குற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் FactChecker.in இணையதளத் தகவல்படி இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2017 மார்ச்சில் பாஜகவும் யோகி ஆதித்யநாத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் பசு தொடர்பான வன்முறையில் 69% இங்குதான் நிகழ்கிறது.
அடித்துக் கொல்லப்பட்ட மேற்கு உ.பி. யின் ஹபூரில் காசிம் குரேஷி (45), வடக்கு உ.பி.யின் பரேலியில் ஷாருக்கான் (29), சமீபத்திய கொலைகளான காவல் ஆய்வாளர் மற்றும் வேடிக்கை பார்த்த ஒருவர் ஆகியோர் உட்பட 2018இல் 21 தாக்குதல்களில் 4 சாவுகளுடன் பசு தொடர்பான வெறுப்பு வன்முறையில் இரத்தம் அதிகம் பார்த்த மாநிலமாக உ.பி. ஆகியுள்ளது. 2017இல் ஐந்து சாவுகளுடன் மேற்கு வங்கம் அதிக வன்முறையைக் கண்டது.
2017 மார்ச்சுகு முன் – அதாவது ஆதித்யநாத் முதல்வராவதற்கு முன் – உ.பி. யில் பசு தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் 5 முறை நிகழ்ந்திருந்தன. அதன் பின்னர் 03 டிசம்பர், 2018 வரை 11 முறை இச்சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆண்டு முடிய இன்னும் 20 நாள் இருக்கும் நிலையில் 21 தாக்குதலில் 10 சாவுகள் என்ற எண்ணிக்கையில் இதுவரை கண்ட மோசமான ஆண்டாகிய 2017ஐ விட ஒரு கொலை மட்டும் குறைவாக 2018இல் நடந்துள்ளது. நமது தகவல்களின்படி இத்தாக்குதல்கள் கொடூரமாகிவருகின்றன.
மேற்கு உ.பி. யில் பசுப் பாதுகாவலர்களால் டிசம்பர் 03இல் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் கொலைதான் சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலாகும். சில பசுக்களின் சடலங்கள் கண்ணில் பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சம்பவத்தை வேடிக்கை பார்த்த 21 வயது அரசுக் கல்லூரி மாணவர் சுமித்தும் துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்துவிட்டார். சமூக ஊடகத்தில் வலம் வரும் வீடியோவில் இறந்த ஆய்வாளரின் உடல் அவரது அலுவலக வாகனத்தில் தொங்கிக்கொண்டிருக்க, போராட்டக்காரர்கள் காட்சியைப் பதிவுசெய்யும்போது பின்னணியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. இந்திய விமானப் படையில் பணிபுரியும் அலுவலரின் தந்தை முகம்மது அக்லக் (47) தாத்ரியில் (மேற்கு உ.பி.) 28.9.2015 அன்று அடித்துக் கொல்லப்பட்டதை விசாரித்து வந்த சிங் 2015 நவம்பரில் வாரணாசிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
FactCheck இணையத் தகவல்படி அக்லக்கின் கொலைதான் பசுவதை தொடர்பாக உ.பி.யில் நிகழ்ந்த முதல் கொலையாகும்.
“அக்லக் கொலை குறித்த புலனாய்வை சிங் தீவிரமாக நடத்தி வந்தார்,” என்கிறார் அக்லக் மற்றும் அடித்துக் கொல்லப்பட்ட பிறரின் குடும்பங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஆசாத் ஹயாத். FactChecker.in இணையதளத்துடன் பேசுகையில் “முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்து, சிலரைக் கைது செய்து, மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி அது பசு மாமிசம் இல்லை என்று அவர் கண்டுபிடித்தார்,” என்கிறார் ஹயாத்.
“வன்முறையைத் தூண்ட இவர்களெல்லாம் என்ன செய்வார்கள் என்று சிங்குக்குத் தெரியும், அதனால்தான் அவர்கள் அவரைத் தாக்க முயன்றனர்” என்று கூறும் ஹயாத் மேலும் தொடர்கிறார்: ‘மோசடியினூடே சரியானதைக் கண்டுகொள்ள அவரால் முடியும்.”
“கும்பலின் கையில் முந்தைய நாளிரவே மாமிசம் கிடைத்தது என்றால், அவர்கள் ஏன் உடனடியாக போலீசைக் கூப்பிடவில்லை?” எனக் கேட்கிறார் ஹயாத். “பசுவதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், அடுத்த நாள் காலை வரை காத்திருந்து, இந்துத்துவக் குழுக்களின் ஆதரவுடன் போலீஸ் ஸ்டேஷனை ஏன் தாக்க வேண்டும்?”
