிற ஒரு நடவடிக்கை (1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமல்லாமல் 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாததாக்கப்பட்டது அதன் தாக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது), அது கொஞ்சமும் எதிர்பார்க்காத, சிறிதும் விரும்பாத நடவடிக்கையாக இருந்தபோதிலும், புறக்கணித்துவிட முடியாத அரசியல் வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடும். வணிகத்துக்கான அரசியல் பொருளாதார ஒழுங்கமைப்பில், ஆதாயமடைவோருக்கும் இழப்புகளை எதிர்கொள்வோருக்கும் இடையே சமநிலையற்றதொரு பின்னணியில் பாதுகாப்புவாதக் கொள்கை வருகிறது என்று பார்க்கப்படுகிறது. வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையால் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. இது சில உற்பத்தியாளர்களுககு உதவியாக அமைகிறது. அதேவேளையில் நுகர்வோரில் பலருக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைக் குறைக்கிறது, அவர்கள் ஒவ்வொருவரும் மிகக் குறைந்த அளவிலேயே இழக்கிறார்கள். ஆகவே, உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்புக் கொள்கை வேண்டுமென்ற உந்துதலுக்கு உள்ளாகிறார்கள், அதற்கு ஆதரவு திரட்டுகிற முயற்சிகளிலும் அவர்களால் ஈடுபட முடிகிறது. நுகர்வோரைப் பொறுத்தவரையில் அதற்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உந்துதலுக்கு உள்ளாவதில்லை.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் கதையோ மாறுபட்டதாக இருக்கிறது. ஏராளமான மக்கள், ஏராளமான அளவுக்கு அந்த நடவடிக்கையால் கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டார்கள். இருந்தபோதிலும் அவர்கள் அந்த நடவடிக்கையைப் பெரிதும் கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் புதிருக்கான ஒரு விடை – ஏழை மக்களைப் பொறுத்தவரையில், தங்களை விட அதிகமான தொல்லைகளுக்குப் பணக்காரர்களும் அவர்கள் தவறான முறையில் சேர்த்த சொத்துகளும் உள்ளாவதாக நினைக்கிறார்கள், ஆகவே தங்களது சிரமங்களைப் பொருட்படுத்தாமல் விடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ‘என்னோட ஆடு காணாமப் போச்சுதான், ஆனா அவங்களோட பசுமாடுகள் தொலைஞ்சு போயிடுச்சே’ என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, ஒரு பெரிய லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில், அத்தோடு சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் தவிர்க்கவியலாதவை.
இந்த விளக்கம் முற்றிலுமாக ஏற்கத்தக்கதாக இல்லைதான். சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் தவிர்க்கக்கூடியவைதான். மேல் தட்டினருக்கு எதிரான கவர்ச்சி நடவடிக்கைகளை, அல்லது ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகை கூறுவது போல ‘பணக்காரர்களை விளாசுகிற’ நடவடிக்கைகளை வேறு வகையான தண்டனைகளாக எடுக்கலாம். கூடுதலாக வரி போடுவது, சொத்துகளைக் கைப்பற்றுவது, சோதனைகள் நடத்துவது என்பதான, மோசடிப் பணக்காரர்களை மட்டுமே குறிவைத்த நடவடிக்கைகளை எடுக்கலாம்.
பிறகு ஏன் ஏதுமறியா மக்களை இதில் மாட்டிவிட வேண்டும்? அவர்களை ஏன் பணமற்றவர்களாக்க வேண்டும்? 2016-17 பொருளாதார ஆய்வறிக்கையில் நான் எழுதியிருப்பதைப் போல, பொருளாதார வளங்களை ஏழைகளுக்கு மடைமாற்றுவதில் மானியங்கள் கொஞ்சமும் பயனளிக்காத வழியென்றால், பொருளாதார வளங்களைப் பணக்காரர்களிடமிருந்து கைப்பற்றுவதில் பணமதிப்பழிப்பு கொஞ்சமும் பயனளிக்காத வழி என்பதாகத்தான் தோன்றுகிறது.
