பாஜகவின் வெறுப்பரசியல் வெற்றிபெறலாம்; ஆனால், நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்கிறார்கள் பள்ளி மாணவர்கள்
ஒரு பௌணர்மி அன்று, அருகிலிருக்கும் ஒரு விமான தளத்திலிருந்து விமானங்கள் தலைக்கு மேலே சென்று கொண்டிருக்க, என்னுடைய மகள் படிக்கும் ஒரு பள்ளியில், மெய்மறந்த மகிழ்ச்சியுடன் கூடியிருக்கின்ற பெற்றோர்களின் கூட்டத்தில் இணைந்து நின்றிருந்தேன். புதிய இந்தியர்களான எங்களது குழந்தைகள், மேடையேறி, புதிய இந்தியாவுக்கான இசையையும் செய்திகளையும் எங்களுக்கு அளித்தனர். நான்கு மணி நேரத்திற்கு அவர்கள் பாடியது நம்பிக்கையையும் பாகுபாட்டையும் அவநம்பிக்கையும் இறுதியில் வெல்லப்போகும் நம்பிக்கையையும் எங்களுக்கு நினைவூட்டுவதாக அமைந்தது. அவர்கள் 17ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கவிஞரும் இசைக் கலைஞருமான கனகதாசாவின் கீர்த்தனைகளை பாடினர். கனகதாசா சாதியின் தூய்மையைக் கேள்விக்குள்ளாக்கியவர்.
பிறகு அவர்கள் வங்க மொழியைப் பயன்படுத்தி ரவீந்தரநாத் தாகூரின் சண்டாளிகா என்ற நாடகத்தை அரங்கேற்றினர். அந்த நாடகமானது சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவரும் ஒடுக்கப்பட்டவருமான தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதாகும், ஒரு புத்த பிட்சு அவளிடமிருந்து தண்ணீரை ஏற்றுக்கொண்டு எப்படி அவளின் வாழ்க்கையையே மாற்றினார் என்பது குறித்த நாடகமாகும்.
தமிழிலும் மலையாளத்திலும் அவர்கள் பாடினார்கள், தேயம் என்ற ஒரு வகையான வழிபாட்டு முறைக்கு ஏற்பவும் அவர்கள் நடனமாடினார்கள். அது இந்து மதத்தைச் சேர்ந்த மடாதிபதியான சங்கராச்சாரியாருக்குப் பாகுபாட்டிற்கு எதிராகப் பாடம் கற்பித்ததைப் பற்றிக் கூறுவதாகும். ஆங்கிலத்தில் ஏகலைவன் குறித்த கதையை நாடகமாக்கினார்கள். வனவாசியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவருமான ஏகலைவன் என்ற சிறுவன் மகாபாரதத்தில் சிறந்த போர் வீரனான அர்ச்சுனனுக்குச் சவாலாக நின்றவன்.
65 மாணவர்களைக் கொண்ட அந்தப் பாடகர் குழு பல விதமான உணர்ச்சிகளைக் கொண்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு காலகட்டங்களில் உருவான பல்வேறு பாடல்களைப் பாடியது. இந்தியாவுக்குமான பாடல்களும் இருந்தன. “யார் உங்கள் கதையைக் கூறுவார்” என்ற தலைப்பில் இந்தியாவுக்கான பாடல்கள் அமைந்தன. அன்றைய மாலைக்கான நிகழ்ச்சிகளுக்கான கருப்பொருள் பாகுபாடு. பாகுபாட்டின் தன்மைகளையும் பாகுபாட்டுக்கு மாற்றான பார்வைகளையும் அப்பாடல்கள் முன்வைத்தன. நமது பன்முகக் கலாச்சாரங்களையும் கதைகளையும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போர்களையும் பற்றிய நினைவூட்டலாக அந்த மாலை நேர நிகழ்ச்சிகள் இருந்தன.
