அரசியல் கட்சிகள் பெறும் நிதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ என்பதை மத்திய அரசு அறிவித்தது. இதன் நிதர்சனமான குறைபாடுகளும் அரசின் நேர்மை, ஒளிவுமறைவின்மையின் மீது இது மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் தெரிய வர, ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி. ராவத் திட்டத்தை வன்மையாகக் கண்டித்தார். “திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன; கட்சியின் செலவுக்கு எல்லையின்றி தேர்தல் கமிஷனும் இதைக் கண்காணிக்க முடியாமல், நிதி தருபவரின் அடையாளமும் தெரியாமல் அப்பணம் கறுப்புப் பணமாக இராது என்பதை எப்படி உறுதிசெய்வீர்கள்?” என்று ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில் கேட்கிறார் ராவத். “அந்நியப் பணம் வரலாம், நஷ்டத்தில் இயக்கும் நிறுவனம் பணம் தரலாம்… எனவே, எந்த நோக்கத்துக்காக திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அது நிறைவேறாது.”
குழப்பங்களின் குவியல்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் வெளியிடப்படும் ரூ.1,000, ரூ.10,000. ரூ.1,00,000, ரூ.10,00,000 & ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்களை ஆண்டின் சில குறிப்பிட்ட மாதங்களில் தனிநபர்கள் மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் மற்றும் ‘போலியான குடிமகன்’களாலும் திட்டத்தின் தற்போதைய வடிவில் வாங்க முடியும்.
மிக ரகசியமானது
திட்டத்தின் தற்போது கீழ் பாரத ஸ்டேட் வங்கியால் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் வெளியிடப்படும் பத்திரங்களை ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் தனிநபர்கள், கார்பரேட்டுகள் தவிர ‘செயற்கை அடையாளம்’ உள்ள யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பிராமிசரி நோட்டாகக் கிடக்கும் இப்பத்திரத்தை வாங்குபவர் அதை எந்த அரசியல் கட்சிக்கும் தானமாகத் தரலாம்; அக்கட்சி அதைப் பணமாக்கிக்கொள்ளும்.
இப்பத்திரங்கள் வங்கிகள் மூலம் வாங்கப்படுவதால் தேர்தல் நிதியில் கறுப்புப் பணம் சேராது என்பது அரசின் வாதம். ஆனால் இது தவறான வாதம். திட்ட நிபந்தனைகளைப் படித்தாலே, மிலன் வைஷ்ணவ் சொல்வது போல் தேர்தல் நிதி அளிப்பதில் ஊழலை ஆதரிப்பதாக இத்திட்டம் இருப்பது தெரியவரும். தானமளிப்பவர் தன் அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டாமெனத் திட்டம் சொல்கிறது. பத்திரம் வாங்குபவரும், அதைப் பெறும் அரசியல் கட்சியும் தானமளிப்பவரின் அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையாம். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் நிதி பற்றித் தெரியாது; மேலும், அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என வாக்காளர்களுக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீதமாக நிதி தருவதைத் தடுப்பதற்கென இருந்த சில தடைகளை நீக்கியது ஜனநாயகத் தத்துவத்தையே சீரழிக்கும் செயலாகும். உதாரணமாக, நிறுவனம் தன் கடந்த மூன்றாண்டு கால சராசரி நிகர லாபத்தில் 7.5%க்கு மேல் நிதியுதவி தரக் கூடாது என்ற நிபந்தனை இத்திட்டத்தால் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் லாபம் ஈட்டாத நிறுவனங்களும் எல்லையற்ற அளவு நிதியளிக்க முடியும். கூடுதலாக, அரசியலில் பணத்தைப் போடுவதற்கென்றே இருக்கும் சிறு நிறுவனங்களைச் சோதிக்க இருந்த நிபந்தனையும் – தானமாகத் தருவதற்கு முன் குறைந்தது மூன்று ஆண்டுகள் நிறுவனம் இயக்கத்தில் இருக்க வேண்டும் – நீக்கப்பட்டுவிட்டது.
