கம்ப்யூட்டர் செயலிகளும் காவி நிறத்துடன் வருவது தற்போதைய அரசியல் சூழலைத் தெளிவாகவே காட்டுகிறது. கடந்த மாதம் ‘தி இந்து’ நாளிதழில் கூகுள் வரைபட மார்க்கரில் இப்போது இல்லாத ஆனால் வருங்காலத்தில் இருக்கக்கூடிய அயோத்தி சுட்டிக்காட்டப்பட்டிருப்பது பற்றி ஓமர் ரஷீத் என்பவர் எழுதியிருந்தார். 1992ஆம் ஆண்டு சங் பரிவாரின் கர சேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தை அந்த மார்க்கர் சுட்டிக்காட்ட, ‘கோவில் இங்கு கட்டப்படும்’ என்று எழுதப்பட்டிருந்தது. 1949இல் ஒரு குழந்தை ராமரின் சிலை கடத்தப்பட்டு மசூதிக்குள் வைக்கப்பட்டு, இடிபாடுகளுக்கிடையே தற்காலிகக் கோயில் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதால் மசூதியை இடிப்பதே சரி என்றே ஆவேசம் கொண்ட கர சேவகர் கூட்டமும் அவர்களுக்குப் பின் இருந்த தலைவர்களும் கருதினார்கள். பாஜவின் மூத்த தலைவர் அத்வானியும் அவர்களில் ஒருவர். அவர் மசூதி இடிப்பு குறித்த சதி வழக்கை எதிர்கொண்டுவருகிறார். சங் பரிவாரால் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்ட செயல் நாட்டை வெட்கித் தலைகுனிய வைத்தது. செய்தித்தாள்கள் கண்டனக் கட்டுரைகளை வெளியிட்டன. இனி இம்மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்வதாக மனசாட்சியுள்ள குடிமக்கள் சபதம் செய்தனர். ஆனால் அவர்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை.
மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்று வன்முறை என்பது இந்தியாவின் அடையாளமாகவும் அனுபவமாகவும் ஆகிவிட்டது. பாபர் மசூதியைப் போல் வேறொரு மசூதி இடிக்கப்படவில்லை என்றாலும், முஸ்லிம்களுக்கெதிரான சகிப்புத்தன்மையற்ற நிலையில் அவர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிறோம். ஊடகங்கள் அரசை ஆதரிப்பது நமக்குப் பழகிவிட்டது. முதன்முறையாக, ஊடகத்தின் பெரும்பிரிவினர் (டிவி சேனல்கள் பல) அரசின் தத்துவார்த்த செயல் திட்டத்தில் ஈடுபடுவதை இப்போதுதான் பார்க்கிறோம். சமீபத்தில் புலந்த்ஷஹரில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி போல, யார் எதிர்த்தாலும் கொல்வது என்னும் கொடிய விஷத்தனம் பரவிவருகிறது.
வேறொரு நாளாக இருந்திருந்தால், கூகுள் வரைபடத்தில் செருகப்பட்ட இவ்விஷயம் நமக்குச் சிரிப்பை வரவழைத்திருக்கும், ஆனால், இன்று சிரிக்க முடியாது: நிச்சயமாக, நரேந்திர மோடியின் இந்தியாவில் இதைக் கண்டு சிரிக்கவே முடியாது. நாட்டின் உச்ச நீதிமன்றமே மறுத்தாலும் ‘கோயில் இங்கு கட்டப்படும்’ என்ற யாரையும் மதிக்காத கோஷம் விண்ணைப் பிளக்கிறது. பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை என்பதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு எதில் என்றால், தீர்ப்புக்கு முன்னே சட்டமியற்றுவதன் மூலம் இதை முடித்துவிடலாமா அல்லது நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்க்லாமா என்பது பற்றித்தான்.
