தி கேரவான் இதழுக்குக் கிடைத்துள்ள (மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட) தகவலின்படி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் ஆரம்ப நிலை விலை 5.2 பில்லியன் யூரோவாக இருந்தது; இது 2016இல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இருந்ததை விட 2.5 பில்லியன் யூரோ குறைவானதாகும். இவ்விலைக்கு ஒப்பந்தம் கிடைக்காது என்ற தயக்கத்தினால் அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு (DAC) விலை நிர்ணயத்துக்கான மாற்று முறையை முன்மொழிந்தது. விலையைச் சீரமைக்க மேற்கொண்ட முறை வழக்கத்துக்கு மாறான செய்முறையாகும். இறுதி விலையை பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) முடிவுசெய்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில் இத்தகவல்கள் தரப்படவில்லை, முக்கியமான இதுபோன்ற விஷயங்களில் அரசு குறைவாகவே உண்மை பேசியுள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
மோடி அரசால் முதலில் விலை நிர்ணயம் செய்ய பணிக்கப்பட்ட (அதற்கான நிபுணத்துவம் கொண்டிருந்த) அதிகாரியின் விலையை மீறி ஆகஸ்ட் 24, 2016 அன்று ரஃபேல் ஒப்பந்தத்தின் இறுதி விலை பிரதமரால் நேரடியாக ஒப்புதல் தரப்பட்டு கையெழுத்திடப்பட்டது. புதிய அடிப்படை விலையை நிர்ணயிக்க மேற்கொண்ட முறையானது 2013ஆம் ஆண்டின் பாதுகாப்புத்துறைக்கான வாங்கும் செய்முறையைப் (DPP) பின்பற்றிச் செய்யப்படவில்லை.
2015 ஏப்ரலில் பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது இந்திய, பிரெஞ்சு அரசுகள் வெளியிட்ட கூட்டறிக்கைக்குப்பின் 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்க ஒப்பந்த நிபந்தனைகளை இறுதிசெய்ய அமலில் இருந்த DPP செய்முறைப்படி மே மாதத்தில் 7 பேர் கொண்ட இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு (INT) ஒன்று உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருந்த பதிலில் இது பற்றி விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது:
“ஏ.எஃப். மற்றும் இணைச்செயலாளர் மற்றும் கையக மேலாளர் (விமானப் பிரிவு), இணைச் செயலாளர் (பாதுகாப்பு ஆஃப்செட் நிர்வாகப்பிரிவு) மற்றும் கூடுதல் நிதி ஆலாசகர், நிதி மேலாளர் (விமானப் பிரிவு), ஆலோசகர் (விலை) மற்றும் விமானப்படை துணைத்தளபதி (திட்டங்கள்) ஆகியோர் இந்திய அரசுத் தரப்பில் இருந்தனர். பிரெஞ்சு தரப்பில் பாதுகாப்புத் துறையின் ராணுவ தளவாட டைரக்டர் ஜெனரல் (DGA) இருந்தார். இந்தியக் குழுவுக்கும் பிரெஞ்சு தரப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தை 2015 மே மாதம் ஆரம்பித்து 2016 ஏப்ரல் வரை தொடர்ந்து நடந்தது. 48 உட்புறக்கூட்டங்கள், 26 வெளிப்புறக்கூட்டங்கள் உட்பட 74 கூட்டங்கள் வரை பேச்சுவார்த்தைகள் நீடித்தன.
மேலும் அரசின் பதிலில் DAC நடைமுறைகளை பின்பற்றி பல்வேறு பேச்சுவார்த்தைகள், பலமட்டத்திலான ஆலோசனைகள் என இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு ஈடுபட்டது. பிரெஞ்சு அரசின் பொறுப்பு, கடமைகள், விலை, டெலிவரி தரும் கால அளவு, பராமரிப்பு நிபந்தனைகள், ஆஃப்செட்டுகள், IGA நிபந்தனைகள் ஆகியவை பேச்சு வார்த்தைகளின்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டன.” என்று கூறப்பட்டது.
சொல்லப்பட்டது ஒன்றாகவும் உண்மை வேறொன்றாகவும் இருக்கின்றன. DPPயின்படி ஒப்பந்தத்திற்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பின்னர்தான் குழுவின் பணிகள் தொடங்க வேண்டும். “நியாயமான, அடிப்படை விலையை பேரங்கள் தொடங்குவதற்கு முன்னர் உட்புறக் கூட்டத்திலேயே குழு நிர்ணயிக்க வேண்டும்,” என DPP சொல்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட வழிமுறைகளின்படி, குழுவின் விலை ஆலோசகர் எம்.பி. சிங் இதைச் செய்தார். அடிப்படை விஷயங்களான – ரஃபேல் ஜெட்டை கட்டுமானம் செய்யும் அம்சங்கள் மற்றும் ஆய்வு/வளர்ச்சிக்கான விலை, இந்தியாவுக்கான குறிப்பான தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விலையை நிர்ணயித்தார். 36 ஜெட் விமானங்களுக்கு அவர் நிர்ணயித்த அடிப்படை விலை 5.2 பில்லியன் யூரோ.
ராஜீவ் வர்மா, இணைச் செயலாளர் மற்றும் கையக மேலாளர் (விமானப் பிரிவு) மற்றும் அனில் சுலே, நிதி மேலாளர் (விமானப் பிரிவு) ஆகிய குழு உறுப்பினர்கள் சிங் நிர்ணயித்த விலையை ஆதரித்தனர். சிங், வர்மா, சுலே ஆகிய மூவர்தான் குழுவில் விலை தொடர்பான நிர்ணயம் செய்யும் வேலையில் அதிக நிபுணத்துவம் பெற்றவர்கள்.