நாட்டில் உரிமைகளுக்கான போர் தீவிரமடைந்துள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான பாகுபாட்டையும் வன்முறையையும் எதிர்த்து அதிகமாகப் போராடும் நாடாக இது உள்ளது. இதன் ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியையும் அரசியல் சாசனதையும் முடக்கித் தீவிரமான பெரும்பான்மைவாதத்திற்குத் தீனி போடுவதில் விருப்பம் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இந்தக் கச்சேரியானது கட்டாயம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளையும் நம்பிக்கையைப் பரப்ப வேண்டிய அவசியத்தையும் அதற்கான பாடல்களைப் பாட வேண்டிய அவசியத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த கேள்விகள் பாஜகவின் தலைவரான அமித் ஷாவின் பேச்சுக்கான பதில்களாக அமையக்கூடும். அவர் கடந்த புதன்கிழமையன்று பேசுகையில், மொத்த நாடும் அயோத்தியில் முன்பு பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோயிலை விரும்புகிறது என்றார். அப்போது மசூதியின் பெயரை அவர் சொல்லவில்லை. நாள் தோறும் நீதிபதிகள் வழக்கை நடத்தினால் 10 நாட்களுக்குள் அயோத்தி வழக்கை முடித்துவிடலாம் என உச்ச நீதிமன்றத்திற்கு நட்புரீதியான ஆலோசனையும் அளித்தார்
வெறுப்பில் தோய்ந்த செய்திகள்
பிளவுபடுத்தும் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்ளுதல் இந்தியாவின் தேசிய நலன்களுக்கோ பொதுமக்களின் கவலைகளுக்கோ சம்பந்தமில்லாமல் இருந்தாலும் அதுதான் பாஜக தற்போது செயல்படும் முறையாக உள்ளது. அந்தக் கட்சியின் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பசுக் காவலர்களினால் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டது குறித்துப் பேசுகையில், அது ஒரு விபத்து என்றார். வேறொரு சமயத்தில் அப்படி நடந்திருந்தால் அது சதி எனக் கூறப்பட்டிருக்கும்.
அந்த மாநிலத்தின் 80 முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஆதித்யாநாத்தின் ராஜினாமாவை கோரினார்கள். ஆளுகையின் அடிப்படையான கொள்கைகளையும் அரசியல் சாசனத்தின் அறங்களையும் மனித நேயத்துடனான சமூக நடத்தையையும் வக்கிரமாக்கிய யோகி பதவி விலக வேண்டும் என்றார்கள். அதை நிராகரித்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் சர்மா அறிவாளிகளின் மனங்கள் இரண்டு பேர் உயிரிழந்ததைத்தான் பார்க்கின்றன, 21 பசு மாதாக்கள் இறந்ததைப் பார்க்க மறுக்கின்றன என்று தெரிவித்தார்.
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விரிவாக்கப்பட்ட இந்து ஆளும் கட்சியானது, முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது வெறுப்பையும் வெறுப்பை உமிழும் செய்திகளையும் பொழிந்து கொண்டிருக்கும்போது இந்தியாவானது 17ஆவது பொதுத் தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளது.
சாதி சமயத்தைக் கடந்த ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாகவும் அனைவரும் இணைந்திருப்பதும் சொந்தம் கொண்டாடுவதுமாக இருந்த இந்தியா தற்போது அவநம்பிக்கையுடனும் பிளவுபடுவதுமாகவும் சுருங்கிப்போனது. நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு முயற்சியிலான வளர்ச்சி, ஒவ்வொருவரின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வளர்ச்சி அரசியல், இடுகாட்டு அரசியலாக மாறிப்போனது. அரசியல் என்பதே சிலைகளாகவும் கோயில்களாகவும் மாறிவிட்டது.
பாஜகவும் இன்னமும் அதன் வலிமை வாய்ந்த தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் கட்சியின் மிகையான பீற்றல்கள், வெறுப்பு அரசியல் ஆகியவற்றால் பிழைக்கலாம். அல்லது காங்கிரசின் புத்துயிர்ப்பும் மற்ற போட்டியாளர்களும் 2019இலும் தொடர்வதன் விளைவாக பாஜகவும் பிரதமரும் தோற்றும் போகலாம். ஆனால், 50 ஆண்டுக் காலம் இந்தியாவை ஆள்வது என்ற அமித் ஷாவின் லட்சியத்திற்காக பாஜக பரப்புகின்ற செய்திகள் அத்தனை சுலபமாக மறையாது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது அன்பையும் இரக்கத்தையும் பற்றிப் பேசுகிறார். ஆனால், பாஜகவின் ஆவேசத்தைக் கண்டு அவர் தடுமாறுகிறார். கோவில்களுக்குச் செல்வது, பூணூல் அணிந்திருப்பதை வெளியே காட்டிக்கொள்கிறார். இந்திய அரசியல் சாசனம், அதன் சட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை தொடர்பான விஷயங்கள் பற்றிப் பட்டும் படாமலும் பேசிவருகிறார். இவையெல்லாம் அவரது தடுமாற்றத்தையே காட்டுகின்றன.