இரண்டாவது தீர்வை ஆதரிப்பவர்கள் – மோடி, அமித் ஷா ஆகியோரும் இதில் அடக்கம் – தீர்ப்பு எப்படியிருந்தாலும் பரவாயில்லை என நினைக்கவில்லை. மக்களின் உணர்வுக்கு ஏற்றபடி தீர்ப்பு வருமென்று நம்புவதால் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கின் தீர்ப்பு கோயில் குறித்த நீதிமன்ற ஒப்புதலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வேறுமாதிரி இருந்தால், கோயில் பலவந்தமாகக் கட்டப்படும்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஜனவரியில் வழங்கப்படுமென உச்ச நீதிமன்றம் சொன்னவுடனே தேர்தல் பிரசார மேடை ஒன்றில் பேசிய அமித் ஷா இதைத் தெளிவாக்கிவிட்டார். கோயில் கட்டுமானப் பணி தாமதமாகலாம் என்ற பயத்தை ஒதுக்கி, “நோக்கத்திலிருந்து நாம் ஒரு அங்குலம்கூடப் பின்வாங்க மாட்டோம்” என உறுதியளித்தார். கூட்டத்தினரின் ‘ஜெய்ஸ்ரீராம்’ குழந்தை ராமரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட (முன்பு பாபர் மசூதி இருந்த) அதே இடத்தில் கோயில் கட்டப்படுமென்ற பாஜகவின் உத்தரவாதத்தை அவர் பலத்த கோஷத்துக்கிடையே மீண்டும் எடுத்துரைத்தார்.
ராமர் கோயிலுக்கான தீம் பாடலில் (அன்புள்ள ராமா நாங்கள் வந்துவிட்டோம், உன் கோயிலை அதே இடத்தில் கட்டுவோம்) மசூதி கட்டுவதை நிராகரிப்பதும் நீதிமன்றத்துக்கே அச்சுறுத்தல் தருவதும் நன்கு தெரிகிறது. ராமஜன்ம பூமி இயக்கத்தினால்தான் இந்து பெரும்பான்மைத்துவம் உருவம் பெற்றது. நேருவின் இந்தியா, இந்துக்களில் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் முஸ்லிம்கள் தாக்கப்படும் இந்தியாவாக மாறிவிட்டது.
அத்வானியின் ரத யாத்திரை ‘போலி மதசார்பின்மை’, ‘சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்துதல்’ போன்ற புதிய சொற்றொடர்களை நமக்குத் தந்தது. இந்து சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்ட இவை முஸ்லிம்களுக்கு ஒவ்வாதவை. மதரீதியான வெறுப்பு காட்ட ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. இதுகாறும் தன் உணர்வை வெளிக்காட்டாமல் இருந்த இந்துக்கள் தம்முடைய வெறுப்பை உமிழ ஒரு வாய்ப்பு தரப்பட்டுவிட்டது. முஸ்லிம்களின் மீதும் மதசார்பின்மையை ஆதரிப்பவர்களின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களால் நாட்டின் அடித்தளமே விரிசல் காண ஆரம்பித்துவிட்டது.
அத்வானியின் இந்துத்துவச் சோதனையின் வெற்றியுடன் மத்தியில் பாஜக 2 முறை ஆண்டபோதும், கோயில் கட்டும் பிரச்சினையை சங் பரிவார் அவ்வப்போது முன்னிறுத்துகிறது. பிறகு பரணில் போட்டுவிடுகிறது. நாட்டின் பன்முகத்தன்மை, அரசியல் நிலவரம், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்குப் போதிய பெரும்பான்மை இன்மை போன்ற காரணங்களால் பாஜகவால் கோயில் கட்டும் பணியை அடாவடியாக ஆரம்பிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்புக் கட்சிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வேறு வழியின்றி கோயில் பிரச்சினையை பின்னுக்குத் தள்ளியே வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தை பாஜக முடித்துவிட்டது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுக் கால ஆட்சியின்போது பாஜகவின் அரசியல் மங்கியே காணப்பட்டது. தேர்தல் தோல்விகள், உட்கட்சிப் பூசலால் கட்சியே பிளவுபடும் நிலைமையும் ஏற்பட்டது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும் 2013இல் நிலைமை சீர்பட ஆரம்பித்தது. காங்கிரசின் வீழ்ச்சியும் அப்போது ஆரம்பமானது. அதன் பிறகு நாம் கண்டுவரும் வலுவான, அழிவுபூர்வமான கட்சியாக பாஜகவை அவர் மாற்றினார். 2002 கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்திற்குப் பின் முஸ்லிம்களை மோடி எள்ளி நகையாடினார். முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி 2002 செப்டம்பரில் பேசிய மோடி “நானும், நான்கு மனைவிகளும், 25 குழந்தைகளும்,” என்று கிண்டல் செய்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு முகாமையும் விட்டுவைக்கவில்லை. “நாம் முகாம் நடத்துகிறோமா, இல்லை குழந்தை பிறக்கும் மருத்துவமனை அடத்துகிறோமா?” என்று நக்கலடித்தார்.
