மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை மோடி அரசு வாங்குவது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.
சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற சீராய்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், முடிவு எடுக்கப்பட்ட விதத்தை சந்தேகிப்பதற்கான சூழல் எழவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சுருக்கமாகச் சொன்னால் இது, முரண்களின் தொகுப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பிழையான தன்மையை உணர்த்துகிறது.
உதாரணத்திற்கு, விசாரணைக்கு உத்தரவிடும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணமாக,“இந்திய அரசியல் சட்டத்தின் 32ஆவது ஷரத்தின் கீழான அதிகாரத்தின் நோக்கில் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இந்த ஷரத்தே கையாளப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில், கொள்முதல் செயல்முறை மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆஃப்செட் பங்குதாரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது உள்பட இரண்டு விஷயங்களில் குறிப்பிட்ட மதிப்பீடுகளை வழங்கியுள்ளது. செயல்முறையைப் பொருத்தவரை, சிறிய பிறழ்வுகள் இருந்தாலும், ஆழமான விசாரணைக்குத் தேவையான அளவு இல்லை எனக் கருதும் முடிவை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்தின் இந்திய ஆஃப்செட் பங்குதாரராக டசால்ட் ஏவியேஷன், ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தத்தில் தலையிடவில்லை என அரசு கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
விலை விஷயத்தில் மட்டுமே நீதிமன்றம் முந்தைய ஒப்பந்தத்தைவிட, 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அதிக விலை தரப்பட்டுள்ளதா அல்லது சிறந்த விலை தரப்பட்டுள்ளதா எனும் மோடி அரசு மற்றும் எதிர்கட்சிகளின் விவாதத்தில் நுழைய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. “தற்போதைய பிரச்சினை போன்ற விஷயங்களில் விலை ஒப்பீட்டை மேற்கொள்வது நீதிமன்றத்தின் வேலை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற நான்கு மணிநேர விசாரணையில் தெரிவிக்கப்பட்ட வாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், பல விவரங்கள் மற்றும் வாதங்களை மேற்கொண்டு கேள்வி கேட்காமல், அப்படியே எற்றுக்கொண்டுள்ளது அல்லது நிராகரித்துள்ளது அல்லது கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதை இறுதித் தீர்ப்பு உணர்த்துகிறது.
செயல்முறை, விலை மற்றும் ஆஃப்செட் ஆகிய அம்சங்களில் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள இடைவெளிகளையும் அதன் விளைவாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாத விஷயங்களையும் தி வயர் சுட்டிக்காட்டுகிறது.
1) ஒப்பீடு விலை சர்ச்சை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏன்?
36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பீடு விலை கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட விதம் தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக நீடித்துவருகிறது.
குறிப்பாக, பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகளின் ஆட்சேபணை மீறப்பட்டது தொடர்பாக விவாதம் அமைந்துள்ளது. மேலும், அதிக ஒப்பீடு விலைக்கான சூத்திரத்தைத் தேர்வு செய்யும் முடிவு, பாதுகாப்பு அமைச்சரகம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரால் எடுக்கப்படாமல், பாதுகாப்புக்கான கேபினெட் குழுவால் எடுக்கப்பட்டது.
எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழிடம் கடந்த மாதம் பேசிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சுதான்ஷு மொகந்தி, இந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்ட விதம் மிகவும் விநோதமாக இருக்கிறது எனக் கூறினார்.
“மேலும் பொதுவெளியில் இருக்கும் தகவலின்படி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அனைத்துப் பாதுகாப்பு அமைச்சகத் தலைமை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள பாதுகாப்புக் கொள்முதல் குழு, இதைப் பரிந்துரைக்காமல், பாதுகாப்பிற்கான கேபினெட் குழு இது குறித்து முடிவெடுக்க வைத்தது. ஏன்? இதை ஆராய்ந்தாக வேண்டும். எனக்கு நினைவு உள்ளவரை, பாதுகாப்பு மூலதனக் கொள்முதலில் இது போன்ற ஒரு விஷயம் நிகழ்ந்ததில்லை- ஏனெனில் இது மிகவும் விநோதமானது” என்று அவர் கூறினார்.
இந்த அம்சம் தொழில்நுட்ப நோக்கில் ரஃபேல் ஒப்பந்தத்தின் விலை பிரிவின் கீழ் வந்தாலும், உச்ச நீதிமன்றம் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாதது, கொள்முதல் செயல்முறையில் இவை சிறிய பிறழ்வுகள் அல்ல என்பதை உணர்த்துகிறது.
இதை நீதிமன்றம் அலட்சியம் செய்தது புதிராக இருக்கிறது.
2) 126ஆக இருந்த ஒப்பந்தம் 36ஆக மாறியது எப்படி?
“126க்கு பதிலாக 36 (விமானங்கள்) வாங்கியது தொடர்பான முடிவின் சரியான தன்மை குறித்து இங்கு அமர்ந்துகொண்டு எங்களால் தீர்ப்பு அளிக்க முடியாது” என உச்ச நீதிமன்றம் கூறியது. இதன் மூலம், ஐ.மு.கூ. காலத்தில் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் கைவிடப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகள் பின்பற்றப்படாமல், 36 விமானங்களுக்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்ட வேகம் மற்றும் விதம் தொடர்பான உண்மையான பிரச்சினையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டது.
உச்ச நீதிமன்றம் மோடி அரசு கொடுத்த காலவரிசையை ஏற்றுக்கொண்டுள்ளது: 2015 மார்ச்சில் 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்வதற்கான செயல்முறை துவக்கப்பட்டு, சில வாரங்கள் கழித்து ஏப்ரலில் 36 விமானங்கள் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. எழுப்பபடும் மற்ற கேள்விகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இந்தக் கேள்விகள் சில: 2015 மார்ச்சில் இந்த விலக்கலுக்காக மேற்கொள்ளப்பட்ட காகிதப் பணிகள் என்ன? இது தொடர்பான முறையான தகவல்களை அரசால் தர முடியாதது ஏன்? இந்தச் செயல்முறை குறித்துப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரும் வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் ஏதும் அறியாமல் இருந்தது ஏன்? ரஃபேல் ஒப்பந்த விலக்கல் செயல்முறை துவங்கப்பட்டிருந்த நிலையில், 2015 மார்ச் 28 ல், டசால்ட் சி.இ.ஓ. 126 விமானங்கள் ஒப்பந்தத்தில் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது எனக் கூறியது ஏன்? ஐ.ஜி.ஏ. கையெழுத்தவாதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயல்முறை என்ன? யாருடன் ஆலோசனை நடத்தப்பட்டது?
இந்தக் கேள்விகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது அல்லது நீதிமன்ற விசாரணையின்போது இந்தக் கேள்விகளுக்கு பதில் பெற முயற்சிக்காதது மூலம், கொள்முதல் செயல்முறையில் சந்தேகிக்க எதுவுமில்லை எனும் உச்ச நீதிமன்ற அனுமானத்தில் முக்கிய ஓட்டை இருக்கிறது..
வழக்கறிஞரும் செயற்பாட்டாலருமான பிரஷாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சிபிஐயில் அளித்த புகாரில் சுட்டிக்காட்டியபடி, 36 விமானங்களை வாங்குவது என்பது புதிய ஒப்பந்தமாகும். எனவே 36 விமானங்கள் தேவை எனும் விமானப் படையின் கோரிக்கையில் துவங்கி பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். இவை கைவிடப்படதாகத் தெரிகிறது.
3) இறையாண்மை வாக்குறுதி இல்லாதது ஏன் அலட்சியம் செய்யப்பட்டது?
பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம், ராணுவ உபகரணங்களை விற்கும் அரசு மீது வைக்கப்பட்டும் சட்டப் பொறுப்பான இறையாண்மை வாக்குறுதி இல்லாமல் அமைந்துள்ளது என்பதைக் கடந்த மாதம் தி வயர் அம்பலமாக்கியது.
இறையாண்மை வாக்குறுதி என்பது, அரசுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் உறுதியாகும். இந்த வாக்குறுதி இல்லாதது குறித்து நீதிமன்ற விசாரணையில் விவாதிக்கப்பட்டு, தீர்ப்பில் மனுதாரர் வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இதன் முக்கியத்துவம் அல்லது விளைவுகள் குறித்து தீர்ப்பில் ஆய்வு செய்யப்படவில்லை. மோடி அரசால் ரஃபேல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட விதம் தொடர்பாக, இதன் பொருள் என்ன என விவாதிக்கப்படவில்லை.
பிரான்சால் லெட்டர் ஆப் கம்ஃபர்ட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதை முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரி சுதான்ஷு மொகந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தார்மிக ரீதியான உறுதியே தவிர சட்ட ரீதியான உறுதி அல்ல.
“[இறையாண்மை வாக்குறுதி இல்லாத நிலையில்] இரு தரப்பில் யார் வேண்டுமானால் வாக்குறுதியை முறித்துக்கொண்டு விலகிச் செல்லாலம். இதனால் நடவடிக்கை இருக்காது என்றாலும், தார்மிக அம்சங்கள் இருக்கவே செய்யும். ஆனால், பொது நிதியைக் கொண்டு நாட்டிற்குத் தேவையானவற்றை வாங்கும்போது, இது தேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்” என அவர் கூறியிருந்தார்.
பிரான்சுடன் பிரச்சினை ஏற்படும் சூழலில், மத்தியஸ்திற்கான இடமாக இந்தியா இல்லாதது குறித்த கவலைகளையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
4) விலை அம்சத்தை விவாதிக்காத நிலையில் அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை வலியுறுத்துவது ஏன்?
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோது, விலை விஷயம் அல்லது கருவியின் தொழில்நுட்பப் பொருத்தம் குறித்து ஆய்வு செய்யாது என்று தெளிவாகக் குறிப்பிட்டது.
ஆனால், விலை விஷயம் மற்றும் மற்ற சாதகங்கள் குறித்த தகவலை மூடப்பட்ட உறையில் வைத்துச் சமர்பிக்குமாறு மோடி அரசுக்கு உத்தரவிட்டது.
இங்குதான் குழப்பம் ஏற்படுகிறது. விலை விஷயம் மற்றும் தனிப்பட்ட விலை தொடர்பான விஷயங்களை கவனமாக ஆய்வு செய்ததாக தெரிவித்த நீதிமன்றம், பின்னர், “36 விமானங்களை வாங்குவதில் சில வர்த்தக சாதகம் உள்ளது மற்றும் ஆயுத பேக்கேஜை பொருத்தவரை சில மேம்பட்ட அம்சங்கள் இருக்கின்றன” என அரசு குறிப்பிட்டதாக மட்டும் தெரிவித்தது.
பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி தெரிவிப்பது போல இது முற்றிலும் உண்மையில்லை. முதல் ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும்போது, மோடி அரசின் 36 விமான ஒப்பந்தம், 126 விமானங்களுக்காக டசால்ட் 2012இல் சமர்பித்த கோரிக்கையைவிட, விமானம் ஒன்றுக்கு 40 சதவீதம் அதிக விலை கொண்டதாக இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அரசின் பதிலை அப்படியே தெரிவித்துவிட்டு தனது ஆரம்ப நிலை வாதத்திற்குச் சென்றுவிட்டது:
“இப்போதுள்ளது போன்ற விவகாரங்களில் விலை ஒப்பீட்டை மேற்கொள்வது நீதிமன்றத்தின் வேலை இல்லை. இந்த அம்சம் ரகசியமான தகவலாக வைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து மேற்கொண்டு எதுவும் கூறவில்லை”.
5) ஹாலண்டேவின் சர்ச்சைக்குறிய அறிக்கை அதிகம் கவனிக்கப்படாதது ஏன்?
ஆஃப்செட் பாட்னராக இந்தியாவால், பிரான்ஸ் மீது அனில் அம்பானி நிர்பந்திக்கப்பட்டது தொடர்பான பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஹாலண்டே கருத்தின் முக்கியத்துவம் அதன் உள்ளடக்கத்தில் இல்லை, இந்த கருத்து உண்டாக்கிய சர்ச்சையில் இருக்கிறது.
(ஹாலண்டே தெரிவித்த கருத்துக்களை ஒரு சில நாளிதழ்கள் வெளியிட்ட பிறகே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சந்தேகம் எழுந்ததாகத் தீர்ப்பில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்செட் பங்குதாரராக அனில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது தொடர்பாக தீர்ப்பில், “இந்த விஷயத்தில் பிரான்ஸ் அரசுக்கு இந்திய அரசு எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை எனும் முன்னாள் பிரான்ஸ் அதிபரின் நேர்காணல் தொடர்பாக எல்லா தரப்பிலும் உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது”.
இந்தக் கருத்தில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன.
முதலில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்த கேள்விகள் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட உடனே எழுப்பட்டு, ஒராண்டு கழித்து வலுப்பெற்றது. வேண்டபட்ட முதலீட்டாளர்களுக்குச் சார்பு நிலை இருப்பதாகக் கூறிய ஹாலண்டேவின் கருத்து ஏற்கனவே இருந்த கவலைகளை அதிகமாக்கியதே தவிர அந்தக் கவலைகளை இந்தக் கருத்து உண்டாக்கவில்லை.
