பிரகாஷ் அவர்கள், சவுக்கிடம், அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து, பிரகாஷ் அவர்களை கடிந்து கொண்டது போலவே, சவுக்கைப் பற்றியும் பல்வேறு சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பியிருக்கிறார்கள். அந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது சவுக்கின் கடமை. சவுக்குக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையைத் தவிர முக்கிய விஷயம் வேறு எதுவுமே இல்லை. சவுக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையை என்று இழக்கிறதோ, அன்று சவுக்கை நிறுத்தி விடலாம். சவுக்கு நடத்துவதால், பத்து பைசா வருமானம் கிடையாது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். மாறாக, ஆண்டுதோறும், சர்வர் மற்றும், மாதந்தோறும், இணைய இணைப்புக்கான செலவு தான் உள்ளது. ஆனால், நன்கொடை கூட வாங்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். விளம்பரங்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களைப் பற்றி விளக்கம் அளிப்பதற்கு, நண்பர் பத்மன் அவர்கள் பின்னூட்டமாக வெளியிட்டிருந்த கேள்விகளின் அடிப்படையில் தொடங்கலாம்.
1 – இந்த உரையாடல் இருவரிடையே நடந்த உரையாடல். பட்டி மன்ற பேச்சில்லை. உரையாடலின் அறிமுக பதிவு ஏன் இடம்பெறவில்லை?
முதலில் காலை 10 மணிக்கு, பிரகாஷ் அவர்கள் அழைத்ததும், வணக்கம் என்று பதில் அளிக்கப் பட்டது. எடுத்த எடுப்பில் இந்த உரையாடலில் உள்ளது போலவே பேசினார். காலையில், நீதிமன்றப் பணிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்த போது, இந்த உரையாடலை தொடர விரும்பவில்லை. அதனால், உடனடியாக இணைப்பு துண்டிக்கப் பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக பிரகாஷ் அழைத்த வண்ணம் இருந்தார். பிறகு தான், இந்த உரையாடலை பதிவு செய்யலாம் என்று உத்தேசித்து, அந்த அழைப்பு ஏற்கப் பட்டது. அதன் பதிவே இது.
2. சவுக்கின் நண்பர்கள் அன்பு மற்றும் பிறரைப்பற்றி எதற்கு சவுக்கிடமே குறை கூற வேண்டும்? இது தனிப்பட்ட உரையாடல். பொது விவாதமில்லை.
சவுக்குக்கு தகவல் தருபவர்கள் என்று, குறிப்பாக நக்கீரன் அலுவலகத்தில் நடைபெறும் விஷயங்களை சவுக்கிடம் சொல்வபர்கள் என்று, பிரகாஷ் அவர்களும், காமராஜ் அவர்களும், இந்தப் பத்திரிக்கையாளர்களை சந்தேகிப்பதாலேயே, அவர்களைப் பற்றி சவுக்கிடம் குறை கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. குறிப்பாக, சவுக்கு அவர்களிடம் பணம் பெற்றிருக்கிறார் என்று கூறுவதிலிருந்து இந்தக் கருத்து உறுதி செய்யப் படுகிறது. மேலும், ஊடகத் துறையில் ஒரு அயோக்கியத்தனமான நியதி கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அது என்னவென்றால், ஊரில் எவன் தப்பு செய்தாலும் எழுதுவார்கள். ஆனால், ஊடகத்துறையைச் சேர்ந்த எவனும் தவறு செய்தால் எழுத மாட்டார்கள். இந்த மரபை மீறி, நக்கீரனைப் பற்றி சவுக்கு தொடர்ந்து எழுதி வருவதால், நக்கீரன் குழுவைச் சேர்ந்த அனைவரும், சவுக்கின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று அறிகிறோம். மேலும், காமராஜ் அவர்களை திருப்திப் படுத்துவதற்காக, காமராஜ் முன்னிலையில், ஸ்பீக்கர் போன் போட்டு, பிரகாஷ் பேசியதாகவும் அறிகிறோம்.
