காங்கிரஸின் ‘மென்மையான’ இந்துத்துவக் கொள்கையானது வலதுசாரி இந்துக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்; ஆனால் இந்நிகழ்முறையால் கட்சி அடையாளம் தெரியாதபடி மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.
தன்னைப் போல் இந்துத்துவக் கொள்கையின் மென்வடிவத்தை ஆதரிக்காமல் அதைத் தீவிரமாக எதிர்த்துவரும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாடம் கற்றாக வேண்டும். தன் இந்துமத அடையாளத்தைக் கடந்த இரண்டாண்டுகளாகப் பறைசாற்றிவரும் ராகுலுக்கு இடதுசாரிகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. (பாஜகவின்) இந்துத்துவத்தை எதிர்க்க மதரீதியான ஆதரவைக் கணிசமாகக் காண்பித்தாக வேண்டியுள்ளது என்றே அவர்களூம் நம்ப ஆரம்பித்துவிட்டனர்.
புதுதில்லியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ‘டைம்ஸ் லிட்ஃபெஸ்ட்’டில் இது பற்றிக் கூறிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பல மாநில இடைத்தேர்தல்கள் நெருங்கும் இச்சமயத்தில் ராகுல் காந்தியின் பல்வேறு கோயில் வருகைகளை நியாயப்படுத்தினார். “பல காலமாகவே எங்களது அந்தரங்க நம்பிக்கைகளை வெளிக்காட்டத் தேவையில்லை என்றிருந்தோம்” என்கிறார். காங்கிரசின் இந்த கொள்கைதான் அரசியல் போராட்டத்தை ‘உண்மையான இந்துக்களுக்கும் கடவுளை நம்பாத மதசார்பின்மைவாதிகளுக்குமான போராட்டமா’கக் காட்ட பாஜகவுக்குப் பெரிதும் உதவியது என்பது அவரது கருத்து.
“இந்தியா போன்ற மதநம்பிக்கை மிகுந்த நாடுகளில் மேற்சொன்ன வாதம் எழும்போதெல்லாம் மதச்சார்பின்மைவாதிகள் எப்போதும் தோற்றுவிடுவர்,” என்கிறார் தாரூர். “அதனால்தான் எங்களது நம்பிக்கையை வெளிக்காட்ட முடிவெடுத்தோம்” என்றார்.
நம்பிக்கையை வெளிக்காட்டும் நிலையையும் தாண்டியே ராகுல் காந்தி சென்றுவிட்டார் எனலாம். இதுவரை அவரை பூணூல் அணிந்த ஒரு பிராமணராகவும், கோத்திரமறிந்த சிவபக்தராகவே கட்சி காட்டியுள்ளது. இந்த் ஆண்டு ஏப்ரலில் ராகுல் பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென நடுவானில் கோளாறு ஏற்பட, ராகுல் சிவபெருமானை நினைத்துப் பிரார்த்தித்த அடுத்த கணமே கோளாறு சரியாகி அவர் உயிர் பிழைத்தாராம்!
ராகுலின் தீவிர மத அனுபவத்தை யாரும் சந்தேகிக்கவில்லை, ஆனால் அதை அவர் அரசியலாக்குவதுதான் நெருடுகிறது. ஏனெனில் ஏற்கனவே ராகுல் காந்தியின் கோயில் பயணங்களால் கட்சி இந்துத்துவ அரசியலின் சில முக்கியமான சின்னங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உதாரணமாக, நவம்பர் 28 அன்று நடந்த மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலை ஒட்டி வெளியான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ‘ராம் வான் கமன் பாத யாத்ரா’வை (வனவாசமாக 11-14 வருடங்கள் ராமர் அம்மாநிலத்தில் கழித்த காலம்) வளர்க்க உறுதி அளித்துள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் பசு மூத்திரத்தைப் பெருமளவு (வணிக ரீதியான பயன்பாட்டுக்கு) உற்பத்தி செய்வோமென்று காங்கிரஸ் கூறியிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று யாருக்குமே தெரியவில்லை.
நேருவின் பெயரால்
நேரு முன்மொழிந்த மதசார்பின்மை பற்றி இப்போது பேசுவது வீண் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். நவம்பர் 4ஆம் தேதி யமுனை நதியின் குறுக்கே சிக்னேச்சர் ப்ரிட்ஜைத் துவக்கிவைத்துப் பேசிய தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேருவைப் பற்றி நினைவுகூர்ந்ததிலிருந்தே காங்கிரஸ் தலைவர்களது நினைப்பு தவறு என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. சுதந்திரம் கிடைத்தபோது பின்தங்கியிருந்த நாட்டை நவீனப்படுத்த நேரு பதித்த அடித்தளங்கள் பற்றி கெஜ்ரிவால் பேசினார். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL), பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), ஐ.ஐ.டி. – கரக்பூர், கல்கத்தாவிலும் அகமதாபாதிலும் அமைந்த ஐ.ஐ.எம்., பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) உள்ளிட்ட நேரு அமைத்த பல நிறுவனங்களை அவர் உதாரணம் காட்டினார்.
தான் கட்டிய 6,500 புது வகுப்பறைகளுக்கு விளம்பரமும் தேடிக்கொண்ட கெஜ்ரிவால் அவைகளைக் கோயிலுக்கு ஒப்பிட்டு, அங்கே பயிலும் மாணவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவார்களெனக் கூறினார். “கோயில் – மசூதி தொடர்பான அரசியலில் நீங்கள் சிக்கிக்கோண்டால், உங்களது குழந்தைகள் பொறியாளர்களாவதற்கு பதில் கோயில்களில் பூசாரிகளாகத்தான் ஆவார்கள்” என்றும் எச்சரித்தார்.
