அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் ராமரை குறிப்பிட்டார். சத்தீஸ்கர், ராமரின் தாயின் பிறந்த இடமாக அமைந்தது. தெலங்கானா, ராமர் வனவாசத்தின்போது கடந்த சென்ற தண்டகாருண்யத்தின் இருப்பிடமாக அமைந்தது. ராமரின் சக்தியை உணரும் முன் அவருக்கு சவால் விட்ட பரசுராமர் மத்தியப் பிரதேசத்தில் தவம் செய்தார். இப்படியெல்லாம் பேசிய அவர், ராஜஸ்தானில், அலியை வீழ்த்த ராமரின் தளபதி பஜ்ரங் பலி போதும் என்றார். முஸ்லிம்களை கிலியில் ஆழ்த்த இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பிரச்சாரம் செய்த ஆதித்யநாத், எல்லோரும் எந்தப் பாகுபாடும் இல்லாத நலத்திட்டங்களைப் பெறக்கூடிய ராம ராஜ்ஜியத்தை பாஜகவால் மட்டுமே கொண்டுவர முடியும் எனப் பெருமைப்பட்டுக்கொண்டார். ஒரே விதிவிலக்கு தீவிரவாதிகள்தான் என முழங்கினார். அவர்களுக்கு பிரியாணி வழங்கப்படாது, தோட்டாக்கள்தான் என்றார்.
பிரியாணி சாப்பிடுபவர்கள் அடையாளம் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால், நவம்பர் 26இல் ராஜஸ்தானில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அதை விளக்கினார். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எனப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களாகக் கண்டறியப்பட்ட சமூகங்களை மேம்படுத்த வேண்டும் என மன்மோகன் சிங் 2006இல் நிகழ்த்திய உரையைச் சுட்டிக்காட்டிய ஆதித்யநாத், “பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், வளத்திற்கான முதல் உரிமை முஸ்லிம்களுக்கு என்றார். முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனில் இந்துக்கள் எங்கே போவார்கள்? காங்கிரஸ் எப்போதுமே பிளவுபடுத்திப் பார்க்கிறது.. இந்த பிரிவினை அரசியலின் விளைவால் நாட்டில் தீவிரவாதம் உண்டானது. தீவிரவாதிகளுக்கு அவர்கள் பிரியாணி பரிமாறுகின்றனர்” என்று கூறினார்.
காவி உடை அணிந்த சந்நியாசியும் இந்த்துவ எழுச்சியாளருமான இவர், 2017இல் இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்திற்கு முதல்வராவதற்கு முன்பே, நட்சத்திரப் பிரச்சாரகராக அறியப்பட்டிருந்தார். இந்தப் பிரச்சார காலம் பாஜகவில் அவரது முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. யோகிதான் கட்சியின் பிரதான பிரச்சாரகர் என இந்து நாளிதழ் எழுதியிருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானாவில் அவர் 74 பேரணிகளில் உரை நிகழ்த்தினார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதைவிட இது 31 பேரணிகள் அதிகம். பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்றதை விட 56 பேரணிகள் அதிகம்.
உத்தரப் பிரதேசத்தில் மூன்று கோடிக்கு மேல் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி இது. ஆனால், பல்வேறு சமூகங்கள் கொண்ட மாநிலத்தை நிர்வகிப்பது என்பதால் ஆதித்யநாத்தின் மதவாத முழக்கங்கள் மென்மையாகிவிடவில்லை. அதற்கு மாறாக, உத்தரப் பிரதேசத்தில் தான் கொண்டு வந்துள்ள இந்துத்துவ வெற்றியைப் பெருமையாகக் குறிப்பிட்டு மற்ற மாநிலங்களுக்கு அதைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார். அவை வருமாறு: பெயர்களை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் புராதன மற்றும் வேத பாரம்பரியத்தை மீட்டெடுப்பது. இதன்படி அலகாபாத் பிராயகை ஆனது. பைசாபாத் மாவட்டம் அயோத்யா என பெயர் மாற்றப்பட்டது. தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத் பாக்யநகர் என்றும் கரீம்நகர் கரிபுரம் என்றும் பெயர் மாற்றப்படும்.