3 – அம்சா பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து இனப்படு கொலைகளை மறைத்தது உண்மை. பணம் பெற்றவர்கள் யார் யார்? சவுக்கின் நண்பர்கள் அம்சாவிடம் எதையும் பெறவில்லையென எப்படி அறுதியிட்டு கூறுகிறீர்கள்? அதுவும் ஒரு வரியில்? அப்படியெனில் தனிப்பட்ட உரையாடலில் எதற்கு அவர்களைப்பற்றி இது போன்ற குற்றச்சாட்டு? இவர்கள் பெறவில்லை என்றால் பிறகு வேறு யார்?. உண்மையிலேயே உங்களுக்குத் யார் எனத் தெரியாதா ?
திரு.விகேஷ் அவர்களோடு, சவுக்குக்கு ஏற்பட்ட தொடர்பு, 2007ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது விகேஷ் ஜுனியர் விகடனில் இணை ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் சவுக்கு அரசு ஊழியராக இருந்ததால், வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களோடு உரையாட இயலாது. பொதுத் தொலைபேசியில் இருந்து புனைப் பெயரோடு தான் உரையாட முடியும். அப்படி முன்னே பின்னே தெரியாத ஒரு நபராக, புனைப் பெயரில், விகேஷ் அவர்களை சவுக்கு தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து, செய்தி வெளியிட வேண்டும் என்று வேண்டியது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த உள்ளோம் என்றும் தகவல் கூறப்பட்டது. அந்த தொலைபேசி உரையாடல் நடந்த இடம் கூட இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ வளாக, பீரங்கியின் அருகே நடந்தது. அதற்கு அவர், “உங்கள மாதிரி ஆளுங்களோட இதான் சார் பிரச்சினை. தகவல் சொல்ல மாட்டீங்க.. அப்புறம், பத்திரிக்கை காரங்க நியூஸ் போட மாட்றாங்கன்னு எங்கள குறை சொல்வீங்க” என்று கடிந்து கொண்டார். அதன் பிறகு, ஜுனியர் விகடனில், ராதாகிருஷ்ணன் மற்றும், நரேந்திர பால் சிங் என்ற காவல்துறை அதிகாரிகளைப் பற்றி வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படித்தான் விகேஷ் அவர்களோடு பழக்கம். இதற்குப் பிறகு, தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக சண்முகம் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று, விகேஷ் அவர்களுக்கும், சவுக்குக்கும் சம்மன் வந்தது. அந்த கமிஷனில் தான் விகேஷ் அவர்களை சவுக்கு முதன் முதலாகப் பார்த்தது. “என்ன சார்… பெரிய ஆளா இருப்பீங்கன்னு பாத்தேன்… சின்னப் பையனா இருக்கீங்க.. சரி.. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் ? சொல்லுங்க.. உங்கள மாதிரி ஆளெல்லாம் சமுதாயத்துக்கு தேவை சார். நல்லது பண்ணிருக்கீங்க…. என்ன உதவி வேணும் சொல்லுங்க” என்றார். இதன் பிறகு, விகேஷ் அவர்களின் மீதான மதிப்பு மேலும் பன்மடங்கு உயர்ந்தது.
இதன் பிறகு, சவுக்கு அவரை சந்தித்தது செப்டம்பர் 2009 இறுதியில். சிறையில் இருந்து வெளி வந்ததும் முதலில் சந்தித்த நபர் விகேஷ். எந்தப் பத்திரிக்கையிலும், ‘டெட் லைன்’ நேரத்தில், சிறுநீர் கழிக்கக் கூட நேரம் இருக்காது. அப்படிப் பட்ட ஒரு நேரத்தில், சவுக்கு விகேஷ் அலுவலகம் சென்று, சந்தித்த போது, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து, தேநீர் வாங்கிக் கொடுத்து, கவலைப் படாதீர்கள். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.