2014 மக்களவைத் தேர்தலின்போது ‘குஜராத் மாடல்’ பற்றி விண்ணளந்து பேசிய மோடி மக்களை அவர்களது துயர்களிலிருந்து விடுவிப்பதாக ஒரு மாயையை உருவாக்கினார். மக்களை மோடி மயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் மதவாதத்தைத் தூண்டிய அமித் ஷா 2013 முசாஃபர்பூர் கலவரத்துக்குப் பழிவாங்குமாறு மக்களைத் தூண்டினார். அதானால் அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டதுடன் மேலும் பிரசாரம் செய்யவிடாமல் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தடை பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்களைப் பிரிக்கும்படியான ஆட்சி வரப்போவதை அவர் குறிப்பால் உணர்த்திவிட்டார் என்றே சொல்லலாம்.
கடந்த 25 ஆண்டுகளில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற தனிக்கட்சி என்ற பெருமையுடன் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. பெரும்பான்மை பலம் மற்றும் மக்களின் பேராதரவால் பதவிக்கு வந்த பாஜக அதுவரை தன்னைக் கட்டியிருந்த தளைகளிலிருந்து விடுபட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவத்தை வலியுறுத்தி சிறுபான்மையினரை விலக்கும் வேலையை மோடி-ஷா கூட்டணி சிறப்பாகச் செய்தது. இதற்கு முன் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்த பாஜக அமைச்சர்களும் எம்.பி.க்களும் இப்போது எவ்விதமான கொடிய வார்த்தையையும் பிரயோகித்துத் திட்டும் அளவுக்கு வந்துவிட்டனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் (ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டுமே அவரை முதல்வராக்கி இருக்க வேண்டும்) அரசு சட்டம் ஒழுங்கைப் பற்றித் துளிகூடக் கண்டுகொள்வதில்லை. என்கவுண்டரில் முஸ்லிம்கள் சாவதை அவர்கள் செய்த குற்றங்களுக்கான பதில் என்கிறது இந்த அரசு. இந்து – முஸ்லிம் பிரிவினை உண்டாக்குவதை மட்டுமே கருத்தில் கொண்டு பிற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய ஆதித்யநாத் செல்வது மிகவும் கொடுமையானது. சமீபத்தில் மத்தியப் பிர்தேசத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸின் ‘அலி’க்கும் பாஜகவின் ‘பஜ்ரங்பலி’க்கும் இடையே போர் வேண்டுமென்றார். எப்போதும் ‘காவிப் படை திரண்டு வருகிறது, முடிசூடத் தயாராகுங்கள்’ என்று சொல்லியே கூட்டங்களை முடிப்பார்.
காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியைத் தாக்குவதுதான் காங்கிரசைத் தாக்கும் வழி என அமித் ஷா நினைக்கிறார் போலும். இதற்காக, பாஜகவுடன் ‘நட்பாக’ உள்ள டிவி சேனல்கள் மூலம் தவறான செய்திகள் தரவும் அவர் தயங்குவதில்லை. இந்தியக் குடிமகனாகத் தன்னை அனைவரும் நிரூபிக்க வேண்டுமென்று (இந்துக்கள் தவிர) அவர் கூறுகிறார். தோற்ற இடங்களில் மதவெறியைத் தூண்டி வெற்றி பெறுவதை ஒரு கலையாகவே ஆக்கி விட்ட மோடி அதில் வல்லுநராகவும் ஆகிவிட்டார்.
