இந்த அற்புதமான மதத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சமீப காலம் வரை இந்துவாகப் பிறந்து வளர்ந்த நான் யோசித்ததில்லை. நாத்திகம் பேசும் அல்லது வேறு மதத்தைச் சார்ந்த நண்பர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய என் மதத்தின் தன்மையையும், அதிலிருக்கும் தத்துவரீதியான அணுகுமுறை கடவுளை அடைய எனக்கு எப்படி வழிகாட்டியது என்பதையும் மதத்தைப் பற்றிய எவ்வித அசௌகரியமான உணர்வும் இல்லையென்றும் என்னால் பெருமையாக விளக்க முடிந்தது.
வடகிழக்கு இந்தியாவில் ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற நான் சிலமுறை சர்ச்சுக்கும் சென்றுள்ளேன். சிலமுறை ஊரிலுள்ள அற்புதமான சர்ச்சில் கிறிஸ்துமஸின்போது நள்ளிரவு பிரார்த்தனைக்கும் சென்றுள்ளேன்; ஏசுவின் புகழ்பாடும் குழுப் பாடல்களையும் நிறைய கேட்டுள்ளேன்.
அதனால் ஒரு இந்துவாக நான் குறைந்துவிடவில்லை. நமது இயற்கையான வெளிச்சம், வெப்பத்துக்கான் ஆதாரமான சூரியக் கடவுளை ‘ஓம் ஜபகுசுமா சம்கஷ்யம்’ என வழிபடும் ‘கடவுளே உலகம்’ என்ற அடிப்படைத் தத்துவத்தை 8 வயது சிறுவனான எனக்கு வழிபாடு மூலம் அம்மா கற்பித்தது என்னை விட்டுச் சென்றுவிடவில்லை. நாட்கள் செல்லச் செல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் உலகு, அண்டம், சூரியன், நிலா, நட்சத்திரங்கள், தாவரங்கள், நீர்நிலைகள், பூவுலகில் மனிதனுக்கான இடம் ஆகியவற்றை வழிபடுவதில்தான் இந்து மதத்தின் ஆணிவேர் இருக்கிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன். சமஸ்கிருதம் நன்கு தெரிந்த என் மனைவிதான் உலகோடு ஒன்றிணைவதன் அற்புதமான அம்சங்கள் பற்றி விளக்கினாள். இதில் முக்கியமானது ‘ஓம் த்யோ சாந்தி’ என்கிற பிரார்த்தனைதான்.
சொர்க்கத்தில் அமைதி நிலவட்டும். வானத்தில் அமைதி நிலவட்டும். பூமியில் அமைதி நிலவட்டும். நீர்நிலைகளில் அமைதி நிலவட்டும். செடிகளில் அமைதி நிலவட்டும். மரங்களில் அமைதி நிலவட்டும். கடவுள்களிடையே அமைதி நிலவட்டும். பிரம்மனிடம் அமைதி நிலவட்டும். எல்லோரிடமும் அமைதி நிலவட்டும். அந்த உண்மையான அமைதி எனதாகட்டும் (1954இல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஸ்வாமி யதீஸ்வரானந்தாவின் உலகளாவிய பிரார்த்தனை என்ற புத்தகத்தில் உள்ள வரிகள்).
இத்தகைய பிரார்த்தனைகள் பிற உயிரினங்களுக்குத் தடங்கல் ஏற்படுத்துவது, வெறுப்பது, அவமரியாதை, கவனமற்று இருப்பதைக் கற்றுத்தரவில்லை. வெறுப்பு, பகைமை உணர்ச்சி, மனித சமூகத்தை வெறுப்பது ஆகியவற்றை வேதங்கள் கற்றுத்தரவில்லை. சாமவேத அர்ச்சனைகளிலிருந்து பிறந்த கர்நாடக இசையில் கிறிஸ்தவ (அ) இஸ்லாம் பாடல்களுக்கு இடமில்லை; சிலர் இப்படியான புது விவாதத்தைத் துவக்கும் முயற்சியில் இருக்கின்றனர். கலைஞர்கள் பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்; டி.எம். கிருஷ்ணா போன்ற ஒரு சிலர் மட்டுமே இதை எதிர்த்துள்ளனர்.
எல்லாவற்றையும் தூய்மையாக்கும் அக்னியைப் போற்றும் சாமவேதத்தின் ஆரம்ப சுலோகங்களில் பின்வருவன அடங்கும்:
“அக்னியே, அனைத்து விதத் தீங்குகளிலிருந்தும் நீ எங்களைக் காப்பாயாக, மனிதர்களின் வெறுப்பிலிருந்தும் காக்க வேண்டும்!”