இதற்குப் பிறகு, விகேஷ் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பொறுப்பில் இருந்ததால், அது தொடர்பான அரசியல் காரணமாக, போட்டி சங்கத்தினர், இவரைப் பற்றி, துண்டறிக்கைகள் வெளியிடுவதும், அவதூறு பேசுவதுமாக இருந்தனர். சவுக்குக்கு விகேஷோடு இருந்த பழக்கத்தின் அடிப்படையில், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இதன் பிறகு ஒரு நாள் ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கை தொடர்பு கொண்டு, “என்ன சார்.. விகேஷ் அப்பிடி இப்பிடின்னு சொல்றீங்க… இன்னைக்கு இலங்கை துணைத் தூதரகம் போயிருந்தேன். அங்க கெஸ்ட் லிஸ்ட்ல விகேஷ் பேரு இருக்கே..” என்று சொன்னதும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. உடனடியாக விகேஷைத் தொடர்பு கொண்டு, “சார்… நீங்க அங்க போனீங்களா” என்று கேட்டதற்கு, இயல்பாக, “ஆமாம் சார்.. நேத்து கூப்புட்டு இருந்தாங்க.. மறந்துட்டேன்” என்று கூறியவரிடம், நீங்கள் அங்கே போவது தவறில்லையா என்று கேட்டதற்கு, “நான் பத்திரிகைக் காரன்… இரண்டு தரப்பையும் கேட்டு எழுதுவது எனது கடமை. அம்சாவை பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல உரிமை இல்லை. அம்சாவிடம் நான் அன்பளிப்பு பெற்றால், கேள்வி கேளுங்கள். அவரைப் பார்க்கவே கூடாது என்று சொல்வது, ஊடக தர்மத்தை மீறிய செயல்” என்று கூறினார். இது நியாயம் தானே ?
இதன் பிறகு, ஆகஸ்ட் 2009 22ம் தேதி அன்று, காலை 5.30 மணிக்கு ஒரு போன். “ஒழிந்தான் விகேஷ்…. பத்திரிக்கைத் துறையைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று மகிழ்ச்சியோடு, சொன்னார். அதாவது, விகேஷ் வேலையை விட்டு நீக்கப் பட்டு விட்டாராம்.
விகேஷின் தொலைபேசியை தொடர்பு கொண்ட போது, Number not in use என்று வந்தது.
அன்று காலை 7 மணிக்கு சவுக்கு விகேஷ் வீட்டில் இருந்தது. விகேஷ் கண்ணில் கண்ணீர். ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வேலையை விட்டு எடுப்பது சகஜம். ஆனால் எப்படி நீக்கம் செய்கிறார்கள் என்று ஒரு முறை இருக்கிறது. 20 அன்று இரவு வரை விகேஷ் விகடன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். 21 அன்று அலுவலகம் சென்றவுடன், அலுவலகத்தின் செக்யூரிட்டி, விகேஷிடம், “சார் உங்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று கூறுகிறார். விகேஷ் தனது தொலைபேசியை எடுத்து எடிட்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, நம்பர் deactivate செய்யப் படுகிறது. விகடன் மேலாண்மை இயக்குநரிடம் சவுக்கு கேட்க விரும்புவது, இன்று விகடன் குழுமத்தில் பணியாற்றும் அத்தனை பேரும் உத்தமர்களா ? விருப்பு வெறுப்பில்லாமல் செய்தி வெளியிடுபவர்களா ? இன்று ஒடுங்கிப் போய் கிடக்கும் பொட்டு சுரேஷிடிம் நீங்கள் மண்டியிடவில்லை ? நேற்று வரை ஜாபர் சேட்டுக்கு துதி பாடி, அவரிடம் பணம் வாங்கிய, இரா.சரவணனை விட, விகேஷ் மோசமானவரா ? அப்படியே இருந்தாலும், 19 ஆண்டுகாலம், விகடன் நிறுவனத்துக்காக ஓடாக உழைத்த ஒரு மனிதரை இப்படியா வெளியேற்றுவது ? விகடன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், இப்படி வெளியேற்றியதற்காக விகேஷிடம் மன்னிப்பு கேட்க கடமைப் பட்டுள்ளார். உங்கள் தந்தை நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் இப்படிச் செய்திருப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதற்குப் பிறகு, விகேஷ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி செய்தி வெளியிட்டதால் கடும் பாதிப்படைந்த ஜாபர் சேட், விகேஷைப் பற்றி, கடும் அவதூறுகளைப் பரப்பினார். அவர் அம்சாவிடம் பெரும் தொகையைப் பெற்றுள்ளதாகவும், பல வீடுகள் வைத்திருப்பதாகவும், பல கோடிகளுக்கு அதிபதி என்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் செய்தி கொடிகட்டிப் பறந்தது. பல கோடிக்கு அதிபதியாக இருப்பவர், விகடனை விட்டு நீக்கப் பட்ட சில நாட்களில், பெட்ரோல் போட பணமில்லாமல் இருந்தார் என்பது, இப்படிப் பேசியவர்களுக்கு தெரியாது.
விகேஷைப் பற்றி, வினவு தோழர்கள் ஆதாரமில்லாமல் குற்றச் சாட்டுகளை சுமத்தியிருந்தார்கள். இன்று வரை, வினவு தோழர்கள் அந்தக் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. விகேஷ் அம்சாவிடம் அல்ல, வேறு யாரிடமாவது, லஞ்சம் வாங்கினார் என்று ஆதாரத்தை கொடுத்தால், விகேஷுடனான நட்பை முறித்துக் கொள்ள சவுக்கு தயங்காது.
அன்பு.
அன்பு என்று அழைக்கப் படும் அன்பழகன். நக்கீரன் இதழின் தலைமை நிருபராக இருந்தார். 1993ம் ஆண்டு முதல் நக்கீரனில் பணியாற்றி வந்தார். நக்கீரன் இதழில் பல முக்கிய செய்திகளை வெளியிட்டதில் இவருக்கு பங்கு உண்டு.
2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கோபால், மற்றும் நக்கீரன் பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகறை வாபஸ் பெற வைக்க காமராஜ், அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
2007ம் ஆண்டு, இப்போது மின் வாரிய சேர்மேனாக அதிமுக அரசால் நியமிக்கப் பட்டிருக்கும், ஹன்ஸ் ராஜ் வர்மா என்ற ஐஏஎஸ் அதிகாரியும், அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி, அவரது மகன், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் சேர்ந்து நிலக்கரி இறக்குமதியில் பெரும் ஊழல் புரிந்துள்ளதாக நக்கீரனி செய்தி வெளி வந்தது. இந்தச் செய்தியை எழுதியவர் அன்பு.
இதையடுத்து, அன்பை அழைத்த காமராஜ், திரிபாதி தலைமைச் செயலாளர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். அதனால் தலைமைச் செயலகம் போகாதீர்கள் என்று கூறுகிறார். ஆனால், அன்பு வழக்கம் போல தலைமைச் செயலகம் சென்ற வண்ணம் இருக்கிறார். அங்கீகரிக்கப் பட்ட பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை புதுப்பிக்கும் போது, அன்புவுக்கு பதிலாக, நக்கீரன் இதழில் இருந்த இளையசெல்வனின் பெயரை பரிந்துரைக்கிறார் காமராஜ்.
