ரஃபேல் ஒப்பந்தத்தில் அஜீத் தோவலும் மோடி அமைச்சரவையும் எப்படி இந்திய நலனைக் கிடப்பில் போட்டனர் என்பது குறித்த வெளிவராத உண்மைகள்
பாதுகாப்பு அமைச்சகம் – சட்ட அமைச்சகம் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக தி கேரவன் இதழுக்குக் கிடைத்துள்ள கோப்பு விவரங்களின் குவியல், ரஃபேல் ஒப்பந்தத்தை பரிசீலித்து இறுதி செய்தபோது, நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு எப்படி தனது சொந்த்த அமைச்சக அதிகார்களின் தீவிர ஆட்சேபனைகளை அலட்சியம் செய்தது என்பதை உணர்த்துகின்றன. பிரெஞ்சுப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின்போது, இந்தியக் குழுவில் முக்கிய உறுப்பினராக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் இருந்ததை இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய குழுவில் பங்கேற்பதற்கான சட்ட அங்கீகாரம் இல்லை என்பதை மீறி அவர் பங்கேற்றிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின்போதுதான் பெரும்பாலான ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018, அக்டோபர் 10 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பேச்சுவார்த்தைக் குழு விவரங்களை சமர்பித்தபோது அரசு, தோவல் பங்கேற்பை மறைத்துவிட்டது. பேச்சுவார்த்தைக் குழு என அடையாளம் காட்டப்பட்டவர்களில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இல்லை.
பாதுகாப்பு தொடர்பான கேபினெட் குழு, – இது பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக முடிவெடுக்ககூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு – 2016, ஆகஸ்ட் 24 அன்று ரஃபேல் ஒப்பந்தத்தை அதன் இறுதி வடிவில் அங்கீகரித்தது. 2016 செப்டம்பர் 23இல், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம், இந்தியாவும் பிரான்சும் இதை முறைப்படுத்தின. இருப்பினும் குறிப்புகள் உணர்த்துவதுபோல், இந்த ஒப்பந்தம், அரசுகளுக்கு இடையிலான கொள்முதல் பேரத்தின் அடிப்படை அம்சங்களை, குறிப்பாக, ஒப்பந்தத்தின் ஏதேனும் மீறலுக்கு வெளிநாட்டு அரசைப் பொறுப்பேற்கச் செய்வது, எந்தப் பிரச்சினையையும் அரசு அளவில் தீர்ப்பதற்கான அம்சங்களை கொண்டிருக்கவில்லை. பிரெஞ்சு அரசு அல்லது விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து எந்த வித நிதி உறுதி அல்லது டெலிவரிக்கான சட்டரீதியாகச் செயல்படுத்தக்கூடிய உறுதி எதுவும் இல்லாமலேயே, 7.87 பில்லியன் யூரோவுக்கு 36 போர் விமானங்களை வாங்குவதற்கான ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ஈடுபட்டதைக் குறிப்புகள் உணர்த்துகின்றன.
2015 ஏப்ரலில், பாரீசில் அதிகாரபூர்வ விஜயத்தின்போது, இந்தியா டசால்டிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் என்று மோடி முதலில் அறிவித்தார். அடுத்த மாதம், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்த விற்பனைச் செயல்முறையை முன்னெடுத்துச்செல்ல ஒப்புக்கொள்கிறது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சு வார்த்தைக் குழுக்கள், ஒப்பந்தத்தின் வரைவை ஒப்புக்கொள்கின்றன. இந்த வரைவு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் சமர்பிக்கப்பட்டு, 2015 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை விவாதிக்கப்படுகிறது.
அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் பிரதானமாகத் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. 36 ரஃபேல் விமானங்கள், அதன் துணை அமைப்புகள் மற்றும் சேவைகளை இந்தியாவுக்கு வழங்க பிரெஞ்சு அரசு ஒப்புக்கொள்கிறது என அது தெரிவித்தது. ஆனால், வரைவு ஒப்பந்தத்தின் 4ஆவது ஷரத்து, பிரெஞ்சு அரசு, “மரபு” (convention) எனக் குறிப்பிடப்பட்ட தனி ஒப்பந்தம் மூலம் இந்த பொறுப்பை டசால்டிற்கு மாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் ஏவுகணை வழங்கும் நிறுவனமான, எம்.பி.டி.ஏ.வுடன் இதே செயல்முறையை இந்த மரபு கொண்டிருக்கும். சப்ளையர் நிறுவனங்களுடன் பிரெஞ்சு அரசு இதே மரபு ஒப்பந்தத்தில் ஈடுபடும். இவற்றில் இந்தியா அங்கம் வகிக்காது.
இதன் பொருள் என்னவெனில், இந்திய அரசுக்கு இதன் உள்ளடக்கம் பற்றித் தெரியாது. எனவே டெலிவரியை உறுதி செய்வதில் பிரான்ஸ் அரசுக்கு உள்ள பிடி பற்றியும் எதுவும் தெரியாது. இதன் விளைவாக, ஒப்பந்த மீறல் எனில், பிரான்ஸ் அரசு பொறுப்பை மறுக்கலாம். இந்திய அரசால் இந்த நிறுவனங்களை நேரடியாகப் பொறுப்பேற்க வைக்க முடியாது. ஒரு சலுகையாக, பிரான்ஸ் தரப்பில் இந்த ஒப்பந்ததை நிறைவேற்றுவது தொடர்பான லெட்டர் ஆப் கம்ஃபர்ட் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பொறுப்புகளை விவரிக்கும் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உறுதி அளிக்கும் கடிதங்களே தவிர, ஒப்பந்தங்கள் அல்ல. பிரான்ஸ் அரசின் கடிதம் அந்நாட்டுப் பிரதமரால் கையெழுத்திடப்பட்டிருக்கும். மாறாக சகல அதிகாரங்களும் நிறைந்த தலைமை பதவியை வகிக்கும் அதிபரால் அல்ல.
வரைவில் உள்ள மற்ற அம்சங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பானவை. வேறுபாடுகள் சர்வதேச மத்தியஸ்த விதிகளின் கீழ் தீர்வு காணப்படும். இதற்கான இடம் இந்தியாவுக்கு வெளியே ஜெனிவாவாக உள்ளது. ஒப்பந்த மீறல் எனில் இந்தியா தவறு செய்யும் நிறுவனங்கள் மீதுதான் வழக்குத் தொடர முடியுமே தவிர, பிரான்ஸ் அரசு மீது அல்ல. இந்தியாவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டால் முதலில் சப்ளையர்களிடமிருந்து அதைப் பெற முயன்ற பிறகே, பிரான்ஸ் அரசிடம் கோர முடியும்.
இவை எதுவுமே இந்தியாவின் நலனுக்கு உகந்தவை அல்ல. முதல் விஷயம், பிரான்ஸ் அரசை இந்திய நீதிமன்றத்தில் அல்லது இந்தியச் சட்டத்தின் கீழ் நிறுத்த முடியாது. இரண்டாவதாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கான பிரான்ஸ் அரசின் பொறுப்பை இது மேலும் நீர்த்துப்போகச் செய்கிறது. தவறு செய்யும் நிறுவனத்தை இந்தியா பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனில், மத்தியஸ்த வழியில் என்றாலும்கூட, பிரான்ஸ் அரசு மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். நிறுவனங்களின் தெளிவில்லாத பொறுப்புகள், அவற்றின் மீது மத்தியஸ்தத்தைச் செயல்படுத்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை. அப்படிச் செய்தாலும்கூட, சர்வதேச மத்தியஸ்தம் மூலம் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு பெறுவது அத்தனை எளிதல்ல. உதாரணமாக, வோடோபோன் நிறுவனம் வரி செலுத்தவில்லை என இந்திய அரசு கூறினாலும். சர்வதேச மத்தியஸ்தத்தில் பல ஆண்டுகளாக இந்த முயற்சி இழுபறியாக இருக்கிறது.
குறிப்பிட்ட சில சேதங்களுக்கு பிரான்ஸ் அரசு தரப்பில் வழக்கத்தில் இல்லாத வரம்புகளை வரைவு கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் இறையாண்மை உறுதிக்கான வழி இல்லை. அதாவது மூன்றாம் தரப்பின் சார்பாக, இறையாண்மை அரசின் பாதுகாப்பு டெபாசிட் இல்லை. இவை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வழக்கமாக இடம்பெறுபவை. இதனிடையே, இந்திய அரசு டெலிவரிக்கு முன் சப்ளையர்களுக்கு பெரிய தொகை அளிக்க வேண்டும். இதுவும் இந்தியாவுக்கு பாதகமானது.
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தேவையான செயல்முறைக்கு ஏற்ப, ஒப்பந்த வரைவைச் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது.
சட்ட அமைச்சகம் இரண்டு தனித்தனி பதில்கள் அளித்தது. குறிப்பு 228 எனும் முதல் பதில் 2015 டிசம்பர் 9இல் அளிக்கப்பட்டது. துணை சட்ட ஆலோசகரான டி.கே.மாலிக் என்பவர் அதை எழுதியிருந்தார். கூடுதல் செயலர் டி.என்.திவாரி கவனத்திற்கு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் டிஎன். திவாரி கையெழுத்து அல்லது மாலிக்கைவிடப் பெரிய அதிகாரியின் கையெழுத்து இல்லை.
மரபுக்கான உத்தேசம், இந்தியாவுக்கான பிரான்சின் பொறுப்பை முழுவதும் விலக்கி விடவில்லை என இந்தக் குறிப்பு தெரிவித்தது. தொழில் சப்ளையர் அளவில் மட்டும் அல்லாது பிரான்ஸ் அரசு அளவிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வரைவு ஒப்பந்தத்தில் போதிய அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், பிரான்ஸ் அரசு எந்த இறையாண்மை வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பதைக் குறிப்பு சுட்டிக்காட்டியது. ரஃபேல் ஒப்பந்தத்திற்கான கொள்முதல் விதிகளை வரையறுக்கும், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013இல் உள்ள ஒப்பந்த ஆவணத்தில், நிதி வாக்குறுதியை உள்ளடக்கியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
229 எனும் இரண்டாவது குறிப்பு, மாலிக்கின் முந்தைய குறிப்புக்கு 2 நாள் கழித்து, டிசம்பர் 11தேதியைக் கொண்டுள்ளது. இது திவாரியால் எழுதப்பட்டு அவரது கையெழுத்தைக் கொண்டிருந்தது. அவரது மேலதிகாரி சட்ட செயலர் கையெழுத்தும் இருந்தது. மாலிக்கும் கையெழுத்திட்டிருந்தார்.
பிரான்ஸ் அரசின் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றும் அமசங்களுக்கு இந்தக் குறிப்பு ஆட்சேபம் தெரிவித்தது. தொழிற்சாலை சப்ளையர்களால் பொருள் மீறல் நிகழும்போது, மத்தியஸ்த உரிமையை நிலை நாட்ட இந்தியத் தரப்பு, மரபு ஆவணத்தின் உறுதியளிக்கும் தரப்பு அல்லது கையெழுத்திட்ட தரப்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பு 229 தெரிவிக்கிறது. இந்தியா மரபில் அங்கம் வகிக்க முடியாத பட்சத்தில் மட்டும், அரசு, கூட்டு மற்றும் பல பொறுப்புகளை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மற்றும் மரபு ஒப்பந்தத்தில் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இத்தகையை ஷரத்து, இரு தரப்புக்கு இடையிலான ஒப்பந்தம் அவர்களில் ஒருவருடனான மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில், ஒப்பந்தம் மற்றும் மரபில் இதைச் சேர்பது, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வைப்பதில் பிரான்ஸ் அரசை நிர்பந்திக்கும் இந்தியாவின் திறனை வலுவாக்கும் என குறிப்பு தெரிவிக்கிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் இழப்பீடு கோருவது தொடர்பான நிபந்தனைகள், செயல்முறை நோக்கில் சிக்கலானதாகவும், இந்திய தரப்பு நலனுக்கு எதிரானதாகவும் இருப்பதாக குறிப்பு தெரிவிக்கிறது. பிரான்ஸின் பொறுப்பிற்கு வரம்பு நிர்ணயிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சப்ளையர் நிறுவனங்கள், மூன்றாம் தரப்புக்கு, இந்த இடத்தில் பிரான்ஸ் அரசுக்கு அல்லாமல், இந்திய அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை சப்ளையர் அலட்சியம் அல்லது திட்டமிட்ட தவறான செயல்பாடு தொடர்பான விஷயத்தில் எந்த வகை வரம்பும் இருக்க கூடாது எனக் குறிப்பு தெரிவிக்கிறது. தொழிற்சாலை சப்ளையரின் இந்திய அரசு தொடர்பான் பொறுப்பு, எந்த நிலையிலும் சப்ளை விதிமுறைகளின் கீழ் அளிக்க வேண்டிய மொத்தத் தொகைக்கு குறைவானதாகக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய குறிப்பு போல இந்தக் குறிப்பும், இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்தியிருந்தது. இந்தியத் தரப்பிடம் கருவிகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கு முன் பெரிய அளவில் கொள்முதல்பணம் வழங்கப்பட இருப்பதால், ரஃபேல் ஒப்பந்தத்தில் இது மிகவும் அவசியம் என வலியுறுத்தியது. இந்த அம்சங்களைப் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என இரு குறிப்புகளும் தெரிவித்திருந்தன.