நிலையற்ற மனிதர்களின் இந்த வெறுப்புதான் தற்போதைய இந்தியாவின் அரசியல் பேச்சு மற்றும் மதச் சொற்பொழிவின் முக்கிய அம்சமாகி வருகிறது. அப்படியானால், பிரிவினை எண்ணங்களைக் கொண்டுள்ளவர்களின் இந்து மதமானது எனது இந்து மதத்தைவிட வித்தியாசமானதா?
உலகில் ஒரே விஷயத்தைப் பற்றி மாற்றுக் கருத்துக்கள் பல இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தின் குறிப்பிட்ட வலதுசாரி அமைப்புக்களுக்கு மட்டும் ‘காப்புரிமை’ சொத்தாக இந்துத்துவம் என்ற வார்த்தை ஆகிவிட்டது. இதை ஆங்கிலத்தில் ‘இந்துயிசம்’ எனச் சொல்லலாம்.
இங்கு இருவிதப் பிரச்சினைகள் உள்ளன: ஒன்று, கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்ட சமூகம் சார்ந்த உலகம்.
ஒருவரின் மதம் அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது மற்றொன்று சமூகத்தை உள்ளடக்கிய உலகம் சார்ந்தது; இந்த சமூகத்தை உள்ளடக்கிய உலகம் சார்ந்த மதம் ; இது குடியுரிமை அல்லது அரசு அமைப்பின்படி அளக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசம் ஆகிய இரு வார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது நமது இயல்பான, சமூக அளவிலான சுற்றுப்புறச் சூழல் கட்டமைப்புக்குத் தீங்கு நேரும் விதத்தில் மாற்றப்படுகிறது.
என் வேர்களைக் கேள்விக்குள்ளாக்குதல்
நான் வளரும்போது எனது குடியுரிமை பற்றி அவ்வளவாக நினைக்கவில்லை. இளம் தேசம் ஒன்றின் இளம் குடிமகன் என்ற முறையில் அடையாளத்தைத் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. எவ்வளவு அதிருஷ்டம் மிக்கவனாக அப்போது நானிருந்தேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். உயர் ஜாதியில் உள்ள நடுத்தர இந்து குடும்பத்தின் குடிமகனாக எவ்விதத்திலும் எனக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை. இப்போது 70 வயதுக் குடிகமனாக எனது வேர்கள், நம்பிக்கைகள், எண்ண ஓட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறேன்.
எல்லாமே தவறான விஷயமா? நாம் படித்த வரலாறு கோணலானதா? 1857இல் நடந்தது ‘சிப்பாய்க் கலகம்’தான் என்றும் அது முதல் இந்திய சுதந்திரப் போர் கிடையாது என்றும் ஆங்கிலேய ஆட்சிக்குப் பின் நாம் படித்தோம். சுதந்திரப் போர் என்பது சொல்வதற்கு நன்றாக இருந்தாலும் தேசத்தின் சில பகுதிகளில் மட்டுமே அது நடைபெற்றது. அப்படியென்றால், எனது ‘அற்புத’ பாரதம், அதாவது இந்தியா, அப்போது எப்படி இருந்தது? பெரும் கலாசார பலம் இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட குறுராஜ்ஜியங்களாக சிதறி இருந்த நாடு 1947க்குப் பின்னர்தான் திறனுள்ள தலைவர்களால் ஒன்றிணைக்கப்பட்டது.
பொறுமையாக இன்றைய களப்பின்னணியில் நாம் சமப்படுத்த வேண்டிய பல முரண்பாடுகள் அரசியல், சமூகப் பிரிவினைகளால்தான் தெரியவந்தன. நமது தலைவர்கள் அப்போது ஆணவமின்றி இருந்தனர், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அவர்கள் சுதந்திரம் என்பது மூச்சுவிடுவது போல ஒரு அடிப்படை விஷயம் என்று நம்பினர்.
