(மக்களின் தகவலறியும் உரிமைக்கும் ஒளிவுமறைவின்மைக்கும் தீவிரமாகப் பாடுபவர்களுள் முதன்மையானவர் மத்தியத் தகவல் ஆணையராக சமீபத்தில் பணிஓய்வு பெற்ற மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு. 2013 நவம்பரில் மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்படும் முன்னர் ஹைதராபாதில் நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் யுனிவர்சிடியில் சட்டப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் 65 வயதாகும் ஆச்சார்யுலு அவர்கள். தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின்போது உயர்மட்ட வழக்குகளின் மீது முக்கிய ஆர்.டி.ஐ. ஆணைகளை அவர் வெளியிட்டார்: பொலாவரம் அணை பற்றிய அரசு ஆவணங்களை வெளிக்கொணர்வது, எம்.பி.-க்களின் நிதி செலவாகும் விவரம், தொழிலாளர் வைப்புநிதி அமைப்பு, பிரதமர் உட்பட உயர்பதவி வகிப்போரின் கல்வித் தகுதிகள் மற்றும் அண்மைக் காலத்தின் பெருங்கடன் திருப்பிச் செலுத்ததவர் பற்றிய ரிசர்வ் வங்கியின் பட்டியல் போன்றவை சில. இச்சட்டத்தைத் திருத்த முயலும் அரசின் முயற்சியை வெளிப்படையாகவே எதிர்த்து வரும் ஆச்சார்யுலு இது சட்டத்தையே ‘அழித்துவிடும்’ என்றும் மத்திய தகவல் ஆணையத்தின் பணிகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் என்றும் கூறுகிறார். ‘இண்டியாஸ்பெண்ட்’ தளத்துடனான தன் நேர்காணலில் தற்போது முடிந்த தன் பதவிக்காலம், இந்திய ஒளிவுமறைவற்ற இயக்கத்தின் முன் இருக்கும் சவால்கள் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். நேர்காணலிலிருந்துJ
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைக் கண்காணிக்கும்படி அமைந்துள்ள மத்திய தகவல் ஆணையத்தில் ஐந்தாண்டு காலம் பதவி வகித்த நீங்கள் தகவல் பெறுவது பற்றிய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
10க்கு 9 மதிப்பெண் தருவேன். தகவல் தரப்படாத வழக்குகள்தாம் நினைவுக்கு முதலில் வருகிறது. என் பதவிக்காலத்தில் 20,000 வழக்குகளைப் பார்த்தேன். பெரும்பாலானவற்றில் தகவல் தரும்படி நான் பணித்த ஆணை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. என் முன் வந்த அதிகாரிகளிடம் தகவலைத் தந்தாக வேண்டுமென்ற அணுகுமுறையை விதைக்க நான் முயன்றேன்; நெறிப்படுத்தும் அமைப்புகளான பார் கவுன்சில், மருத்துவ கவுன்சில், மத்திய சட்ட/சுற்றுப்புறசூழல் அமைச்சகம், தில்லி அரசு போன்றவற்றில் கடந்த சில ஆண்டுகளாக மாற்றங்களை கண்டேன். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் ஆர்டிஐ கேள்விகள் கேட்கப்படுகின்றன. சட்டத்தின் பரவலான பயன்பாடு இதிலிருந்து தெரிகிறது. 60% முதல் 70% ஆர்டிஐ கேள்விகள் ஊழியர்களின் துயரம் (அ) கிடைக்க வேண்டியது கிடைக்காதது பற்றியவை. பதவி உயர்வு, பென்ஷன் பற்றியும் ஆர்டிஐ கேள்விகள் வருகின்றன. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் அரசு ஆணை ஒன்றின் நகல் கேட்டும் கேள்விகள் வரும். நிர்வாகச் சீர்கேட்டின் அளவையே இது காட்டுகிறது.
பல ஆர்டிஐ ஆர்வலர்களும் ஒளிவுமறைவின்மைக்கு போராடுபவர்களும் உங்களது ‘9’ மதிப்பீட்டை ஒத்துக்கொள்ளாமல் தகவலறியும் உரிமையை வலுவிழக்கை வைக்க அரசு நினைப்பதாகக் கூறலாம். உதாரணத்துக்கு, பெருங்கடன் திரும்பச் செலுத்தாதவர்கள் பற்றிய விஷயம் மற்றும் தகவல் ஆணையத்தில் சரியான அளவு ஆணையர்களை நியமிக்காதது பற்றி.