2016 ஜனவரி 11இல் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், சட்ட அமைச்சகத்தின் பதில்களை ஆட்சேபணை இல்லாமல் பதிவு செய்தது. எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தெரிவித்து, அவற்றை பிரான்ஸ் தரப்புடன் பைசல் செய்யுமாறு உணர்த்தியது. இந்தியக் குழு, விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் ராகேஷ் குமார் சிங் பஹதூரியா தலைமையில் அமைந்திருந்தது. 2016, ஜனவ 1 அன்று இரு வார காலத்துக்கு முன்புதான் அவர் இந்தப் பொறுப்புக்கு வந்திருந்தார். அதற்கு முன் இருந்த முந்தைய விமானப் பணியாளர் துணைத் தலைவர் ஷிவம் பண்டாரி இடத்தில் அவர் வந்திருந்தார். (தி கேரவன் செய்தி வெளியிட்டபடி, பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவராக பண்டாரி, ரஃபேல் ஒப்பந்தத்தின் ஆரம்ப ஒப்பீடு விலையான 5.2 பில்லியன் யூரோவாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முதலில் இருந்த தொகை 2.5 பில்லியன் யூரோ).
இந்தக் கட்டத்தில்தான் செயல்முறையில் தோவல் வருகிறார். ஆகஸ்ட்டில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அலசல் ஆவணம் குறிப்பு 18, “சட்ட ஆலோசனை பெற்ற பின், இந்தப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, பாதுகாப்பு அமைச்சகக் கூட்டம் மற்றும் பாரீசில் பிரான்ஸ் தரப்புடன் தேசிய பாதுகாப்புச் செயலர், உறுப்பினர் செயலர் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டது. தோவல் உள்ளிட்ட இந்திய பேச்சுவார்த்தை குழுவினரை பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஜனவரி 12, 13 தேதிகளில் சந்தித்தனர்.
பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013, கொள்முதல் பேரங்களுக்கான பேச்சுவார்த்தை செயல்முறையை வரையறுத்துள்ளது. இந்த செயல்முறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவராகக் குறிப்பிடவில்லை. பாதுகாப்பு அமைச்சக முன்னாள் அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தைக் குழு ரகசியமானதாக இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை விவரங்கள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அணுக முடியாததாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.
பாரீஸ் கூட்டத்தில், கூட்டு மற்றும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமறும் பிரான்ஸ் தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது. எனினும் சட்ட அமைச்சகம், கூட்டு மற்றும் பல பொறுப்புகளைக் கடைசிபட்சமாக மட்டுமே வலியுறுத்துமாறு பரிந்துரைத்திருந்தது. நிறுவனங்களை இந்திய அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவையாக ஆக்கும் வகையிலும், அவற்றின் மீது மத்தியஸ்தத்தை நிர்பந்திக்கக்கூடிய வகையிலும், மரபு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் தரப்பாக இருக்க வேண்டும் என்பதையே அது விரும்பியது. இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்பட்டது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
பிரான்ஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், கூட்டு மற்றும் பல பொறுப்புகள் ஷரத்தை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் சேர்க்க ஒப்புக்கொண்டனர், ஆனால், செயல்படுத்தக்கூடிய பொறுப்பு இல்லாமல், உறுதியை மட்டுமே வழங்கியது. இதே போன்ற ஷரத்து மரபு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இந்தியத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்குக் கிடைக்கவில்லை. “சப்ளை விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் தொழிற்சாலை சப்ளையர்கள் மீது பிரான்ஸ் அரசுக்கு இருக்கும் பிடியைப் பரிசீலிக்கவும், இது தொடர்பான நமது சட்ட விளைவுகளை அறியும் வகையிலும், மரபு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை இந்தியத் தரப்பு அறியச்செய்ய வேண்டும் எனப் பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பு விரும்பியது. ஆனால் பிரான்ஸ் தரப்பு மரபு ஒப்பந்த மொழியை இந்தியத் தரப்புடன் பகிர்ந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பு தெரிவிக்கிறது. “பிரான்ஸ் தரப்பில் மரபு ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தம் அல்ல” எனத் தெரிவித்தபோது, இந்தியத் தரப்பு இதை அனுமதித்ததுதான் இதைவிட மோசமானது.
