2017 மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 403 தொகுதிகளில் 325இல் வென்ற பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பலநாள் யோசித்த கட்சித் தலைமை தீவிர இந்துத்துவத் தலைவர் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி எல்லாரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உ.பி. தலைவரான ரமேஷ் தீட்சித் அப்போதெல்லாம் ஆதித்யநாத் மற்றும் மோடியைப் பற்றி பொதுக்கூட்டத்தில் விமர்சித்தால் ஆர்வமான எதிர்க்கருத்து தொலை தூரத்தில் இருக்கும் தொகுதிகளில்கூட வருமென்று கூறியிருந்தார். “பேசும்போது ஆதித்யநாத்தையும் மோடியையும் கொலைகாரர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அப்போதேல்லாம் என்னை பார்த்து கூக்குரலிடும் ஆண்கள் ‘நீ எப்படி அவ்வாறு கூறலாம்?’ எனக் கேட்பார்கள். இப்போது, அவர்கள் எனக்காகக் கைதட்டுகின்றனர்” என்றார்.
ஏன் இந்த மாற்றம்?
செவ்வாய்க்கிழமை வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக கவலை கொண்டுள்ள காரணம் உள்ளது நன்கு தெரிகிறது; ஏனெனில் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இன்னும் 4-5 மாதங்களே உள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற கட்சியின் கோட்டைகளில் – 2013ஆம் ஆண்டு பெருவெற்றி பெற்ற இடங்களில் – பாஜக வென்ற தொகுதிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. மற்ற கட்சிகளைவிட விரைவாகத் தேர்தல் பிரச்சாரம், வியூகத்தைக் கடைப்பிடித்தபோதும், ஆதித்யநாத்தையும் உ.பி. அரசையும் ‘பரிசுக் கோப்பை’களாகக் காட்டுவது நல்லதே கிடையாது என்று தீட்சித் ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’விடம் கூறினார்.
மென்மையான இந்துத்துவம் Vs தீவிர இந்துத்துவம்
76 வயதாகும் காங்கிரஸ் தலைவர் ஆதித்யநாத்தைப் பற்றிப் பேசும்போது எதையும் விடாமல் தீவிரமாகப் பேசுகிறார்; நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தை ஆள ஒரு ரவுடியைத் தேர்ந்தெடுத்தது பாஜக மிகவும் யோசித்து வியூகத்துடன் மேற்கொண்ட முடிவு என்றும், அதனால்தான் இப்போது அக்கட்சி கஷ்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
சத்தீஸ்கரில் விரிவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஆதித்யநாத், குறைந்தபட்சம் 8 பேரணிகளிலும், மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் 11 பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசினார். ‘மென் இந்துத்துவத்தை’ சில வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டாலும், கடந்த 2 ஆண்டுகளில் உ.பி.யில் நடந்த வன்முறைச் சம்பவங்களை பார்த்து கட்சியில் சேர பலர் ஆசைப்பட மாட்டார்கள் என்பது சமூக அறிவியல் அறிஞர் நதீம் ஹஸ்னைனின் கருத்து.
“உதாரணத்துக்கு புலந்த்சஹர் சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். வன்முறை பற்றி மக்கள் தம் மனதுக்குள் வைத்திருக்கும் எல்லைக்கோட்டை ஆதித்தியநாத் தலைமையில் இந்துத்துவ சக்திகள் தாண்டிவிட்டன” என்று ஹஃப்போஸ்ட் இந்தியாவிடம் கூறினார் ஹஸ்னைன்.
பசுக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து புலந்த்சஹரில் வெறிகொண்ட கும்பல் போலீஸ் சாவடியைக் கடந்த வாரம் தாக்கியபோது காவல்துறை ஆய்வாளரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். கொலை நடந்த பின் பசுவதை பற்றிய விசாரணைக்கு ஆணையிட்ட ஆதித்யநாத்தின் செயல் மக்களிடையே கோபத்தை வரவழைத்தது; ஆய்வாளரின் கொலையை ஒரு ‘விபத்து என அவர் வர்ணித்தார்.
தலித்துக்களையும் சிறுபான்மையினரையும் இலக்காக்கும் நோக்குடன் பசுநலத்தைக் கையில் எடுத்துள்ள ஆதித்யநாத்துக்கு உழைக்கும் மக்களின் ஆதரவு கிடைக்காது என்கிறார், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் தலித் போராளியுமான எஸ்.ஆர். தாராபுரி.
இறைச்சிக் கடைகளை மூடுவது, ‘உரிமம்’ பெறாமல் தொழில் புரிந்தவர்களை கடையடைக்க வைப்பது போன்றவையே ஆட்சிக்கு வந்தவுடனே ஆதித்யநாத் அரசு மேற்கொண்ட பணிகளில் முதன்மையானவை.