ஆகவே, பணமதிப்பழிப்பின் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள நாம், கவனிக்கத் தவறிய ஒரு சாத்தியக்கூறைக் கவனித்தாக வேண்டியிருக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு ஒரு இடையூறாக வந்தது என்பதையெல்லாம் தாண்டிய மோசமான தாக்கங்களை ஏற்படுத்துவது கொள்கைக்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக அமையக்கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அது.
திட்டமிட்டபடியோ அல்லது நிஜ நடப்பிலோ அப்படித்தான் அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பின்னோக்கிச் சிந்திக்கிறபோது பலரையும் மோசமாகப் பாதிப்பது, கொள்கையின் வெற்றிக்கு ஓர் உள்ளார்ந்த கூறாகியிருக்கலாம். ஏன் என்று ஆராய்வோம். முதலாவதாக, அதன் தாக்கம் விரிவாக இருந்தது நம்பத்தன்மைக்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஒருவரது நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையைப் பொதுமக்களோ, எதிர்ப்பாளர்களோ ஏற்கவைக்க வேண்டுமானால் அதற்குச் செலவாகத்தான் செய்யும் என்ற ஒரு வாதத்தை முன்வைத்துப் பெயர்பெற்றார் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் தாமஸ் ஷெல்லிங். அந்தச் செலவு மலிவானதாக இருப்பதற்கில்லை.
மெக்சிகோவை முதலில் கைப்பற்றியவரான ஹெர்னான் கோர்ட்டிஸ், அங்கே இறங்கியதும் தானும் தனது படைகளும் வந்த கப்பல்கள் எல்லாவற்றையும் அழித்தாராம். இப்போது திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை என்பதால் படைவீரர்கள் துணிச்சலோடு போரிடுவார்கள் என்பதற்காக அப்படிச் செய்தார் என்று கூறப்படுகிறது. அதே போல, கிட்டத்தட்ட எல்லோருக்கும் பொதுவானதாக அமைந்த பணமதிப்பழிப்பு என்ற செலவு, குறிப்பாகக் கறுப்புப் பணத்திற்கு எதிரான, கொஞ்சம் விரித்துச் சொல்வதானால் ஊழல் மலிந்த பணக்காரர்களுக்கு எதிரான ஒரு ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கலாம். ஒரு ஆட்சி இவ்வளவு பெரிய செலவுக்கு வழி செய்கிறது என்றால் நிச்சயமாக ஊழலுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் அந்த ஆட்சி எடுக்கும்.எடுக்கப்பட்ட நடவடிக்கை தைரியமானது, மிகவும் பலனளிக்கக்கூடியது என்று காட்ட வேண்டுமானால், அதற்கான செலவு மிக அதிகமானதாகத்தான் இருக்கும் என்றும் காட்டியாக வேண்டும்.
இரண்டாவதாக, நடவடிக்கையின் அகலமும் ஆழமும் வேறொரு நோக்கத்திற்கும் பயன்பட்டிருக்கக்கூடும். நடவடிக்கையின் நம்பகத்தன்மையைக் காட்டுவதற்கு, ஊழல் பேர்வழிகளுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது என்று வெகுமக்களை நம்பவைத்தாக வேண்டும். பணமதிப்பழிப்பால் இது எளிதாக நடந்துவிடாதுதான் – குறைந்தது குறுகிய காலத்தில் நடந்துவிடாதுதான். அப்படியானால், தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதைவிடவும் பல மடங்கு கடுமையாக மோசடிப் பணக்காரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாக வெகுமக்களை ஏற்கவைப்பது எப்படி? “எனக்கே இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால், பணக்காரர்களுக்கு இதைவிடப் பல மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்,” என்ற எண்ணப்போக்கு நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.
