தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மட்டும் அல்ல, இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமாக அமையும்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நடை பெற்ற (டிசம்பர் 7) பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க நேரலாம் என்பதால் நான் அதிக எச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
தேர்தலைச் சந்தித்த ஐந்து மாநிலங்கள் மொத்த தேசத்தின் சரியான பிரதிநிதி அல்ல. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கலச்சார செழுமை பெற்ற, சமூக நோக்கில் பாரம்பரியத் தன்மை கொண்டவையாக, கல்விரீதியாகப் பின் தங்கிய, பொருளதார நோக்கில் கீழ் அடுக்கில் உள்ளவையாக, இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. மிசோரம் மனித வள மேம்பாட்டில் உயர்வான இடத்தில் இருந்தாலும், குறைவான வளத்துடன், ஏழை மாநிலமாக இருக்கிறது. தெலங்கானா அந்த மாநிலம் விரும்பும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இப்போதைக்கு வளர்ந்த தன்மையைவிட ஸ்டார்ட் அப் தன்மையையே பெற்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகள், இந்த மாநில மக்களுக்குத் தீர்மானமானதாக இருக்கும் ஆனால் எஞ்சிய இந்தியாவுக்கு அத்தனை தீர்மானகரமானதாக இருக்காது. மிசோரோம், சத்தீஸ்கர் மாநிலங்கள் தொங்கு சட்டமன்றத்தை அளிக்கவில்லை எனில், ஐந்து மாநிலங்களிலும் தெளிவான பெரும்பான்மையுடன் ஒரு அரசு அமையும் வாய்ப்பிருக்கிறது. அமைப்புகள் மற்றும் சுதந்திரத்தைத் தேயச்செய்யும் முயற்சிகளை மீறி, கொஞ்சம் கீறல்களுடேனும் ஜனநாயகம் தழைத்திருக்கிறது எனும் செய்தியை இது உலகிற்கு சொல்லும்.
பொதுவான அம்சங்களும் வேறுபட்டவையும்
ஐந்து மாநிலங்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன: களைப்பில்லாமல் பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடி, தீவிரப் போட்டியாளரான ராகுல் காந்தி, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் இன்னல்கள், கடன், துயரம், பணத்தைக் கொண்டு வாக்காளர்களை ஒரு பக்கம் சாய வைப்பதற்கான வெளிப்படையான முயற்சிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான கேள்விகள்.
முக்கிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், பாஜக முதல்வர்கள் தொடர்ந்து மூன்று முறையாகத் தோல்வியை சந்திக்காமல் முதல்வராக இருப்பவர்கள்; நான்காம் முறை வாய்ப்பைக் குறிவைத்திருப்பவர்கள். ராஜஸ்தானில் பாஜக முதல்வர் வெற்றி தோல்வியை மாறி மாறிச் சந்தித்துள்ளார். இந்த முறை அவர் தோற்க வேண்டிய முறை. மிசோரோமில் காங்கிரஸ் முதல்வர் சேவைக்காகவும் தியாகத்திற்காகவும் அறியப்படுகிறார் (லால்டென்காவுக்கு ஆதரவாக) என்றாலும், அவருடைய முன்னாள் சகாக்களால் எதிர்க்கப்படுகிறார். இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானாவில் 2014இல் வெற்றி பெற்றவர் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கும் இரண்டு முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் முக்கியமானதாக இருக்கும். இந்த முடிவுகளுக்குப் பிந்தைய விளைவுகள் இன்னும் முக்கியமானவையாக இருக்கும். அதாவது கடின மோதலை சந்தித்த தேர்தலில் எந்த அளவு அரசியல் சாசன விழுமியங்கள் எஞ்சியிருக்கும் என்பது முக்கியமானது. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் அரசியல் சாசன விழுமியங்கள் சிறிதளவேனும் பாதிக்கப்பட்டால், தேர்தல்களால் என்ன பயன் என நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஆகவே, சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் அரசியல் சாசன விழுமியங்களைப் பட்டியலிடுகிறேன்.
