டிசம்பர் 11 அன்று வெளியான ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நமது கவனத்தைச் சிதறடிக்கும் முன்னர் வீரன் ஜீதுவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது புலந்த்சஹர் நகரில் கொடுங்கொலையில் ஈடுபட்ட கும்பலில் இருந்துள்ளார். போலீஸ்துறைத் தகவலின்படி, நடந்த கொலையை அவர் வெறுமனே வேடிக்கை பார்க்கவில்லை; காவல்துறை ஆய்வாளரின் உயிரை எடுத்த கும்பலில் ஒருவராகத் தாக்கும் வீடியோ படக்காட்சி பதிவாகி இருக்கிறதாம். ராணுவம் அவரை உ.பி. போலீஸ் வசம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் காவல் ஆய்வாளர் சுபோத்குமார் சிங்கைக் கொன்ற துப்பாக்கிக் குண்டைச் சுட்டது இந்த துப்பாக்கிதானென்று நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்கிறார் ஜீது.
சித்திரவதைக்குள்ளான நம் குடியரசின் உருவகம்தான் ஜீதுவா அல்லது ராணுவத்தில் பணிபுரியும் ஒரு வீரர் அரசியல்வாதிகளின் தூண்டலால் உந்தப்பட்டு வன்முறை புரிந்த அரிய வழக்கா? இக்கேள்வியைத் தவிர்க்க முடியாது, ஆனால் இதற்கான பதிலானது கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட ஆய்வாளரின் கொலையை விட துன்பம் தரக்கூடியதாகும். வெறிகொண்ட கும்பல் செய்த கொலைக்குப் பயிற்சி பெற்ற ஒரு ராணுவ வீரர் மேல் கொலைப்பழி விழுந்தது தானாக நடந்த விஷயமா, இல்லை, நமக்குத் தெரியாத திரை மறைவு வேலை ஏதாவது நடக்கிறதா?
கட்டுக்கோப்பான ராணுவத்தில் இது போல் நடப்பது அரிது என்று கூறி இதை முடித்து வைக்க உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ராணுவத்தின் மதசார்பற்ற தன்மை, அரசியலமைப்பை மதித்து நடக்கும் ஒழுக்கம் பற்றி ராணுவத் தலைமைக்கு எப்போதும் ஒரு பெருமைதான். வீரர்களை ஜாதி, இன, மத, பிராந்திய பேதமின்றி நடத்தி பாதுகாப்புப் படையினர் தார்மிக நெறிகளை மதிக்க வைத்துள்ள தன்மை நமக்கும்கூட ஒரு பெருமையான விஷயம்தான்.
ஒரு குடியரசு என்ற முறையில் பாகிஸ்தானைவிட நாம் வேறுபட்ட நாடு என்பதையும் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் மக்களால்தான் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்பதை முன்னிலைப்படுத்தியுள்ளதையும் நாம் கொண்டாடிவருகிறோம். பாதுகாப்புப் படையினர் வேண்டிய பதவி, பணியிட மாற்றம் (அதிக வயது சான்றிதழ் உட்பட) போன்றவை அரசியலாக்கப்படும்போது பாதுகாப்பு அமைச்சகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் இதைத் தமக்கு ஆதாயமாக்கிக் கொள்கின்றனர்.
சில தவறுகளைத் தவிர, அரசியல்வாதிகளின் சண்டைக்குள் தலையிட நமது ராணுவத் தளபதிகள் எப்போதும் விரும்பியதில்லை, அயூப் கான் செய்ததைப் போல் ‘அரசின் காப்பாளராக’ ராணுவத்தை ஆக்க வேண்டும் என்ற முனைப்பும் ராணுவத்திடம் இருப்பது போல் தெரியவில்லை. நாட்டு விவகாரங்களில் ராணுவத்தின் தலையீடு அதீதமாக இருந்ததால்தான் பாகிஸ்தானில் ஜனநாயக சீர்குலைப்பு நடந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானைப் பார்த்து நிச்சயம் அவ்வாறு நடக்க மாட்டார்கள்.
கடந்த சில தலைமுறைகளாக ராணுவத்தினரையும் துணை ராணுவப் படை வீரர்களையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்காகப் பலமுறை பணித்துள்ளோம் என்பது உண்மையே; வீரர்களை நாட்டு மக்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வைத்துத்தான் தீவிரவாதப் பிரச்சினைகள் பலவற்றை நாம் எதிர்கொண்டோம். இம்மாதிரியான நீண்டகால, கொடுமையான போராட்டங்களையும் தாண்டி இந்திய பாதுகாப்பு வீரர்கள் குடியரசுத் தன்மையை மதித்து தொழில்முறை ஒழுங்குணர்ச்சியுடன் கட்டுக்கோப்பாக இருப்பார்களென்று நாம் நம்புகிறோம்.