கெஜ்ரிவாலின் கருத்துக்கள் அவரது கட்சியின் முதல் கருத்துக்கள் அல்ல. ராகுலின் கோயில் வருகையை ஆதரித்து சசி தாரூர் பேசிய தினத்தன்று NDTVயில் பேசிய தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் உ.பி. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக மேற்கொண்டு வரும் புது முயற்சி பற்றிக் கேட்டபோது “இந்துக்கள், முஸ்லிம்களை ஒப்புக்கொள்ள வைத்து அங்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டுவது நல்லது” என்றார். கல்வியின் மூலம் மட்டுமே ராம ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும் என வலியுறுத்தினார்.
இந்துத்துவத்தைக் கட்டுப்படுத்த கெஜ்ரிவால், சிசோடியா கடைப்பிடிக்கும் உத்தியானது பஞ்சாபின் பக்ரா நங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் ஜவஹர்லால் நேரு ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ பற்றிக் கூறியதை நினைவூட்டுகிறது. அணைக்கட்டுக்கள், இந்தியாவை நவீனமான அரசாக ஆக்க அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள், மின் / இரும்பு ஆலைகள் ஆகியவை அசுர கதியில் உருவாக்கப்பட்டுவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோயில் பற்றிய நேருவின் கருத்தை ‘ராமராஜ்ஜியம்’ பற்றிய மகாத்மா காந்தியின் கருத்துடன் இணைத்த ஆம் ஆத்மி வரலாற்றைப் பற்றிய புதுக் கருத்தைத் தெரிவித்தது மட்டுமன்றி பின்னோக்கி இட்டும் செல்லும் (மதம் சார்ந்த) அரசியலை இனம் காணும் மக்களின் திறன் மீதும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இக்கருத்துக்களை நேருவின் கொள்ளுப் பேரனாகிய ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
வலதுசாரியாக மாறும் போக்கு
சுதந்திரம் கிடைத்த நாள் முதலே நாட்டில் வலதுசாரி இந்துக்கள் இருந்து வருகின்றனர். பொருளாதார தாரளமயம், மற்றும் சுகாதாரநலம், கல்வி போன்ற பொதுத்துறைகளில் அரசு தேவையானவற்றைச் செய்யாமல் இருந்தது மாதிரியான நேரங்களில் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வளரத் தொடங்கின. கடந்த நான்காண்டுகளில் இந்துத்துவமும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளும் ஒன்றிணைந்துவிட்டன.
மத்தியப் பிரதேசத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட பல பொருளாதாரத் திட்டங்களைப் பாராட்டிய பலரும் காங்கிரஸின் இந்த மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்துவிடுகின்றனர். ஆனால் இந்த இந்துத்துவப் போக்குதான் பிரச்சினையின் மையம். பொருளாதார முன்னேற்றத்தை மதத்துடன் இணைக்கும் பாஜக வழியைத்தான் காங்கிரசும் பின்பற்றுகிறது. இந்துத்துவத்தின் வளர்ச்சியை காங்கிரசால் கட்டுப்படுத்த முடிந்தாலும் அது தன் அடையாளத்தை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
ம.பி. அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களைத் தடைசெய்வதாக காங்கிரஸ் தந்துள்ள உத்தரவாதத்தை ஆக்கபூர்வமான ஒன்றாக நோக்கர்கள் பார்க்கின்றனர். இவ்விஷயத்தை நீதிமன்றத்துக்கு இதுவரை காங்கிரஸ் எடுத்துச் செல்லாததே அதிர்ச்சியான விஷயம்தான்.
இந்துத்துவத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் சோம்பேறித்தனமாக (அ) மாற்றுவழி தெரியாமல் இருக்கிறது. இல்லை, கண்டுகொள்ளவே இல்லை. பாஜகவை எதிர்ப்பவர்கள் – இடதுசாரிகள் உள்பட – தீவிர இந்துத்துவத்துக்கும் காங்கிரஸ் காட்டும் மென் இந்துத்துவத்துக்கும் இடையே சிக்கியுள்ளனர். மூன்றாவது அணி இல்லாத மாநிலங்களில் இந்து ஓட்டுக்கள் கிடைத்தாலும், பாஜக போல இந்துத்துவத்தை காங்கிரஸ் கடைப்பிடிக்காது என்ற நம்பிக்கையில் காங்கிரசுக்கு வாக்களிப்பதைவிட அவர்களுக்கு வேறு தேர்வே இல்லை. இதனால் இந்திய அரசியல் வலதுசாரியாக மாறுவதுடன் காங்கிரஸ் தான் ஏறிய புலியின் மீதிருந்து இறங்க முடியாமல் திணறும்.
எனவே, ஆம் ஆத்மி கட்சியின் இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அக்கட்சிக்கும் நாட்டுக்கும் மிக நல்லதாகும்.
அஜாஸ் அஷ்ரஃப்
நன்றி: ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/904387/if-rahul-gandhi-took-a-lesson-from-aap-on-countering-hindutva-india-would-be-benefit?fbclid=IwAR0_S-p0zI829pZRzm8rwCS49GEjnJXwXURhq-1-kbjUaxex4stk2vQAszw