ஆனால் அவர் அகராதியில் முஸ்லிம்கள் மட்டும் வில்லன்கள் அல்ல. ஆதிவாசிகளை மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் இந்து மிஷனரிகள் போட்டியிடும் சத்தீஸ்கரில், “இந்துக்கள் மதமாற்றப்படுவதை ஆதரிக்கும், ராமரால் வீழ்த்தப்பட்ட ராட்சச ஆட்சியைப் புதுப்பிக்க முயலும்” காங்கிசாரை வீழ்த்துவது அவசியம் என கூறினார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் ஆதித்யதாத் நிகழ்த்திய 19 உரைகளையும் ஸ்கிரோல்.இன் ஆய்வு செய்தது. பாஜகவின் புதிய நட்சத்திரப் பிரச்சாரகரின் கருப்பொருளை அறிய இவை ஆன்லைனில் அணுக வழி செய்யப்பட்டுள்ளது. அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்து குறியீடு: ‘ராமர் பணியைச் செய்து முடிக்கும்வரை ஓய மாட்டேன்’
தனது சொந்த மாநிலத்தில் ஆதித்யநாத், இந்து அடையாளங்களை, குறிப்பாக கடவுள் ராமரை மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடிவருகிறார். அயோத்யாவில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் சிலை வைப்பேன் என்றார். (உலகின் மிகப் பெரிய சிலை).
இந்த அரசியலைப் பிரச்சாரத்திற்கும் கொண்டுசென்றார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல கூட்டங்களில் அவர், அவதி மொழியில் உள்ள சொல்வழக்கான, அனுமன் கூறியதாக வரும், ‘ராமர் பணியை முடிக்கும் வரை ஓய மாட்டேன்” எனும் வாசகத்துடன்தான் முடித்தார்.
தெலங்கானாவில், 14 ஆண்டுகள் வனவாசத்தின்போது இந்தப் பகுதியில் ராமர் தங்கியிருந்தார் என்னும் நம்பிக்கையை வலியுறுத்தினார். “கடவுள் ராமர் இங்கு தண்டகாரண்யத்தில் தங்கியிருந்தார். அபோது அவர் சாதுக்களையும், சமூகத்தையும் அரக்கர்கள் பிடியிலிருந்து விடுவித்தார்” என்று டிசம்பர் 5இல் கரீம்நகரில் பேசியபோது கூறினார். “இதுவே ராமராஜ்ஜிய இயக்கத்தைத் துவக்கியது” என்றார்.
சத்தீஸ்கரில் ராமரின் தாய் பற்றிக் குறிப்பிட்டார். “இந்த மாநிலத்தில் கவுசல்யா அன்னையைப் பார்க்கிறேன். ராமரின் தாத்தா, பாட்டி ஆகியோரின் இடமாக இதைப் பார்க்கிறேன்” என்று நவம்பர் 18இல் சூரஜ்பூரில் கூறினார்.
ராமரின் தீவிர பக்தரான அனுமன் பற்றிய குறிப்புடன அவர் பேச்சை முடித்தார். “நவம்பர் 20 அனுமன் தினம். அனுமன் மிகப் பெரிய ஆதிவாசி, வனங்களில் வசித்தவர். ராமர் பணி செய்யாமல் ஓய மாட்டேன் என்று கூறியவர்.”
ராமயாணக் கதை அல்லாத விஷயங்களுக்கும் கொஞ்சம் இடம் இருந்தது. மத்தியப் பிரதேசம், மோவோவில் நவம்பர் 19இல் பரசுராமர் பற்றிப் பேசினார். அவர் இங்குள்ள வனத்தில் தவம் செய்ததாக ஆதித்யநாத் குறிப்பிட்டார். ராஜஸ்தானின் சிட்டகோரில் நவம்பர் 28இல், ராணி பத்மாவதியின் தியாகம் தீரச்செயலாகப் போற்றப்பட்டது.
இந்துத்துவ நல அரசு: ராம ராஜ்ஜியம்
புராண கால, ராமர் ஆட்சியில் நிலவிய வளமான வாழ்க்கை ராம ராஜ்ஜியம் என குறிப்பிடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி இதைத் தொடர்ந்து பயன்படுத்தினார். வளர்ச்சி என்றால் பாஜக என்ன நினைக்கிறது என்பதைச் சித்தரிக்க ஆதித்யநாத் இதைப் பயன்படுத்தினார். மத்தியப் பிரதேசத்தில், நலவாழ்வு அரசைக் குறிக்க ராம ராஜ்ஜியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். “ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டப்பட்டால், கழிப்பறை கட்டப்பட்டால், விவசாயிக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தால், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழைகள் பயன்பெற்றால், சுகாதாரத் திட்டங்கள் மூலம் ஏழைக் குடும்பம் பயன்பெற்றால், ஏழை வீட்டில் பல்ப் எரிந்தால், சமையல் எரிவாயு இணைப்பு இருந்தால் அதுதான் ராம ராஜ்ஜியம்” என்றார்.
பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் நலத்திட்டங்கள் சென்றடைவதுதான் ராம ராஜ்ஜிய அமைப்பு என்று மத்தியப் பிரதேசத்தில் நவமப்ர் 21இல் செஹோரில் பேசும்போது கூறினார். “ராமரும் ரொட்டியும் ஒன்றிணைந்து தேசத்தின் பணிகளை முடிக்கும்” என்றார். டிசம்பர் 1இல் ராஜஸ்தானின் ஜம்டோலியில் பேசும்போது இன்னும் நேரடியாகக் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா திட்டத்தைக் குறிப்பிட்டு ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு, பாஜக ராமராஜ்ஜியத்தை நோக்கிச் செல்வதற்கான அடையாளம் என்றார்.
ஆனால், யோகி முன்னிறுத்தும் ராம ராஜ்ஜியம் என்பது நலவாழ்வை மட்டும் குறிப்பது அல்ல. அடையாளம் சார்ந்ததும்தான். அதாவது நகரங்கள் பெயரை மாற்றுவது. செஹோரில், இதுவே நம்முடைய வேத கால, புராண அடையாளம் என்பதால் பைசாபாத் பெயரை அயோத்தியா என மாற்றியதாகக் கூறினார்.
பலமான இந்தியா: “பாஜக தீவிரவாதிகளுக்குத் தோட்டக்களைத் தருகிறது, பிரியாணி அல்ல”.
விரிவான நலத்திட்டங்களை அளிப்பதோடு, ஆதித்யநாத் வரையறுக்கும் இந்துத்துவ இந்தியா, தேசியப் பாதுகாப்பில் காங்கிரசின் கோழைத்தனத்திற்கு பதிலாக பலமான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்றார். “காங்கிரஸ் மக்களிடம் ஆளும் உரிமை கேட்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதிகளுக்கு பிரியாணி அளிக்கிறது” என்று நவம்பர் 27இல் ராஜஸ்தானின் தானா காஜியில் கூறினார். “இதுதான் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம். பாஜக அரசு தீவிரவாதிகளுக்குத் தோட்டாக்களை அளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் தீவிரவாதிகளை விருந்தாளிகள்போல நடத்தி பிரியாணி அளித்தது. தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொள்ளாத அரசு என்றால் அது பாஜக அரசுதான்” என்றார்.
ஆதித்யநாத், தோட்டா – பிரியாணி உதாரணத்தைக் கொண்டு அப்படியே தீவிரவாதிகளிலிருந்து மத வன்முறைக்கு எளிதாகத் தாவினார். “உத்தரப் பிரதேசத்தில் ஒரு நாளுக்கு ஒரு முறை ஏதேனும் கலவரம் இருக்கும்” என்று நவம்பர் 27இல் ராஜஸ்தான் ஆல்வாரில் கூறினார். “ஒவ்வொரு பண்டிகைக்கு முன்னரும் தீவிரவாதச் சூழல் இருக்கும். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக எந்தக் கலவரமும் நடைபெறவில்லை. ஏனெனில் கலவரக்காரர்களுக்கு பாஜக அரசு பிரியாணி அளிக்காமல், வேறு ஒன்றை அளிக்கும் எனத் தெரியும்” என்றார்.
நவம்பர் 26இல் ராஜஸ்தானில் மக்ரானாவில், தீவிரவாதிகளுக்கு எதிராக பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகச் சொன்னார். “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல் அல்லாமல், மோடி ஆட்சியின் கீழ் இந்திய ராணுவம் தீவிரவாதிகள் சுடக் காத்திருப்பதில்லை, ஏனெனில் அவர்களின் இருப்பிடம் பூமி அல்ல, யமராஜனின் வீடு” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் சிறுபான்மை சார்பு: ‘காங்கிரஸ் துரியோதனன் போன்றது”
ஆல்வாரில் ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியை துரியோதனனுடன் ஒப்பிட்டார். மகாபாரதத்தில் துரியோதனன் கூறியதாக ஒரு கூற்றை மேற்கோள் காட்டினார். “எது நன்மை, எது தீமை என எனக்குத் தெரியாது என்றில்லை. ஆனால், என்னால் ஒருபோதும் தீமையின் பாதையில் இருந்து விலக முடியாது அல்லது நன்மையின் பாதைக்குச் செல்ல முடியாது” என்று துரியோதனன் சொன்னதாகக் குறிப்பிட்டு, துரியோதனனின் இந்த நிலைதான் காங்கிரஸின் நிலை என்றார். இங்கு தீமை என அவர் குறிப்பிட்டது, முஸ்லிம்களைத் திருப்திபடுத்தும் காங்கிரசின் போக்காகும்.