குழுவின் தலைவர் ராகேஷ்குமார் சிங் பதுவாரியா மற்றும் மூன்று இதர உறுப்பினர்களும் நிர்ணயிக்கப்ட்ட அடைப்படை விலைக்கு ஆட்சேபணை தெரிவித்தனர். குழுவிற்குள் ஒரு முடிவு எட்டப்படவில்லை. பேச்சு வார்த்தைகளின்போது குழுவிலிருந்த அனைவரும் பல்வேறு துறைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அவர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை; சில அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் தன்மை பற்றி உறுதிசெய்யவோ மறுக்கவோ முன்வரவில்லை.
விமானப் படைக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கும் பல கேள்விகளை தி கேரவான் முன்வைத்தது. அமைச்சகப் செய்தித் தொடர்பாளர் இது பற்றிக் கருத்து கூற மறுத்துவிட, பெயரை வெளியிட விரும்பாத மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் சிங் நிர்ணயித்துள்ள விலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று கூறினார். “விலை மிகவும் குறைவுதான்,” என்றார் அவர்.
பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் தலைமையிலான DAC அணுகப்பட்டது. குழுவின் ஆலோசனைகளை அபிவிருத்தி செய்வது பற்றியும் வணிக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கான அடிப்படை பற்றியும் யோசனை கேட்கப் பட்டது. அதிகாரியைப் பொறுத்தவரை 2008 விற்பனையின்போது இருந்ததை விட நல்ல நிபந்தனைகளைப் பெறுமாறு குழுவுக்கு DAC குறிப்பளித்தது. “நல்ல என்பதற்கு நல்ல விலை, நல்ல பராமரிப்புத் திட்டம், நல்ல PBL (இடம் சாரந்த செயல்திறன்), நல்ல நிபந்தனைகள்… என்று பொருள், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையில் காரண காரியம் சரியாக இல்லாததால் குழுவின் முயற்சி வீணாகிவிட்டது,” என்கிறார் அந்த அதிகாரி.
குழு விவரமான செய்முறையை மேற்கொண்டது என்ற அரசின் கூற்றை அவர் மறுக்கிறார். “விவரமாக எதுவும் செய்யப்படவில்லை – ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர், முக்கியமாக விலை பற்றி, இதை குழுவில் நிர்ணயம் செய்ய முடியவில்லை.
அடிப்படை விலை 5.2 பில்லியன் யூரோ என நிர்ணயம் செய்யப்பட்டபோது குழுவில் 4-3 என பிளவு ஏற்பட்டதால் பாரிக்கர் தலைமையிலான DAC விலை நிர்ணயம் செய்ய வேறொரு முறையை பரிந்துரைக்க நேரிட்டது, பின்னர் இதற்கு மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் தந்தது.
ஒப்பந்தம் கை நழுவிப் போகக் கூடாது என்பதே அடிப்படை விலையை திரும்பவும் சீரமைத்ததற்கான அடிப்படைக்காரணம். மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி கூறுவதுபோல் புதிய அடிப்படை விலையானது – 2.5 பில்லியன் யூரோ அதிகமானது – 2008, 2015 ஒப்பந்தங்களையும், இரண்டிலும் அம்சரீதியாகக் குறைவாக இருந்ததை வைத்தும், தள்ளுபடியை மனதில் கொண்டும்தான் கணக்கிடப்பட்டது. 2013இன் நெறிமுறைகளிலிருந்து இது வித்தியாசமாக இருந்தது: “கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களிலும், அடிப்படை விலை இருக்கும் சமயத்திலும் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட விலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது,” என இதில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை, அதனால் அது அடிப்படை விலையாகக் கருதப்பட முடியாது. இச்சூழலில் எம்.பி. சிங்கிற்கு இருந்த ஒரே ஒரு முறையான வழியானது புதிய அடிப்படை விலையை நிர்ணயிப்பது மட்டும்தான்.
இவற்றில் சில விவரங்கள் அரசு நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யும் முன்னரே ஊடகங்களில் வந்து விட்டன. ‘எகனாமிக் டைம்ஸ்’இல் செப்டம்பர் மாதம் வந்த ஒரு கட்டுரையில் இது பற்றி தகவல் வந்திருந்தது, ஆனால் புதிய விலை நிர்ணயம் செய்ய அரசு மேற்கொண்ட செய்முறை பற்றி இதில் எந்த செய்தியும் வரவில்லை. குழுவில் கருத்து வேறுபாடு என்பது நியாயமான ஒன்றுதான் என்றும் இந்த விவகாரத்தில் குழுவிற்குள் வேறுபாடுகள் களையப்பட முடியாததால் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிற்கு இது அனுப்பப்பட்டது. நிபுணத்துவம் பெற்றிருந்த அதிகாரிகள் நிர்ணயித்த அடிப்படை விலையை நிர்ணயிக்கும் செய்முறையை மாற்றி புது விலையை நிர்ணயிக்க அமைச்சரவைக் குழுவிற்கே அதிகாரமில்லை.
ஹர்தோஷ் சிங் பல்
(ஹர்தோஷ் சிங் பல் தி கேரவான் பொலிடிகல் எடிட்டர்; ‘Waters Close Over Us: A Journey Along the Narmada’ புத்தகத்தின் ஆசிரியர்.)
நன்றி:
https://caravanmagazine.in/GOVERNMENT/RAFALE-MODI-APPROVED-PRICE-BILLIONS-HIGHER-BENCHMARK