வெகு விரைவிலேயே யாரேனும், 2019இல் பிரதமர் பதவிக்கு இந்தியாவின் விருப்பத் தேர்வு யார் என அறியும் கருத்துக்கணிப்பை நடத்தலாம். இதற்கான பதிலை அறிய ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும் என்றில்லை. 2013க்குப் பிறகு கருத்துக் கணப்புகளில் முன்னிலை வகித்துவரும் மோடிதான் அது. அவருக்குச் சவால் விடக்கூடியவரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்பைவிடக் கூடுதல் புள்ளிகளைப் பெற்றாலும், மோடி தான் அதிக இடைவெளியில் முன்னிலை வகிப்பார் என நம்புவதற்கான காரணிகள் உள்ளன.
இந்தப் பிரிவில், வீச்சு, வளம், ஆற்றல், கவனம், தாக்கம்: தலையீட்டு மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறன், பல நேரங்களில் நிகழ்வுப் போக்குகளை அரசியல் ஆதாயத்திற்காக அபாயகரமாகத் திரிக்கும் திறன்; பேசும் மற்றும் பேசாமல் விடும் விஷயங்கள் மூலம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்புகொள்ளும் தன்மை: தனது பரப்பின் மீதான பிடியைத் தக்க வைத்துக்கொள்ளும் கவனமான மற்றும் சில நேரங்களில் கடுமையான உறுதி, ஆகிய அம்சங்களில் மோடிக்கு நிகராக இருக்கக்கூடிய அரசியல் தலைவர் ஒருவரும் இல்லை. மோடி. மற்ற எவரையும் போல அல்லாத, மிகவும் திறன் வாய்ந்த, உணர்ச்சிமயமில்லாத அதிகார சக்தியாக விளங்குபவர். பாஜக கடந்த வாரம் சந்தித்த பின்னடைவுகளால் அவர் பாதிப்புக்குள்ளாகவில்லை. எந்த பாதிப்பும் இல்லாமல், இன்னமும் வியக்கப்படும் செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
ஆனால், புகழ் மற்றும் செல்வாக்கில் உள்ள பிரச்சினை என்னவெனில் சில நேரங்களில், பாதிப்புக்குள்ளாக இருப்பவர்களிடம் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கூட தெரியாமல், அதற்கான சுவடு இல்லாமலேயே அவை வேகமாக விலகிச்சென்று விடுகின்றன. 2004இல் ஜாம்பவனாக இருந்த, ஒளிரும் இந்தியாவை உருவாக்கியதாக நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் இருந்த, வாஜ்பாயிக்கு இப்படித்தான் நிகழ்ந்தது. அல்லது ஜனதா கட்சிக்கு நிகழ்ந்ததுபோல அமையலாம். 1977இல் இந்திரா காந்தி மற்றும் அவரது அவசர நிலை அவலங்களுக்கு மாற்றாக ஆட்சிக்கு வந்த நிலையில், ஜனதா கட்சியின் கொண்டாட்டம் வெகு சீக்கிரம் புளித்துப் போய், பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட இந்தியா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். 1984இல் அதிக மக்களவை இடங்களை வென்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ராஜீவ் காந்திக்கும் இப்படித்தான் நிகழந்தது. ஒரு ஆட்சி காலத்திற்குள் இது காணாமல் போய், 1989இல் அவர் சரிவுக்குக்கு உள்ளானார். காலுக்கு அடியில் இருக்கும் தரை விலகும்போது, அதன் மீது கம்பீரமாக நின்று கொண்டிருப்பவர்கள்தான் முதலில் கீழே விழுகின்றனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக அரசுகள் அகற்றப்பட்டது மோடி மீது தாக்கம் ஏற்படுத்துமா, அப்படி ஏற்படுத்தினால் அது எந்த அளவு இருக்கும் என்று நிச்சயம் விவாதம் நடைபெறும். எந்த மாநிலத்திலும் மோடி போட்டியிடவில்லை. இந்த மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கு எதிரான மக்கள் அதிருப்தியை மீறி மோடியின் செல்வாக்கு எந்த விததத்திலும் பாதிக்கப்படவில்லை எனப் பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. இது உள்ளூர் பிரச்சினைகள் தாக்கம் செலுத்திய உள்ளூர் தேர்தல். 2019 மக்களவைத் தேர்தல் வேறு விதமானதாக இருக்கும். மோடியால் முடியாவிட்டால் வேறு யாரால் என்று கேட்கலாம்.
எனினும் 2019 தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவற்றில் முதல் அம்சம், இந்தியாவின் மையப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சி வசம். அந்த மாநிலங்களில் உள்ள அரசுகள் மக்களவைத் தேர்தல் நடைபெறும்போது — புதிதாக ஆட்சிக்கு வந்தவையாக இருக்கும்.
இந்தியாவின் மையப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அந்த மாநிலங்களில் உள்ள அரசுகள் மக்களவைத் தேர்தல் நடைபெறும்போது பதவியில் இருப்பவையாக இருக்கும். ஆட்சி அதிகாரம் முக்கிய சக்திகளை கொடுக்கும். பாஜக தோற்ற மூன்று மாநிலங்களில் இந்த சக்தி காங்கிரசிடம் இருக்கும். 2014 தேர்தல் தோல்விக்குப் பின், நிர்வாகிகளும் தொண்டர்களும் அயர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த சக்தி நிர்வாக மட்டத்தில் சுய நம்பிக்கை மற்றும் ஆற்றலை உணர்த்தக்கூடியதாக இருக்கும். தலைமையைப் பொருத்தவரை குழந்தை என கூறப்பட்ட ராகுல் ஏற்கனவே அவ்வாறு கூறியவர்களை கவலை கொள்ள வைக்கத் துவங்கியிருக்கிறார். அவரால் முடியாது என பலரும் நினைத்ததை – தேர்தல் வெற்றிகளைப் பெற்றுத் தருதல் – அளிக்கத் துவங்கியிருக்கிறார். மோடி அறைகூவல் விடுவது போல காங்கிரஸ் இல்லாத இந்தியா, அமித் ஷா கூறிக்கொள்வது போல இன்னொரு 50 ஆண்டு கால ஆட்சி போன்ற ஒற்றை நிலை இல்லை என இந்திய அரசியலுக்கு உணர்த்தும் தேர்தல் வெற்றிகள் இவை. எந்த மாற்றும் இல்லை என்பதற்கு பதிலடியாக எந்த மாற்றும் இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மோடி – ஷா கூட்டணி இதற்கு முன் தில்லியில், பிகாரில், பஞ்சாபில், கர்நாடாகாவில் பின்னடைவைச் சந்திதுள்ளது. ஆனால், இது வேறு விதமானது. இந்தப் பகுதி, இந்தி பேசும் மக்களைக் கொண்ட, பசுப் பாசம் கொண்ட இந்துக்களை அதிகம் கொண்ட, தனக்குச் சொந்தமான நிலம் என பாஜக நினைத்துக்கொண்டிருக்கும் இடங்கள் இவை. இந்த இழப்பு, 2019 தேர்தல் நெருங்கும் போது நிகழ்ந்துள்ளது.
விவாதத்திற்கு அதிக இடமில்லாத இன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன. மோடி ஆட்சி காலம் முடிவுக்கு வரும் நிலையில், இதற்கு முன்னர் இல்லாத வகையில் கிராமப்புற / விவசாயிகளின் கோபம் பொங்கி எழுந்துள்ளது. இதற்கான பழி மாநில அரசுகள் மீது விழுவதை விட மோடி அரசு மீதுதான் விழ வேண்டும். பாஜக தற்போது இழந்துள்ள மாநிலங்களில் 70 சதவீதத்திற்கு மேலான மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்கள் நிலங்களை நம்பி இருக்கின்றனர். அந்த நிலங்களின் உற்பத்தி, அது உருவாக்கும் அல்லது உருவாக்கத் தவறும் வாங்கும் சக்தியை நம்பியிருக்கிறார்கள். கிராமப்புறப் பகுதிகளில் பாஜகவுக்கான தோல்வி ஒரு அறை போல விழுந்துள்ளது. சத்தீஸ்கரில் 34 சதவீத கிராமப்புற இடங்கள் இழப்பு. மத்தியப் பிரதேசத்தில் 30 சதவீதம். ராஜஸ்தானில் 49 சதவீதம். தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் விலகிச் சென்றுள்ளதைப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து பாஜகவின் எதிர்காலத்தை இன்னும் இருண்டதாக ஆகிறது. இந்த மூன்று மாநிலங்களில் பாஜக 61 லட்சம் வாக்குகளை இழந்துள்ளது. காங்கிரஸ் ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாகப் பெற்றுள்ளது. கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தப் பகுதிகளில் பாஜக 44 மக்களவைத் தொகுகளில் தோல்வி அடையும் என கணிக்கலாம்.
களம் பாஜகவுக்கு எதிராகவும், அதன் மீது கோபமாகவும் இருக்கிறது. இது இன்னொரு, மிகவும் முக்கியமான விஷயத்தை, பலரும் மறுக்க முடியாத விஷயத்தின் மீது நம் கவனத்தைத் திருப்புகிறது. இந்த முறை எல்லாவற்றையும் சாதகமாக மாற்றுவதற்கான மோடியின் ஆற்றல் இன்மைதான் அந்த விஷயம். மோடியின் இந்த ஆற்றல் மீதுதான் பாஜக அதிக நம்பிக்கை வைத்திருப்பது. கடினமான மோதல்களில் வெற்றியைத் தேடித்தரும் தந்திரம், தோல்வியின் கைகளிலிருந்து வெற்றியைப் பறிக்கும் உத்தி, தனிமனிதராக எல்லாவற்றையும் மாற்றுவது, தனது பேச்சாற்றலால் மக்கள் மனதை மாற்றுவது, மற்ற எவராலும் முடியாத அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை பாஜக நம்பியிருக்கிறது. இந்த மாநிலங்களில் பிரதமர் தீவிரமாக, ஆக்ரோஷமான சுற்றிச் சுழன்று வந்தார். ஆனால் அவரால் தேர்தல் போக்கை மாற்ற முடியவில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நெருக்கமான தேர்தல் முடிவுகள் மோடி தனது பேரணிகள் மூலம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவா அல்லது, சிவராஜ் சவுகான் போன்ற உள்ளூர் தலைவர்கள் செல்வாக்கு காரணமாகவா என்று பாஜக தனக்குள் விவாதித்துக்கொள்ள வேண்டும் ஆனால் மோடியால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் வெளிப்படையாகத் தெரியும் உண்மை.
கடந்த காலத்தில் செய்துள்ளது போல, வரும் மாதங்களில் மேலும் தீர்மானமாக அவரால் என்ன செய்ய முடியும்? அவரது அம்புறாத் தூணியில் இன்னும் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கின்றனவா? பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய சாதனைகள் இருக்கின்றனவா? அவர் சமீபத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தை வைத்துப் பார்த்தால், அவர் பெருமைபட்டுக்கொள்ளக்கூடிய நேர்நிறையான அம்சங்களுக்குப் பஞ்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. தன்னிடம் பெருமைப்பட்டுக்கொள்ள அதிக விஷயங்கள் இல்லாத நிலையில், அவர் பழி போடுவதில், குறிப்பாக நேரு – காந்தி குடும்பம் மீது பழி போடுவதில், அதிக கவனம் செலுத்தினார். அவர்கள் இன்னமும் இருப்பது போல நினைத்துக்கொண்டு, நேரு – காந்தி ஆட்சி மீது அவர் தாக்குதல் நடத்தினார். அவர் பண மதிப்பு நீக்கம் அல்லது ஜிஎஸ்டி பற்றி இப்போது பேசுவதில்லை. இவை இரண்டுக்கும் எதிரான உணர்வை அவர் அறிந்திருக்கிறார். பொதுமக்களின் வரிப்பணம்தான் இதற்குச் செலவாகியுள்ளது.