இரு தீர்ப்புகள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளவில்லா நிதியுதவி செய்வதன் அபாயம் பல ஆண்டுகளாக நிதர்சனமாகத் தெரிகின்ற ஒன்று. 1957இலேயேகூட பாம்பே, கல்கத்தா உயர் நீதிமன்றங்களின் தெள்ளத் தெளிவான இரு தீர்ப்புகளும் கார்பரேட்டுள் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி தருவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது பற்றி நாடாளுமன்றத்தை எச்சரித்தன. “இந்த அச்சுறுத்தல் நாளாக நளாக நாட்டின் ஜனநாயகத்தையே நெரித்துவிடும்,” என்று தன் தீர்ப்பில் கூறியிருந்தார் பாம்பே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.சி. சக்லா. டாடா அயர்ன் & ஸ்டீல் கம்பெனி தன் விதிகளைத் திருத்தி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்க அனுமதி கோரியிருந்ததைச் சட்டத்தின் கட்டுப்பாடுகளின் காரணமாக மறுக்க முடியாது என நீதிமன்றத்துக்குத் தெரியும். ஆனாலும் இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்தை நீதிமன்றம் ஈர்க்காமல் இல்லை.
நிறுவனம் தனது ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் தான் தரும் தானங்கள் பற்றி நிச்சயம் குறிப்பிட வேண்டும் என டாடா வழக்கறிஞர் ஹெ.எம். சீர்வை கூறியிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்தகைய நிபந்தனை போதாது என்று கருதிய தலைமை நீதிபதி சக்லா, நிறுவனம் தரும் தானம் பற்றி அறிய பங்குதாரர்களுடன் மக்களுக்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார். தாம் வாக்களிக்கும் அரசியல் கட்சி பற்றிய தகவல்கள் மக்களுக்குக் கிடைக்காவிட்டால் ஜனநாயகம் செயலிழந்துவிடும் என்று அவர் நம்பினார்.
சில மாதங்களுக்கு முன்பு இதேமாதிரி ஒரு மனுவை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட இதே போன்ற வேண்டுகோளை முன்வைத்தது. “தவறு மட்டுமே கண்ணுக்குத் தெரிபவர்களுக்கு அரசாங்கத்துக்கு லஞ்சம் தர நிறுவனம் சட்டரீதியான அங்கீகாரம் கோரி, அரசிடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பது போலவும் தெரியலாம்,” என்று நீதிபதி முகர்ஜி தீர்ப்பளித்தார். “இம்மாதிரியான திருத்தங்களை அனுமதித்து, கூட்டுப் பங்கு நிறுவனங்கள் அரசியல் கட்சியின் உதவியாளர்களாக ஆகிவிட்டால், கச்சேரிக்குப் பணம் தருபவனே கச்சேரியையும் நடத்துவது போலாகிவிடும்,” என்றும் கூறினார்.
நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தை வற்புறுத்திய இரு தீர்ப்புகளும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையையும் அங்கீகரித்தன: பொதுச்செயல் எதுவுமே ஒளிவுமறைவின்றியும் நியாயமாகவும் செய்யப்பட்டாக வேண்டும். துரதிருஷ்டவசமாக, கடந்த பல ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் பெறும் நிதி உதவியை ஒளிவுமறைவின்றி ஆக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசால் உடனடியாகத் திரும்ப பெறப்படாவிட்டால், சமீபகாலத் தாக்குதலான தேர்தல் பத்திரத் திட்டம் நாட்டின் ஜனநாயக அஸ்திவாரத்தை அடியோடு சிதைத்துவிடும்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், இத்திட்டத்தில் அடிப்படையான இரண்டு குறைபாடுகள் உள்ளன. முதலாவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமானவரிச் சட்டம் மற்றும் கம்பெனிகள் சட்டம் ஆகியவற்றில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, நிதி மசோதா மூலம் இது அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவது, பல்வேறு அடிப்படை உரிமைகளை இத்திட்டம் மீறுகிறது.