வளர்ந்துவரும் கும்பல்
நாட்டில் மிகவும் அழுத்தம் தரக்கூடிய கவலைகள் உள்ளன, அவற்றில் மிகவும் முக்கியமானது இந்திய விவசாயம் நசிந்து வருவதாகும். விவசாயம்தான் 670 மில்லியன் இந்தியர்களுக்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், மொத்த கவனமும் கூச்சலிடும் கும்பலினாலும் அராஜகத்தின் வளர்ச்சியினாலும் திசை திருப்பப்படுவதால், எந்த நிர்வாகமும் ஒட்டுமொத்தமாக இணைந்து விவசாயத்துறையில் நடைபெறும் மாற்றத்திலும் வேலையின்மையிலும் மீது கவனம் செலுத்துவதில்லை
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக, அறைகுறையாகப் படித்தவர்களாகவும், அறைகுறையாக வேலைகளில் இருப்பவர்களாகவும், அறைகுறை வளர்ச்சியடைந்த நகரங்களில் இருக்கும் இளைஞர்களாகவும், கனவுகளே இல்லாத இல்லாமல் விரக்தி அடைந்த இளைஞர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக ஆண்களே நிறைந்திருக்கும் இந்தக் கும்பலைச் சேர்ந்த சராசரி மனிதரின் கனவை ஒரு கோயிலைக் கட்டுவதாகவும் அதை ஏதோ வகையில் சாதிப்பதுமாகச் சுருக்கிவிடுவது ஆபத்தானது. இது அவரை மேலும் விரக்திக்குள்ளாக்கிக் குடியரசின் அடித்தளங்களை அச்சுறுத்துவதற்கு இட்டுச் செல்லும்.
தீவிரவாதியாக்கப்படும் இளைஞர், மூளைச்சலவை செய்யப்பட்டு வெறுப்புணர்வினால் நிரப்பப்பட்டு, தன்னுடைய மதத்தினால் தன்னை வரையறுத்துக்கொள்வார். ஆனால் அவர் தனது நடைமுறைகளையோ மற்றும் அதன் பாரம்பரியங்களையோ அறிந்திருக்க மாட்டார். அதன் (அவருடைய மதத்தின்) குறைபாடுகளையோ, அது முன்கொண்டுவரும் ஏற்றத்தாழ்வுகளையோ, அவர் அறிந்திருக்க மாட்டார். ஏன் வெறுப்பானது புறந்தள்ளப்பட வேண்டும் என்பதைப் பார்க்க மாட்டார், அவருடைய மத நம்பிக்கையின் உண்மையான அர்த்தத்தை அவர் மறந்துவிட்டார்.
நம் அனைவரின் சார்பாகப் பேசிய ஷா வேறு எதையும் கோராமல் ராமருக்கான பிரம்மாண்டமான கோயில் கட்டும் கோரிக்கையை மட்டும் முன்வைத்தார். அவர் அதிகமான இளைஞர்களைக் கும்பலில் சேர வலியுறுத்துகிறார். நம்பிக்கையை மகிமையாகக் கொண்ட ராமரின் இன்னொரு பாரம்பரியத்தை அவர் நிச்சயம் விவாதிக்க மாட்டார்.
நான் இதை எழுதும்போது கவிஞர் ரஞ்சித் ஹோஸ்கோதே என்னிடம் ட்விட்டரில் “பிரம்மாண்டமான ராமர் கோயிலும் வேண்டாம் ராமரின் பேருருவமும் வேண்டாம்” என்றார். சூரதாசரின் பாடலையும் காந்திஜியின் வார்த்தைகளையும் மறந்துவிட்டோம். ராமர் சக்தியில்லாதவர்களின் சக்தி (நிர்பல் கி பல் ராம்) என்று சொன்னதை மறந்துவிட்டோம் என்ரார் கவிஞர். இந்தச் செய்திகள் தற்போதைய இருண்மையை ஊடுருவி ஒளிர வேண்டும். அது மகத்தான தரிசனத்தை நமக்குத் தரும். எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற (வகுப்புவாதத்திற்கு எதிரான) யுத்தத்திற்கு நம்மைத் தயார்ப்படுத்தும்.
பெங்களுருவில் அந்த பள்ளியில் இரவில் அவர்கள் பாடியபோது, “ஒரு நாள் அந்த மகிமை வரும்போது அது நிச்சயம் நமதாகும். அது நிச்சயம் நமதாகும். ஒரு நாள் அந்த யுத்தம் வெல்லப்படும்போது நமக்கு அது உறுதிப்படும், நமக்கு அது உறுதிப்படும்” என்று அவர்கள் பாடியது இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சமர் ஹலர்ங்கர்
நன்றி: ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/906627/no-amit-shah-the-entire-country-does-not-want-a-grand-ram-temple-in-ayodhya