சாவித்ரிபாய் புலே நேர்காணல்
(2018, ஜூன் 13 அன்று தி வயர் இணைய இதழில் பிரசுரமான இக்கட்டுரை சாவித்ரிபாய் புலே பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ததையொட்டி 2018, டிசம்பர் 6 அன்று மீண்டும் பிரசுரமானது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.)
உத்தரப் பிரதேசத்தின் பஹராய்ச் மாவட்ட பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே இடஒதுக்கீடு மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து தனது கட்சிக்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்தார். முகமது அலி ஜின்னாவை ஒரு ‘மாமனிதன்’ என்ற அவர் ‘இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்போம்’ என்ற பெயரில் லக்னோவில் ஏப்ரல் 01 அன்று ஒரு பேரணியை நடத்தினார்.
அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாகக் கூறிய சாவித்திரிபாய் புலே, “சிலசமயம் பாஜகவினர் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பற்றிப் பேசுகின்றனர், சிலசமயம் இடஒதுக்கீட்டை அடியோடு ஒழிப்பது பற்றியும் பேசுகின்றனர். பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது,” என்றார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜின்னாவின் படம் மாட்டிய சர்ச்சைக்குப் பின் ஜின்னாவை ‘மாமனிதன்’ என்று விவரித்த புலே, தான் சொன்னதில் மாற்றமேதுமில்லை என்கிறார். “சுதந்திரத்துக்கு அவரது பங்கு அபரிமிதமானது; அதனால் தேவையான இடத்தில் அவரது படத்தை மாட்ட வேண்டும்,” என்கிறார்.
த வயர் நிருபரிடம் பேசுகையில் அனைத்துக் கேள்விகளுக்கும் புலே உடனுக்குடன் பதிலளித்தார். கீழ்க்கண்ட சில கேள்விகளுக்கு மட்டும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்:
- நரேந்திர மோடியின் நான்காண்டு ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு பாஜகவில் சேர்ந்ததன் காரணம்?
- ஜின்னா ‘மாமனிதன்’, அவர் படங்களை எல்லா இடங்களிலும் மாட்டி வைக்க வேண்டும் என்று சொன்னதை இப்போதும் சொல்கிறீர்களா?
- பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகள் பற்றிய உங்களது கருத்து?
நேர்காணலின்போது மூத்த நண்பர் ஒருவர் சாவித்திரிபாய் புலேவுடன் இருந்து எந்தெந்த கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டுமென வழிடடத்தினார். நேர்காணலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கேள்வி: ஏப்ரல் 01 அன்று நடைபெற்ற பேரணியில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து இருப்பதாகக் கூறினீர்கள். மத்தியிலும் மாநிலத்திலும் உங்களது கட்சியே ஆளும்போது, அரசியலமைப்புச் சட்டம் எவ்வித ஆபத்துக்கு உள்ளாகக்கூடும்?
பதில்: ரேடியோ, செய்தித்தாள், தொலைக்காட்சி மூலம் உங்களுக்குத் தெரிந்தபடி, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப்போவதாக, மறுபரிசீலனை செய்யப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இடஒதுக்கீட்டையும் நீக்கப்போகிறார்களாம். இடஒதுக்கீடு பயனற்றுப் போகும்படியாக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று (மூத்த பாஜக தலைவர்) சுப்ரமணியம் சுவாமி சமீபத்தில் கூறியிருந்தார். அவ்வாறு நிகழ்ந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் தமது உரிமைகளை இழக்க நேரிடும்.
இன்று இவ்வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்து, ப்ளாக் தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், சட்டம் இயற்றுபவர், பேராசிரியர், டாக்டர், முதல்வர், பிரதமர் (அ) குடியரசுத்தலைவராகவோ ஆக முடியுமென்றால் அது அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம், அதிலுள்ள இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் சாத்தியம். ஆயினும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி இடஒதுக்கீட்டை நீக்க ஒரு சதி நடக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால், தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளுக்கு என்ன கதி ஏற்படும்? அவர்களது நிலைமை என்னவாகும்?