பேச்சுவார்த்தைக் குழுவினர், மத்தியஸ்தத்திற்கான இடமாக ஜெனிவாவை ஒப்புக்கொண்டனர். எந்த ஒரு நடவடிக்கையும், சர்வதேச யு.என்.சி.ஐ.டி.ஆர்.ஏ.எல். (UNCITRAL) மத்தியஸ்த விதிகளுக்கு உட்பட்டது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் அரசிடமிருந்து அல்லாமல், சப்ளையர்களிடமிருந்து இந்திய அரசு முதலில் இழப்பீடு பெற முயலும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கி உறுதி அல்லது இறையாண்மை உறுதிக்கும் வழி செய்யப்படவில்லை.
ஜனவரி 13 அன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த வரைவுக்கான கூட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இந்த நேரத்தில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, இரண்டு வார காலத்திற்குள் மோடி அழைப்பின் பேரில் தில்லி வருகை தர இருந்தார். ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் அவர் சிறப்பு அழைப்பாளர்.
அடுத்த வந்த மாதங்களில் இரு தரப்பும் பல முறை சந்தித்தன. எனினும் கூட்டு ஆவணத்தில் எந்த மாற்றமும் இல்லை. உதாரணமாக, மத்தியஸ்தத்தில் உத்தரவிடப்படும் தொகையைப் பெற தனியார் சப்ளையர்களை அணுகுவதற்கு பதிலாக, இந்தியத் தரப்புக்குத் தொகையை வழங்கும் பொறுப்பை பிரான்ஸ் அரசு ஏற்க வேண்டும் என வழி செய்யப்பட வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் பிரான்ஸ் தரப்பு இதை ஏற்கவில்லை.
ஆகஸ்ட் 22இல் பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு, தோவல் முன்னிலையில் கையெழுத்தான கூட்டு ஆவணம், சட்ட அமைச்சகம் தெரிவித்த விஷயங்களை மேற்கொண்டு தொடர்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை முடக்கியதாகத் தெரிவித்தது. ஜனவரி மத்தியப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புகளில், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த உள்ளடக்கம், நிதி அம்சங்கள் தவிர மற்றபடி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது.
பாரீஸ் சந்திப்புகளுக்குப் பிறகு, “வங்கி / இறையாண்மைக்கு பதிலாக லெட்டர் ஆப் கம்ஃபர்ட்டை ஏற்றுக்கொள்வதற்கான பிரான்ஸ் வலியுறுத்தல்” தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பு 18 உணர்த்தியது. இந்த விஷயத்தை பேச்சுவார்த்தை குழு மீண்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ள அமைச்சகம் நிர்பந்திக்கவில்லை. மாறாக, பாதுகாப்பிற்கான காபினெட் குழு முன் பரிசீலனைக்கு வைத்தது. இத்தகைய எதிர்வினை மூலம், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின கருத்துக்களைப் பாதுகாப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. தோவலும் சுஷ்மாவும் இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்த வேண்டாம் என பரிக்கரிடம் தெரிவித்ததை இது உணர்த்துகிறது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு விற்பனையில், இறையாண்மை வாக்குறுதிக்கு விலக்கு அளிக்கும் வகையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதையும் பரிக்கர் கவனத்தில் கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. எனினும் இது சரியான ஒப்பீடு அல்ல. 2016 மே மாதம் ஓய்வு பெறும் வரை, ரஃபேல் ஒப்பந்தத்தில் நிதி ஆலோசகராகச் செயல்பட்ட பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சுதான்ஷு மொகந்தி, இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொள்முதல் ஒப்பந்தம், பிரான்சுடனான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டது என என்னிடம் கூறினார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் அதிகாரபூர்வ அமைப்புகள் மூலம் பாதுகாப்புக் கொள்முதலை மேற்கொள்கின்றன. இறையாண்மை வாக்குறுதி இல்லாவிடினும்கூட சம்பந்தப்பட்ட அரசுகள் அவற்றுக்கு பொறுப்பேற்கின்றன. பிரான்சில் இத்தகைய முறை இல்லை.