மூன்றாவதாக, கிட்டத்தட்ட ஒரே விதமான தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை உருவானது. சில பிரிவுகள் விட்டுவைக்கப்பட்டிருக்குமானால் இந்த உணர்வை மட்டுப்படுத்தியிருக்கும், ஆட்சியாளர்களின் நல்ல நோக்கம், நம்பத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கும். சிலருக்குச் சலுகையளித்து மற்றவர்களைக் கைவிட்டுவிட்டதாகப் பார்க்கப்பட்டிருக்கும். ஒரு சிலர் மட்டுமே மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் அவர்கள் திரண்டிருப்பார்கள். அவ்வாறு திரள வேண்டும் என்ற எண்ணம் மிகப் பெரிதாக இருந்திருக்கும் என்பதை வணிகக் கோட்பாட்டிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
மேலும், சிலரை மட்டுமே பாதித்திருக்குமானால் விட்டுவைக்கப்பட்டவர்கள் பற்றிய சந்தேகங்கள் முளைத்திருக்கும். அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ, இந்த முடிவு எடுக்கப்பட்டதிலேயே அவர்களுக்கும் பங்கிருக்குமோ, இவ்வாறு விட்டுவைக்கப்பட்டதற்கு நன்றிக்கடனாக அவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்றெல்லாம் கேள்விகள் நிச்சயமாக எழுந்திருக்கும். பலரையும் பாதித்ததன் மூலம் இந்தச் சிரமமான முடிவுகள் தவிர்க்கப்பட்டன. முதலாளித்துவத்துக்கே உரிய அசூயைகள் மிகுந்த காலகட்டத்தில் இத்தகைய கேள்விகள் நிச்சயமாகக் கேட்கப்பட்டிருக்கும். அது அரசியல் ரீதியாகச் சங்கடமான நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கும்.
நான்காவதாக வருவது, இத்துடன் இணைந்த பண்பாட்டுத்தளப் பிரச்சனை. மகாத்மா காந்தி வழி வந்த ஒரு மரபு என்னவெனில், பரந்த, உயர்ந்ததொரு இலக்கை அடைவதற்குத் தியாகம் செய்கிற உணர்வு கட்டாயத் தேவை என்பதாகும். குறிப்பாக, கறுப்புப் பணம் கடந்த எழுபதாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதால், அதை ஒழிப்பது எளிதான வேலையல்ல என்ற புரிதல் பரவலாக இருக்கிறதென்றால், தியாகத்துக்கான தேவை இருக்கிறது – பரவலான தியாகத்துக்கான தேவை இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்றத்தான் வேண்டும்.
இங்கு நான் எழுப்பியுள்ள கருத்துகள் எதுவுமே பணமதிப்பழிப்பின் பொருளாதாரத்தையும் அரசியலையும் பற்றிய வழக்கமான மதிப்பீடு அல்ல. ஆனால், அந்த நடவடிக்கைக்கான அரசியல் எதிர்வினைகள் புதிரானவையாக இருக்கின்றன, பல பொருளாதார வல்லுநர்களையும் அரசியல் ஆய்வாளர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மை.
ஆகவே, அரசியலாகப் பேசுகிறபோது, பணமதிப்பழிப்பைப் பொறுத்தமட்டில், பாதகமாகியிருக்க வேண்டிய நடவடிக்கை சாதகமாயிருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தியலை நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
புதிர் 2
ரொக்க விநியோகத்தில் 86% வரையில் அராஜகமான முறையில் குறைக்கப்பட்டது. அது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் பெரிய விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? இன்னும் கூர்மையாகக் கேட்க வேண்டுமானால், பணமதிப்பழிப்புக்கு விலை கொடுக்க வேண்டியிருந்ததா என்ற கேள்வியே இல்லை – நிச்சயமாக விலைகொடுக்க வேண்டியிருந்தது – ஆனால், மிகப் பெரிய விலை தருகிற நிலைமை ஏற்படவில்லையே, ஏன்?