2013-14இல் அவர் உண்டாக்கிய எதிர்பார்ப்பு மிகையான நம்பிக்கையாக முடிந்திருக்கிறது. அவர் பெருமைப்பட்டுக்கொண்ட திட்டங்கள் எதுவும் அறிவிப்புகள், கோஷங்களைக் கடந்து பலனளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. மக்களின் கை கடிக்கும் நிலை உள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைப்புகள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுவரை இல்லாத வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தலையீடு பற்றி பேட்டி கொடுத்தனர். ரிசர்வ் வங்கி நொறுங்கிப் போயிருக்கிறது. சிபிஐ சர்ச்சைக்குள்ளாகி தலைமை இல்லாமல் இருக்கிறது. மத்தியத் தகவல் ஆணையம் மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன. ஆயுதப் படையினர் இது வரை இல்லாத வகையில், இன்று அதி தீவிர தேசியவாத அரசியல் சொல்லாடலில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
மோடி தன்னுடைய வழக்கமான வியூக்த்தைத் திறமையாகவே கையாண்டார். இந்துக்களின் இதய மன்னன் என்னும் படிமத்தை நன்கு வெளிப்படுத்தினார். விஇப, பஜ்ரங் தள், யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தனக்காகப் போரிட அழைத்தார். விஇப – பஜ்ரங் தள் கூட்டணி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கோஷத்தைப் புதுப்பித்தது. ஷாவும் ராம் மாதவும் இதை ஆதரித்தனர். ஆதித்யநாத் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 74 பேரணிகளில் உரையாற்றினார். ஆடம்பரமான தசரா கொண்டாட்டத்தை அவர் நடத்தியிருந்தார். பைசாபாத்தை அயோத்தியா எனப் பெயர் மாற்றியிருந்தார். மிகப் பெரிய ராமர் சிலை நிறுவுவேன் என அறிவித்தார். இத்தகைய பெருமிதங்களுடன் தேர்தல் களத்துக்கு வந்தவர், அனுமான் ஒரு தலித் என்பது போன்ற முத்துகளை உதிர்த்தார். இதனால் தலித்கள் மனவேதனை அடைந்துள்ளனர். அனுமன் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. அலிக்கு பதிலாக பஜ்ரங் பலியை அவர் முன்னிறுத்தினார். ஐதராபாத் பெயரை நகரவாசிகள் கேட்டிராத பெயருக்கு மாற்ற வேண்டும் என்றார். அவர் சென்ற இடமெல்லாம் பாஜக தோற்றது.
பொதுமக்கள் மனநிலை எதிராக மாறும்போது கடவுளாலேயே கைகொடுக்க முடியாது எனும் நிலையில், அமித் ஷாவின் தேர்தல் இயந்திரங்கள் என்ன செய்யும். ஷாவுக்கான இடம் உணர்த்தப்பட்டது. ஜனநாயகத்தில் கடவுள் இருக்கிறார். வேறு பெயரில் இருக்கிறார். அந்தப் பெயர் வாக்காளர்.
கொசுறு: இந்தப் பார்வைக்குத் துணையாக இன்னொரு தகவல்: இந்தியாவின் முதல் பசு நலவாழ்வு அமைச்சர் ஓட்டராம் தேவசி, ராஜஸ்தானில் காங்கிரஸ் போட்டி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
சங்கர்ஷன் தாகூர்
நன்றி: தி டெலிகிராஃப் இந்தியா
https://www.telegraphindia.com/opinion/what-do-recent-reverses-tell-us-about-narendra-modi-s-political-health/cid/1678939
FB/Twitter ல போஸ்ட் போட்ட 200 ருபாய் தான் தருவாங்க . இந்த மாதிரி Article/Blog எழுதினா, 2000 ரூபாய் தருவங்களாம் . சவுக்கு , இது தோல்வி இல்லை 1% or 2% வித்யாசம் தான் . இந்த வித்யாசம் எங்களுக்கு நெறைய படிப்பினை கொடுத்து இருக்கு . We will come back bang in 2019.