நிஜாமுதீன் அலியா என்பவர் சூஃபி கவிஞர். வங்கத்தில் பெற்ற ராணுவ வெற்றிகளுக்குப் பின்னர் டெல்லி திரும்பிய கியாசுதீன் துக்ளக் அந்த சூஃபி கவிஞரை, தான் தில்லி திரும்புவதற்கு முன்பு தில்லியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனால் டெல்லியை அடையும் முன்னரே சுல்தான் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அப்போது அந்தக் கவிஞர், டெல்லி என்பது வெகு தூரம் என்றார். எதிர்க்கட்சிகள் சூஃபியின் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும், தங்களுடைய சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்வதையும் டெல்லியிலிருந்து பாஜகவை வெளியேற்றுவது சுலபம் என்றும் கனவு காண்பதையும் விட்டுவிட வேண்டும்.
2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் எதிரிகளின் பிரதேசங்களில் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு அதிரடியாக ஊடுருவிக்கொண்டிருந்ததுபோல உருவாக்கப்பட்ட தோற்றம் இனிமேலும் இருக்காது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. டெல்லி, பிகார், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்த பின்னரும், குஜராத்தில் ஏறக்குறைய மரண அனுபத்தைப் பெற்ற பின்னரும் பிரதமர் தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற ஒளி வட்டத்தை உருவாக்கியிருந்தார். தற்போது அந்த ஒளியானது அசுத்தமான கங்கையின் சேறோடு கலந்துவிட்டது,
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் காங்கிரசின் செயல்பாடும் ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளின் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ளும்போது சந்திரபாபு நாயுடுவின் நுண்ணறிவு வெளிப்பட்டதும் பாஜகவுற்கு எதிராக யார் தலைமை ஏற்கப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லாத நிலையை உருவாக்கிவிட்டது. பகுஜன சமாஜ் கட்சி போன்றவை காங்கிரஸ் கட்சியினால் தலைமை தாங்கப்படும் கூட்டணியுடன் இணைவதில் ஊசலாட்டத்திற்கு இடமில்லை என்ற நிலையையும் உருவாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்துவது என்பது, சிபிஐ – அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அதே நடைமுறைக்கு மீண்டும் வழி வகுப்பதாகவே அமையும்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரா சமிதியும் (டிஆர்எஸ்) மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளன. இது மாநிலக் கட்சிகள் இன்னமும் வலுவாகவே உள்ளன என்பதைக் காட்டுகின்றன. அவை தேசியக் கட்சிகளின் கூட்டாளிகளாக ஈர்க்கப்படும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி மட்டும் அம்பலப்பட்டு நிற்கிறது. அது தெலங்கானாவில் பலவீனமாக உள்ளது. ஆந்திராவிலும் காங்கிரஸ் அதனிடம் கூடுதலாக பேரம் பேசக்கூடும்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீரென ராஜினாமா செய்த தருணத்தில் வெளிவந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவினால் நல்ல ஆட்சியைத் தர முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு நம்பகத்தன்மையை அளித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த ஜனவரியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியபோது, ஜனநாயகம் ஆபத்திலுள்ளதாகப் பிரகடனப்படுத்தினர், அத்துடன் சிபிஐயில் நடக்கும் ஈகோ யுத்தம் தற்போதைய அரசின் கீழ் மத்திய நிறுவனங்கள் தேய்ந்துவருவதை உறுதி செய்கிறது.