நாங்கள் மட்டுமல்ல, சில உச்ச நீதிமன்ற நீதிபதிகளுமே ஜனநாயகம் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியிருக்கிறனர். தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிடுகின்றனர். இவ்வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குதிரை சவாரி செய்தால், அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். கிராமங்களைத் தீக்கிரையாக்குகின்றனர். கூட்டமாகச் சேர்ந்து கொல்வது ஒரு தொடர்கதையாக ஆகிவிட்டது. அம்பேத்கரின் சிலைகள் நாடெங்கிலும் தொடர்ந்து சேதப்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் அதுபற்றிப் புகார் தருபவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.
ஏப்ரல் 2 அன்று அனைத்திந்திய கதவடைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. தமது கோரிக்கைகளை அவர்கள் அமைதியான முறையில்தான் முன்வைக்கின்றனர். ஆனால் அரசியலமைப்புச் சட்டம், இடஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை எதிர்ப்பவர்கள் நடத்திய தாக்குதலில் இச்சமூகத்தின் பலர் தம் இன்னுயிரை விட்டிருக்கின்றனர்.
உலகிலுள்ள அரசிலமைப்புச் சட்டங்களுள் மிகச் சிறந்த நமது அரசியலமைப்புச் சட்டமானது ஜாதி, மதம், இனம், பாலின பேதமின்றி அனைவருக்கும் சம உரிமை தந்துள்ளது. ஆனால் அவ்வுரிமைகள் அமலாக்கப்படவில்லை. அமலாகி இருந்தால், இந்நேரம் வறுமை ஒழிக்கப்ட்டிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவும் நீக்கவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அரசிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து ஜாதியினரின் பொருளாதார நிலவரம் மதிப்பிடப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் தம் அன்றாட செலவுக்காகக் கடுமையாகப் போராட வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. அவர்களுக்கு வேலை, நிலம், சொத்து எதுவுமே இல்லை. சேரிகளிலும் சாலை நடைபாதைகளிலும், ரயில்வே ஓடுபாதை ஓரத்திலும், ஆறு / குளக்கரைகளிலும் வாழ்ந்து அடிமைகளைப் போல் உழைத்தால்தான் அவர்களால் உண்ண முடியும்.
கேள்வி: மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியில் நீங்கள் இருப்பதால், உங்களது போராட்டம் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரானது எனக் கூறலாமா?
பதில்: ரிசர்வ் தொகுதியான பஹராய்ச் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதற்கு அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம்தான் வழிவகுத்தது.
இப்பிரச்சினை பற்றி மக்களவையில் நான் பேசியுள்ளேன். தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை 2014 முதல் நான் அடிக்கோடிட்டுக் காட்டி வருகிறேன். எம்.பி.யாக இருக்கும்போது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை என்றால் நான் எம்.பி.யாக இல்லாதபோது அப்படி செய்வது அர்த்தமற்றது. மேலும், எம்.பி.யாக நான் எழுப்பும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், இப்போராட்டத்தை நான் துவக்கியே இருக்க மாட்டேன்.
கேள்வி: பாஜகவில் நீண்ட காலம் இருந்துள்ளீர்கள்; தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக அக்கட்சி பணிபுரிவதாக நினைக்கிறீர்களா?
பதில்: தாழ்த்தப்பட்டோர் பற்றி பேசி, அவர்களது உரிமைக்காக பாடுபட்டு, குரல் கொடுத்து, அவர்களுக்கு உணவு/உடை/வீட்டு வசதி தரும் கட்சிக்கு மட்டும்தான் நாட்டை ஆளும் உரிமை இருக்க வேண்டுமென நான் சொல்கிறேன்.
கேள்வி: உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் (சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்) உங்களுக்கெதிரான ‘மகா கூட்டணி’ பற்றிப் பேசி வருகின்றனர். அதுபற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: இக்கேள்வியை அக்கட்சிகளிடம் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரே கொள்கையுடைவர்கள் ஒன்றுசேர வேண்டும். தாழ்த்தப்பட்டோர் உரிமை பற்றி அனைத்துக் கட்சிகளும் பேச வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்செய்வதற்கு போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூட வேண்டுமென நான் எதிர்பாக்கிறேன்.