நவம்பர் 28இல், உதய்பூரில் ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்காளர்களைக் கவர்வதைத் தாக்கினார். “அவர்களுக்கு அலி இருக்கலாம், எங்களிடம் பஜ்ரங் பலி இருக்கிறது” என அவர் அனுமனை குறிப்பிட்டார். இந்தச் சொல் விளையாட்டை மிகவும் ரசித்த அவர் அமீரிலும் இதை மீண்டும் கூறினார்.
பாஜகவுக்கு நெருக்கமான ராமர் கோயில் கட்டும் விஷயம் பற்றி அரிதாகவே குறிப்ப்ட்டார். காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தவே இதை விதிவிலக்காகக் குறிப்பிட்டார். நவம்பர் 21இல் மத்தியப் பிரதேசத்தின் இடாசாரியில் பேசும்போது, இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம் எனக் குற்றம்சாட்டினார். சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் தன் திட்டத்தின் ஓர் அங்கமாக 2019க்கு முன்பு உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக் கூடாது என ராமஜென்ம பூமி தீர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார்.
தெலங்கானாவில், ஆதித்யநாத் 1948 வரை ஐதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னரை நினைவுகூர்ந்தார். “நிஜாமிடமிருந்து சுதந்திர இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் காங்கிரஸ், தெலுங்கு தேசம் அல்லது டிஆர்எஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் நிஜாமுக்குத்தான் அடிமையாக இருக்கின்றனர்” எனக் கூறினார்.
ஆதித்யநாத் முஸ்லிம்களை மட்டும் தாக்கவில்லை. சத்தீஸ்கரில் நவம்பர் 18இல் அவர் காங்கிரஸ் ஆட்சியை அரக்கர் ஆட்சி என கூறினார். மதமாற்ற உத்திகளுக்கு தேசிய அளவில் அந்தக் கட்சி ஆதரவு அளித்தது என்றார்.
காங்கிரஸ் தலைவர் இந்துவாக இல்லை என தாக்கு: ‘ராகுல் காந்தி இப்போது கோத்திரம் பற்றி பேச வேண்டியிருக்கிறது’
ராகுல் காந்தியின் கோயில் விஜயங்களால் காங்கிரஸ் கட்சி வெளிர் காவித்தன்மை பெற்ற நிலையில், இதை பாஜகவின் கொள்கை வெற்றி என ஆதித்யநாத் கூறினார். நவம்பர் 26இல் ராஜஸ்தானின் பொக்ரானில், ராகுல் காந்தி தனது கோத்திரம் பற்றிக் கூறியதை கிண்டல் செய்தார். நேருவைக் குறிப்பிட்டு, “ராகுலின் தாத்தா தற்செயலான இந்து எனத் தன்னைக் கூறிக்கொள்வார். இப்போது நான்காம் தலைமுறை தனது கோத்திரத்தைச் சொல்கிறது” என்றார். எங்கள் கட்சிக் கொள்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதோடு, இந்துக்களின் உண்மையையும் உணர்த்துகிறது என்றார்.
நவம்பர் 19இல் மத்தியப் பிரதேசத்தின் பாட்னவாரில், அவர் ராகுல் காந்தி முஸ்லிம்கள் போல் உட்காருகிறார் எனக் கூறினார். “நாம் கோயிலுக்குச் சென்றால் காலை மடித்து உட்காருவோம். ராகுல் காந்தி சோமநாதர் ஆலயம் சென்றபோது முட்டியை மடித்து உட்கார்ந்தார் (தொழுகை குறிப்பு). எனவே அங்கிருந்த பூஜாரி அவரிடம் இது மசூதி அல்ல கோயில் எனக் கூற வேண்டியிருந்தது” என்றார்.
ஆனந்த் கடகம்
நன்றி; தி ஸ்க்ரால் (https://scroll.in/article/905191/ram-biryani-rahul-gandhi-what-bjps-star-campaigner-adityanath-spoke-about-on-the-campaign-trail)