சமீப காலங்களில் அரசியலானது பிரச்சினை மிகுந்ததாக ஆகிவிட்டதால் வீரர்களையும் ராணுவத்தையும் மதக்கலவரங்களின் சுவடு தெரியாமல் எப்படி காப்பது என்பதே ராணுவத் தலைமை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாகும். பெரும்பாலான அரசியல்வாதிகள் தேசியவாதம், நாட்டுப்பற்றோடு தொடர்புடைய கற்பனையையும் உணர்ச்சிகளை வீர்ர்கள் மனதில் கொள்ள வேண்டுமெனத் தூண்டுவதால் வேலை இன்னும் கடினமாக ஆகிவிடுகிறது.
வீரர்கள் சமூக ஊடகங்களால் கண்காணிக்கப்படுவது மற்றும் மதரீதியான எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றையும் பாதுகாப்புப் படைகளின் தலைமை கையாள வேண்டும். சிறந்த சூழலில்கூட நம் மீதான சமூக ஊடகத்தின் மோசமான விளைவுகளிலிருந்து சுலபமாகத் தப்பிக்க முடியாது; ஆனால், ராணுவ வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டால் அது சமூகத்துக்கே கேடு விளைவிக்கலாம்.
இத்தகைய சூழலில் ‘2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ பற்றிய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி டி.ஸ். ஹூடாவின் கருத்துக்களை மறைக்க முயலும் தற்போதைய தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் முயற்சி வெறுப்பூட்டுகிறது. காஷ்மீரில் எல்லைக்கோட்டுக்கு அப்பால் எடுக்கப்படும் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைக்கு வடபிராந்தியத் தளபதியாக 2016இல் பணியாற்றிய ஹூடா பொறுப்பேற்றிருந்தார். சிலநாட்களுக்கு முன் சண்டீகரில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய ஹூடா இச்செயலை அரசியலாக்குவது பற்றிக் கண்டித்திருந்தார்.
பிரதமர் முதல் மாவட்ட அளவு அரசியல்வாதி வரை இத்தாக்குதல்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட அனைவரும் முனைவதை மிதமான, ஆனால் தெளிவான விதத்தில் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கண்டித்தது (மத்தியில்) ஆளுங்கட்சிக்கு கோபமாக இருக்கலாம். இதில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் ஹூடாவின் பேச்சைப் பதவியில் இருக்கும் தளபதிகள் நம்பாமல் இருப்பதுதான்.
இயல்பாகவே, இந்த முதுநிலை தளபதிகள் அரசியல்வாதிகளின் சண்டைக்குள் தாமாகவே தம்மை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டனர். இந்நிலையில் பதவியில் இருக்கும் அதிகாரிகள் ராணுவத்தின் புகழை எப்படி மேம்படுத்துவார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
தற்போதைய தளபதி அதிகம் பேசுவதில் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளார் எனச் சொல்லலாம். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் கர்தர்பூர் காரிடார் பற்றிய தேவையற்ற ஒரு விவாதத்தில் அவர் ஈடுபட்டார். வெளியுறவுத் துறை அதிகாரிகள் தேர்தல் காலத்தில் ‘பிஸியாக’ இருந்ததால் அரசின் செயல்பாட்டில் ராணுவத் தளபதி உள்நுழைந்ததை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜீது பற்றி அதையும் தாண்டிய சங்கடமான கேள்வி இப்போது திரும்ப வருகிறது: பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரர்களையும் அதிகாரிகளையும் மதரீதியாகச் சிந்திக்க வைக்கும் பெரும்பாவத்தை அரசியல்வாதிகள் செய்து விட்டார்களா? வீரர்களும் தளபதிகளும் தேசிய பாதுகாப்பு பற்றி தீவிரமாகப் பேசி, அவ்வாறே செயல்படும் குறிப்பிட்ட அரசியல்வாதியின் செயல்பாடுகளை ரசிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் நாட்டுப்பற்று என்ற பெயரில் பெரும்பான்மை அரசியலில் தம் நிலைப்பாடுகளை அவர்கள் வெளிக்காட்டலாம் என்று யோசனை கூறுவதுகூட மிகத் தவறானது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
மூன்று தலைமுறைகளுக்கு முன் நமது ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் பஞ்சாப் அரசியல்வாதிகளின் தந்திரத்தால் பாதிக்கப்பட்டதை நினைவில் கொள்வது நல்லது. இதன் விளைவுகள் குடியரசை மோசமாகப் பாதித்தன; இவற்றில் சில தவறுகளை இன்றுவரை சரிசெய்யவே முடியவில்லை. 1984ஆம் ஆண்டின் மோசமான சம்பவங்களிலிருந்து ராணுவ அதிகாரிகள் பாடம் கற்காமல் இருப்பதை மன்னிக்கவே முடியாது. ஜீது வைரஸ் தம்மைத் தாக்காமல் காத்துக்கொள்வது பாதுகாப்புப் படையினரின் தலையாய கடமை.
ஹரீஷ் காரே
நன்றி: https://thewire.in/security/jeetu-the-fauji-and-the-virus-indias-generals-need-to-combat