ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடைபெறவிருந்த காலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வந்த ஒரு கேலிச்சித்திரம், ஊழலுக்கு எதிரான நரேந்திர மோடியின் நிலைப்பாட்டைப் படம்பிடித்துக் காட்டியது: ராகுல் காந்திக்கு வரும் கனவில், மூழ்கிக்கொண்டிருக்கும் வசுந்தர ராஜேவைக் காப்பாற்ற, பிரதமர் அகஸ்டா ஹெலிகாப்டரிலிருந்து என்ற லைஃப்லைனை வீசுகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, நிலவிய ஒரு நாடக சூழலில், அகஸ்டா “இடைத்தரகர்” க்ரிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அமீரகத்தில் இருந்து வெளியில் அனுப்பப்பட்டதைப் பற்றிய பெரும் பரபரப்பு நம் தொலைக்காட்சி அலுவலகங்களில் இருந்தது; போராளிகளான நம் செய்தியாளர்கள் ஒரே குரலில், இது நரேந்திர மோடிக்குச் சாதகத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர். மேலும், அது காந்தி குடும்பத்துக்கு மரண அடி என்றும், அவர்கள் ஒளிந்துகொள்ள இடம் தேட வேண்டும் என்றும் கூறினர்.
எதிர்பார்த்தபடியே, பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸைச் சீண்டினார், அதாவது அவர்களுடைய ரகசியக் கூட்டாளி சிக்கிவிட்டார் என்றும், காந்தி குடும்பத்தின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றும் தெரிவித்தார். விவேகமுள்ள மக்கள், கடைசி நிமிடத் தந்திரமாக இந்த மைக்கேல் விவகாரம் இருக்குமோ என்று சிந்தித்தனர்.
மேலும், சட்டசபை வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கை விசாரித்ததில் நம் அலுவலகங்களில் உள்ள பக்தர்களுக்குக் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டது. அந்தத் தீர்ப்பு உடனடியாக “ModigetsMallaya” என்ற ஹேஷ்டேக்குகளாக உருமாறியது. இந்தச் சம்பவம் ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டதாகக் கொண்டாடப்பட்டது. நம்முடைய காவலன் நடையில் புதிய கம்பீரம் இருப்பதாகத் தெரிவித்தனர். ஊழலை எதிர்க்கும் வைராக்கியத்தைக் கொண்ட போராளிகளாக ஆளும் குழுவிற்கும், பொதுநலக் காவலர்களாகத் தங்களை தாங்களே நினைத்துக்கொள்பவர்களுக்கும், இது ஒரு நேர்த்தியான ஜுகல்பந்தியாக மாறிவிட்டது.
ஆனால், இரு கூட்டத்தினருமே பொதுமக்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். வசுந்தர ராஜே காப்பாற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக நிகழ்ந்த தவறான ஆட்சிமுறை, ஆணவம், சிறிய அளவிலான ஊழல்கள் ஆகியவை காரணமாக ராஜஸ்தானில் பாஜக வெளியேற்றப்பட்டது- மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரைப் போலவே.
நாம் தேடும் ஊழலற்ற பொது வாழ்க்கையை வழங்கும் நம்பகத்தன்மை எந்தவொரு ஆளும் அரசியல்வாதியிடமுமே இருப்பதில்லை என்பது நம் ஜனநாயகத்தில் நிலவும் மிகப் பெரிய முரண்களில் ஒன்று. பல குஜராத் வாழ் “தொழில்முனைவோர்”களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போதிலும், நரேந்திர மோடியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. மோடியை எந்த அளவிற்கு வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சென்றார்கள் என்றால், போலியான வாக்குமூலங்களையும், பக்தியையும் தாண்டி வாக்காளர்கள் தங்கள் பார்வையைச் செலுத்துவதற்கே சில காலம் தேவைப்பட்டது. ஊழலுக்கு எதிரானது ஒரு தார்மிக யுத்தம். அது அரசியல்வாதிகளின் அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டது. அதிகாரத்திற்காக இடைவிடாது தீவிரமாகச் செயலாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குகிறார் மோடி.
தேர்தல் காலம் தார்மிக நிலைப்பாட்டை எடுப்பதற்கான சரியான நேரம் அல்ல. ஆனாலும், தேர்தல் சமயத்தில்தான், அரசியல் பரிமாற்றங்கள் வெளிப்படுகின்றன; இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள வாக்காளர்களுக்கு, ஆளும் கட்சியினர் இறைக்கும் பணத்தைப் பற்றித் தெரிந்தது. பாஜக, தன்னுடைய எதிர்ப்பாளர்கள் அனைவரும் செலவழிக்கும் பணத்தின் மொத்த மதிப்பைவிட அதிகமாகச் செலவழித்தது, காரணம், கார்ப்பரேட் துறையில் இருந்து அதிகளவிலான பணத்தைப் பெற்றது இக்கட்சி (தேர்தல் பத்திரங்கள் வாயிலாக).