இதன் பிறகு நடந்த அரசுச் செயலாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், அரசை தர்மசங்கடப்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை அன்பு கேட்கிறார். இது திரிபாதியை மேலும் ஆத்திரப்படுத்துகிறது. இதன் பிறகு நக்கீரன் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக உள்துறை செயலர் மாலதி, திரிபாதி, சட்டத் துறை செயலர், தீனதயாளன், காமராஜ், வழக்கறிஞர்கள் பெருமாள் மற்றும் விடுதலை ஆகியோரோடு நடந்த கூட்டத்தில், திரிபாதி, நாங்கள் உங்களுக்காக உதவுகிறோம், ஆனால் அன்பு இப்படிக் கேள்வி கேட்கிறாரே என்று தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
அன்பு பணியில் தொடர்ந்தால், வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல் வரும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அன்பு நெருக்கடி கொடுக்கப் பட்டு நக்கீரனில் இருந்து வெளியேற்றப் படுகிறார்.
அசதுல்லா.
இவர் தற்போது, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகியாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் செய்தி என்ற பத்திரிக்கையை நடத்தி பல காவல்துறை அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அதனால் காவல்துறையால் பல நெருக்கடிகளுக்கு ஆளானவர். இவர் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் யாரையும் மிரட்டி பணம் பெற்றதாக சவுக்குக்கு இது வரை தகவல்கள் கிடையாது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் தானே….
சவுக்குக்கு இவர்களைப் பற்றி இவ்வளவுதான் தெரியும். அதற்காக இவர்கள் மூவரும் எந்தத் தவறையும் செய்யாதவர்கள், இவர்களைப் பற்றி சவுக்குக்கு தெரியாத விஷயங்களே கிடையாது என்றெல்லாம் சொல்ல இயலாது. அப்படி யாருக்குமே சான்றளிக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும்.
4 – தினமலர் பற்றி ஏன் எதுவும் சொல்ல தயங்குகிறீர்கள்?
தினமலர் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அது ஒரு தமிழின விரோத நாளேடு. ஆனால் தவிர்க்க முடியாத சக்தி. மற்றொரு ஊடக நிறுவனத்தை அடித்து நொறுக்குவோம் என்று ஒரு ரவுடி வெளியிட்ட விளம்பரத்தை முழுப் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு ஒரு நேர்மையான நாளேடு.
5 – சவுக்கு தன்னை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவன் என கூறும்போது ஏன் விநாயக மூர்த்தி கருணாவின் பேட்டியை பக்கம் பக்கமாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் பற்றியோ, சோ மற்றும் சுப்பிரமணிய சாமி பற்றியோ எதையும் சொல்லவில்லை ?
தமிழின துரோகியாக இருந்தாலும் அவரின் பேட்டியை வெளியிடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும் ? சோ மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், தமிழின எதிர்ப்பாளர்கள், பார்ப்பன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அந்தக் கருத்து வைத்துக் கொள்ள உரிமை இல்லையா என்ன ?
6 – சுப்பிரமணிய சாமியோடு சவுக்குக்கு எந்த தொடர்பும் கிடையாதா? சில குறிப்புகளை சு.சாமியிடம் நீங்களே பகிர்ந்து கொண்டதாக சொல்லியிருக்கிறீர்களே?.
ஊழலை வெளிக் கொணர்வதற்காக, சுப்ரமணிய சுவாமியோடு மட்டுமல்ல…. யாரைத் தொடர்பு கொள்ளவும் சவுக்கு தயங்காது.
7 – இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்த வார இதழ் நக்கீரன். அதற்காக இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. பிரபாகரன் பற்றி அவர்கள் வெளியிட்ட செய்திகளில் எழுப்பபட்ட கேள்விகள் நியாயமானதே என்பதை சவுக்கு மறுக்கிறதா? நக்கீரன் திமுக அதரவு அதனால் அவர்கள் பெற்ற சலுகைகள் தவிர்த்து அவர்களின் இன உணர்ச்சியை சந்தேகிக்கிறதா? ஆம் என்றால் எதற்கு இலங்கை அரசு இவர்களை கடுமையாக எதிர்க்கிறது? எதற்கு இவர்களைப் பற்றி சவுக்கு கடுமையாக எழுதுகிறது?
இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்தவர்கள் தான், கேணல் ராமின் பேட்டி என்று ஒன்றை போட்டார்களா ? பிரபாகரனைப் பற்றி செய்தி போட்டால் பத்திரிக்கை விற்கும் என்ற வியாபார நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் நக்கீரனுக்கு கிடையாது. மற்ற பத்திரிக்கைகளை சவுக்கு விமர்சிப்பதேயில்லை, நக்கீரனை மட்டுமே விமர்சிக்கிறது என்பது நியாயமற்ற குற்றச் சாட்டு.
8 – சில சமையங்களில் சவுக்கு செய்திகள் போடும்போது வழுக்கியிருக்கிறது. அதுபோலதான் இதுவுமா?
எந்த சமயங்களின் வழுக்கியிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தவும்.
9 – சவுக்கின் பிற பணிகள் என்ன? தமிழ் லீடர் மற்றும் சவுக்கு பதிப்பின் எதிர்கால நோக்க மென்ன? சவுக்குக்கு எதிர்காலத்தில் வார இதழ்கள் தொடங்கும் நோக்கமிருக்கிறதா? தராசு போல நக்கீரனை ஒழித்துவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்கிற திட்டமா?
வார இதழ் தொடங்கும் நோக்கம் சவுக்குக்கு இல்லை. சவுக்கின் பிற பணிகள் என்ன, தமிழ் லீடரின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் பொது மேடையில் கூற இயலாது.
10 – சவுக்கு சந்தித்த இடர்களுக்கு எதிராகத்தான் இந்த பத்திரிகை துறையா? தனிப்பட்ட விமர்சனங்கள் தவிர்த்து வேறு என்ன நோக்கம் உங்களுக்கு ?
ஊடகங்கள் தங்கள் பணியை செய்யத் தவறியதால் தான் சவுக்கு உருவானது. பொது வாழ்வில் உள்ளவர்கள் தவறு செய்தால், அது தனிப்பட்ட விமர்சனங்களாக இருந்தாலும், தவிர்க்க இயலாது.
11 – வைகோ பற்றி எழுதப்போகிறேன் என சொல்லி விட்டு எதையும் எழுதவில்லை. ஏன்? யாரிடம் பயம்? அவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எதிராகத்தான் எழுதியிருப்பீர் என்கிற சந்தேகம் உண்மையா?
வைகோவைப் பற்றி தமிழ் லீடர் தளத்தில் விரிவான கட்டுரை வந்திருக்கிறது. அதற்குப் பிறகு, மீண்டும் எதற்காக என்ற காரணத்தாலேயே எழுதவில்லை.
12 – பகையாளியை உறவாடி கெடுத்தல் போல விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என சொல்லிக்கொண்டு விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா ?
இதற்கு, சவுக்கு வாசகர்கள் பதில் சொல்வார்கள். செங்கல்பட்டு, மற்றும் பூந்தமல்லி முகாமில் உள்ள அகதிகளைக் கேட்டுப் பாருங்கள். சவுக்கும், வழக்கறிஞர் புகழேந்தியும் யார் என்று சொல்வார்கள். நீங்கள் பின்னூட்டம் இட்டு, தெரிவிக்கும் புலி ஆதரவு, ஈழ ஆதரவை விட, பல மடங்கு உருப்படியான காரியங்களை செய்தே வருகிறோம்.
13 – கடைசியாக நீங்கள் யார் ? எதற்கு முகமூடி ?
முகமூடி எதுவும் அணியவில்லை. வரும் சனிக்கிழமை அன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தால் சந்திக்கலாமே…
அன்பு வாசகர்களே…. போதுமான விளக்கம் அளித்தாகி விட்டது என்றே தோன்றுகிறது. இந்த பிரச்சினையை இதோடு விட்டு விட்டு, அடுத்த விவகாரத்துக்கு போகலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.