NDTVயின் ஏப்ரல் மாத ‘ரியலிட்டி செக்’ நிகழ்ச்சியில் மோடி பதவிக்கு வந்த பின் முக்கியப் புள்ளிகளின் வெறுப்பை உமிழும் பேச்சு 490% அதிகரித்திருப்பதாக சீனிவாசன் ஜெயின் கூறியிருந்தார். மன்மோகன்சிங் அரசின் 2-ம் பதவிக்காலத்தில் (2009-14) 21 என இருந்த இவ்வெண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 125ஆக அதிகரித்தது. இதில் 90% பாஜகவின் கைவண்ணம்.
மோடியின் அரசியல் ‘மாடல்’ நாட்டுக்குச் செய்தது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. கோயில் கட்டுவது உட்பட பல முக்கிய அடிப்படை விஷயங்களில் – முக்கியமாக பல்வேறு பண்பாடு, கலாசாரங்கள், நம்பிக்கைகளை உள்ளடக்கிய இந்தியப் பாரம்பரியத்தில் – கிட்டத்தட்ட மாற்றுக் கருத்து என்பது இல்லாமலே போய்விட்டது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
1990இல் அத்வானி நடத்திய ‘ராம ரத யாத்திரை’யின் முன்னோட்டத்தால் சுதந்திரம் பெற்றதன் பின் முதன்முதலாக இந்தியாவின் பன்முகப் பண்பாடு அச்சுறுத்தலுக்குள்ளானது என்றால், மோடியின் ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாதக் கலவரங்கள் இதுவரை யாரும் கண்டிராத கொடுமை. மோடி, அமித் ஷா, ஆதித்யநாத் ஆகியோர் கொண்ட மூவரணி உருவாக்கிய வெறுப்பு அலைக்குள் சூழல் மொத்தமும் சிக்கித் தவிக்கிறது. இந்திய நிறுவனங்களில் இப்போது இந்துத்துவம் திணிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளால் நாட்டின் மதசார்பற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பேச முடிவதில்லை, மோடியின் இந்துத்துவத்தை ஏற்காதவர்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாக மிரட்டல் / கட்டுப்படுத்துதல் – கொலை மிரட்டல் உட்பட – ஆகியவை பல்கிப் பெருகிவிட்டன.
இந்த நோய்த்தொற்று இப்போது பெரும் தொற்றுநோயாக மாறிவிட்டது. சமீபத்தில் மும்பை அருகில் வசிப்பவர்கள் அங்கு ஒரு மசூதி கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேரணி நடத்தினார்கள்.
நிலைமையத் தெளிவாக எடுத்துக்காட்ட ஒரே ஒரு உதாரணம் போதும். சமீபத்தில் ஷஹீத் சித்திக்கி டிவிட்டரில் ‘காதல் புனிதப் போர்’ என்பது மைனாரிட்டிகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட பொய்யான சொல்லாடல் எனப் பதிவிட்டிருந்தார். அவருக்குப் பல அசிங்கமான பதில்கள்; அவற்றில் ஒன்று ‘17 கோடி பேர்களாக இருக்கும் நீங்கள் (முஸ்லிம்கள்) இந்தியாவில் மைனாரிட்டிதான். நீங்களனைவரும் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் போல’. சித்திக்கி போல எவரும் தாக்குதலுக்குள்ளாகலாம். அத்வானி காலத்தில் “போலி மதச்சர்பின்மைவாதி”களாக இருந்தவர்களுக்கு இப்போது பல விதமான புதிய நாமகரணங்கள் வழங்கப்படுகின்றன. ‘சிக்’யூலர்வாதிகள் (Sick – நோய்), சோரம்போன ஊடகவியலாளர்கள், காதல் ஜிகாதிகள், அர்பன் நக்ஸல்கள் என்று வசை, பல பரிமாணங்கள் எடுத்துள்ளது.
