இந்திய வாக்காளர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லலாம்: அவர் நிராகரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்; ஆனால் தேர்ந்தெடுக்க அவரிடம் அதிக சாய்ஸ் இல்லை. பெரும்பாலும் அவரது வாக்கு யாருக்காவது எதிராக இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஆதரவான பாஸிடிவான வாக்காக இல்லை. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில்கூட காங்கிரசுக்கு ஆதரவாக என்பதைவிட பாஜகவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்தனர்.
பாஜகவை நாம் விமர்சனம் செய்தாலும், பிரசினைகள் நமது கட்டமைப்பு சார்ந்தவை, எந்த அரசாக இருந்தாலும் அவற்றைச் சமாளித்தாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்: ஆழமான விவசாயிகள் பிரச்சினை, நகர்ப்புறங்களில் எப்போதும் நிலவும் வேலையிலாத் திண்டாட்டம் முதலானவற்ற்றுக்கு எந்த அரசியல் கட்சியிடமும் தீர்வில்லை; இதைப் பெரிய அளவில் விவாதம் செய்து நீண்டகால அளவிலான தீர்வுகளைக் கண்டறிய எந்தக் கட்சியும் முயற்சி செய்வதாகவும் தெரியவில்லை.
வேலையில்லா நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலை தரும் ஆசை, கிராமப்புற இளைஞர்களுக்கு கடன் தள்ளுபடி வாய்ப்பு. இவைதான் தரப்படுகின்றன. நிஜமாகவே வேறெந்த விதமான அணுகுமுறையும் விவாதிக்கப்படுவதில்லை. அண்மையில் உபரி நிதிநிலை அறிக்கையுடன் புதிய ஆட்சியைத் தொடங்கிய தெலங்கானா போன்ற புதிய மாநிலம்கூட அவ்வளவாக வேலைவாய்ப்பு தராத கார்ப்பரேட் வளர்ச்சிக்குத்தான் கவனம் தரப்படுகிறது.
விவசாயிகளின் துயரம் அதிகமாகிறதே தவிர தீரவில்லை; நலத் திட்டங்கள் அதிகமிருந்தாலும் விவசாயிகள் தற்கொலையில் நாட்டில் தெலங்கானா 3ஆம் இடத்தில் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையுடன் அது நாட்டின் பிற மாநிலங்களைப் போல ஆகும் வாய்ப்பும் அதிகமே.
இப்பின்னணியில் அரசு மாறினாலும் தற்போதைய அரசைவிட நன்றாகச் செய்வோம் என்று கேட்டு வாக்குப் பெறுவது கட்சிகளின் வியூகமாகிவிட்டது. இதனால் உருவாகும் பொருளாதாரக் கேட்டினால் சமூகப் பிரச்சினை என்பது பூதாகாரமாக ஆகி, தெரியாத வழிகளில் பின்வருமாறு வெடிக்கலாம்.
அபிலாஷைகள் கொண்ட வாக்காளர்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் மிதமாக இருந்ததால் தலைமுறை இடைவெளியை துரிதமாக மீற நினைக்கும் வாக்காளர்கள் அதிகமாகினர். காங்கிரஸ் ஆட்சியில் மிதமான பொருளாதார வளர்ச்சிதான் அதன் அழிவையும் தூண்டியது. ‘குஜராத் மாடல்’ எனப் பிரசாரம் செய்து படம் காட்டிய மோடியால் வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாகி மக்களின் அபிலாஷைகளும் உயர்ந்தன. தீவிரப் பேச்சு, மேல்தட்டு வர்க்க எதிர்ப்பு, அடையாளத்தையும் வரலாற்றையும் நினைத்துப் பெருமைப்படுதல் போன்ற மோடி பாணியிலான இந்துத்துவத்தில் இவ்விலக்குகள் வெற்றிகரமாக மாட்டிக்கொண்டுவிட்டன.
தொழில் வளர்ச்சி மிக்க மாநிலத்தைச் சேர்ந்தவர் மோடி என்பதால் தீவிர இந்துத்துவத்துடன் மிதமான வளர்ச்சி என்னும் முழக்கத்தைச் சேர்த்து பிரச்சாரம் செய்து மூன்று முறை ஆட்சியைப் பிடிக்க அவரால் முடிந்தது; இறுதியாக அது பயன்படாமல் போய் இந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்குக் கிட்டத்தட்ட அதிர்ச்சி தரும் நிலை ஏற்பட்டது. ஆயினும், குஜராத்தில் கலாச்சார மட்டத்தில் மக்களை ஒன்று திரட்டியதால் மோடிக்கு வெற்றி கிடைத்ததே தவிர, பொருளாதாரக் காரனங்களால் அல்ல. சொல்லப்போனால், அவரது ஆட்சியில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் மாநிலம் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் தொழில் வளம் நிறைந்த மாநிலமாக இருந்ததால், அதன் பொருளாதாரம் எப்போதும் நசியாமல் இருந்தது.
மோடியின் ‘குஜராத்’ பாணி அரசியல்
குஜராத்தில் தான் செய்து வந்ததைத்தான் கடந்த நான்காண்டுகளாக, மோடி திரும்பச் செய்தார். பொருளாதாரம் பற்றிப் பெரிதாகப் பேசுவது; நடமுறையில் இந்துத்துவக் கொள்கைகளை முன்னெடுப்பது. பொருளாதாரம் மட்டும் நன்றாக இருந்திருந்தால், ‘குஜராத்’ பாணி அரசியல் தேசிய அளவிலும் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கக்கூடும்.
2014ஆம் ஆண்டு தேசிய அரசியலைத் தொடங்கும்போது தான் கண்ட அதீத ஆர்வமுள்ள மக்களின் அடையாளமாக இன்று திகழ மோடி சிரமப்படுகிறார். அவரது அபரிமிதமான ஊடக பிம்பங்கள், முன்பு உணர்ச்சியைத் தூண்டியது போல இப்போது தூண்டுவதில்லை. ஆனால், சமீபத்தில் ரேபரேலியில் அவரது பிரசாரத்தைப் பார்த்தால், தனது பாணியை எவ்விதத்திலும் அவர் திருத்திக்கொள்ளவில்லை; அதற்கு அவர் தயாராகவும் இல்லை எனத் தெரிகிறது. ஏன் இப்படி?
காங்கிரசின் வெற்றி மோடி என்ற பிராண்டுக்குக் கிடைத்த வரமா?
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தனது கட்சி படுதோல்வியைக் கண்டிருந்தாலும், வாக்காளர்களுக்கு (பாஜக தவிர) தெளிவான மாற்றுக் கட்சி இல்லை என்பது மோடிக்குத் தெரிந்திருக்கலாம். தான் வென்ற மாநிலங்களில் முந்தைய பாஜக அரசுகள் எதிர்நோக்கிய அதே பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் தீர்வுகாண வேண்டும். அவற்றைச் சரிசெய்யாவிடில் மக்கள் அடையும் கோபம் காங்கிரசின் வெற்றியை மோடியின் மறைமுக வரமாக ஆக்கி விடலாம்,
மத்தியப் பிரதேசத்தில் குடிபுகும் வெளி மாநிலத்தவருக்கெதிரான கமல்நாத்தின் கருத்துக்களால் பிரச்சினை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 2019 மக்களவைத் தேர்தல் போராட்டமானது 2014 தேர்தலைவிட வித்தியாசமான மனநிலையில் இருக்கும். 2004-14 வரையிலான காலகட்டத்தில் தாரளாமான சீர்திருத்தத்தில் பொருளாதாரம் வளர்ந்தது. இந்தநிலை இப்போது இல்லை. எல்லா (மாநில) அரசுகளுமே குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்புகளைக்கூடப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.
2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் முன்னுள்ள தேர்வுகள் என்ன? 2014இல் பிராண்ட் மோடி மக்களின் அதீத ஆர்வத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினார்; இப்போது மக்களின் நிராசை கலந்த வெறுப்புணர்வைத்தான் அவரால் பயன்படுத்த முடியும். இப்போதைய கேள்வி இதுதான்: நிராதரவான காலங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்வர்? ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அபாயம் நேரும்போது மோடியின் தோல்விக்காக அவரைத் தண்டிப்பதை மக்கள் முக்கியமாக நினைப்பார்களா அல்லது இருக்கும் தேர்வுகளில் அவரே பரவாயில்லை என்ற முடிவுக்கு வருவார்களா?
அண்மைக் காலத் தேர்தல் முடிவுகள் வரும் தேர்தலுக்கான அறிகுறி அல்ல
சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடக்கப்போவதற்கான தெளிவான அறிகுறியாக இருக்க முடியாது. புதிதாகச் சொல்வதற்கு மோடியிடம் எதுவுமில்லாமல் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகளிடமும்தான் எதுவுமில்லை. நிறைவேற்றப்படாத சத்தியங்கள், குழப்பம் மிகுந்த எதிர்க்கட்சிகள் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க மக்கள் சிரமப்படுவார்கள். சமீபத்திய தேர்தல்களில் பாஜக தோற்றிருந்தாலும் பல கருத்துக் கணிப்புகள் சொல்வதுபோல் மோடியின் புகழ் மங்காமல் அப்படியே உயர் நிலையில்தான் இருக்கிறது.
மோடி காட்டும் நம்ப முடியாத புதிய கனவுகளில் மக்கள் மயங்கிவிடுவார்களா அல்லது எதிர்க்கட்சிகளிடம் அவர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாவிட்டாலும் மோடிக்குத் தண்டனை கொடுக்க தீர்க்கமான முடிவெடுபார்களா? எப்படி இருந்தாலும், இது நிராசையால் அளிக்கப்படும் வாக்காகத்தான் இருக்க முடியும்; இந்த நம்பிக்கையற்ற நிலையில் தன் மீது முழு நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பாஸ் மார்க் வாங்கி தன்னால் தேற முடியும் என்று மோடி நம்புகிறார்.
(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் செண்டர் ஃபார் பாலிசி ஸ்டடீஸில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அஜய் குடவர்த்தி சமீபத்தில் ‘மோடிக்குப் பிந்தைய இந்தியா: மக்களுக்கான சலுகைகளும் உரிமையும்’ (ப்ளூம்ஸ்பரி, 2018) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அஜய் குடவர்த்தி
நன்றி: தி வயர் https://thewire.in/politics/modi-bjp-general-elections-2019