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய, நாசகரமான, பணம் சார்ந்த அதிர்ச்சிதான். ஒரே வீச்சில், புழக்கத்தில் இருந்த 86% பணநோட்டுகள் விலக்கப்பட்டன. அந்த நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி மிகத் தெளிவான பாதிப்புக்கு உள்ளானது. அதற்கு முன்பாகவும் வளர்ச்சி விகிதம் சரிந்துகொண்டுதான் இருந்தது; ஆனால் அதற்குப் பிறகு அந்தச் சரிவு மேலும் வேகமெடுத்தது. பணமதிப்பழிப்புக்கு முந்தைய ஆறு காலாண்டுக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 8% ஆக இருந்தது. பணமதிப்பழிப்புக்குப் பிந்தைய ஏழு காலாண்டுக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 6.8% ஆகிவிட்டது (நான்கு காலாண்டுக் காலம் என்ற காலஅளவை வைத்து மதிப்பிடுவதானால், பணமதிப்பழிப்புக்கு முன்பு 8.1%, அதற்குப் பின்பு 6.2%).
பணமதிப்பழிப்பால் வளர்ச்சி வேகம் சரிந்தது என்பதை யாரும் மறுப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக, அதன் அளவு, 2 சதவீத அளவுக்கு சரிந்ததா அல்லது அதற்குக் குறைவாகவா என்பதுதான் விவாதிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் இதே காலகட்டத்தில் வேறு பல காரணிகளும் வளர்ச்சி வேகத்தைப் பாதித்திருக்கின்றன. குறிப்பாக உண்மை வட்டி விகிதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டது, ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டது, கச்சா எண்ணை விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளும் இருக்கின்றன. மக்கள் நல்வாழ்வுக்கான செலவுகள், குறிப்பாக முறைசாராத் துறைகளைச் சேர்ந்தோருக்கான செலவுகள் கணிசமாகியுள்ளன. ஆனால், இக்கருத்தை வலுவான, அனுபவப்பூர்வமான ஆதாரங்களுடன் என்னால் முன்வைக்க இயலவில்லை.
பணம் சார்ந்த பொருளாதார ஆய்வாளர் என்ற முறையில், எனக்குப் பளிச்செனத் தோன்றுவது என்னவென்றால், பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியின் பேரளவோடு ஒப்பிட்டால் இந்த நடவடிக்கையின் விளைவுகள் மிகச் சிறியதுதான். இதைப் பல வகைகளில் காணலாம். ரொக்கப் பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பதையும் இயல்பான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) என்ன நேர்ந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் காட்சி திகைப்பை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைக்கு முன்பு ரொக்கமும் ஜிடிபியும் நெருக்கமாக இணைந்தே இயங்கிக்கொண்டிருந்தன. பின்னர், ரொக்கம் தகர்கிறது, அதன் பின் மீள்கிறது. ஆனால், இப்படியெல்லாம் நிகழ்ந்துகொணடிருப்பதன் ஊடாக, ரொக்கம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பொருளாதாரச் சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.
இந்த வெளிப்படையான காட்சியை எப்படி விளக்குவது? பல்வேறு கருத்தியல்களைப் பரிசீலித்தாக வேண்டியுள்ளது. முதலாவதாக, முதன்மையானதாகவும்கூட, இது ஜிடிபி புள்ளிவிவரங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதிலிருந்து வருகிற குளறுபடியாக இருக்கலாம். இந்தியாவில், முறைசாராத் தொழில்களின் செயல்பாடுகள் பற்றிய காலமுறை சார்ந்த ஆய்வுகள் எதுவும் கிடையாது.முறைசார் தொழில்களுக்கான குறியீடுகளை வைத்தே முறைசாராத் துறையும் மதிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த இரு துறைகளும் ஒத்திசைந்து செல்வதால் இது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், பணமதிப்பழிப்பு போன்றதொரு அதிர்வு ஏற்படுகிறபோது, முறைசாராத் துறைதான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அப்போது வழக்கமான குறியீடுகளைக் கொண்டு ஒட்டுமொத்தச் செயல்பாட்டை மதிப்பிடுவோமானால், அது ஜிடிபியையே பின்னுக்குத் தள்ளிவிடுவதாக இருக்கும்.
