கடந்த நான்கு ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் – முக்கியமாக புதிய ஆதரவாளர்கள் – களிப்பு நிலையிலிருந்து (ஒரு வழியாக காங்கிரஸ் தோற்றுவிட்டது, இந்தியாவிற்குத் தேவையான தலைமை கிடைத்துவிட்டது) நம்பிக்கைக்குச் சென்று (இது ஆரம்பம்தான், இவர் நிச்சயமாக இந்தியாவை மாற்றுவார்) எதையும் கண்டுகொள்ளாத பொறுமை நிலைக்குத் தாவி (இது எளிமையான வேலை அல்ல) தயக்கத்துடன் கூடிய ஏமாற்றத்தில் வந்து நிற்கிறார்கள் (இந்த அரசு தன் பெயரைக் கெடுத்துக்கொண்டது).
அதிகரித்துவரும் மதவாதத்தின் மீது வெறுப்பு இருந்தாலும், அது நன்றாக மறைக்கப்பட்டுள்ளது. மதவாதம், அதாவது சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை குறித்து பாஜகவின் இந்தப் புதிய காதலர்களுக்குக் கவலை இல்லை. இவர்கள் தீவிரமான சங்க பரிவாரத்தினர் அல்ல, மாறாக, புதிய பக்தர்கள்!
சங்கத்தின் கருத்தியல்களில் வேரூன்றிய வலது சாரிகள் மற்றும் பாஜகவின் ஆதரவாளர்களைவிட, மோடி ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. காங்கிரசின் பொதுநலத் திட்டங்கள், முஸ்லிம்களுக்கு ஆதரவான அதனுடைய ‘மதச்சார்பின்மை’ உட்பட பல காரணங்களுக்காகப் பிடிக்காத ஒரு புதிய கூட்டத்தின் ஆதரவை மோடி பெற்றிருந்தார்
‘மரபுரிமை’ என்பதைத் ‘தகுதி’ என்னும் அம்சத்துக்கு முரணான கருத்தாகவும் அவர்கள் கருதினர். மேல் வர்க்கத்தினர் எப்போதுமே தங்களுடைய வெற்றி தங்களின் கடின உழைப்பிற்காகவும் திறமைக்காகவும் கிடைத்ததாகவே கருதுகின்றனர் – பெற்றோராலோ, ஜாதியாலோ அல்ல.
எனவே ராகுல் காந்தியை அவர்கள் வெறுத்தனர், மாறாக சுய முயற்சியால் முன்னேறிய, உறுதியான தலைவர் நரேந்திர மோடி புத்துணர்வைத் தந்தார். அந்த ஒளிவட்டம் மங்கத் தொடங்கிய பின்னரும், ராகுல் காந்தியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைக் கேலி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பிரச்சாரம் – பப்பு, திறமையற்றவர் – இவர்கள் மத்தியில் பெரிதும் எடுபட்டன. அதன் பிறகு மோடியின் மீது விமர்சனம் எழும்போதெல்லாம் அவர்களின் பதில், “ஆம், ஆனால் வேறு யார் இருக்கிறார்கள்? ராகுல் காந்தி? நடக்கவே நடக்காது.”, என்று மாறியது.
மோடியின் வெளிப்படையான பலவீனங்கள்
இப்போது நிலமை மாறிவிட்டது. மோடியின் வெளிப்படையான பலவீனங்கள் – தலைவராக, பிரதமராக, ஓட்டுப் பெறுபவராக – மறுக்க முடியாதவையாக மாறிவிட்டன. இளவரசன், விதவை போன்ற வார்த்தைகள் நிரம்பிய அவருடைய தவறான பிரச்சார பாணி அருவருப்பாகத் தோன்றியது. இதற்கு மாறாக, ராகுல் காந்தி, ஒழுக்கமான, படித்த மற்றும் கருணையுள்ள நபராகத் தோன்றினார். கண்ணால் காண்பதே முக்கியத்துவம் பெறும் இந்த சகாப்தத்தில் அவரை வெற்றிபெற வைத்ததும் இந்த மாற்றம் மட்டுமே.
ஆனால், காட்சிகள் மட்டுமே முக்கியம் அல்ல. ஒரு அரசியல் தலைவர் தன்னுடைய கூட்டத்தை ஒன்றாக வைத்துக்கொள்வதுடன், முன்னால் நின்று வழிநடத்தவும் வேண்டும். அவர்களின் கட்சி தேர்தல்களில் வெல்ல வேண்டும். தோற்பது, அல்லது சராசரியான தேர்தல் முடிவுகூட, கூட்டத்தைச் சோர்வடைய செய்வதோடு, தலைவர் பொறுப்புக்கு இவர் தகுதியானவரா என்று சிந்திக்க வைத்துவிடும்.