கேள்வி: அரசியலுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் எனக் கூற முடியுமா?
பதில்: எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு கல்விக்கான உதவித்தொகை கிடைத்தது. முன்பெல்லாம் உதவித்தொகை பள்ளி முதல்வரின் வங்கிக்கணக்கில் போடப்படும்; அது எனக்குக் கிடைக்கவில்லை. அதைக் கேட்டபோது, என்னை அவர் பள்ளியை விட்டு நீக்கிவிட்டார். மூன்றாண்டு காலம் வரை எனக்கு TC, மதிப்பெண் சான்றிதழைத் தராமல் தாமதப்படுத்தினார். இதன்பின், அப்போதையை முதல்வரான மாயாவதியின் ‘ஜனதா தர்பாரில்’ தோன்றி, அவரது உதவியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன், இச்சம்பவம்தான் நான் அரசியலில் சேருவதற்கு தூண்டுகோலாக இருந்தது.
அம்பேத்கர், கான்ஷிராம், ஷாஹுஜி மஹராஜ், ஜோதிபா புலே போன்றோர் இன்று தாழ்த்தப்பட்டோருக்கான என் போராட்டத்தில் எனக்கு பலம் தருகின்றனர். தொடங்கும்போது என்னிடம் எதுவுமே இல்லை, இப்பவும் எதுவுமில்லை, மேலும் எதிர்காலத்திலும் என்னிடம் எதுவுமே இருக்காது. மூன்று முறை பஞ்சாயத்து உறுப்பினராகவும், ஒருமுறை கவுன்சிலராகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் நான் இருந்திருக்கிறேன். ஆயினும் என் பெயரில் நிலமோ வங்கிக்கணக்கோ இல்லை. நான் எம்.பி.யாக இருக்கிறேனா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை; என் கவலையெல்லாம் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்பதைப் பற்றித்தான்.
கேள்வி: தாழ்த்தப்பட்டோரைச் சுற்றியே அரசியல் செய்யும் பல கட்சிகள் உ.பி. யில் உள்ளன. அவற்றுள் ஒரு கட்சியில் வெகுசீக்கிரம் நீங்கள் சேருவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
பதில்: தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காகப் போராடும் எந்தக் கட்சியையும் மதிக்க நான் தயாராக உள்ளேன்.
கேள்வி: அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து உங்களது கட்சியின் தலைவர்களும் பிரதமர் மோடியும் பேசிவந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பது போல ஏன் நீங்கள் உணர்கிறீர்கள்?
பதில்: நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள சில நீதிபதிகளும் ஜனநாயகம் எதிர்நோக்கி இருக்கும் அச்சுறுத்தல் பற்றிப் பேசியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எல்லா தலைவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதாகவும் பாரபட்சம் காட்ட மாட்டேனென்றும் உறுதிமொழி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அதைக் காப்பாற்றாமல் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும்.
கேள்வி: பல வருடங்கள் வரை அமைதி காத்து, தேர்தல் வரும் நேரத்தில்தான் நீங்கள் பாஜகவுக்கு எதிராகப் பேசுவதாக உங்களது எதிரிகள் கூறுகிறார்களே.
பதில்: என் எதிரிகளைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. 2012இல் நான் எம்.எல்.ஏ. ஆனது முதல் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள், அவர்கள் சுரண்டப்படுவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது எம்.பி.யாகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
அமித் சிங்
நன்றி: தி வயர்
(https://thewire.in/caste/not-just-me-some-judges-also-feel-that-democracy-is-under-threat-says-bjp-mp)
//நேர்காணலின்போது மூத்த நண்பர் ஒருவர் சாவித்திரிபாய் புலேவுடன் இருந்து எந்தெந்த கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டுமென வழிடடத்தினார். //
How stupid of that lady MP to have an adviser for guiding her with the answer…. Vekka Kedu
Thiramaiyanavarkal maddue vaala mudiyuma? Entra vathaththai valuppaduththukirathu ik kaddurai.