புதிரை விளக்குவதில் இந்தக் கருத்தியல் ஓரளவுக்குத்தான் பலனளிக்க முடியும். ஏனெனில் முறைசாராத் துறையின் வருமானம் எந்த வகையில் சுருங்கினாலும், அது முறைசார் துறையில் தேவையைச் சுருக்கும். அதன் விளைவு கணிசமாகவே இருக்கும். ஆகவே, நாம் வேறு விளக்கங்களையும் தேட வேண்டியுள்ளது. ஒரு சாத்தியக்கூறு என்னவெனில், பண நோட்டு முடக்கப்பட்டதை எதிர்கொள்வதற்கான வழிகளை மக்கள் கண்டுபிடிக்கவே செய்தார்கள்.எடுத்துக்காட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் முறைப்படி தடை செய்யப்பட்ட பிறகும் மக்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள். எனவே, ரொக்க முடக்கத்தின் அதிர்ச்சி வழக்கமான முறையில் மதிப்பிடப்பட்ட அளவுக்குப் பெரிதாக இல்லை.
மற்றொரு சாத்தியக்கூறு, முறைசாராக் கடன்கள் நீட்டிக்கப்பட்டதன் மூலம் உற்பத்தி தக்கவைக்கப்பட்டது. மறுபடியும் ரொக்கம் புழக்கத்திற்கு வந்தவுடனேயே நிலுவைத்தொகையைக் கொடுப்பதற்கு மக்கள் ஒப்புக்கொண்டார்கள். இறுதியாக, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, மக்கள் ரொக்கத்திற்குப் பதிலாக, டெபிட் கார்டு, எலெக்ட்ரானிக் வாலெட் போன்ற மின்னணு வழிகளைப் பயன்படுத்துவதற்கு மாறியிருக்கக்கூடும். இல்லையேல், நவீன இந்தியாவின் வரலாற்றில் இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்ற வாய்ப்பே இல்லாத பொருளாதாரப் பரிசோதனைகளில் ஒன்றாகிய பணமதிப்பழிப்பு பற்றிய எனது புரிதல்களுக்குள் அகப்படாத முற்றிலும் மாறுபட்ட விளக்கங்களும் இருக்கக்கூடும்.
அர்விந்த் சுப்பிரமணியன்
(அர்விந்த சுப்பிரமணியன் எழுதிய ‘Of Counsel: The Challenges of the Modi-Jailey Economy’ என்ற நூலிலிருந்து அனுமதியுடன் எடுக்கப்பட்ட பகுதியின் சுருக்கம். நூல் வெளியீடு: Penguin Random House, 2018)
நன்றி: தி வயர்
https://thewire.in/macro/arvind-subramanian-on-why-demonetisation-had-to-be-draconian-to-be-a-political-success
பணமதிப்பிழப்பு நடந்த முதல் நாளே ..பொது மக்கள் தங்கள் கையில் இவ்வளவு ரொக்கம் உள்ளது என்று அரசுக்கு தெரிவிக்கும் முறையை செய்திருந்தால்.. சரியாக இருந்திருக்கும். ஏன் என்றால் மதிப்பிழப்பு நடந்து ஒரு வாரம் கழித்தே கள்ள நோட்டை பதுக்கியவர்கள் / அரசியல் வாதிகள் / அரசியல்வாதிகளின் பினாமிகள் / பணத்தை பதுக்கி வைத்து இருந்த சிறு வியாபாரிகள் பெரும் வணிகர்கள் / கல்வி தந்தைகள் / ஆலை உரிமையாளர்கள் / லஞ்சம் வாங்கியே பெருத்துப் போன அரசு உயர் அதிகாரிகள் / அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வாங்கித் தரும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கீழ்நிலை ஊழியர்கள் … இன்ன பிற பெரும் விவசாயிகள் , பொது மக்கள் என எல்லோரும் தாங்கள் பதுக்கிய பணத்தை ஒரு லட்சத்துக்கு இவ்வளவு கமிஷன் என்று பேரம் பேசி அடித்தட்டு மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி கருப்பை வெள்ளையாக்கி கொடுத்தனர். எனவே கருப்பு பணம் முழுவதும் பொது மக்கள் மூலமாகவும் வங்கி ஊழியர்கள் மூலமாகவுமே வெள்ளையாக்கப் பட்டது. முதல் நாள் யாருக்கும் பணம் கொடுக்காமல் மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை இவ்வளவு என்று தெரிவித்தால் போதும் என்று சொல்லி இருந்தாலே… பதுக்கியவர்கள் .. கொஞ்சம் தடுமாறி இருப்பர்.. பினாமியைகளை குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்ய கொஞ்சம் தடுமாறி