முதலில் இருப்பது, தேர்தல் கமிஷனின் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல். இதில் தேர்தல் கமிஷன் பல முனைகளில் மக்களை ஏமாற்றியிருக்கிறது. இவற்றில் மிகவும் மோசமானது, கணக்கில் வராத பணத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியது. செலவு உச்சவரம்பு என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. பணக்காரராக அல்லது ஊழல்வாதியாக அல்லது இரண்டுமாக உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என நினைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வேட்பாளரிடம் பணம் இல்லை எனில், கட்சியிடம் ஏராளமாக பணம் இருந்து அதன் மூலம் வேட்பாளருக்கு நிதி அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா இப்படித்தான் செய்தார். பாஜக இப்போது இப்படிச் செய்வதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான இ.வி.எம் – விவிபிஏடி முறையின் பாதுகாப்பை மேம்படுத்த மறுப்பதன் மூலம் தேர்தல் கமிஷன் மக்களுக்கான கடமையில் தவறியிருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் செய்ய முடிந்தது என்னவெனில், 25 சதவீத வாக்குச் சாவடிகளில் இவிஎம் எண்ணிக்கையை விவிபிஏடி எண்ணிக்கையுடன் இணைத்ததுதான். இதன் காரணமாகத் தேர்தல் முடிவு அறிவிக்க மூன்று மணிநேரம் தாமதமாகலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கொடுக்க வேண்டிய சிறிய விலை இது.
அடுத்ததாக வருவது சுதந்திர ஊடகத்தின் விழுமியம். ஒரு சில சேனல்கள் கட்டணம் வசூலிக்கும் சேனல்களாக மட்டும் அல்ல, கட்டணம் பெறும் சேனல்களாகவும் இருக்கின்றன. மற்றவை பணம் பெறவில்லை எனினும், அச்சம் காரணமாகப் பகுதியளவு மண்டியிட்டுவிட்டதாகத் தெரிகிறது. பல நாளிதழ்கள் சுதந்திரமாக இருக்கப் போராடுகின்றன. பிரதமர் பற்றி செய்தி வெளியிடும்போது மட்டும் தரத்தில் தாழ்ந்துவிடுகின்றன. காங்கிரஸும் ராகுல் காந்தியும் அந்த நாளிதழ்களுக்குப் பிடித்தமான குத்து மூட்டைகள். காங்கிரஸின் வாய்ப்பு உயரும் நிலையில் குத்துகள் மென்மையாக விழுகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு முன், அச்சமில்லாத, சுயேச்சையான நான்காவது தூணாகத் தங்கள் நிலையை மீட்டெக்க ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும்.
மூன்றாவதாக, சுதந்திரமான வாக்கின் மதிப்பு. ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர் தேர்வு முதல் அரசு அமைப்பது வரை, சாதிக் கணக்குகள்தான் முக்கியமானதாக இருக்கின்றன. சாதிய முக்கியத்துவம் அதிகரிப்பது என்பது, கட்சிக் கொள்கை, தலைமை, செயல்பாடு, வேட்பாளர் தகுதி, தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் ஆகிய மற்ற அம்சங்களின் முக்கியத்துவம் தேய்வதை உணர்த்துகிறது.
நான்காவதாக, தொகுதித் தீர்ப்பின் விழுமியம். வெற்றி பெற்றவர் தேர்தல் முடிவுக்குத் துரோகம் செய்து, ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறினால், தொகுதி வாரியாகத் தேர்தல் நடத்துவதன் பொருள் என்ன?
இந்த அம்சங்களை எல்லாம் மீறி, 11ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இது தொடர்பாக கிசுகிசுக்கப்படும் விஷயங்கள் வருமாறு:
* காங்கிரஸ் மற்றும் பாஜக நண்பர்கள், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றனர்.
* காங்கிரசில் உள்ள நண்பர்கள் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றனர். பாஜக நண்பர்கள் மவுனமாக உள்ளனர்.
*சத்தீஸ்கரில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறாமல் போகலாம். தொங்கு சட்டமன்றத்தில் பிஎஸ்பி – ஜோகி என்ன செய்வார்கள் எனத் தெரியாது.
* தெலங்கானா முதல்வருக்கு நெருக்கமான ஒருவர், மாநிலம் காங்கிரசுக்கு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* பாஜக விளையாட்டு காண்பிக்கலாம் என்பது தவிர மிசோரோம் தொடர்பாக யாரும் கணிப்பு வெளியிடத் தயாராக இல்லை.
ப.சிதம்பரம்
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (https://indianexpress.com/article/opinion/columns/will-constitutional-values-survive-elections-p-chidambaram-congress-bjp-5484799/)