ஆர்டிஐ ஆர்வலர்கள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்புகின்றனர், இதை நான் ஒத்துக்கொள்கிறேன். 10.12.2018 அன்று குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தலைமைத் தகவல் ஆணையர் உள்ளிட்ட 8 பதவிகளை உடனே நிரப்பும்படி கோரியுள்ளேன். தகவல் ஆணையத்தின் ஆணைகளின் தரமானது நியமனங்களின் தரத்தைப் பிரதிபலிக்கும். இதனால் ஆணையத்தில் பதவிக்கு பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியது அவசியம். சட்டம், ஊடகம், அறிவியல் & தொழில்நுட்பம், சமூகசேவை, நிர்வாகம், பத்திரிகைத்துறை மற்றும் அரசாளும் துறைகளிலிருந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டுமென்று தகவலறியும் உரிமைச்சட்டம் சொல்கிறது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மட்டும் அரசு நியமிப்பது ஏன்? தலைமைத் தகவல் ஆணையர் அரசுத்துறை அதிகாரியாகத்தான் இருக்க வேண்டுமென இச்சட்டம் சொல்லவில்லை. இனி வரும் நியமனங்கள் எல்லாத் துறைகளிலிருந்தும் செய்யப்பட வேண்டும். தன் பணிக்காலத்தில் ஒளிவுமறைவற்ற தன்மை நிலவ ஓய்வுபெற்ற அதிகாரி என்ன செய்தார் என்று பார்த்தே அவரை நியமிக்க வேண்டும். மத்திய, மாநில தகவல் ஆணையங்கள் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் கூடாரம்தான் என்ற நிலைமை மாறவேண்டும். இதை அரசுதான் மாற்ற வேண்டும். (டிசம்பர் 13 அன்று தகவல் ஆணையத்தில் காலிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜின் மனு மீது உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது).
பொதுத்தகவல் அலுவலர் பதவியை நீர்க்கச் செய்து தகவலறியும் உரிமை சட்டத்தை அரசு பலவீனமாக்குகிறது. பிரிவு அதிகாரி உள்ளிட்ட அனுபவம் இல்லாத அதிகாரிகள்தான் ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்; அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலையிலிருந்து தாங்களாகவே விலகிவிட்டனர்.
ஆம், இது உண்மைதான். தகவலை மறுக்கும் முடிவை உயரதிகாரிகள்தான் எடுபபார்கள்; ஆனால், பொதுத்தகவல் அலுவலர்தான் உங்களது கேள்விக்குப் பதிலளிப்பவ்ர். என்முன் வரும் பொதுத்தகவல் அலுவலரிடம் “தகவல் எங்கு தேங்கியுள்ளது? சொல்லவும், இல்லையானால் ரூ.25000 அபராதம் கட்டுங்கள்,” என்று நான் சொல்லுவேன். “இது என் கையில் இல்லை,” என்பார்கள் “பிறகு யார் கையில் உள்ளது?” எனக்கேட்டு அவரை பொதுத்தகவல் அதிகாரியாகக் கருதுவேன். இதன்படி ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கும், ஒரு ஆணையத்தின் தலைவருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். கடைசியாகச் சொன்னது பெரிய செய்தியாகி விட்டது. நான் பணிபுரிந்த துறைகள் அனைத்திலும் தேவை ஏற்படும்போதெல்லாம் இதைச் செய்திருக்கிறேன்.
நீங்கள் விசாரித்த கடைசியான, முக்கியமான வழக்கான ரிசர்வ் வங்கி வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஆர்டிஐ சட்டப்படி நடக்காததற்காக நவம்பரில் நோட்டீஸ் அனுப்பி ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தருமாறு ஆணையிட்டீர்கள். பாம்பே உயர்நீதிமன்றத்தில் உங்களது ஆணைக்கு பதில் மனு தாக்கல் செய்த ரிஅர்வ் வங்கி அவ்வாறு செய்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அதன்மீது ஒரு தடையுத்தரவை 14.12.2018இல் பெற்றுவிட்டது.