பாஜக எப்படி இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும்? கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே பாஜகவை விமர்சிக்கத் தொடங்கிவிட்டன, அவை வரும் 2019 பொதுத்தேர்தலில் அதிகமான இடங்கள் கேட்டுக் கடுமையாக பேரம் பேசலாம், மோடி – ஷா தலைமைக்கு எதிராக அதிருப்திப் பேச்சுகள் பாஜகவிற்குள் எழத் தொடங்கிவிட்டன. மோடியும் ஷாவும் கட்சிக்குள்ளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும் நிலவும் அதிருப்திகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தங்கள் திட்டத்தைத் தகவமைத்துக்கொள்ள முடியுமா? சாத்தியமில்லை. அவர்கள் செயல்படும் முறையை வைத்துப் பார்த்தால் அது இன்னமும் அதிகரிக்கவே செய்யும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது, மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்பு அளிப்பது, ஒவ்வொரு கிராமத்திற்கும் விவசாய உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிலகங்களை கொண்டுவருவது போன்றவற்றை நடைமுறைப் படுத்தும் அளவுக்கு வேகமான வளர்ச்சி தேர்தலுக்கு முன் ஏற்படுவது சாத்தியமில்லாதது. கடன் தள்ளுபடிகள் போன்ற இலவசங்களை நாம் எதிர்பார்க்கலாம். அரசு ஊழியர்களுக்குப் பென்ஷனைக் கூட்டுவது என்று சமீபத்தில் அறிவித்ததும் முன் அனுபவமான விஷயம். அத்துடன் தீவிரமான இந்துத்துவ அரசியலையும் எதிர்பார்க்கலாம்,
பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் ஆழ்ந்த சிந்தனையில் பிறந்த திட்டம் எதையும் இன்னும் உருவாக்கவில்லை, இது வரை, பாஜக அரசுகளின் தவறுகளுக்கு எதிரான பொது மக்களிடையே உள்ள கோபத்தையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது, இதுவரை பாஜக அரசுகள் மிகுந்த கருணையோடு எதிர் கட்சிகளுக்கான வாய்ப்புகளை வாரி வழங்கிவருகின்றன.
காங்கிரசுக்கு இரண்டு தடைக்கற்கள். முதலில் அதன் புதிய தலைமை. கட்சித் தலைவர் இளைஞர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். பழைய தலைவர்களை மேற்பார்வைக்கு மட்டும் விட வேண்டும் என்று கருதுகிறார், இரண்டாவது காங்கிரஸ் முஸ்லிம் கட்சி அல்ல என நிரூபிக்க அவர் இந்து மதத்தின் சடங்குகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொகொள்கிறார், அது இந்துக்கள் அல்லாதவர்களையும் இந்து மதத்திற்குள் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களையும் அந்நியப்படுத்திவிடும்.
கட்சிக்குள் புதிய ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்பது ராகுலின் விருப்பம். இதற்கான விலையை ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் கொடுக்க நேர்ந்தது. மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் மிகப் பிரபலமான தலைவர் திக்விஜய் சிங். அவர் காங்கிரசின் மத்தியத் தலைவர்களில் ஒருவர். அவருக்கு மாநிலத்தில் அடி மட்டத்தில் ஆதரவு உண்டு, ராகுல் காந்தியினால் புனரமைக்கப்பட்ட காங்கிரசின் செயற்குழுவில் அவர் இடம் பெறவில்லை. மத்தியப் பிரதேசத்தில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் இடம்பெறவில்லை. இது சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியைப் படுதோல்வி அடைய வைத்துவிடும் என்பதைப் புரிந்துகொண்ட சோனியா அதில் தலையிட்டு சிங்கை உள்ளே கொண்டுவந்தார்,
ராஜஸ்தானில் யாருக்கு அதிக ஆதரவு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் ராகுல் காந்தி இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று செயல்பட்டதால் ராஜஸ்தான் கட்சிக் கிளைக்குள் அதிருப்தி வளர்ந்தது. அதுவே அந்த மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவதற்குக் காரணமாக இருந்தது,
புதிய தலைவர்கள் களத்தில் அன்றாட அரசியல் பணிகளில் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது, கட்சி மேலிடம் விரும்புவதாலேயே அவர்கள் ஒரே நாளில் பெரிய தலைவராகிவிட முடியாது. மாநிலங்களிலுள்ள அனுபவம் வாய்ந்த, உறுதியான தலைவர்கள் என்னும் கட்சியின் மதிப்பு மிகுந்த வள ஆதாரங்களைச் சரியாக அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி தனது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள முயல்வார் என்றால் எல்லாமே மாறும். ஜெய்ப்பூரிலிருந்து தில்லி செல்லுவதற்கான தொலைவு ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை.
டி.கே.அருண்
நன்றி: தி எகனாமிக் டைம்ஸ்
(https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-opposition-should-not-be-overwhelmed-by-its-assembly-wins/articleshow/67050830.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst)