ஆனால், ஒரு பத்திரிக்கை, அதுவும், லட்சக்கணக்கான வாசகர்களால் நம்பப்படக் கூடிய ஒரு பத்திரிக்கை, ஒரு இமாலய ஊழலைப் பற்றி மௌனமாக இருப்பது ரசிக்கத் தக்கதல்ல…. அதுவும், அந்த ஊழலை நியாயப் படுத்தி எழுதினால் அது அயோக்கியத்தனம். கண்டிக்கத் தக்க ஒரு செயல்.
இப்படிப் பட்ட கண்டிக்கத் தக்க செயலைச் செய்தது யார் ? ஜுனியர் விகடன் தான். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாசகர்ளைக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கை ஜுனியர் விகடன். ஏற்கனவே, காஞ்சிபுரம் தேவநாதன் பற்றிய செய்திகளை அட்டைப் படச் செய்தியாக வெளியிட்ட போதே, ஜுனியர் விகடனை சவுக்கு கண்டித்திருக்கிறது. அதற்குப் பிறகு பல நாட்கள், ஜுனியர் விகடன், செக்ஸை வைத்து வியாபாரம் செய்வதை தவிர்த்திருக்கிறது. இது மிக மிக வரவேற்கத் தகுந்தது. ஜுனியர் விகடன் இதழுக்கு, ஆ.ராசா, நோட்டீஸ் அனுப்பி, தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள, திமுக நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதிகளின் உதவியோடு தடையுத்தரவு பெற்றார்.
அதன் பிறகு, ராசாவுக்கு எதிரான செய்திகளை நாடே பேசத் தொடங்கியதும், ஜுனியர் விகடன் களத்தில் இறங்கி, ராசாவை உரி உரி என உரித்தது. ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து, தனிப் புத்தகமாகவே வெளிக் கொண்டுவந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்போதே ஊடகத் துறையில் எழுந்த ஒரு பேச்சு, ராசாவைப் பற்றி ஜுனியர் விகடன் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவதற்கு பின்னணியில் கேடி சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பது. ஆனால், அந்தச் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், அரசல் புரசலாக அந்தச் செய்தி பேசப்பட்டு வந்தது.
எல்லா தொழிலிலும், லாபம் மட்டுமே நோக்கம் என்றாலும், விகடன் போன்ற குழுமத்தில் லாபத்தை மட்டும் பார்க்காமல், ஒரு சமுதாய நோக்கோடுதான் இதை நடத்தி வந்தார் விகடன் குழுமத்தின் சேர்மேனாக இருந்த பாலசுப்ரமணியம். அட்டைப்படத்தில் ஒரு படத் துணுக்கு வெளியிட்டதற்காக, சட்டசபையில் அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து, அவர் சிறை சென்றதும், பின்னாளில், நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்து, பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியதும் வரலாறு.
அவருக்குப் பிறகு, அவர் மகன் திரு.சீனிவாசன் அவர்கள் வசம், நிர்வாகம் வந்த பிறகு சமுதாய நோக்கு என்பது, குறைந்து, அருகி, அற்றுப் போய், வெறும் லாபம் மட்டுமே முன்னுக்கு நிற்கிறது. எல்லா தொழில் அதிபர்களும், தொழிலை விரிவுபடுத்த முனைவது போல, திரு.சீனிவாசன் அவர்களும், பத்திரிக்கை தொழிலையும் தாண்டி, திரைப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு என்று இறங்கினார். விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் மூலமாக எடுக்கப் பட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சன் டிவியில் ப்ரைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பப் பட்டு பெரும் வெற்றியை பெற்றன.
இந்த அடிப்படையிலேயே கேடி சகோதரர்களோடு, விகடன் குழுமத்திற்கு உறவு ஏற்படுகிறது. சன் குழுமமும், விகடன் குழுமமும், தொழில் பங்குதாரர்களாக ஆகின்றன. இந்த உறவு நெருக்கமாக வளர்ந்தது தவறான காரியம் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த நெருக்கமான உறவால் இதழியல் நெறிகளை மீறுவதென்பது நியாயமற்ற ஒரு செயல். அப்படி இதழியல் நெறிகளை ஜுனியர் விகடன் என்ன மீறி விட்டது என்பதைப் பார்ப்போம்.
கடந்த ஒரு வாரமாக, கேடி சகோதரர்களை, தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும், பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றன. அரசல் புரசலான குற்றச் சாட்டுகளாக இல்லாமல், ஆதாரங்களோடு பல்வேறு குற்றச் சாட்டுகள் வெளியாகி, தயாநிதி மாறன் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. தேசிய ஊடகங்களில் ப்ரைம் டைமில் இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டு வரும் அதே நேரத்தில், தமிழிலும், பெரும்பாலான ஊடகங்கள் தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி குழுமத்தின் ஊழல்கள் குறித்து, செய்திகள் வெளியிட்டு வருகின்றன, நக்கீரன் உட்பட.
இந்த நேரத்தில், இன்று வெளியாகியுள்ள ஜுனியர் விகடனின் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா ? “வில்லனா சீமான். வீறிடும் விஜயலட்சுமி” சீமான் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறார். அவரின் நடத்தைகளும், செய்கைகளும், விவாதப் பொருளா என்றால் விவாதப் பொருள் தான். ஆனால், சீமான் ஒரு பெண்ணை ஏமாற்றியதும், தேசத்தின் சொத்தைக் கொள்ளையடித்து, 1200 கோடி ரூபாயை ஒரு ஊடகம் நடத்தும் ஊழல் கும்பல் கொள்ளையடித்ததும் ஒன்றா என்றால் இல்லை.
இவை இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சவுக்கு வாசகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மத்திய மந்திரியாக இருக்கும் ஒரு நபர், பல கோடி ரூபாய் ஊழலைச் செய்து விட்டு, அது பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார் (தினமணி தலையங்கம் பார்க்க) அந்த ஊழல் நடைபெறவேயில்லை என்று சாதிக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார். இவரைப் பற்றிய செய்தியை கவர் ஸ்டோரியாக வெளியிட வேண்டுமா இல்லையா ? அதுதானே ஊடக தர்மம்.
இந்த இதழின் உள்ளேயே, தயாநிதி மாறனைப் பற்றிய செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்தியின் தலைப்பு “2G லேட்டஸ்ட் புயல். தயாநிதி மாறனுக்கு எதிராக அரசியல் சதி ?” இந்தத் தலைப்பே தயாநிதி மாறன் கொடுத்தது. தயாநிதி மாறன் பத்திரிக்கையாளர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது கூறிய வார்த்தைகள் இவை.
அந்தக் கட்டுரை பின் வருமாறு:
“கடந்த சில நாட்களாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் தலைப்புச் செய்திகளில்! டெல்லி எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் சூடாக உச்சரிக்கப்படுகிறது அவர் பெயர்!
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2008 – 09 காலகட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், தயாநிதி மாறனை குறி வைத்து காய் நகர்த்தப்படுவதை அர்த்தத்தோடு கவனிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் புயல் கிளப்பிய கட்சிகளில் முக்கியமானது பி.ஜே.பி. இதனால் எரிச்சல் அடைந்த காங்கிரஸ் கட்சி, ”வேண்டுமானால், பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த காலம் தொட்டே தொலைத் தொடர்புத் துறையின் விவகாரங்களை விசாரிக்கலாம்!” என்றது. சட்டரீதியாக 2ஜி விவகாரம் கிடுகிடுக்க ஆரம்பித்தபோது உச்சநீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியது.
இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷனும் இதே கருத்தை வலியுறுத்தியது. பி.ஜே.பி. ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ”2004-ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்தான் பல்வேறு விதிமுறைகளை மாற்றினார். அதற்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் முறையாகத்தான் நடந்து கொண்டார்கள்!” என்று நடுவில் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ஆனாலும் சி.பி.ஐ. விசாரிக்கும் எல்லைக்கு அப்பால் இருந்த விஷயம் என்பதால் அப்போது அது அமைதி ஆனது!
இப்போதோ, ஆ.ராசா மீது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண், தயாநிதி விஷயத்தையும் கையில் எடுக்க… மீடியாக்களில் விறுவிறுவென அடிபடுகிறது விவகாரம்.
”தயாநிதி மாறன் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் மலேசியாவைச் சேர்ந்த ‘மேக்சிஸ்’ நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன!” என்று தொடங்கும் பிரசாந்த் பூஷணின் மனுவில்…
”சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதை வழங்குவதில் சுணக்கம் காட்டினார் தயாநிதி மாறன். அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டது. சிவசங்கரன் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு தொலைத் தொடர்புத் துறை ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்க முன்வந்தது. முதலில் தேவையற்ற காலதாமதம் செய்ததும்… அதன்பிறகு அதை வழங்கியதும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது!” என்று சொல்லியிருக்கும் பிரசாந்த் பூஷண்,
”இந்த விஷயங்கள் நடந்தேறிய பிறகு மேக்சிஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மூலமாக சில முதலீடுகளைச் செய்துள்ளது. சன் டைரக்ட்டுக்கு 599 கோடியும், இதே குழுமத்தின் தெற்காசிய எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்துக்கு 111 கோடியும் முதலீடாக தரப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவு இடவேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.
பி.ஜே.பி-யின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தயாநிதிமாறனை நோக்கி சில கேள்விகளை வைத்திருக்கிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் நந்தா, சி.பி.ஐ-யின் இயக்குநர் ஏ.பி.சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
”ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கமோ, பதிலோ வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மௌனமாக உள்ளனர். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, எங்கள் கேள்விகளுக்கு சி.பி.ஐ. இயக்குநர் பதில் சொல்ல வேண்டும். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது 74 சதவிகிதப் பங்குகளை ஏர்செல் நிறுவனத்திடம் வாங்கிய பிறகுதான் அந்த நிறுவனத்துக்கு அதிகமான ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதா?
இந்தக் கேள்வி மக்கள் மனங்களில் நிழல் ஆடுகின்றன. இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் பதில் அளிப்பதுடன் இது தொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்த வேண்டும். இந்த ஊழல் குற்றச்சாட்டு மீது இடையூறு அற்ற விசாரணை நடத்த வசதியாக தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த மாதிரியே ‘தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். ”தயாநிதி மாறன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பிரதமருக்குத் தெரியும். தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். அல்லது அவரை பிரதமர் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையை தயாநிதி மாறன் எதிர் கொள்ள வேண்டும்!” என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த 26-ம் தேதி சோனியாவைச் சந்தித்த தயாநிதி சில விளக்கங்கள் அளித்துள்ளார். அடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேபினெட் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்தது. அதன் உறுப்பினர்களில் ஒருவர் என்ற முறையில் தயாநிதி மாறனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் தயாநிதியை அழைத்து பிரதமர் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலை சந்தித்து, சில விளக்கங்களை தயாநிதி முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு எதிராகக் கிளம்பும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தயாநிதிமாறன் மீடியாக்கள் வாயிலாக விளக்கம் வெளியிட்டு உள்ளார். ”2004-07 ஆண்டுகளில் நான் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தேன். அப்போது மற்ற நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் நான் சலுகை காட்டியது இல்லை. உரிமம் தரும் விஷயத்தில் அரசுக்கு என்னால் ஒரு பைசா கூட இழப்பு ஏற்பட்டதும் இல்லை. துறை விதித்திருந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்கிற அளவுக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரிய காலத்தில் முறைப்படி உரிமம் வழங்கப்பட்டது!” என்று கூறியுள்ள தயாநிதி,
”ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய விவகாரத் தைப் பொறுத்தவரை 2004-ம் ஆண்டு மே 27-ம் தேதி நான் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு இருந்தே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் அரசின் பரிசீலனையில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்திடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதைப் பற்றியும் நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றியும் கடன் – ஈவு விகிதம் பற்றியும் தொலைத் தொடர்புத் துறை அதற்கு முன்பே பல கேள்விகளை எழுப்பி இருந்தது.
அந்த நிறுவனத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் தொலைத் தொடர்புத்துறை முழுமையாக ஆராய்ந்து, உரிமம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளையும் அந்த நிறுவனம் பெற்ற பிறகே அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
நான் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது சகோதரரின் எந்த ஒரு நிறுவனத்திலும் எந்தவித முதலீடும் செய்ததில்லை. சன் டைரக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது நான் அமைச்சர் பதவியில் இல்லை. மேலும் இந்த நிறுவனங்கள் எதிலும் எனக்கு பங்குகளும் எந்தவித பொறுப்புகளும் இல்லை!” என்று கூறியுள்ளார் அவர்.
”ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் உள்ள தொடர்பு எந்த அரசியல் நிர்பந்தங்களாலும் உண்டானது அல்ல. 1998-ம் ஆண்டில் இருந்தே தொடர்பு கள் இருக்கிறது. எனவே 2007-ம் ஆண்டு லைசென்ஸ் கொடுக்கப்பட்டதற்கு பிரதி பலனாகத்தான் அவர்கள் சன் குழும நிறுவனங்களில் முதலீடு செய்தார்கள் என்று சொல்வது தவறு. ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் குழுமத்தில் 2007-ம் ஆண்டு டிசம்பரில்தான் பணம் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அந்த காலகட்டத்தில் அவர் ஆக்டிவ்வான அரசியலிலேயே இல்லை. மத்திய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் மனிதராகவும் இல்லை. மீடியாத் துறையில் படிப்படியாக வளர்ந்து புகழுடன் இருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்குள் நடக்கும் இயல்பான வர்த்தக பரிவர்த்தனைகளுக்குக் கூட இப்படி அரசியல் சாயம் பூசுகிறார்களே..!” என்று தயாநிதிமாறன் ஆதரவாளர்கள் வருத்தத்துடன் சொல் கிறார்கள்.
இதற்கிடையே தொலைபேசி இணைப்புகளை வரம்புமீறி பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட புகார் குறித்தும் மீடியாக்களிடம் விளக்கம் அளித்தார் தயாநிதி மாறன். ”என் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படி குற்றச்சாட்டுப் பரப்புகிறார்கள். எனக்கு எதிராக சிலர் செய்யும் அரசியல் சதிதான் இது. என் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை நிரூபித்துக் காட்டுவேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள். தவறு செய்திருந்தால் எத்தகையத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 2009-ம் ஆண்டு வெளியிட்ட அதே செய்தியைத்தான் இப்போதும் வெளியிட்டு இருக்கிறார்கள். புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பரபரப்பு அரசியலில் இல்லை. கட்சி மற்றும் குடும்ப நேர்மையை சந்தேகிக்கும் விதமாக இப்படி குற்றச்சாட்டு பரப்புகிறார்கள். என் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே உள்ளது!” எனச் சொல்லி அதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் கொடுத்த கடிதத்தையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினார் தயாநிதி மாறன்.
உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணும்… சி.பி.ஐ-யை நோக்கி பி.ஜே-பி-யும் நகர்த்தும் இந்த காய்கள் எந்த கோணத்தில் நகரும் என்பது போகப் போகவே தெரியும். ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த முக்கோணச் சிக்கலில் இருந்து விடுபட தயாநிதி மாறன் எடுக்கப் போகும் நடவடிக்கைகள், தமிழகத்திலும் டெல்லியிலும் அடுத்தகட்ட அரசியல் காட்சிகளை நிர்ணயிக்கும்!”
பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சிபிஐ இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள விபரமும், தயாநிதி வெளியிட்ட மறுப்பின் முழு விபரங்களையும் தவிர வேறு ஒன்றுமே இல்லை. தயாநிதியின் மறுப்பின் முழு விபரங்களையும் வெளியிட்டதன் மூலம், சன் டிவியின் அச்சு வடிவமாக காட்சியளிக்கிறது ஜுனியர் விகடன்.
ஜுனியர் விகடன் இதழின் இந்த செயல் தங்களை நம்பி இதழை தாங்கள் உழைத்த பணத்தைக் கொண்டு வாங்கும், பாமர மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே சவுக்கு பார்க்கிறது. இந்தச் செயல், பாமர மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கும், அரசியல் வாதியின் செயலுக்கு, துளியும் குறைந்தது இல்லை. சொல்லப் போனால், பத்திரிக்கைகள் ஒன்றுதான் சமுதாயத்தின் விடிவெள்ளி என்று கருதிக் கொண்டிருக்கும், மக்களை ஏமாற்றுவது, அரசியல்வாதியின் தவறை விட, மோசமானது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று சாதித்த, நக்கீரன் இதழின் செயலுக்கும், தயாநிதி மாறனுக்கு வாக்காலத்து வாங்கும், ஜுனியர் விகடனின் செயலுக்கும், பெரிய வேறுபாடு இல்லை.
மந்தையிலிருந்து வழி தவறும் ஆடுகளை ஏசுநாதர் வழி நடத்துவார். ஆனால் நேர்மையிலிருந்து விலகும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை ஜுனியர் விகடனுக்கு சவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது.
நேற்றுதான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி சொன்னார். “கூடா நட்பு கேட்டைத் தரும்” என்று. இதை விகடன் குழுமத்தார் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்வதோடு, அய்யன் வள்ளுவர் சொன்னதையும் யோசியுங்கள்.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.