இரண்டாவதாக, தி வயர் மற்றும் பிற இதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல, ஹாலண்டே கருத்து தொடர்பாக எல்லாத் தரப்புகளிலிருந்தும் உறுதியான மறுப்பு எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள விதிகள் என்ன எனச் சுட்டிக்காட்டிய மறுப்புதான் தெரிவிக்கப்பட்டதே தவிர முன்னாள் அதிபர் கூறியதற்கான திட்டவட்ட மறுப்பு அல்லது பதிலடியாக அமையவில்லை.
உச்ச நீதிமன்றம் பலவீனமான மறுப்புகளை ஏற்றுக்கொண்டு, ஹாலண்டேவின் பரபரப்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான சந்தேகம் நீக்கப்பட்டு விட்டதாக நம்பியுள்ளது.
6) அம்பானி சகோதரர்களுக்குள் குழப்பம் ஏன்?
கடந்த சில மாதங்களாக, பாஜக, டசால்ட் ஏவியேஷன் ஆகிய இரு தரப்பினரும் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுக்கு விநோதமான விளக்கத்தை அளித்துவருகின்றனர்.
36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதர்கான ஒப்பந்தத்திற்கு ஆஃப்செட் பாட்னராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்க்சரைச் தேர்வு செய்ததன் மூலம், 2012இல் டசால்ட் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீடன் கொண்டிருந்த உறவைத் தொடர்வதாக பாஜக தலைவர்களும் டசால்ட் சி.இ.ஓ. எரிக் டிரேப்பியரும் கூறிவருகின்றனர். இதன் பொருள் என்னவெனில், இந்த கூட்டு ஐ.மு.கூ. அரசு காலத்தில் எற்படுத்தப்பட்டது என்பதாகும். இது பாஜகவுக்குத் தகுந்த காரணமாக அமைகிறது.
இது உண்மையிலிருந்து வெகு தூரம் விலகிய கூற்றாகும். தி வயர் சுட்டிக்காட்டியது போல அம்பானி சகோதரர்களின் வர்த்தகம் தனித்தனியானது. 2012இல் முகேஷ் அம்பானி நிறுவனத்துடன் டசால்ட் கொண்டிருந்த கூட்டுக்கும், 2015இல் டசால்ட்டுக்கும் அனில் அம்பானி நிறுவனத்திற்கான கூட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதேபோல, உச்ச நீதிமன்றத்திற்கும் குழப்பம் உண்டானது. தீர்ப்பின் 25ஆவது பக்கத்தில் 2012இல் டசால்ட் 126 விமான பேரத்திற்குக் குறைந்த தொகை தெரிவித்த நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீசுடன் கூட்டு வைத்துக்கொண்டதாக சரியாக குறிப்பிட்டுள்ளது. அனில் அம்பானியில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை வேறு வர்த்தக நிறுவனம் எனக் குறிப்பிடுவதன் மூலம் இதை வேறுபடுத்தியும் காட்டியுள்ளது.
ஆனால், அடுத்த பக்கத்திலேயே, டசால்ட் அறிக்கை ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோ ஸ்டக்சர் நிறுவனம் அண்மையில் ஏற்படுத்தப்பட்டாலும், ரிலையன்ஸ் தாய் நிறுவனம் மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே 2012 முதல் ஏற்பாடு இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் தவறானவை. ரிலையன்ஸ் ஏரோஸ்டக்சரின் தாய் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் அல்ல. அது 2012க்குப் பிறகுதான் ஏற்படுத்தப்பட்டது. அதன் தாய் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சராகும்.
அடிப்படைத் தகவல்களை உச்ச நீதிமன்றம் அலட்சியம் செய்வது, குழம்புவது, ஒன்றுடன் ஒன்று கலப்பது ஆஇயவை கவலை அளிப்பதாகும். டசால்ட் மற்றும் பாஜக தலைவர்கள் முன்வைக்கும் தவறான தகவல் சார்ந்த விளக்கத்தைப் பகுதியளவு ஏற்பதன் மூலம், யாருக்கும் வர்த்தகச் சலுகை காட்டப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.
7) எச்ஏஎல் கருத்துகள் நிராகரிப்பு ஏன்?
