ஆட்சிக் காலம் முடியும் கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை மோடி ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று ரீதியாகப் பல ‘முதல் சாதனை’களைத் தான் செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அவர் உண்மையாகவே தன்னுடைய முதல் சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புகூட நடத்தாத முதல் பிரதமர் இவர்தான்.
தன்னுடைய ஆட்சிக் காலம் முடிவதற்கு மிகச் சில மாதங்களே உள்ள நிலையில், தானோ தன் அரசாங்கமோ ஊடகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை. உண்மையான ஜனநாயகத்திற்கு இது எந்த அளவிற்கு அடிப்படையான தேவை என்றால், “பொய்யான செய்திகள்” என்று தொடர்ந்து குமுறிக்கொண்டும், முரட்டுத்தனமான ஊடகம் என்று எப்போதும் கூறிக்கொண்டும் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்கூடத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துகிறார். மேலும், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நடைமுறையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிருபர்களை அன்றாடம் சந்தித்துப் பேசும் வழக்கத்தை கையாண்டு வருகிறார்.
பல்லாண்டு கால மரபை நிறுத்துதல்
மோடி, தனக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேலியாக “மௌன் மோகன் சிங்” என்றழைப்பார், ஆனால், ஊடகத் துறையிடம் அமைதி காப்பதில் சிங்கை விஞ்சிவிட்டார் மோடி.
மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். சிங் பரிந்துரைக்கப்பட்ட பிரதமர். ஆனாலும், சிங் பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலிருந்து விலகிச் செல்லவில்லவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு சந்திப்புகளை நிகழ்த்தியதோடு, வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலேயே பத்திரிக்கையாளர்களுடன் பேசவும் செய்திருக்கிறார்.
வலதுசாரிகளின் பாராட்டுகளுடன், மோடி, தலை சுற்றவைக்கும் தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் – ஏறத்தாழ 40 – மூலம் ஊடகச் சந்திப்பை ஒழித்துக்கட்டிவிட்டார்.
வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமருடன் செல்லும் ஊடகத்தினருக்காகச் செலவு செய்வது பற்றி மோடி விமர்சித்தார். அதெல்லாம் தன் அரசுக்குக் கட்டுப்படியாகாது என்றார். ஆனால், உண்மை நிலை சற்று வித்தியாசமானது. பிரதமருடன் செல்லும் பத்திரிக்கையாளர் ஏர் இந்தியா விமானத்தில் செலவில்லாமல் சென்றாலும், தங்கும் இடம், உணவு போன்ற செலவுகளைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும்.
பிரதமருடன் செல்லும் இந்த நடைமுறையால் பத்திரிகையாளர்களுக்கு, உயர் அதிகாரிகளிடமும், மந்திரிகளிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இது அரசின் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும். பல ஜனநாயக நாடுகளிலும் இதுதான் நிகழ்கிறது.
ஊடகத்தின் மீது தனக்கு மரியாதை இல்லை என்பதை மோடி ரகசியமாக வைக்கவில்லை. இரண்டு தொலைக்காட்சிகளுக்கு மட்டும், கவனமாக வடிவமைக்கப்பட்ட நேர்காணல்களை அளித்துள்ளார். ஒருமுறை, அந்தக் குழுமத்தின் நிறத்தில் உடைகளை அணிந்துகொண்டு, அவர்கள் தங்களுடைய தொலைத்தொடர்பு சம்பந்தமான முழுப்பக்க விளம்பரத்திற்கு பயன்படுத்தினர். அந்த நேர்காணல், எதிர்பார்க்காமலேயே நகைச்சுவையாக இருந்தது. மோடியைக் கண்டு வியப்பில் ஆழ்ந்த தொகுப்பாளாரும், மோடியே கேள்விகளையும் கேட்டு பதிலையும் சொன்னதும், சில இடங்களில் தனியாகப் பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு மெருகேற்றியது.
