ஒவ்வொரு வருடமும் 60 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தகவல் அறிந்துகொள்வதற்காகப் பதிவு செய்யப்படுகின்றன. இந்தியரின் உரிமையான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right To Information act – RTI) உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வெளிப்படைத் தன்மைக்கான சட்டம். இந்தச் சட்டமானது சாதாரணக் குடிமகனும் அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இது அடிப்படைச் சேவைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை வெளிக்கொணர்வது, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள், அவர்களின் முடிவுகள் மற்றும் அவர்களின் நடத்தையைப் பற்றிக்கூட கேள்வி எழுப்ப முடியும்.
மாநிலங்களிலும் மத்தியிலும் சட்டமீறல்கள் பற்றிய புகார்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக சுதந்திரமான தகவல் ஆவணங்கள் நிறுவப்பட வேண்டும் என்கிற ஆர்டிஐ சட்டத்தின் விதிப்படி குறைகளைக் களையும் விதத்திலான சட்டப்படியான கட்டுப்பாடு விதித்திருப்பது இந்த்ச் சட்டத்திற்கு வலுவூட்டுவதாக உள்ளது. சட்டப்படி இந்த ஆணையங்கள் இறுதித் தீர்ப்பு வழங்குபவையாக உள்ளன. மேலும் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்திற்க்கு உத்திரவிடவும், தவறிழைத்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரம் உடையதாகவும் இந்த ஆணையம் விளங்குகிறது. ஆகவே இந்தத் தகவல் ஆணையங்கள் மக்களின் தகவல் அறியும் உரிமையை உத்திரவாதம் செய்வதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
சமீப வருடங்களில் இந்தத் தகவல் ஆணையங்கள் நிறைய குறிப்பிடத்தக்க மற்றும் அரசியல் ரீதியான நுட்பமான முடிவுகளை எடுத்துள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது. அரசியல் கட்சிகள் மக்கள் சேவை செய்யும் அமைப்புகள் என்று அறிவித்தது. அதை ஆர்டிஐ சட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்படுத்தியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி பட்டதாரி ஆன வருடம் என்று கூறப்படுகின்ற 1978ஆம் பேட்சின் தேர்வு முடிவுகளைப் பற்றிய தகவலை வெளியிடுமாறு தில்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது போன்றவை இவற்றுள் அடங்கும்.
எனவே, இத்தகைய சூழல்களைத் தவிர்ப்பதற்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் CIC எனப்படும் மத்திய தகவல் ஆணைய நிறுவனத்தையும் (CENTRAL INFORMATION COMMISSION) பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. பதவிக்கு வந்தது முதல் பாஜக அரசானது CIC–யின் ஒரு கமிஷனரைக்கூட நீதிமன்றங்களின் தலையீடு இல்லாமல் நியமித்தது இல்லை. 2014 – ல் CICயின் தலைவர் ஓய்வுபெற்ற பின் 10 மாதங்களுக்கு தலைமை இடம் காலியாகவே இருந்தது. தற்போதைய நிலவரப்படி CICயின் பதினொரு தகவல் ஆணையர்களுக்கான பணியிடங்களில் தலைமை ஆணையர் பதவியையும் சேர்த்து 8 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஆணையர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக பணிச்சுமை அதிகரித்து வேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இது மக்கள் தங்கள் வழக்கின் தீர்ப்பைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி ஆர்டிஐ சட்டத்தைச் செயலாற்றதாகச் செய்யக்கூடிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் கிட்டத்தட்ட CICஇல் 26,500 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை இரண்டு வருடங்களுக்கும் முன்னதாகப் பதிவு செய்யப்பட்டவை.
அரசாங்கமானது காலியான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக 2018 ஜூலை பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது RTI சட்டத்திருத்த மசோதாவை மறைமுகமாகத் தாக்கல் செய்துள்ளது. அவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக இதுகுறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும் என்கிற கொள்கைக்கு முற்றிலும் முரணாக பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் பொது வெளியில் விவாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது குறித்த தகவல்கள் கூட வெளியிடப்படவில்லை. இந்த மசோதா குறித்து எந்தவிதமான அறிவுரைகளும் அரசு தரப்பு அல்லாதவர்களிடமிருந்து கோரப்படவில்லை. ஏனெனில் RTI என்பது சமூகப் பிரச்சினை சம்பந்தப்பட்டது அல்ல என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களின்படி மக்கள் ஆணையங்களிடமிருந்து தகவல் பெறும் வசதியை அவற்றிடமிருந்து பறித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் ஆணையங்களின் தன்னாட்சி உரிமையைப் பறித்து அவற்றை பலவீனப்படுத்துகிறது.
தகவல் ஆணையர்களின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் எனவும் அவர்கள் ஓய்வுபெறும் வயது 65 எனவும் ஆர்டிஐ சட்டம் நிர்ணயம் செய்துள்ளது. தகவல் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் மத்திய தகவல் ஆணையர்களின் சம்பளங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தால் முடிவெடுக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலம், உயர்ந்த அந்தஸ்து என்று ஆர்டிஐ சட்டத்தின் வாயிலாக ஆணையர்களுக்கு அளிக்கப்படும் கெளரவம் அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவும் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றவும் வைப்பதோடு மிக உயர்ந்த் அதிகாரம் கொண்ட அமைப்புகளையும் சட்டத்திற்க்கு இணங்கிப் போகுமாறு அறிவுறுத்தும் அளவுக்கு அதிகாரம் மிக்கவர்களாக ஆக்குகிறது.
பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் பதவிக் காலம் ஆகியவற்றைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருப்பதானது ஆணையங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி பேரிடியாக அமைந்துள்ளது. இந்தக் காய் நகர்த்தலானது ஆணையங்களைக் குறி வைக்கிறது. அவர்களை அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு ஒத்துப் போகுமாறு இணங்கச் செய்வது, இல்லையெனில் அது அவர்களின் பதவிக்காலம் மற்றும் சம்பளம் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சூசகமாகத் தெரிவிப்பதன் மூலம் ஆணையங்களை அரசாங்கத் துறைகள் போல மாற்றி அமைக்க முற்படுகிறது.
இந்தத் திருத்தங்களுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் இதுவரையில் பாராளுமன்றத்தில் இந்த் மசோதாவைக் கொண்டு வருவதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்தப் பரிந்துரை இன்னும் கைவிடப்படவில்லை. சொல்லப் போனால் மத்தியத் தகவல் ஆணையர்களின் பதவிக்கான விளம்பரங்களில் அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதான தன் தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்று கோடிட்டு காட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தகவல் ஆணையர்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் விளைவாக 4 தகவல் ஆணையர்கள் மற்றும் CICயின் தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பணியமர்த்த வேண்டி மத்திய அரசு விளம்பரங்கள் கொடுத்திருந்தது. ஆணையர்களின் சம்பளம் மற்றும் அவர்களின் பதவிக் காலம் குறித்துக் குறிப்பிடப்பட வேண்டும் எனச் சட்டம் வரையறுத்துள்ளது. இருந்தபோதிலும் அந்த விளம்பரங்களில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படாதது ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்கிற அரசாங்கத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அந்த விளம்பரங்களில் தகவல் ஆணையர்களின் சம்பளம், சலுகைகள், பணி குறித்த விதிமுறைகள் நிபந்தனைகள் ஆகியவை, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்கு அமர்த்தப்படும்போது தெரிவிக்கப்படும் என்று குறிப்படப்பட்டுள்ளது. இதுபோன்ற மிக முக்கியமான தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பது தகுதி வாய்ந்த நபர்களை வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பவிடாமல் செய்கிறது.
மேலும் ஆணையர்களின் நியமனம் சம்பந்தமான நடைமுறை வெளிப்படைத் தன்மையுடன் இல்லாமல் ரகசியமாக மறைக்கப்படுகிறது. இதுகுறித்து அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் ஆணையர்களின் பணி நியமன நடைமுறைகளை வெளிப்படையாகத் தெரிவிப்பது “அவ்வளவு உகந்ததாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளது, ஆர்டிஐ விண்ணப்பம் குறித்து பதிலளிக்கையில் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கொடுத்ததன் அடிப்படையில் தகவல் ஆணையர்களின் பதவிக்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன மட்டும் search கமிட்டி செயல்படும் தகவல்கள் ஆகியவற்றை அளிக்க சட்டத்துக்குப் புறம்பான வகையில் மறுத்துவிட்டது. தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தடுக்கவும், வலுவான, நேர்மையான நியமனங்களைச் செய்வதில் உறுதியுடன் இருப்பதும் எந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நியமன நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான ரிசர்வ் வங்கி, மத்தியக் கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission), தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சமீபத்திய நியமனங்கள் நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்குமேயானால் CICயும் தனக்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுக்கும் ஊழியர்களை நியமித்துவிடுமோ என்பது போன்ற அச்சத்தைக் குறைக்கக்கூடும். இவ்வாறு வெளிப்படையான நடைமுறையின்படி நியமிக்கப்பட்டவர்கள் கடந்த காலங்களில் சுதந்திரமாகச் செயல்படும் போக்குடன் இருப்பவர்களாகவும், வெளிப்படைத் தன்மைக் கொள்கையைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், இருக்கும் பட்சத்தில் அது குடிமக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நியமன நடைமுறைகள் இன்னும் அதிகபட்ச வெளிப்படைத் தன்னையுடன் இருக்க வேண்டும் என்பது ஆர்டிஐ செயற்பாட்டாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. பல ஆணையங்களில் இது போன்ற அப்பட்டமான அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப் பட்டதை எதிர்த்து இவர்கள் போராடியத்ன் விளைவாக தன்னிச்சையாக ஆவணப் போக்குடன் நியமிக்கப் பட்டதாகக் கூறி இதுபோன்ற பல நியமங்களை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன.
குடிமக்களின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடைமையும் தகவல் ஆணையங்களுக்கு உள்ளன. ஆர்டிஐயின் ஆளுகை ஆரோக்கியமாக இருப்பது என்பது இத்தகைய தகவல் ஆணையங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாகவும், பலன் தரும் வகையிலும் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். ஜனநாயகக் கொள்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில் மோடி அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ளதா என்பதற்கு ஆர்டிஐ சட்டம் மற்றும் மத்தியத் தகவல் ஆணையம் குறித்த நடவடிக்கைகள் அமிலச் சோதனையாக இருக்கும்.
அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ருதா ஜோஹ்ரி.
நன்றி: ஹஃபிங்ஸ்டன் போஸ்ட்
https://www.huffingtonpost.in/entry/the-modi-govt-is-trying-to-destroy-the-rti-act-thats-dangerous-for-democracy_in_5c1b6318e4b0407e90775ad4