வரைவு ஒப்பந்தத்தின் இறுதி வடிவம், ஜூலை 14இல் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் வைக்கப்பட்டது. சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்காக இது அனுப்பி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 23இல் அதற்கு பதில் கிடைத்தது. பதிலுக்கு முன்னர், குறிப்புகள் 12 மற்றும் 18 பாதுகாப்பு அமைச்சகத்தால் சட்ட அமைச்சகத்திற்குத் அனுப்பி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த விமானப்படை தளபதி ஒருவரால் எழுத்ப்பட்ட குறிப்பு 12, தற்போதுள்ள வரைவில் உள்ள நிலைகளை ஏற்றுக்கொண்டிருந்தது. பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாகச் சட்ட அமைச்சகம் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கிறது. இதற்கு விளக்கமாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கூட்டு மற்றும் பல பொறுப்புகளைச் சேர்க்க பிரான்ஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இதே ஷரத்து மரபு ஒப்பந்தத்திலும் சேர்க்கப்படும் எனவும் இந்தியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பு தெரிவிக்கிறது. சப்ளையர் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கையின்போது பொறுப்புகளுக்கான வரம்பை நீக்குவது மற்றும் சப்ளையரின் பொறுப்பு மொத்தத் தொகைக்குக் குறைவாக இருக்கக் கூடாது என 229 குறிப்பில் சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்த இரண்டு மாற்றங்களைப் பேச்சுவார்த்தைக் குழு பெறவில்லை என்பதை இந்தக் குறிப்பு கவனத்தில் கொள்ளத் தவறியது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, இழப்பீட்டை பிரான்ஸ் அரசு நேரடியாக வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த கூடாது எனக் குறிப்பு 12 தெரிவித்தது. வேறுவிதமாக செயல்பட்டால், “இந்தியத் தரப்புக்கு எந்தக் குறிப்பிடத்தக்க சாதகமும் இல்லாத நிலையில்… பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐஜிஏவில் உரையாடல்களை மீண்டும் துவக்கி வைக்கும்” எனக் குறிப்பிட்டது. தற்போதுள்ள வழிமுறைகளை அரசு அல்லது பொருத்தமான அமைப்பு மேலே சொன்ன காரணங்களுக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பது விமானப் படை தலைமையகத்தின் கருத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விமானப் படைக்குப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானப் பிரிவு அளித்த குறிப்பு 18, புதிய பரிசீலனைக்காகச் சிக்கலான கேள்விகளை எழுப்பியது. ஒப்பந்தத்தில் அரசிடமிருந்து அரசுக்கான தன்மை, பிரான்ஸ் அரசு தரப்பு வழங்கிய வழிமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா எனும் குறிபிட்ட கேள்விக்குச் சட்ட அமைச்சகம் முன்னதாக பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்திய அரசின் சட்ட மற்றும் நிதி நலன்கள் போதுமான அளவுக்குக் காக்கப்படும் வகையில் ஒப்பந்தத்தின் தன்மை தக்க வைக்கப்படுவது அவசியம் என மேலும் குறிப்பிட்டிருந்தது.
