மொத்தமுள்ள 11 ஆணையர்களுக்குப் பதில் வரும் திங்கட்கிழமை முதல் மத்திய தகவல் ஆணையம் (CIC) தலைவர் உட்பட மூன்றே மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்படும். 2016ஆம் ஆண்டு முதல் மோடி அரசு ஆணையைத்திற்கென யாரையும் நியமிக்காததால் இந்நிலைமை; ஆணையம் வெளியிடும் பல ஆணைகள் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி தருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.
மோடியின் பட்டப்படிப்பு விவரங்களைத் தர தில்லிப் பல்கலைக்கழகத்திடம் கூறியது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது, பெருங்கடனாளிகள் தொடர்பான விவரங்களைத் தராததால் ரிசர்வ் வங்கியைக் கண்டித்தது போன்ற ஆணையத்தின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்கும் பல சுயாதிகார நிறுவனங்களுக்கும் அசௌகரியமாக இருந்தன.
தகவலறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ அனைவரும் மதித்து நடக்கும்படி செய்து CIC முக்கியப் பங்காற்றியுள்ளது. மதித்து நடக்காத வழக்குளின் மீதான மேல்முறையீடுகளையும் தகவல் மறுக்கப்படும் வழக்குகளையும் அது எடுத்து நடத்துகிறது. தகவல் தர மறுக்கும் பொதுத்தகவல் அதிகாரிகளுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கவும் CICக்கு அதிகாரம் உள்ளது.
தற்போதைய பாஜக அரசில் 3ஆவது முறையாக தலைமைத் தகவல் ஆணையர் இல்லாமல் ஆணையம் செயல்படும். சமீபகாலம் வரை இப்பதவியில் இருந்த ஆர்.கே. மாத்தூர் நவம்பர் 24 அன்று பதவி ஓய்வு பெற்றார். இவரைத் தவிர, தகவல் ஆணையர்கள் யஷோவர்தன் ஆசாத் மற்றும் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஆகியோரின் பதவிக்காலம் நவம்பர் 21ல் முடிவடைய, வேறொரு ஆணையர் அமிதவ பட்டாச்சார்யாவின் பதவிக்காலமும் டிசம்பர் 1ல் முடிவடைந்தது. இதனால் இப்போது CICயில் சுதீர் பார்கவா, திவ்யபிரகாஷ் சின்ஹா மற்றும் பிமல் ஜுல்கா ஆகிய மூன்று ஆணையர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.
2014 முதல் நீதிமன்ற உந்துதலின்றி ஆணையர் நியமனம் நடக்கவில்லை
தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், ஆணையம், தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும் மத்திய அரசின் செயலற்ற நிலை தொடர்கிறது. அரசு 2014 முதலே நீதிமன்ற உந்துதலின்றி ஆணையர் யாரையும் நியமிக்கவில்லை. மத்தியில் மே, 2014இல் பதவியேற்ற பாஜக அரசு முதல் நியமனத்துக்கே ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்டது.
தலைமைத் தகவல் ஆணையர்களைப் பொறுத்தவரை எப்போதும் குழப்பம் நிலவிவருகிறது. 2018 ஆகஸ்டில் ராஜீவ் மாத்துர் பணிஓய்வு பெற்ற பின், அப்பதவிக்கு 10 மாதங்கள்வரை யாரும் நியமிக்கப்படவில்லை. தலையில்லா ஆணையம் பற்றியும் தாமத நியமனம் பற்றியும் ஒரு பொதுநல மனுவை ஆர்வலர்கள் கமோடர் லோகேஷ் பத்ரா, ஆர்.கே. ஜெயின் மற்றும் சுபாஷ் அகர்வால் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்யாததால் 2005இன் தகவலறியும் உரிமச் சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிட்டது எனக் கூறிய உயர் நீதிமன்றம், “காலி இடங்களை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிரப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறியது.
தகவல் ஆணையரை நியமிக்க அரசு 10 மாதங்கள் எடுத்துக்கொண்டது
ஆணையர் நியமனத்துக்கான கால அளவை உயர் நீதிமன்றம் தன் ஆணையில் வரையறுத்தது. விஜய் ஷர்மா தலைமை தகவல் ஆணையராக ஜூன், 2015ல் நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற ஆணையை மத்திய அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
2015 டிசம்பரில் ஷர்மா பணிஓய்வு பெற்ற பின், அடுத்த மாதமே ஆர்.கே. மாத்தூர் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், உச்ச நீதிமன்றத்தின் குறிப்பின்படி, மேலும் மூன்று தகவல் ஆணையர்களை 2016இல் மத்திய அரசு நியமித்தது. பின்னர், இன்றுவரை வேறெந்த நியமனமும் செய்யப்படவில்லை.