கடந்த காலத்தில், எப்போதெல்லாம் நடப்பில் அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முயன்ற போதெல்லாம், பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தனர். வி.பி.சிங் சிறிது காலம் வசீகரித்தாலும், மற்ற அரசியல்வாதிகளைப் போலவே அவரும் மாறிவிட்டார். அதன் பிறகு, சிபிஐ ஹவாலா வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்களைச் சிக்க வைத்தபோது, பி.வி.நரசிம்ம ராவின் ஆட்கள், பொதுவாழ்வில் மிகவும் சுத்தமான நபர் அவர் என்றனர்; ஆனால், வாக்காளர்கள் அதை ஏற்கவில்லை. 1996ஆம் ஆண்டில், ராவின் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து கீழிறக்கப்பட்டது.
மற்றொரு புறம், அரசியலுக்கு வெளியே இருப்போர் ஊழலுக்கு எதிரான போர்களில் நம்பகத்தன்மையைப் பெற்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜே.பி.), ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நம்பகமான நபர் என்னும் பெயரைப் பெற்றார்; அவர் விடுதலைப் போராட்ட வீரர், ஜவஹர்லால் நேருவின் சமகாலத்தவர், அரசியலில் ஈடுபாடில்லாத நபர் என்ற பெயரைப் பெற்றவர். அதனால்தான் இந்திரா காந்தி ஆட்சியின்போது ஊழலுக்கு எதிரான அவரது குரல் மரியாதையுடன் கேட்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளை காதி குர்த்தியும், வேஷ்டியும், காந்தித் தொப்பியும் அணிந்த அண்ணா ஹசாரே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான “ஊழல் எதிர்ப்புப் போராளி”க்கான சின்னமாக விளங்கினார். நம் தொலைக்காட்சி யுகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கினார். ஒன்றிணைந்த வலதுசாரி இயக்கத்தினர் நிர்வாக ஊழியர்களை வழங்கினார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி வழங்கின. பொதுச் சமூகம் அவருக்குத் தேவையான ஆர்வத்தையும் சீற்றத்தையும் வழங்கியது. ஒரு முழுமையான சட்டபூர்வ நெருக்கடி உருவாக்கப்பட்டது. கறுப்புப் பணத்திற்கு எதிரான அந்த “இயக்கத்தில்” நன்மை அடைந்த ஒரே நபர், நரேந்திர மோடி.
அரசியலில் நான்கு ஆண்டுகள் என்பது மிகவும் அதிகமானது, குறிப்பாக இந்தத் தகவல் பெருவெள்ளத்தின் காலத்தில். வாக்காளர்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஊழலைக் காணவும் உணரவும் சுவாசிக்கவும் முடிகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் ஆடம்பரமான வாக்குறுதிகளை அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை. முரணாக, உச்சபட்ச ஏமாற்று வாக்குறுதியான – ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் – என்பது ‘தேர்தல் நேர உளறலாக’ ஒதுக்கப்பட்டது. ஆனாலும், பிரதமர் தன்னை ஊழலுக்கு எதிரான போராளியாக முன்னிறுத்தினார். அதற்கு நம்முடைய தொலைக்காட்சி நிறுவனங்கள் துணை நின்றன. ஆனால், நம் நிகழ்கால இந்தியாவில், தம்முடைய சுற்றுப்புறத்திலேயே எப்படிப் பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினரும் கறுப்புப் பணத்தைப் பணமதிப்பிழப்பு சமயத்தில் மாற்றினார்கள் என்பது குறித்த கதைகளைக் கோடிக்கணக்கான மக்கள் கேட்டனர். துரதிர்ஷ்டவசமாக, பிரதமருக்கும் மக்களுக்கும் இடையேயான தூரம் அதிகரித்தபோது, தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் அவரை நோக்கி ஆரவாரம் செய்து ஆதரித்தனர்.
எப்படி ஒரு சாய்வாலா, “ஏழைத்தாயின் மகன்”, இந்த இடத்திற்கு வர முடிந்தது என்னும் கதையை மோடி பிரச்சாரத்தின்போதும் சொல்லிக்கொண்டார். இந்தி செய்தித்தாள்களில் அவற்றை வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், வாக்காளர்கள் செய்தியை அங்கீகரிக்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் காட்சிகள் அனைத்துமே அரசியலுக்காகத்தான் என்றே பார்க்கப்படுகிறது.
பிரதமர், காந்தி குடும்பத்தினருக்கு எதிரான தன்னுடைய சொல்லாட்சிகளில் அதிகம் ஈர்க்கப்பட்டிருப்பதால், நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதிலிருந்து தாங்கள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளவர்களும் உணர்கிறார்கள். பிரதமரின் திருப்திக்காக விதிகளையும் சில தகவல்களையும் வளைக்கவும் மறைக்கவும் அதிகார வர்க்கத்தின் மீது அசாதாரணமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக சட்டத்தை அமலாக்குவதற்கான அமைப்புகள் மீது. இந்தத் தவறான அறத்தைத் தேடிச் சென்ற பயணத்தில், பிரதமர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அந்த இழப்பு, அடுத்த மக்களவைத் தேர்தலில் நன்கு உணரப்படும்.
ஹரீஷ் காரே
நன்றி: https://thewire.in/politics/narendra-modi-raazdar-moment-has-passed