இது மிகவும் முக்கியமான கருத்து. பாரீசில் மோடி முதலில் அறிவிப்பை வெளியிட்டது முதல், முன்னர் இருந்த டெண்டர் முறையை விட, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் புதிய ரஃபேல் ஒப்பந்தம், இந்தியாவுக்கான நலன்களை மேலும் சிறப்பாகப் பெற்றுத்தரும் என்பதே அரசு பொதுவெளியில் கூறி வந்த காரணம். அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பு 18 சுருக்கிக் கூறியது: வாங்கியவற்றை வழங்கும் பொறுப்பு வெளிநாட்டு அரசுக்கு உரியது. பிரச்சினைகள் அரசுகளுக்கு இடையிலான மட்டத்தில் மட்டும் தீர்த்துக்கொள்ளப்படும். சட்ட அமைச்சகத்தின் முந்தைய பதில்களில் ஒன்றான குறிப்பு 229, இந்த அம்சங்களை ஒப்பந்தம் பூர்த்தி செய்யாதது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. இதற்கு தீர்வாக பரிந்துரைக்கப்பட்டவை வரைவில் இடம்பெறவில்லை.
இந்த வரைவு முதல் முறை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பிரான்ஸ் வழிமுறைகளின் சட்ட பரிசீலனைக்குப் பிறகு, உரிமைங்கள் மற்றும் பொறுப்புகளின் மாற்றம் தொடர்பான வழிமுறைகள் மட்டுமே அது அங்கீகரிக்கும் எனக் குறிப்பிட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தம் அரசுகளுக்கு இடையிலான தன்மை கொண்டதா என்பது குறித்துச் சட்ட அமைச்சம் பதில் எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மாற்றம் தொடர்பாக மற்றும் பொறுப்புகளுக்கான வரம்புகள் தொடர்பாக, நாங்கள் முன்னர் தெரிவித்ததுபோல, பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக ஒப்புக்கொள்வது மற்றும் இந்த அம்சம் திருத்தப்பட்ட வரைவில் இடம்பெறுவது ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு சர்ச்சைக்குரிய அம்சங்களும் நிலுவையில் இருப்பதாகவும், பிரச்சினைகள் தீர்வு மற்றும் உத்திரவாதங்களில் தங்கள் பரிந்துரைகளை பிரான்ஸ் அரசு ஏற்கவில்லை என்றும் பதில் தெளிவாக உணர்த்துகிறது. இவற்றில் பொறுப்பை மேலதிகாரிகளுக்கு விட்டு விடுவதற்கும் பொருத்தமான அளவில் நிர்வாக முடிவு எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சட்ட அமைச்சகத்தின் பரிந்துரை பெற்ற பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதே போல முடிவு எடுத்து, முடிவை பாதுகாப்புக்கான காபினெட் குழுவிடம் ஒப்படைத்தது. மோடியை தலைவராக கொண்ட அந்த குழு, தற்போதைய வடிவில் ஒப்பந்தத்துக்கு, அமைச்சகம் தனது நிலையைத் தெரிவித்த சில நாட்கள் கழித்து ஆகஸ்ட் 24இல் ஒப்புதல் அளித்தது. ஆட்சேபணைகளை மீறி பல்வேறு தவறுகளை கணக்கில் கொள்ளாமல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக அவசரம் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு 12, 18, சட்ட அமைச்சகத்தின் பதில், குழுவின் ஒப்புதல் ஆகிய எல்லாமே ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்துள்ளன.
ரஃபேல் ஒப்பந்தத்தின் இணைப்புகளில் ஒன்று சரிபார்க்கப்படாத நிலையிலே, பாதுகாப்புக்கான காபினெட் குழு, இதில் கையெழுத்திட்டதிலிருந்து புரிந்துகொள்ளலாம். 2006இல் கையெழுத்தான பரஸ்பர கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் வரும் என்பதை இணைப்பு வலியுறுத்தியது. சட்ட அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்தபோது, இந்த முக்கிய அம்சம் குறித்து மவுனம் காத்ததாக செப்டம்பர் 20 தேதியிட்ட பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கான காரணத்தைக் குறிப்பு அளிக்கவில்லை.
செப்டம்பர் 21ல் எந்த ஆட்சேபணையும் இல்லாமல் சட்ட அமைச்சகம் இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்கள் கழித்துப் பொது நிகழ்ச்சியில் இந்திய, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சாகர்
நன்றி: தி கேரவன்
https://caravanmagazine.in/government/hidden-story-doval-modi-cabinet-undermined-india-interests-rafale