ரிசர்வ் வங்கி செய்தது துரதிருஷ்டவசமானது. பெருங்கடன் செலுத்தாதவர்கள் பற்றித தகவல் அந்தரங்கமானது என்றும் சொன்னால் தேசப்பாதுகாப்புக்கு அபாயம் என்றும் சொல்வது அர்த்தமற்றது. அரசியலமைப்புக்கு விரோதமான, பொறுப்பற்ற பேச்சு இது. கடனைத் திரும்பத் தராதவர்கள் பற்றிய தகவலைத் தராமல் இதில் வங்கி அதிகாரிகளின் பங்கை மறைக்கிறீர்கள்: என் சந்தேகம் இதுதான்; வாராக்கடனை வேண்டுமென்றே ஆதரிக்கிறீர்கள். பொதுப்பணம் ஆயிரக்கணக்கான கோடி கடனாகத் தரப்பட்டுள்ளது. தராதவர்கள் வலிமை மிக்கவர்கள். இத்தகவலை மக்களிடம் கூறாமல் ரகசியமான ஏன் வைத்தாக வேண்டும்? இது சட்டத்தை மீறிய, சட்டவிரோதமான ஒரு செயலாகும்.
சொல்லப்போனால், இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒளிவுமறைவின்மை உதவும். அவ்வாறு இல்லாமல் இருந்தால், நீங்கள் உருவாக்கும் இருளால் மோசடி, திருட்டுத்தனம், குற்ற அலட்சியம், நெறிமுறைத்தவறுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாதது ஆகியவை நிகழ்கின்றன. துரதிருஷ்டவசமாக, கடன்சுமை தாங்க முடியாததாக ஆகிவிட்டது. இதை நீங்கள் ‘செயலிழந்த சொத்துக்கள்’ என்கிறீர்கள். இது வங்கிகளின் தொழில் ரகசியம் இல்லை, தொழில் குளறுபடி.
ஆர்டிஐயின் ஒரு நோக்கம் இத்தகைய மோசமான நிர்வாகம் பற்றி கேள்வி கேட்பதுதான். ரிசர் வங்கி தகவல் தரவேண்டும் என்று சொன்ன முன்னாள் ஆணையர் ஷைலேஷ் காந்தியின் பல்வேறு ஆணைகள் செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய ஆணையை ரிசர்வ் வங்கி மீறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி மேல் இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும். தகவல் தரக்கூடாது என்ற கொள்கை முடிவை அவர்கள் எடுத்து விட்டனர். எத்தகவல் தரப்படமாட்டாது என்று தம் இணைய தளத்தில் கூறி, ஆர்டிஐ சட்டத்தின் ‘விதிவிலக்கு’ பிரிவை மேற்கோள் காட்டி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. கடன் திருப்பிச் செலுத்தாதவர் பட்டியலை வெளியிடச் சொன்ன தலைமை தகவல் ஆணையரின் ஆணைக்கு எதிராக இப்போது அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒரு குடிகமன் ரூ.10 செலவில் ஆர்டிஐ விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் ரிசர்வ் வங்கி போல ஒரு வலுவான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் எதிர்க்க அவனுக்கு எப்படி சக்தி இருக்கும்? இது மிரட்டல் இல்லையா? இவ்விஷயத்தில் அவனுக்கு தலைமைத் தகவல் ஆணையரால் மட்டும்தான் உதவி செய்ய முடியும்.
பாம்பே உயர் நீதிமன்றத்தில் உங்களது நோட்டீசுக்கு எதிராக வழக்கு தொடுத்த ரிசர்வ் வங்கியின் செயலானது தகவல் தராமல் இருப்பதற்காக அதிகாரிகள் தகவல் ஆணையத்தின் ஆணைக்கெதிராக நீதிமன்றங்களின் உதவியை நாடும் பல செயல்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிட்டது.
இறுதி மேல்முறையிட்டை கவனிக்க வேண்டியது தகவல் ஆணையர்கள்தாம். தகவல் தருவதை தவிர்க்க அரசுகள் மூன்றாவது மேல்முறையீடு களமாக நீதிமன்றத்தை மாற்றிவிட்டன. ஒரு மனு மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை குடிமக்கள் கேள்வி கேட்க முடிகிறது. மாறாக அரசுகள் தகவல் ஆணையர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து தகவல் தராமல் இருக்கக் கோருகின்றனர். என்ன கொடுமை பார்த்தீர்களா! ஊடகச் செய்திகளின்படி, பல்வேறு அரசுளால் இன்றுவரை நீதிமன்றங்களில் தகவல் ஆணையத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 1700. இம்மாதிரி வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் மக்களுக்கு தாம் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்பதை அரசுகள் விளக்க வேண்டும். தகவல் ஆணையத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறீர்கள். சிலரோ தகவல் ஆணையர்களுக்கெதிரகத் தனிநபர் வழக்கும் தாக்கல் செய்கின்றனர். ஆணையம் சொன்னது போல் பிரதமர் மோடியில் முதுகலைப்படிப்பு பற்றிய தகவல் தந்து பின்னர் தடையுத்தரவு கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகிய குஜராத் பல்கலைக்கழகத்தால் முதல், 2வது, 3வது பிரதிவாதியாக நான் ஆக்கப்பட்டுள்ளேன்!
