தங்களைச் சுற்றி நடப்பவை பற்றிக் கண்டுகொள்ளாத பாலிவுட்டில் இருக்கும் பலரைப் போல் அல்லாமல், நஸ்ரூதின் ஷா தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதோடு, தான் கோழை அல்ல என்பதையும் நிருபித்துவருகிறார்.
கும்பல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும், ஒரு காவலர் கொல்லப்பட்டதைவிட பசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்தும், அண்மையில் நஸ்ருதின் ஷா தெரிவித்த கருத்துக்களால் வலதுசாரிகள் ஆவேசம் அடைந்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
இந்தியாவில் இப்போது நடக்கும் எந்த ஒரு நிகழ்வு குறித்த விமர்சனக் கருத்துக்களையும் இந்துத்துவச் செயல்வீரர்கள் தங்கள் நாயகன் நரேந்திர மோடியின் மீதான குற்றச்சாட்டாகப் பார்க்கின்றனர். அவர்கள் பார்வையில், இத்தகைய விமர்சனங்கள் இந்துக்களுக்கு எதிரானதாக ஆக்கப்படுகின்றன. இதில் பசுவையும் சேர்த்துக்கொண்டால், அவர்கள் கோபம் தீப்பிழம்பாகிறது. மேலும் ஷா ஒரு முஸ்லிம் என்பதால், அவர்களுக்கு ஒரு முஸ்லிம் தன் மனதில் படுவதைச் சொல்வது என்பது துரோகத்திற்கு நிகரானது.
ஷா ஒன்றும் எந்த விஷயம் குறித்தும் தனது கருத்துக்களை ரகசியமாக வைத்திருப்பவர் அல்ல. அவர் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தனது சொந்தத் துறை மற்றும் அதன் நன்கறியப்பட்ட மனிதர்களைக்கூட அவர் விட்டு வைத்ததில்லை. 1980களின் துவக்கத்தில், இணை சினிமா உலகில் நட்சத்திரமாக இருந்த ஷா, கலைப்படங்கள் சுமாரானவை, மோசடியானவை என்று கூறினார். இது அவருக்கு அதிக நண்பர்களைப் பெற்றுத்தரவில்லை. தன் நேர்காணல்களில், ராஜேஷ் கண்ணா எப்படி நடிகர் இல்லை என்று அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அமிதாப் பச்சனின் படங்களை நிராகரித்திருக்கிறார். அண்மையில், விராட் கோலி உலகிலேயே மிக மோசமாக நடந்துகொள்ளும் வீரர் என்று கூறியிருந்தார். பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.
அவர் அரசியல் நடப்புகளை கவனிக்கிறார், நன்றாக வாசிக்கிறார், நடப்பு நிகழ்வுகள் குறித்துத் தெளிவான பார்வை கொண்டவராக அறியப்படுகிறார். அடிப்படையில், அவர் மதச்சார்பற்றவராக இருக்கிறார். அவர் தன் பிள்ளைகள் மீது எந்த மதத்தையும் திணிக்காமல் அவர்கள் தங்களுக்கான சொந்தப் பாதையை அமைத்துக்கொள்ள வழி வகுத்துள்ளார். 2015இல், இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் மோசமான வரவேற்பை எதிர்கொள்ளும்போது, பாகிஸ்தானில் இந்தியக் கலைஞர்கள் இது போன்ற பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை என அவர் சொன்னபோது சிவ சேனா கட்சி பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது. அப்போது, தான் முஸ்லிம் என்பதற்காகக் குறி வைக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஆக அவர் தன் இயல்பின்படி நடந்துகொண்டிருக்கிறார். அதேபோல் இத்தகைய கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத தன்மையுடன் இந்துத்துவச் செயல்வீரர்கள், தங்களால் சிறப்பாகச் செய்ய முடிந்ததைச் செய்துள்ளனர். ஆஜ்மீரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் அவர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசின் மந்தமான செயல்பாடு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உணர்த்தியது. இந்த நிகழ்வு புஷ்கரில் சாதாரண நிகழ்வுக்கு மாற்றப்பட்டு அங்கு தன் புத்தகத்தை வெளியிட்ட ஷா, ரசிகர்களுக்கு வீடியோ செய்தியையும் வெளியிட்டார்.
இதன் மூலம் ஷா, இந்துத்துவச் சக்திகளை வென்றுவிட்டார். அவர் பின்வாங்கவில்லை, யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என்பது போன்ற பொய் அறிக்கைகளை வெளியிடவில்லை, சமரசத்திற்காக எந்தப் பெரிய தலையையும் நாடவில்லை. அதைவிட முக்கியம், அவர் வாயை மூடிக்கொண்டும் இருக்கவில்லை. செல்வாக்கு மிக்கவர்களிடம் ஓடுவது, அவசரமாக மன்னிப்பு கேட்பது, மீண்டும் வாய் திறக்காமல் இருக்க உறுதி கொள்வது ஆகியவை சகஜமாக இருக்கும் துறையில் மற்றவர்களிடமிருந்து இந்தக் குணங்கள்தான் அவரை வேறுபடுத்துகின்றன.