இங்கு, ராகுல் காந்தி வென்றுவிட்டார், ஆனால் ஒரு நீண்ட சோர்வான இடைவெளிக்குப் பிறகு. இறுதியில் இது, இவருக்கு நன்மையாகவே முடிந்திருக்கிறது. பல தவறான தொடக்கங்களுக்குப் பிறகு, 2014இல் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வியின்போது, தான் செய்ய முடியும் என்ற நினைக்காத ஒரு காரியத்தை காங்கிரஸ் இன்று செய்துள்ளது – பாஜகவை இந்தி பேசும் மூன்று மாநிலங்களில் வென்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் முன்னேறியிருக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் தோல்வியுற்றபோதும் ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலமாக பாஜக-வை வெளியில் அனுப்பியது. கோவா போன்ற முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றுப் போனது. ஆனால் இப்போது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில், காங்கிரஸ் வென்றுள்ளது. குறிப்பாக பாஜகவின் சக்தியையும் நிதி நிலையையும் கணக்கில் கொள்ளும்போது இது ஒரு சாதனை.
இவ்வெற்றிக்கான பெருமை ராகுல் காந்தியையே சேர வேண்டும். ஒரு வலுவான கருத்துடன் மட்டும் அவர் வாக்காளர்களிடம் செல்லவில்லை, மாறாக, கட்சிக்குள் இருக்கும் போட்டியாளர்களை, அவர்களின் வெறுப்புணர்வைப் புதைத்துவிட்டுக் கட்சியினரை ஒன்று திரட்டிக் கூட்டுப் பிரச்சாரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
திக்விஜய் சிங், கமல் நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய மூவர் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்தது யாரும் எதிர்பார்த்திராத விஷயம். அதற்குப் பலனும் கிடைத்துள்ளது. இதேதான் ராஜஸ்தானிலும் நிகழ்ந்தது. அஷோக் கெலோட், சச்சின் பைலட் ஆகியோர் இணைந்து ஒன்றாக வாக்காளர்கள் முன் நின்றனர். கட்சிக்கான செய்தி தெளிவாக உள்ளது: தேர்தல் களத்தில் அனுபவமுள்ள ஜாம்பவான்களுக்குத் தகுந்த மரியாதை வழங்கப்படும், புதிய தலைவர்கள் தலைமைப் பொறுப்பேற்கக் கால தாமதம் ஆனாலும், தங்கள் இடத்தைப் பிடிக்கலாம்.
ராகுலின் ஆளுமை, ஒடிந்துபோன ஒரு கட்சியைப் புதுப்பித்துள்ள தலைவராக அவர் கண்டுள்ள வெற்றி ஆகியவை இணைந்து, அவரைத் தயக்கவாதி அல்லது அமெச்சூர் என்று சொல்லுபவர்களிடமும்கூட அவருக்குப் புதிய ஆதரவாளர்களைப் பெற்று தந்திருக்கிறது.
ராகுலைக் கிண்டலடித்துக்கொண்டிருந்ததுபோய், இன்று அவர் புகழப்படுகிறார். பாஜகவினர் தொடர்ந்து இழிவுபடுத்தல் இப்போது கசப்புணர்வை ஏற்படுத்துகிறது. என்ன விவாதம் என்றாலும் பழக்க தோஷத்தில் ராகுல் காந்தியைத் தாக்கத் தொடங்கும் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இப்போது முட்டாள்களாகவும் காலாவதியானவர்களாகவும் தெரிகிறார்கள். அவர்கள் ஒரு புதிய திட்டத்துடன் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது எல்லாம் ராகுல் காந்திக்கு 2019ஆம் ஆண்டில் உதவுமா? ஒரு கட்டம் வரை உதவலாம், ஆனால் பொதுத் தேர்தலில் மோடியைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிமையானது கிடையாது. காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ள பாஜக அனைத்து வழிகளிலும் முயலும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கடும் எதிர்ப்பு இருக்கும். பொதுமக்களைக் கவர்வதற்கு மோடி அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவரும். ராகுல் காந்தி பற்றிய சந்தேகம் இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை. மோடிக்குத் தான் ஒரு சிறந்த மாற்று என்பதை அவர் திட்டவட்டமாக நிரூபிக்க வேண்டியுள்ளது.
ராகுல், தனக்கு எதிராக இருக்கும் சவால்களைச் சந்திப்பதோடு, தேவையான கூட்டணிகளை உருவாக்கவும் வேண்டியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று விரும்பும் மற்ற கட்சிகளைத் தன்னைச் சுற்றி ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் அதுவே கூட்டணிகளாக மாறிவிடாது. 2019இல் வெற்றி பெறுவதற்கான பாதை மிக நீளமாக இருக்கிறது. எனினும், காங்கிரஸ் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
சித்தார்த் பாட்டியா
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/rahul-gandhi-narendra-modi-bjp-congress-2019)
தமிழில்: ஆஸிஃபா