இவ்வாண்டு காலி இடங்கள் 4ஆக அதிகரித்துவிட்டதால், ‘மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய அமைப்பொன்றின் (National Campaign for Peoples’ Right) உறுப்பினர்கள் பத்ரா, அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இதுவும் அரசைச் செயலாற்ற வைக்கத் தேவையான உந்துதலைத் தரவில்லை.
காலியிடத்தை நிரப்ப DOPT-க்கு ஆணையத்தின் கோரிக்கை
பத்ரா தாக்கல் செய்த தகவலறியும் உரிமைச்சட்ட மனுவிற்கு கிடைத்த பதில் மூலம் CIC மே மாதம் DOPT செயலாளருக்கு (தகவலறியும் உரிமைச் சட்ட விவகாரங்களில் உதவும் துறை) எழுதிய கடிதத்தில் மத்திய தகவல் ஆணையர்/தகவல் ஆணையர்கள் நியமனத்தை விரைந்து செய்யக் கோரியது.
நான்கு தகவல் ஆணையர்கள் சமீபத்தில் பதவிஓய்வு பெற்றதால் ஒரே ஒரு தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் ஆறு மத்திய தகவல் ஆணையர்கள் மட்டுமே இருப்பதால் பணிபுரியக் கடினமாக இருப்பதாக ஆணையம் மத்திய அரசுக்குத் தெரிவித்தது.
டிசம்பர் 01, 2018க்குள் பதவிக் காலம் முடிந்து தலைமை தகவல் ஆணையரும் மேலும் 3 தகவல் ஆணையர்களும் ஓய்வு பெறுவவார்கள் என்பதால் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
‘மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை’
துரித நடவடிக்கையை ஆணையம் கேட்டும், மத்திய அரசி மசியவில்லை. ஒரு கேள்விக்குத் தந்த பதிலில் “CICயில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஒருமுறைதான் கடிதம் எழுதப்பட்டது,” என்றது CIC.
இது வினோதமாகத் தென்பட்டதால் தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் 2012 நவம்பரில் நமித் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் “காலியிடன் ஏற்படும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்வு செய்யும் பணி துவங்க வேண்டும்,” என்று கூறியிருந்ததைக் குறிப்பிட்டனர்.
காலியிடம் எப்போது நிரப்பப்படும் என அரசை உச்ச நீதிமன்றம் கேட்டது
3 தகவல் ஆணையர்களுடன் மட்டும் CIC செயல்படும் நிலையை மத்திய அரசு உருவாக்கியது என்பதே உண்மை; நியமனங்கள் ஒளிவுமறைவின்றியும் உடனடியாகவும் செய்யப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு மீதான நடவடிக்கையாக காலியிடம் நிரப்பப்படும் கால அளவைத் தெரிவிக்குமாறு ஜூலையில் உச்சநீதிமன்றம் அரசிடம் கேட்டது.
நியமனத் தாமதம் குறித்த தன் அதிருப்தியை ஜூலை 28 அன்று வெளியிட்ட உச்ச நீதிமன்றம், நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை, அதற்கான கால அளவு மற்றும் 2016ல் வெளியிடப்பட்ட காலியிட அறிவிக்கைக்குப் பின்னரும் பணி நியமனம் ஏன் செய்யப்படவில்லை என்று விளக்கி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தியது.
விவரம் தர மறுக்கும் அரசு
உச்ச நீதிமன்றத்தின் ‘அர்ச்சனை’யை தவிர்க்க வேண்டி CICயின் காலியிடங்களை நிரப்பும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், எத்தனை காலி இடங்கள் என அதில் குறிப்பிடவில்லை. மேலும், தலைமைத் தகவல் ஆணையர் பணிஓய்வு பெற மூன்று மாதங்களே மீதமிருந்தபோதிலும், அப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கையில் அரசு குறிப்பிடவில்லை.
தகவல் ஆணையர்களின் பதவிக் கால அளவு பற்றியும் அறிவிக்கை ஒன்றும் சொல்லவில்லை என உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பளமும் நியமனம் செய்யப்படும்போதுதான் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஜூலையில் தகவலறியும் உரிமைச் சட்டத் திருத்த வரைவுக்கான மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முயன்றது; ஆனால் ஆணையர்களின் சுதந்திரமான செயல்பாடு இதன் காரணமாக பாதிக்கப்படும் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டதால் இந்நடவடிக்கையையும் அரசு தள்ளிப் போட்டது.
காலியிடங்கள் நிரப்பும் திட்டம் பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்த தகவலில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள ஆகஸ்டு 31 இறுதி நாள் என்று அரசு கூறியது. ஆனால் குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்றம் கேட்டபோது, இத்தகைய உயர்நிலை நியமனங்களில் பெயரை வெளியிடும் பழக்கம் இல்லையென மத்திய அரசு பதிலளித்தது.
கௌரவ் விவேக் பட்நாகர்
நன்றி: தி வயர் (https://thewire.in/government/information-panel-strength-hits-all-time-low-in-modi-era)