நாம் பெருமையுடன் நினைவுகூரும் நமது ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பிரிவினையின்போதுதான் தெரியவந்தது என்பதுதான் கொடுமை. இரு நாடுகளும் – இப்போது மூன்றாக ஆகிவிட்டன – பிரிந்த பின்னர் அந்த பிரச்சினைகளின் தாக்கம் குறைவதை இன்னும் நாம் விரும்பவில்லை. தாய்நாட்டிலேயே இருக்க விரும்பிய முஸ்லிம்களுக்கு இப்போது வயதாகிவிட்டது. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு வேறு தாய்நாடு இல்லை; ஆனால் அவர்கள் மீது தான் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளது
பல நூற்றாண்டுகளுக்கு முன் துருக்கியர்கள் முதன்முதலில் நம்மை முற்றுகையிட்டபோது நடந்தவைகளுக்கு இந்த முஸ்லீம் மக்கள் மன்னிப்பு கோருவது போல. ஆனால், நமது நிலத்தில் முதன்முதலில் வசித்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து 125,000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கலாம், அப்படியானால் நாமெல்லாம் யாருமில்லா நிலத்தை ஆக்கிரமித்த குற்றவாளிகளா?
துயர்மிகு உலகின் தொடக்கம்
உலகளாவிய பார்வையை விடுத்து, இன்றைய நவீன எண்ண ஓட்டத்திற்குச் சற்றும் ஒவ்வாத கட்டுப்பாடான மதக் கலாசாரத்தை நோக்கி நாம் நகரத் தொடங்கிவிட்டோம். இது துயர்மிகு உலகின் தொடக்கமாகும். ஆனால் இது இது எப்படி நிகழ்ந்தது? சாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறிவிடலாம் என்று நமக்குத் தெரியும்; ஆனால் இது எப்போது நடக்கிறது என்றே தெரியாது. சில குடிமக்களின் மனதில் இந்துயிசம் என்ற குழப்பமான எண்ண ஓட்டமானது அதிதீவிர, பெரும்பான்மையினம் சார்ந்த நாட்டுப்பற்றாக மாறியது இப்படித்தான். ரிக்வேத காலத்தில் தொடங்கிய கட்டுப்பாடு மிகுந்த இந்து மதச் சித்தாந்தங்கள் மனிதனின் சிக்கலான எண்ண ஓட்டம் பற்றி இவ்வாறு சொல்கின்றன:
“உயிரினத்தின் தொடக்கம் – அதை அவர் உருவாக்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும் – உயர் சொர்க்கத்திலிருந்து எவரது கண்கள் இந்த உலகத்தைக் கட்டுப்படுத்துகிறதோ – அவருக்கு இது தெரியும், அல்லது தெரியாமலும் இருக்கலாம்.”
நான் பெற்ற ஞானத்தின்படி மதம் என்பதன் சாரம் சகிப்புத்தன்மையையும் பன்முகம் கொண்ட வாழ்க்கை முறையையும் ஒத்துக்கொள்வது. இன்று நாம் காணும் பல அடுக்குள்ள தெளிவற்ற புதிய இந்துத்துவத்தில் சிறிய விஷயம் பற்றியெல்லாம் சர்ச்சை மிகுந்த இரட்டைப்பேச்சு பேசும் பாணியே உள்ளது.
ஒரே ஒரு விதக் கருத்து மட்டும்தான் சொல்லப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்வது போல இந்திய அரசியல் விவாதத்தில் தற்போது களேபரம் மட்டுமே இருக்கிறது. கடந்த காலத்தில் என் மதத்தினர் கோபம் காட்டாமல், போரிடாமல் இருந்ததில்லை என என்னால் பொய் சொல்ல முடியாது, தற்போதைய நவீன அரசில் என் மதத்தை வேறெந்த மதமோ மீறிவிடலாம் என்ற பயம் எனக்கு இருக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. அதனால் எவ்வித எதிர்மறை நடவடிக்கையும் என்னிடமிருந்து வெளிப்படாது.
நவீன அரசு எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக இயல்பான கருத்து கூறும் நிலையை தீவிர நாட்டுப்பற்று ஏன் எதிர்க்கிறது? வியூகரீதியான தாக்குதலை ஏன் மாணவர்களிடத்தில் கொண்டு செல்கிறோம்? இத்தாக்குதல்களாலும் வங்கதேசம் (உருவான) போராலும் கார்கில் போராலும் நமக்குக் கிடைத்தது என்ன? போரை எதற்காக நாம் கொண்டாட வேண்டும்?
மதத்தை அரசுடன் கலப்பது
கூட்டமாக அடித்துக் கொல்வது தவறு என ஆர்.எஸ்.எஸ். தலைவரும் பிரதமரும் கூறுகின்றனர், ஆனால் இதற்கு காவல் துறையும் தலைவர்கள் சிலரும் ஏன் ஆதரவு தருகின்றனர்? பசுவை ‘தேசிய மாதா’ என்று கூறிய உத்தராகண்ட் சட்டமன்றத் தீர்மானமானது நவீன அரசியலமைப்புக்கு எதிராக அரசையும் மதத்தையும் கலக்கிறது என்று சொல்லலாம் இல்லையா?