மதவாதக் கிளர்ச்சியை நேருக்கு நேர் நின்று மோதுவதை விட்டுவிட்டு பணிந்து போகும் மனநிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன. ‘முஸ்லிம்கள் பற்றி பேசாதீர்கள், அவர்களைச் சந்திக்காதீர்கள்’ என்பதே கட்சிகளின் தாரக மந்திரமாக ஆகிவிட்டது. காங்கிரஸும் பாஜக போல் ஆனதே இதன் நேரடி விளைவுதான். சமீப காலங்களில் கோயில்களுக்கு வருகை புரிந்து வரும் ராகுல் காந்தி தற்போது பூணூல் அணிந்த பிராமணனாகப் பார்க்கப்படுகிறார். அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டப்போவது பாஜக அல்ல, ராகுல்தான் என அவருடன் கூட இருப்பவர்களே சொல்கிறார்கள். இந்துயிஸம் இந்துத்துவத்துடன் மோதாமல் பின்வாங்குகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என ராகுல் நினைத்தாலும் ஒரே ஒரு இடத்தில்தான் அவராக் கட்ட முடியும். அது, முன்பு பாபர் மசூதி நின்றுகொண்டிருந்த இடம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்குப் பின் (6 டிசம்பர், 1992) மக்களிடையே தொலைக்காட்சி உரையாற்றிய அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மசூதியைத் திரும்பக் கட்டுவதாக வாக்களித்தார். பின்னர் லிபர்ஹான் கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜரான அவர் “முக்கியமான வாக்குறுதியை மக்களுக்குத் தந்துள்ளேன். ஆனால், விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதை இப்போது நிரைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
உண்மையில் இந்து பெரும்பான்மைவாதத்தின் எழுச்சியை முன்கூட்டியே கண்டதால் மட்டுமே அவர் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார். ஆனால், அவராது குறைந்தபட்சம் வாக்கு கொடுத்தார். பின்னர் தானாகவே அதை நினைவூட்டிப் பேசினார்.
மசூதி கட்டப்படும் என்று சொல்ல இப்போதுள்ள எந்த அரசியல்வாதிக்காவது தைரியம் இருக்கிறதா? அதே இடத்தில் இல்லாவிட்டாலும் அயோத்தியில் வேறு எங்காவது? இல்லை. மசூதி, முஸ்லிம் போன்ற சொற்கள் தற்போது புழக்கத்தில் இல்லாததுபோல் ஆகிவிட்டன. தன் 1991 தேர்தல் அறிக்கையில் மசூதியை கௌரவமாகத் திரும்பக் கட்டுவது பற்றி பாஜக கூறியது. இன்று அப்படி பாஜக அல்லது வேறு கட்சித் தலைவர் யாராவது சொன்னால், அவரை அடித்தே கொன்றுவிடுவார்கள். முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்ததற்காக ராகுல் காந்தியை இவர்கள் சமூக வலைதளங்களில் வறுத்து எடுத்தார்கள். இதற்குப் பதிலாக ராகுல் தந்தது என்ன தெரியுமா: தன் கொள்ளுத் தாத்தா நேருவில் அழகான மதசார்பற்ற இந்தியாவை அல்ல; தான் ‘பூணூல் அணிந்த’ பிராமணன் என்ற படிமத்தை!
வித்யா சுப்ரமணியம்
தி இந்து சென்டர் ஃபார் பொலிடிக்ஸ் அண்ட் பப்ளிக் பாலிசி என்னும் அமைப்பில் சீனியர் ஃபெலோவாகப் பணிபுரிந்துவரும் வித்யா சுப்ரமணியம், அண்மைக் காலம் வரை புதுதில்லியில் ’தி இந்து’ நாளிதழின் அசோசியேட் எடிட்டராகப் பணியாற்றிவந்தார்.
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/babri-masjid-narendra-modi-bjp
good articles..keep rocking…..nice
good articles..keep rocking…..