சிங்கைக் கொலை செய்யத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போதே சொல்ல முடியாது என்று FactChecker.in தளத்திடம் சொல்கிறார் கூடுதல் டி.ஜி.பி. (மீரட்) பிரஷாந்த் குமார். “அக்லக் கொல்லப்பட்ட நேரத்தில் சிங் இங்கு மாற்றம் செய்யப்பட்டு வந்ததால் அவரை விசாரணை அதிகாரியாக ஆக்கினர்; ஒன்றரை மாதம் வழக்கில் வேலை செய்யும் முன்னரே திரும்பவும் அவருக்குப் பணியிட மாற்றல் வந்தது; குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூட அவரால் முடியவில்லை,” என்கிறார் குமார். இக்கொலையை ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என அவர் உறுதியளிக்கிறார்.
“அவரைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போது சொல்ல முடியாது என்றாலும், மேலோட்டமாக உண்மை போல் தெரியாத ஒன்று பின்னர் உண்மையாகத் தெரியலாம்; எனவே இதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்,” என்கிறார் குமார். “இதுபற்றிய இறுதி முடிவை SITயால் எடுக்க முடியும் எனத் தோன்றுகிறது,” என்றார்.
யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு உ.பி.யில் பதவியேற்றதும் அதிகரித்துள்ள வன்முறை நமது தகவல் கருவூலத்தின் அடிப்படைக் கண்டுபிடிப்புக்களை எதிரொலிக்கிறது: 2010இலிருந்து (நமது தகவல் கருவூலம் தொடங்கப்பட்ட நாள்) இந்தியாவின் பசுவதை தொடர்பான 97 வழக்குகள் தெரியவந்துள்ளன, அவற்றுள் 98% வழக்குகள் பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் பதவியேற்ற 2014க்குப் பின்னர் நிகழ்ந்தவை.
20 கோடிப் பேர் உள்ள மக்கள்தொகையுடன் இந்தியாவின் பெரிய மாநிலம் என்ற முறையில் நாட்டு மக்கள்தொகையில் 16% உ.பி. யில்தான் உள்ளது. 2018-ஆம் ஆண்டு பசுவதை தொடர்பாகப் பதிவான 40% (10இல் 4) சாவுகளும் 29% தாக்குதல்களும் (21இல் 6) உ.பி.யில்தான் நிகழ்ந்துள்ளன.
2017இல் இம்மாதிரியான 5 தாக்குதல்கள் உ.பி.யில் நிகழந்தன, ஆனால் சம்பவங்களில் ஒருவரும் சாகவில்லை. இந்த ஆண்டு, ஆறு வழக்குகள் மற்றும் நான்கு சாவுகளுடன், 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த உச்சபட்ச வன்முறையை (3 வழக்குகள், 4 சாவுகள்) இவ்வாண்டு தொட்டுவிட்டது.
மோசமாகிவரும் பசுப் புரவலர்களின் தாக்குதல்கள்
எமது தகவல் கருவூலத்திலிருந்து வெளிவரும் செய்முறைகளைப் பார்த்தால், பசுப் புரவலர்களின் தாக்குதல் இன்னும் மோசமாகிவிட்டது. இம்மாதிரியான கூட்ட வன்முறை சாவில் முடியும் சாத்தியக்கூறு 18% வரை அதிகரித்துள்ளது; 2017இல் 30% ஆக இருந்தது (37இல் 11 சாவு) 2018இல் 48%-ஆக அதிகரித்தது (21இல் 10 சாவுகள்).
பசுவதை தொடர்பான வன்முறையில் தாக்கப்பட்டவர்களில் 55% பேரும் கொல்லப்பட்டவர்களில் 86% பேரும் முஸ்லீம்களே (நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 14% பேர்).
பசுக்களின் சடலங்கள் இதற்கு முன்னரும் புலந்த்சாஹரில் வன்முறையைத் தூண்டியுள்ளன. 2017 ஆகஸ்டில் (மீலாது நபிக்கு ஒரு நாள் முன்பு) உள்ளூர் குட்டை ஒன்றில் பசுவின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, வெறிகொண்ட கூட்டமொன்று பக்கத்திலிருந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அடௌலி கிராமத்தை (அண்மைக் குற்றச் சம்பவம் நடந்த 50 கிலோமீட்டருக்குள் உள்ள கிராமம்) தாக்கியது. 26.8.2017 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல வீடுகளைச் சூறையாடி, இருப்பவர்களை அடித்து, இரு வழிபாட்டு இடங்களைத் தரைமட்டமாக்கினர்.
அலிசன் சால்தானா
(கட்டுரையாசிரியர் IndiaSpend மற்றும் FactCheckerஇல் துணை ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.)