ஆர்டிஐ சட்டத்தைத் திருத்த முனையும் அரசின் மசோதா தகவல் ஆணையத்தின் பல்லைப் பிடுங்கும் ஒரு செயலாகக் கருதப்படுகிறது.
சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளித்தபின் இது தகவல் ஆணையத்தையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தையும் பலவீனமாக்குவது மட்டுமின்றி அழித்தும் விடும். தற்போது ஆணையரின் பதவிக்காலமானது இச்சட்டத்தின்கீழ் நிலையானது. தகவல் ஆணையத்தின் சுதந்திரமான நிலை ஆணையர்களை நீக்குவதைக் கடினமாக வைத்துள்ளது. திருத்தம் வந்தால் ஆணையர்களின் சுதந்திரம் பறிபோய் ‘மதிப்புமிக்க’ குமாஸ்தாக்களாகத்தான் அவர்கள் ஆகிவிடுவர். அரசு விரும்பும் விதமாக அவர்களது பதவிக்காலம் முடிவு செய்யப்படும். இத்திருத்தங்களைப் பொதுமக்கள் வலுவாக எதிர்த்தாக வேண்டும். உத்தேச அந்தரங்கத் தகவல் பாதுகாப்பு மசோதா, 2018 பற்றிய ஸ்ரீகிருஷ்ணா குழுவின் ஆறிக்கையும் இச்சட்டத்திருத்தத்தை ஆதரிப்பதால் அதுவும் ஒரு பெரிய அச்சுறுத்தல்தான். ஆணையராக என் பதவிக்காலத்தில் சட்டத்தின் பிரிவு 8.1Jவை (அந்தரங்கத் தகவல் தராமல் மறுப்பது) பொதுத் தகவல் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன். இப்போது அந்தரங்கம் என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ணா குழுவின் உத்தேச திருத்தங்கள் பொது அதிகாரியின் கைகளை மேலும் கட்டிவிடும்; இதனால் எத்தகவலுமே வெளியே வராது. இது மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.
மேற்சொன்ன சவால்களை மீறி ஆர்டிஐ சட்டத்தை வலுப்படுத்த நம்மால் என்ன செய்ய முடியும்?
இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல்கள் வருவதால் ஆர்டிஐ பற்றிய கட்சிகளின் நிலையை பொதுமக்கள் கேட்டறிந்து, ஒளிவுமறைவின்மை பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பின்வரும் விஷயங்களை ஆதரித்து தேர்தல் அறிக்கைகளில் இதுபற்றிச் சொல்வோமென அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியளிக்க வேண்டும்: ஆர்டிஐ சட்டத்தைத் திருத்த மாட்டோம், பிரிவு 4ஐ (சட்டத்தின் தானாகவே தகவல் தரும் பிரிவு) அப்படியே அமல்படுத்துவோம், தகவல் ஆணையர்களை உடனுக்குடன் நியமித்து 90% ஆணையர்களை அரசுத்துறை அற்ற வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுப்போம், தங்களையும் ஆர்டிஐ வட்டத்துக்குள் கொண்டு வருவோம் போன்றவை. இக்காரணிகளின் அடிப்படையில்தான் அரசியல் கட்சிகளை மக்கள் மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும். ஆர்டிஐ சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எச்செயலையும் அவர்கள் வலிமையாக எதிர்க்க வேண்டும், ஆர்டிஐ கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும், இச்சட்டத்தைப் பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.
முன்னாள் மத்தியத் தகவல் ஆணையர் மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு நேர்காணல்
(சித்ரகாந்தா சௌத்ரி சுயேச்சையான நிருபர் மற்றும் ஆய்வாளர்; கிராமப்புற சமூகத்தார், நிலம், காட்டு உரிமைகள், ஆதார நீதி பற்றி ஆராய்ச்சி செய்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார். அவரது ட்விட்டர் முகவரி: Twitter @ChitrangadaC
நன்றி: இண்டியாஸ்பெண்ட்.காம்
https://www.indiaspend.com/proposed-right-to-information-amendment-will-finish-the-act-and-end-information-commissioners-independence-turn-them-into-glorified-clerks/