சிறிய அளவில் 36 விமானங்களை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் முலம் விரைவாக வாங்குவதற்கான தேவை என மோடி அரசு கூறும் ஒரு காரணம், 126 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தடையாக இருந்தது என்பதாகும்.
அதிக வேலை நேரம், ஒப்பந்த ஷரத்துகள், தாமதம் என எச்ஏஎல் நிறுவனம் கொண்டிருந்த பிரச்சினைகளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டை காரணமாகவே, ஒப்பந்த விலக்கல் 2015 மார்ச்சில் துவங்கியதாகக் குறிப்பிடப்பட்டு்ள்ளது.
“உண்மை என்னவெனில் ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது மட்டும் அல்ல, பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்து, ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இரண்டு அடுக்குப் பிரச்சினை உள்ளது. முதலில், டசால்ட் வெளியிட்ட அறிக்கை, எச்ஏஎல் நிறுவனத்துடனான பிரச்சினை பெருமளவு தீர்வு காணப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தது. இரண்டாவதாக, எச்ஏஎல் முன்னாள் தலைவர் டி.சுவர்ண ராஜு, 2018 செப்டம்பரில் தங்கள் நிறுவனத்துக்கும் டசால்ட் நிறுவனத்துக்குமிடையே பணிப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் குறிப்பிட்டார்.
“டசாட்ல் மற்றும் எச்ஏஎல், பரஸ்பரப் பணிப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தகவல்களைப் பொது வெளியில் வைக்குமாறு அரசிடம் ஏன் கேட்கக் கூடாது? கோப்புகள் எல்லாவற்றையும் சொல்லிவிடும். நாங்கள் விமானங்களை தயாரித்தால், அதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன்” என அவர் இந்துஸ்தான் டைம்ஸ் நேர்காணலில் குறிப்பிட்டார். விமானத்திற்கு யார் பொறுப்பேற்பது எனும் விவாதமே தடையாக இருந்தது எனும் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக இதைக் கூறினார்.
பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது எனக் குறிப்பிடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இந்த அறிக்கை அமைகிறது.
இது பெரிய கேள்வியை எழுப்புகிறது. ரஃபேல் விமானங்கள் உடனடித் தேவை எனும் மோடி அரசின் கூற்றைச் சரி பார்ப்பதற்காக விமானப் படை மூத்த அதிகாரிகளை ஆஜாராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் 2015இல் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுவிட்டதா என பதில் அளிக்க ராஜு அல்லது எச்ஏஎல்.லின் முன்னாள் அதிகாரிகள் யாரும் ஏன் அழைக்கப்படவில்லை? மோடி அரசின் ரஃபேல் காலவரிசையைச் சரிபார்க்க ராஜு அல்லது மற்ற அதிகாரிகளின் பதில் உதவியிருக்கும்.
8) ரஃபேல் விமானங்களை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் வாங்குவதற்கான முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டவனா?
2013ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புக் கொள்முதல் நெறிமுறைகளின்படி, அரசு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் (ஐஜிஏ) மூலம் மூன்று நிபந்தனைகளின் கீழ் வாங்க அனுமதிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தெரிவித்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
(அ) கூட்டு சர்வதேச ஒத்திகைகளில் பங்கேற்கும்போது, நட்பு அயல்நாட்டிடம் இருந்து தொழில்நுட்பம், திறன்கள் ஆயுதப் படையால் கண்டறியப்படுகிறது.
(ஆ) மிகவும் குறைந்த செலவில் வாங்க அல்லது மாற்றம் வாயிலாக அதிக மதிப்பு கொண்ட ஆயுத அமைப்பு அல்லது தளம் நட்பான அயல்நாட்டிலிருந்து பெறக்கூடியதாக இருக்கும்போது, அல்லது
(இ) மூல ஆயுத அமைப்பைத் தயாரிக்கும் நாடு அதன் விற்பனை மீது கட்டுப்பாடு விதித்து, அதன் காரணமாக, ‘செலவு இல்லை, வாங்கும் உத்தரவாதமும் இல்லை’ என்னும் அடிபப்டையில் வாங்க முடியாது எனும் நிலையில், குறிப்பிட்ட நவீன ஆயுதத்தை வாங்குவதற்கான தேவை இருக்கும்போது.
இந்த நிபந்தனைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு, நீதிமன்றம் சிறிதளவு விலகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.
“ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்துள்ளோம். மூத்த விமானப் படை அதிகாரிகளிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொள்முதல் முறை மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இந்தச் செயல்முறையை சந்தேகிப்பதற்கான சூழல் ஏற்படவில்லை என நம்புகிறோம் மற்றும் சிறிய அளவிலான விலகல்கள் நிகழ்ந்திருந்தாலும், அவ ஒப்பந்ததை ரத்து செய்ய அல்லது நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடவோ உகந்தவை அல்ல.”
இப்படிக் கூறிய பிறகு, நீதிமன்றம் தனது வாதத்தைப் பலவீனமாக்கிக்கொள்ளும் வகையில் – அதாவது ராணுவத் தேவை எனும் அடிப்படையில் எல்லாத் தர்க்கங்களும் அமைந்த நிலையில்- இவ்வாறு கூறுகிறது;: “கூட்டு ஒத்திகை நடைபெற்றது என்றும் நம் நாட்டிற்கு நிதி ரீதியான சாதகம் இருக்கிறது என்றும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது”. ராணுவத் தேவைதான் அனைத்துக்கும் அடிப்படை என்னும் நீதிமன்ரத்தின் தர்க்கத்தையே இது மறுக்கிறது.
ஐஜிஏவுக்கான முன்நிபந்தனை இல்லாதது சிறிய விலகல் என தெரிவித்த பிறகு, பல ஆண்டுகளாக விமானப் படையின் பரிசீலனையில் இருக்கும் விமானத்தை ஐஏஎப் வாங்குவதை நியாப்படுத்தக் கூட்டு ஒத்திகை எனும் பலவீனமான காரணத்தைப் பற்றிக்கொள்வதன் மூலம், நீதிபதிகள் தங்கள் தர்க்கத்தைத் தாங்களே முழுவதும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
9) ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை விஷயத்தில் நீதிமன்றம் தவறாகப் புரிந்துகொண்டதா?
உச்ச நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி தணிக்கை தொடர்பான ஒரு பத்தி கவனத்தை ஈர்த்தது.
36 விமானங்களுக்கான விலை அம்சம் தொடர்பான பரிசீலனையில் ஒரு கட்டத்தில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
விலை விவரம் சிஏஜியிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை பொதுக் கணக்கு குழுவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நாடாளுமன்றம் முன் வைக்கப்பட்டு, பொதுவெளிக்கு வந்துள்ளது (பக்கம் 25).
இதில் ஒரே பிரச்சினைதான் உள்ளது. எந்த சிஏஜி அறிகையும் பொதுவெளியில் இல்லை. அது பொதுக் கணக்குக் குழுவால் ஆய்வு செய்யப்படவும் இல்லை.
பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களான பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா ஆகியோரை தி வயர் தொடர்புகொண்டது. இருவருமே அறிக்கை நாடாளுமன்றக் குழுவிடம் பகிரப்படவில்லை என்றனர்.
“நான் குழுவில் இணைந்த ஓராண்டு காலத்தில், சிஏஜி அறிக்கை என்னிடம் காண்பிக்கப்படவில்லை” என கவுடா தெரிவித்தார்.
இந்த அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆனதா எனத் தெரியவில்லை.
மனுதாரர் பிரஷாந்த் பூஷண் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தகவல்கள் சரியானவையும் அல்ல, அவை வெளியிடப்படவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
“இந்தத் தகவல் சரியில்லாத அறிக்கை, அரசு நீதிமன்றத்துடன் ஏதேனும் ஒரு வழியில் கொண்ட தொடர்பு மூலம் இருக்கலாம். (பதிவு இல்லை, எங்களுக்குத் தெரியாது). 3 அம்சங்களின் கீழ் பிழையான இந்தத் தகவல் தொடர்பை நீதிமன்றம் சார்ந்திருந்தது என்பது, மூடப்பட்ட உறையில் சமர்பிக்கப்படும் அறிக்கையை அடிப்படையாகக் கொள்வது, அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பது ஆகியவை எத்தனை அபாயமானவை என உணர்த்துகிறது” என பூஷண் தெரிவித்திருந்தார்.
தேசியக் கணக்குத் தணிக்கையாளர் தற்போது ரஃபேல் விலையை ஆய்வு செய்துவருகிறார். பணமதிப்பு நீக்கம் மற்றும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கையை வேண்டுமென்றே தாமதம் செய்வதாகக் கடந்த மாதம் 60 ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிஏஜிக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
நன்றி: தி வயர் (https://thewire.in/government/eight-questions-on-rafale-the-supreme-court-verdict-leaves-unanswered)