பிரிவுக்குட்பட்ட தலைப்பு(கள்) தொடர்பாக இருந்தால் மட்டும் குறிப்பிட்ட ஒரு மசோதாவை நிதி மசோதா என நிரணயிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 110ஆம் பிரிவு சபாநாயகருக்கு அனுமதி தருகிறது. வரி விதிப்பு, அரசுக் கடன் வாங்குதலைக் கட்டுப்படுத்துதல், இந்திய ஒட்டுமொத்த நிதியத்தின் கட்டுப்பாடு, இந்நிதியத்திலிருந்து செலவு செய்தல் உள்ளிட்ட 7 அம்சங்கள் இதில் உள்ளன; மேலும் இத்துடன் இயைந்த, பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலைப்புகளும் இதில் அடங்கும். எவ்வளவு முயற்சித்தாலும் தேர்தல் பத்திரத்திட்டம் இதிலுள்ள எந்தத் தலைப்பிலும் அடங்குவது போல் நமக்குத் தெரியவில்லை. இதற்கான சட்டத் திருத்தம் நிதிச்சட்டம் மூலம் பெறப்பட்டது, அதனால், இது பிரிவு 110இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தத் தலைப்பு(களு)டனும் ஒத்துப்போகவில்லை.
அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகளை சமத்துவம், பேசும் / எழுதும் உரிமையாகத் திரிப்பதால் இத்திட்டம் அழிவுதரக்கூடியதாகும். அரசியலமைப்புச் சட்டம் வாக்களிக்கும் உரிமையைத் தெளிவாகத் தரவில்லை என்பது உண்மை. ஆனால் அது அளிக்கும் சமத்துவம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் தகவல் தெரிந்துகொள்ளும் உரிமையைத் தருகிறது. வாக்களிக்கும் சுதந்திரத்தை வாக்களிக்கும் உரிமையிலிருந்து பிரித்தே, கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமாகவும் அரசியல் சமத்துவத்தின் முக்கிய நிபந்தனையாகவுமே நமது நீதிமன்றங்கள் பார்த்து வந்துள்ளன். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி தருபவர்கள் யாரென்ற விவரம் தெரியாமல், அரசியல் / பொது வாழ்வில் ஒரு குடிமகனால் அர்த்தமுள்ள பங்கேற்பை அளிக்க முடியாது. ஆர்னிட் ஷானியின் அற்புதமான How India Became Democratic (ஹவ் இண்டியா பிகேம் டெமாக்ரடிக்) என்ற புத்தகத்தில் கூறியுள்ளது போல ஒருவருக்கு ஒரு வக்கு என்பதன் மூலம் சமத்துவத்தை நிலைப்படுத்துவதும், வயதுக்கு வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதும் இந்தியக் குடியரசுக் கட்டமைப்புக்கு மிக முக்கியமானதாகும். அரசியல் நிதியுதவி மூலம் வாக்களிக்கும் உரிமை நீர்த்துப்போனால், ஜனநாயகம் தன் இயல்பான மதிப்பையே இழந்து விடும்.
இறுதியாக, இங்கிலாந்து நீதிபதி ஸ்டீஃபன் செட்லீயின் கூறியுள்ளது போல, தேர்தல் பத்திரத் திட்டத்தால் இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கலாம்: ஒன்று, அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றி சரியாகப் புரியவில்லை; இரண்டு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செல்ல அது முனைகிறது.
சுஹ்ரித் பார்த்தசாரதி
(சுஹ்ரித் பார்த்தசாரதி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.)
நன்றி: தி இந்து (https://www.thehindu.com/opinion/lead/an-invitation-to-corruption/article25692841.ece)