இருப்பர். அதற்குள் பொது மக்களின் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும். .. இங்கு கருத்து எழுதும் எல்லா வாசகர்களுக்கும் அனைத்து கட்சி சார்ந்த வாசகர்கள் , பொது மக்கள் மீடியாக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பொது மக்களாகிய நாம் எல்லோருமே .. குறைந்த பட்சம் எழுவது சத விகிதம் மக்களாவது கமிஷன் வாங்கிக் கொண்டு கள்ளப் பணத்தை வெள்ளையாக்கி கொடுக்கும் வெட்கம் கெட்ட செயலை செய்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும்!! இந்த ஆலோசகர்தான் சொல்லி இருக்க வேண்டும். கள்ளப் பணத்தை பதுக்கிய வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்களை தான் உபயோகப் படுத்துவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அரசாங்கமும் பொது மக்கள் இந்த அளவுக்கு கீழே இறங்கி கள்ளப் பணத்தை வெள்ளை ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர் கட்சிகளும் மீடியாக்களும் கூட இந்த விஷயத்தை அரசியல் செய்வதிலேயே இருந்ததால்… அரசாங்கத்தை யோசிக்க விடாமல் பார்த்துக் கொண்டன. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு பயன் படாமல் போகும் படி பொது மக்களாகிய நாமே .. பார்த்துக் கொண்டோம். எப்போது பொது மக்கள் மனத்தில் நியாயமும் நேர்மையும் இருக்கிறதோ .. அப்போதுதான் ஒரு நேர்மையான அரசாங்கம் நல்லபடி செயலாற்ற முடியும்! அரசாங்கத்தை குறை செய்வதற்கு முன்பு பொது மக்களாகிய நாம் அந்த கால கட்டத்தில் எப்படி நடந்து கொண்டோம்.. எத்தனை பேருக்கு எத்தனை லட்சத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுத்தோம் என்று யோசித்து பாருங்கள்.. பிறகு தவறு எங்கே என்று தெரியும்
its not cinema that a hero can work out villain in a single song or in two hours or fight with 30 goondaas in one hand…money is swindled technically , not like movies as cash in bathrooms or under the bed..black money is in many forms…its pitty that we are not upto the level of our uneducated /educated politicians because they are faaaar better than the normal public in swindling money..we dont /cant understand their way of money swindling..so we can either laugh at ourselves saying that let the scam happen just because we cannot understand it…if, only if someone comes to stop scams what we can do is either give him way or give him support or not to disturb him….we dont do these three…we spoil him and make him to feel that scam is a part of Indian life style…hahaaaa..
https://www.moneycontrol.com/news/business/economy/deregistered-companies-dont-want-to-claim-their-assets-worth-rs-37500-crore-2536271.html
Good, Also all the Indians were misdirected by the Medias- News papers during the previous Congress government that all the money was swindled by the Congress & DMK.
So even if the Present government beat/ slap the people and says this is only to recover the money from Congress & DMK, then all will be very very happy and request the Present government, ok you can beat / slap me more and more.
That kind of brain wash were deeply done by the Irresponsible news papers.
Now every one reaping what we planted.