அமிதாப் பச்சன் போன்றவர்கள், எதையும் சொல்லாமல் இருக்கும் கலையைக் கற்றுக்கொண்டிருக்கின்றனர். தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு இணை உலகில் இருப்பதுபோல நடந்துகொள்கின்றனர். அமீர் கான் – இவர் ஒன்றும் தெரியாத மனிதர் அல்ல- போன்றவர்கள் எதிர்ப்பலைக்குப் பின் இனி மவுனம் காப்பது எனத் தீர்மானித்துள்ளனர். கரண் ஜோகர் போன்றவர்கள் பிரச்சினையின் முதல் அறிகுறி வெளிப்படும்போதே மன்னிப்பு கேட்டுவிடுகின்றனர்.
ஷா இவற்றில் எதையும் செய்துவிடவில்லை. அதற்கு மாறாக அவர் அமைதியாகத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தீர்மானித்துள்ளார். குடிமகனாகத் தனது உரிமையையும், கலைஞனாகத் தனது கருத்துரிமையையும் வலியுறுத்தியிருக்கிறார். அவர் ஒன்றும் சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்பதற்காகப் பேசுபவர் அல்ல. தன்னைப் பிறர் மேற்கோள் காட்ட வேண்டும் என்பதற்காகப் பேசுபவர் அல்ல. அவரது கருத்துக்கள் நன்கு சிந்திக்கப்பட்டவை. நீண்ட காலம் யோசித்துக் கூறப்பட்டவை.
இந்த விஷயத்தில்கூட, அவரது முகத்திற்கு நேராக நிருபர் ஒருவர் மைக்கை நீட்டியபோது யோசிக்காமல் கூறிய கருத்து அல்ல. நல்லிணக்கச் செய்தியை பரப்ப விரும்பும் முன்னாள் அதிகாரி ஹர்ஷ் மந்தரின் நாடு தழுவிய கர்வான் இ மொஹபத் பயணத்திற்காக அவர் மிகவும் கவனமாக வீடியோ பதிவில் பேசிய கருத்துக்கள் இவை.
சரியாக யோசிக்கும் யார்தான் ஷா சொல்வதில் உடன்பாடு கொள்ள மாட்டார்கள்? அப்பாவி மக்களைக் கும்பல் கூடி அடித்து வதை செய்துவிட்டு தண்டனை பெறாமல் தப்பிச்செல்வது குறித்து இந்தியர்கள் கவலை கொள்கின்றனர். தவறான உணவைச் சாப்பிட்டதற்காக அல்லது பேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்டதற்காக அடித்து உதைக்கப்படும் ஒரு நாட்டில் தங்கள் பிள்ளைகள் வளர்வது பற்றி பல பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர்.
இது போன்ற நேரங்களில், எழுந்து நின்று குரல் கொடுப்பது, மேடையும் குரலும் உள்ள குடிமக்களின் கடமையாகும்.
இதற்கு நேர் எதிரானது இந்தியாவில் நிகழ்கிறது. ஊடகம் அடங்கிப்போகிறது. வர்த்தகர்கள் கிசுகிசுத்த குரலில் பேசுகின்றனர். ஆளும் தரப்புக்குச் சிறிதளவு விமர்சனமான கருத்துக்கள்கூட, மெல்லிய குரலில் பேசப்பட்டு, அதன் பிறகு வெளியிடப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மோசமான விளைவுகளுக்கு அஞ்சி, சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து சக்தி வாய்ந்த மனிதர்கள் பேச அஞ்சுவதை எத்தனை முறை பார்த்திருக்கிறோம்.
திரைப்படத் துறையை பொறுத்தவரை, உருவாக்கப்படும் பளபளப்பிற்கு பின்னே இருப்பது எல்லாம் பலவீனமான தன்மையே. ஒரு சிலர் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கைகோத்துக்கொண்டு அவர்களுக்குச் சார்பாகப் பேசுகின்றனர். மற்றவர்கள் மவுனமாக இருக்கின்றனர்.
நஸ்ரூதின் ஷாவின் வெளிப்படையான தன்மை புத்துணர்ச்சி அளிப்பதோடு, வரவேற்கத்தக்கதும் ஆகும். அவர் மதிக்கப்படும் நடிகர். பிரபலமான மனிதர். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அவரது கருத்துக்கள் முக்கியமானவை. அவருடைய நிலையே, வலதுசாரி இந்துத்துவர்களையும் அவர்களின் எஜமானர்களையும் கோபத்தில் ஆழ்த்தக்கூடியது. அவர்களால் அவரை அலட்சியம் செய்ய முடியாது. அவர் சொற்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் மதிப்பு அதிகம் என அவர்களுக்குத் தெரியும். அதைக் கண்டு அஞ்சுகின்றனர். அதனால்தான் அவர் மீது பாய்கின்றனர்.
அதனால்தான், மற்ற சமயங்களைவிட இப்போது இந்த நாட்டில் மேலும் நஸ்ரூதின் ஷாக்கள் வேண்டும்.
சித்தார்த் பாட்டியா
நன்றி: தி வயர்
https://thewire.in/communalism/naseeruddin-shah-comments-india-opnion