ஒருமுறைகூட, அந்த “ஊடகவியலாளர்” குறுக்கிடவோ, தொடர்ந்து ஒரு கேள்வியைக் கேட்கவோ செய்யவில்லை. செய்தி ஊடகத்தில் பதிக்கப்பட்டிருக்கும் ‘மோடி மெகாஃபோன்’களுக்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.
தன்னுடைய அமைச்சர்களும் தன்னைப் பின்பற்றுவதை மோடி உறுதிசெய்தார். சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளாவதையே தன் கடமையாகக் கொண்ட தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானியைப் போல அவர்கள் கோபமாக நடந்துகொண்டார்கள். அல்லது பத்திரிக்கையைச் சந்திக்கவே பயம் கொண்டனர். இதற்கு முன்பு பத்திரிக்கைத் துறையுடன் நல்ல உறவில் இருந்த உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கும் ஊடகங்களிடமிருந்து விலகியே இருக்கிறார். பிரதமர் அலுவலகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் அவரைப் பம்ம வைத்துவிட்டன போலும்.
பத்திரிகைத் தகவல் அமைப்பு (Press Information Bureau) முன்பெல்லாம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு (accredited corespondents) அரசுத் துறைகளில் பிரச்சனைகள் இல்லாமல் சென்று வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கும். இதுவும் இப்போது நடப்பதில்லை. நம்மிடம் PIB அடையாள அட்டை இருந்தாலும், யாரைச் சந்திக்கப் போகிறோம் என்பதை நாம் சொல்லியாக வேண்டும். அந்த அதிகாரி அதன் பின்னர் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறார். ஊடகங்களுக்குச் செய்தி தரும் பல “வட்டாரங்களும்” தற்போது செய்தியற்று இருக்கின்றன. அன்றாடம் தகவல்களைப் பெறவே பத்திரிக்கையாளர்கள் இதற்கு முன்பு சந்தித்திராத பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்.
இதனால் அரசாங்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மக்கள் முக்கியமான பல தகவல்களைப் பெற வழியில்லாமல் இருக்கிறார்கள் காரணம், அரசு, தான் வெளியில் சொல்ல விரும்பாத தகவல்களை மறைக்க ஊடகத்தினரை அச்சுறுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிரதமர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரமும் மையப்படுத்தப்பட்ட நிலையில், மோடி ஆட்சிதான் RTI கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. காரணம் இல்லாமல் நிராகரிக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது.
பிரதமர் ஊடகத்தின் அல்லது மக்களின், எந்தவிதக் கண்காணிப்பிற்கும் அப்பாற்பட்டவராகத் தன்னைக் கருதிக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவு.
பிரதமர் ஒரு ஊடக ஆலோசகனை வைத்திருக்கும் பழக்கத்தையும் மோடி நிறுத்திவிட்டார். இந்த ஆலோசகர் பிரதமருக்கும் ஊடகத்திற்குமான இணைப்பாகச் செயல்படுவார். அடல் பிஹாரி வாஜ்பாய் உட்பட மோடிக்கு முந்தைய அனைத்துப் பிரதமர்களும், மூத்த பத்திரிக்கையாளரையோ அதிகாரியையோ ஆலோசகராக வைத்திருந்தனர். இப்போது பிரதமர் அலுவலகத்தில் யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும் என்பதே ஊடகத்திற்குத் தெரியவில்லை.
இதற்கு முன்பு மந்திரிகளுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நாடாளுமன்றத்தின் மத்திய அறையில் தொடர்புகொள்ள முடிந்த ஊடகவியலாளர்களால், இப்போது முடியவில்லை. அங்கும் நம்பகமான மோடி ஊழியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அந்த குஜராத்திய அலுவலர், வாயிலில் நின்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பாஜக அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்கிறார்.
பகிரங்கமாகக் கண்காணிக்கப்படும் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களும் பத்திரிக்கையாளர்களைத் தவிர்க்கிறார்கள். “மூத்த அச்சு ஊடக ஆசிரியர் ஒருவரைச் சந்தித்துச் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, மேலிடத்திலுள்ள கட்சித் தலைவரிடமிருந்து, நான் என்ன பேசினேன் என்ற கேள்வி எழுந்தது. என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது”, என்கிறார் ஒரு மூத்த அமைச்சர்.
மோடியை முதலமைச்சராக சந்தித்த குஜராத்தி பத்திரிக்கையாளர்களுக்கு இது புதிதல்ல. மோடி காந்தி நகரிலும் இதையேதான் செய்ததாகச் சொல்கிறார்கள். மேலும், மோடியின் காலத்தில் சட்டசபை கூடுவதே அபூர்வம். அப்படியே கூடினாலும் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதிலும் மோடி கவனமாக இருப்பாராம்.
நாடாளுமன்ற அறைக்குள் நுழைவதற்கு முன்பு தரையில் விழுந்து கும்பிட்டாலும் மோடி “குஜராத் மாதிரி”யைத்தான் டெல்லியில் நிறுவியிருக்கிறார். குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முந்தைய குளிர்கால கூட்டத் தொடர் இதற்குச் சான்று. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் மோடியும் அவர் சகாக்களும் மும்முரமாக இருந்ததால், இக்கூட்டத் தொடர் நிறுத்தப்பட்டது.
மோடி தன்னுடைய ட்விட்டரிலும், நமோ செயலியிலும், மன் கி பாத் நிகழ்விலும், தான் மட்டுமே பேசுவதைத்தான் விரும்புகிறார். மோடி ஆடும் இந்த ஒரு வழிப் பாதை விளையாட்டில் கேள்விகள் அனுமதிக்கப்படுவதோ, பொறுத்துக்கொள்ளப்படுவதோ இல்லை.
வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள், மோடி அரசாங்கத்தைப் பற்றிப் புகழாமல் கட்டுரை எழுதினால் தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கருதுகிறார்கள். ஃபிரஞ்சு பத்திரிக்கை ஒன்றின் மூத்த ஆசிரியர் ஒருவர் இப்படிக் கேட்கிறார்: “எப்படி ‘லவ் ஜிஹாத்’தையும், மாட்டிறைச்சி உண்டதற்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் மோடியின் திறமையான அரசாங்கத்தின் எடுத்துக்காட்டாக எழுத முடியும்? அல்லது பணமதிப்பிழப்பு போன்ற பேரழிவை எப்படிப் புகழ்ந்து எழுதுவது? மகிழ்ச்சியற்ற அமைச்சர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வரும். அதைப் போடு என்று, அவ்வளவுதான். அதன் பிறகு, தொடர்பு கிடைக்காது”.
சுவாரஸ்யமாக, மோடிக்கு சுதந்திரமான ஊடகத்தைத்தான் பிடிக்கவில்லை. முன்னாள் பாஜக அமைச்சர் அருண் ஷௌரி “வட கொரிய சேனல்கள்” என்று வர்ணிக்கும் சில சேனல்கள், எப்போதுமே எதிர்க்கட்சிகளைத் தாக்குவதிலும் குறை கூறுவதிலுமே நேரத்தைச் செலவழிக்கின்றன. இவையும், மோடியின் ஆட்சிக்குக் கீழ் வந்திருக்கும் சில பிரச்சார வலைத்தளங்களும் வளர்ந்துவருகின்றன. மறைமுகமாக பாஜக நிதியையும் பெறுகின்றன.
ஜனநாயகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள, அமைப்புசார் பொறுப்பின் மீது மோடிக்கு இருக்கும் வெறுப்பு மிகவும் அச்சுறுத்தும் முன்னெச்சரிக்கையாகும். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றைக்கூட நிகழ்த்தாத மோடி, எல்லா ஊடகத்திற்கும் அப்பாற்பட்டு தான் இருப்பதாக நம்புகிறார். இந்தப் போக்கு சந்தேகத்திற்கு இடமின்றி மோடி இந்திய ஜனநாயகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியூட்டும் விளைவாகும்.
ஸ்வாதி சதுர்வேதி
நன்றி: தி வயர் (https://thewire.in/media/narendra-modi-press-conference)
தமிழில்: ஆசிஃபா