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையை பாஜக தலைவர் எப்படி மீறலாம்? இதில் காங்கிரசும் பாஜகவும் மட்டரகமான அரசியல் ஒற்றுமையைக் காட்டுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 4-5 மாதங்களில் நடைபெற உள்ளதால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினையைப் பற்றிய போர் முழக்கம் கேட்க ஆரம்பித்திருக்கிறது; நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது கோயில் கட்ட ஏதுவாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டுமென வலதுசாரி இந்து அமைப்புக்கள் விரும்புகின்றன. உச்ச நீதிமன்றத்தால் இன்னும் விசாரிக்கப்பட்டுவரும் இவ்வழக்கில் ஒரு அவசரச் சட்டம் இருந்தால்கூட அவர்களுக்கு சந்தோஷம்தான்.
நமது புதிய மதப்பாணியை கடைப்பிடிக்காதவர்களிடம் பயத்துக்கு நடுவே நான் சொல்வது இது: ‘பெருமையாக இந்துத்துவத்தைக் காட்டும் பாணி பெரும்பாலான இந்துக்களுக்குப் பிடிக்காது என்று நான் நம்புவது தவறா? சிகாகோவில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மதங்களின் கூட்டத்தில் நவீன இந்தியாவின் மாபெரும் துறவியான விவேகானந்தர் சொன்ன ஞானக் கூற்றை நான் நினைத்துப் பார்க்கிறேன்:
“…தன் மதம் நிலைக்க வேண்டும், பிறர் மதம் அழிய வேண்டுமென யாராவது நினைத்தால், என் மனதின் ஆழத்திலிருந்து அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். எதிர்ப்பையும் மீறி “உதவுங்கள், சண்டையிடாதீர்கள்”, ஆக்கபூர்வமாக செயல்படுங்கள், அழித்தலை கைவிடுங்கள்”, “ஒருங்கிணைந்து சமாதானமாக வாழுங்கள். வேறுபாடுகளை களையுங்கள் என்ற வார்த்தைகள் கூடிய சீக்கிரம் ஒவ்வொரு மதத்தின் பக்கத்திலும் எழுதப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.
அபிஜித் சென் குப்தா
(அபிஜித் சென் குப்தா இந்திய அரசில் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.)
நன்றி: தி வயர் (https://thewire.in/religion/hinduism-hindutva-religion)
உண்மையில் அவர்கள் தான் குமரி கண்டம் பூர்வீக குடிமக்களை விரட்டியவர்கள்
மக்களை மதத்தின் மூலம் பிரித்து மனிதநேயத்தை பதவி சுகத்திற்காக அழிக்க முயலும் ஒரு கூட்டம் அதை அடையாளம் கண்டு ஒழித்தால் மட்டுமே நாட்டில் அமைதி நிலைத்திருக்கும்.
எல்லாம் சரி. சுத்தி இருக்கிற உன் நண்பர்கள் எல்லாம் உன் மதம் சரியில்லை. மதம் மாறிவிடு என்கிறான். தீவிர இந்துவாகத் தெரிநதால் வெட்டிக் கொள்கிறான். தமிழக மண்ணில் இந்துத்துவா உருவாகி விடக் கூடாது என்று உன் நண்பன் அதி தீவிரமாக இருக்கிறான். இன்றும் உன் நாட்டில் கிறிஸ்தவன் உண்டாக்கிய சட்டமும், அவனுக்கு அவன் மார்க்கம் சார்ந்த சட்டமும் தானே நடைமுறையில் இருக்கிறது. இந்துவாக இந்தியாவில் வாழ நான் தான் பயப்படுகிறேன். அவர்கள் அல்ல. நீ சார்ந்த திராவிடமும், ஓட்டு வேட்டையாடும் காங்கிரஸும் என்னை எதிரியாகத் தானே பார்க்கிறது. சமீபத்திய அதன் தெலுங்கானா வாக்குறுதி அதைத்தானே காட்டியது. கோயில் சொத்துக்களை பங்கு போட்டு கொள்ளையடிக்கும் திமுக, சர்ச்சுக்குள்ளும், மசூதிக்குள்ளும் புகுந்து கணக்கு கேட்பதோ, கொள்ளையடிப்பதோ இல்லையே?