“முதலில் இது மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையே கிடையாது. அவர் அதை செய்ய ஆரம்பித்ததே முஸ்லிம்கள், தலித்துக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்க முனைந்துவிட்டார் என்று அர்த்தமாகும்” என்கிறார் தாராபுரி.
ஆதித்யநாத் அரசு எவ்வித வளர்ச்சிப் பணியையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கவில்லை எனக்கூறும் இம்முன்னாள் காவல்துறை அதிகாரி, முஸ்லிம் பெயர்கள் கொண்ட நகரங்களைப் பெயர் மாற்றம் செய்வதும் நாட்டிலேயே மிக உயரமான ராமர் சிலையை எழுப்பப்போவது பற்றிய அறிவிப்பும்தான் இவ்வரசின் முக்கியமான ‘சாதனைகள்’ என்கிறார். மேலும் முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரைக் காரணமின்றி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததையும் பலர் கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுகிறார்.
“ஆதித்யநாத் ஒரு பெரும் சொத்து என ஆர்.எஸ்.எஸ். நினைத்திருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல,” என்கிறார் ஹஸ்னைன்.
‘நட்சத்திர பிரச்சாரகர்’
ஆதித்யநாத்தைத் தனது ‘நட்சத்திர பிரசாரகராக’ ஆக்கியதற்கான விலையை பாஜக தற்போது கொடுத்துள்ளது என்பது தாராபுரியின் கருத்து.
ஆதித்யநாத்தின் தீவிர இந்துத்துவ அணுகுமுறையால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சிக்கு பெருமளவு ஆதாயங்கள் கிடைக்கும் என நினைத்து முயற்சி மேற்கொண்ட பாஜக பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஆதித்யநாத்தையும் அதிதீவிரப் பிரசாரம் மேற்கொள்ள களமிறக்கியது.
“இதனால் எதிர்மறையான, தவறான செய்திதான் சென்றடைந்தது,” என்கிறார் தாராபுரி. “பசுப் பாதுகாப்பு, இந்துத்துவம், ‘கோவில் அங்கேயே கட்டப்படும்’ என அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்; அவரைப் பொறுத்தவரை மனிதனைவிடப் பசுதான் முக்கியம் என்பது போலத் தெரிகிறது,” தாராபுரி சொல்கிறார்.
இந்துத்துவத்தின்பால் ஈர்க்கப்படும் கற்கும் ஒரு வாக்காளருக்கும் அதோடு நெருக்கம் கொள்வதற்கு ஒரு எல்லை இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறார் ஹஸ்னைன்.
“பெரும்பான்மையினருக்கு இந்துத்துவம் பிடித்திருந்தாலும் வன்முறை, ரத்தம் சிந்துதலை அவர்கள் விரும்பவில்லை. ஆதித்யநாத் கூறும் இந்துத்துவமானது நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தொடர்ந்து நடக்கும் அடித்துக் கொல்லப்படும் வன்முறை சம்பவங்கள், ரத்தம் சிந்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும், இந்துத்துவமானது மக்களது வயிறை நிரப்பாது. இந்துத்துவத்தின் பின்னணியில் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, கல்வி ஆகியவற்றை அதிக காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது,” என்கிறார் ஹஸ்னைன்.
இது தவிர, மாநிலத்தின் பெரும்பாலான அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் இதுவரை வலதுசாரி அரசு விரும்பும் வண்ணம் இந்துத்துவ போதனையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஹஸ்னைன் சொல்கிறார்.
ஆதித்யநாத்தின் செயல்கள் கட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதைத்தான் உ.பி.யின் பூல்பூர், கைரானா மற்றும் முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூரில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பதை அரசியல் நோக்கர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். ஆனாலும், பாஜக தன் பாடங்களைக் கற்றுக் கொள்வதாக இல்லை.
காங்கிரசுக்கும் பாடம்
ஆதித்யநாத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தது பாஜவுக்கு பாதகமாக முடிந்தபோதிலும், பாஜகவின் பிரசாரத்திலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்வது அவசியம் என்கிறார் தீட்சித்.
“தன் வசமிருந்த அனைத்தையும் பாஜக செய்தது. இந்துத்துவ சக்திகளை ஓரணியில் கொண்டுவந்து சமூக அமைதியை நிலைகுலையவைப்பதற்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்தனர். காங்கிரஸ், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாத் தொகுதிகளுக்கும் சென்றார்களா? மேலும், காங்கிரஸின் அராஜகப் போக்கின் காரணமாகப் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைவதும் கடினமாகிவருகிறது,” என்கிறார்.
பியாஸ்ரீ தாஸ் குப்தா (எடிட்டர், ஹஃப்போஸ்ட் இண்டியா)
நன்றி: ஹஃப்பிங்டன் போஸ்ட்.