
New Delhi: Prime Minister Narendra Modi addresses the media on the first day of the Winter Session of Parliament, in New Delhi, Tuesday, Dec.11, 2018. (PTI Photo/Manvender Vashist)(PTI12_11_2018_000093B)
பிரதமர் மோடியின் முந்தைய அணுகுமுறைக்கும் தற்போது பாஜகவின் அணுகுமுறைக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது
சுமார் 13 ஆண்டுகளாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். ஆயினும் தொடர்பு பிரதமர் மோடியுடன் மட்டுமே தவிர பாஜகவுடன் அல்ல; சொல்லப்போனால், குஜராத்திலோ (அ) புதுதில்லியிலோ இருக்கும் பாஜக அலுவலகத்துக்கு நான் சென்றதே இல்லை.
என் அமைப்பின் ‘தலீம்-ஓ-தர்பியாத்’ நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்களாக வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல் மற்றும் பல தலைவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். முஸ்லிம்களுக்குப் பயன்தரவிருக்கும் மௌலானா ஆசாத் தேசிய உருதுப் பல்கலைக்கழக வளாகம் கட்டத் தேவையான நில ஒதுக்கீடு செய்ய பாஜக ஆளும் பல மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
பிரதமர் மோடி மதவெறி பிடித்தவரோ (அ) முஸ்லிம்களுக்கு எதிரானவரோ அல்ல என்று எனது பல்லாண்டு அனுபவம் உத்தரவாதம் தந்துள்ளது; இதை எப்பொழுதும் குற்ற உணர்வின்றி நம்புவேன். கடந்த 4½ ஆண்டுகளாக பாஜக முஸ்லிம்களுக்கெதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ எதையும் செய்து விடவில்லை. மத்திய அரசு எடுத்த நல்ல / கெட்ட முடிவுகள் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம அளவில் பாரபட்சமின்றி நல்லதை / கெட்டதைத் தந்து வந்தன. முதலில் திட்டமட்டபடி இன்றி இப்போது நீர்த்துப்போய் விட்ட முத்தலாக் மசோதாவை பாஜக அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியதுதான்.
ஆனால், என் மனதை நெருடும் சில விஷயங்களும் உள்ளன. பாஜகவின் அடங்காத உபரி ஆட்களை இப்போது கட்டுப்படுத்த யாருமில்லை. இப்போது மையக்களத்துக்கு வந்துள்ள இவர்கள் 2014இல் இருந்ததை விட அதிதீவிரமாக இன்று காணப்படுகின்றனர். கிரிராஜ் சிங், சாத்வி ப்ராக்யா, உமாபாரதி, சாக்ஷி மகராஜ் போன்றோரது பேச்சில் முன்பிருந்ததைவிட அதிக வீரியம் தெரிகிறது. பிரதமர் மோடியால் இவர்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இப்படி அதிகம் பேசுபவர்களால் பாஜக கப்பல் கவிழும் வாய்ப்புதான் அதிகம்.
தொலைந்த வியூகம்
கடந்த ஆண்டு ஒரு மூத்த பாஜக தலைவரிடம் கட்சியின் தொழிற்கொள்கை புரியவில்லை என்றேன். கூர்மையான மிக்க தொழிலதிபர் போல் பாஜக அரசு இருந்திருந்தால் கட்சியின் வியூகங்களும் வித்தியாசமாக இருந்திருக்கும். ஒரு வணிகத் தொழிலதிபரின் அணுகுமுறையில் மதம் எப்போதுமே வராது, பணத்துக்கு நிறமில்லை என்பதை அவர் நன்கறிவார். அதுபோல் ஓட்டுக்கும் நிறமில்லை.
நான் இங்கிலாந்தில் வசித்தபோது வால்மார்ட், டெஸ்கோ ஸ்டோர்கள் ஹலால் மாமிசத்தை வைத்திருக்கவில்லை; காலப்போக்கில்தான் சிறிய அளவில் இருந்தாலும் முஸ்லிம்களைக் குறிவைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. ஹலால் மாமிசத்தை விற்று தம் வியாபாரத்தை பெருக்கினர். இதனால்தால் தொழிலுக்கு மதமில்லை என்றேன்.
ஆனால், இன்று இந்திய மக்கள்தொகையில் 15% உள்ள முஸ்லிம்களை பாஜக அலட்சியப்படுத்துகிறது. இது பாஜகவுக்கு சாதகமாக இராது. மோடியின் முந்தைய அணுகுமுறைக்கும் பாஜகவின் தற்போதைய அணுகுமுறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. பாஜக தன் வியூகத்தைத் தொலைத்துவிட்டது என்று சொல்வது சரிதான்.
நிலமையைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. இல்லையெனில், 2014 தேர்தல்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஆக்கபூர்வமான கதையும் 12 ஆண்டுகள் அவர் குஜராத்தை நிர்வகித்தபோது முஸ்லிம்கள் சம அளவு பல ஆதாயங்களை அடைந்த நிலையும், அவர் கையை விட்டு வெகு சீக்கிரம் விலகிவிடும். இதற்காக மக்கள் 2014இல் வாக்களிக்கவில்லை என்று அவர் உணர வேண்டும்.
இந்துத்துவத்தை ராகுல் காந்தி கையிலெடுத்துள்ளதும் பாஜகவுக்கு பாதகமாக ஆகிவிட்டது. தனது எண்ணற்ற கோயில் வருகைகள் மூலம் காங்கிரஸ் முஸ்லிம்களை ‘காக்கா பிடிக்கும்’ கட்சி என்ற பிம்பத்தை ராகுல் காந்தி வெற்றிகரமாக மாற்றிவிட்டார். இதுவும் பாஜக தலைவர்களின் வெறுப்பை உமிழும் பேச்சும் பாஜகவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிறுபான்மையினரின் அமைதி
பாராட்டும் விதமாக சிறுபான்மை முஸ்லிம்கள் இத்தகைய கோபமூட்டும் பேச்சுக்களுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டனர். சில அரசியல்வாதிகளின் பேச்சு மனதை காயமாக்கும் என்றும் முஸ்லிம் சமுதாயத்தை வெறுப்பேற்றி உசுப்ப மட்டுமே அவை சொல்லப்படுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எதிர்வினை புரியாமலிருந்தால், பாஜக அரசியல்வாதிகள் இத்தகைய பாணி அரசியலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விடும்.
முஸ்லிம்கள் இப்போது முழுக்கவும் கட்சிசார்பின்றி இருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு பாஜகவைத் தோற்கடிக்கும் திறனுள்ள வேட்பாளர்களை பல முஸ்லிம்கள் ஆதரித்தனர். 2014இல் மோடியைத் தோற்கடிக்கவோ (அ) காங்கிரசுக்கு வாக்களிக்கவோ அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. முஸ்லிம்களின் பெருத்த ஆதரவின்றி பாஜகவால் தானாக 282 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது. அனைவருக்கும் வாய்ப்புக் கொடுக்கிறோம், ஏன் மோடிக்குத் தரக் கூடாது என்றே பல முஸ்லிம்கள் நினைத்தனர்.
இன்று மோடியோ அவரது அரசோ முஸ்லிம்களை அப்புறப்படுத்தவில்லை. பாஜகவின் ‘பெரும்பேச்சாளர்கள்’ சிலர்தான் இதைச் செய்து வருகின்றனர்.
புலந்த்சஹர் படுகொலை பல எதிர்வினைகளையும் கலவரத்தையும் தூண்டியது, ஆனால் ஒரு முஸ்லிம்கூட போலீசில் புகார் அளிக்கவில்லை. இது பாராட்டுக்குரியது. முஸ்லிம்களின் எதிர்வினை நின்றுபோனதும், பாஜகவின் ‘பெரும் பேச்சாளர்களுக்கு’ என்ன செய்வதென்றே புரியவில்லை.
முஸ்லிம் சமூகத்துக்கு எனது செய்தி இதுதான்: “எதிர்வினை தேவையில்லை. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட விரும்புவதாக அவர்கள் சொன்னால், அவர்கள் அவ்வாறே செய்யட்டும். ‘வேண்டுமென்றால் கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் தோள்களிலிருந்து துப்பாக்கியைச் சுடாதீர்கள். ராமர் கோயில் அரசியலிலோ (அ) பொது சிவில் சட்டத்திலோ (அ) முத்தலாக்கிலோ எங்களை ஈடுபடுத்த வேண்டாம்’ என்று சொல்லலாம். ஒரு சமூகமாக நாம் நமது கிளர்ச்சி மனநிலையை விட்டு வெளியே வர வேண்டும்.
நாட்டில் சட்டரீதியான தீர்வுகள் இருந்தாலும், நாமொன்றும் பெயருக்குக் குடியரசாக இருக்கும் ஒரு நாட்டில் வசிக்கவில்லை. அவசரச் சட்டங்கள் மூலம் மட்டுமே நாட்டை ஆள முடியாது. அவசரச் சட்டங்களும் சட்டரீதியாக ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். நாட்டின் நீதித்துறை மிகச் சிறப்பாக உள்ளது. நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு அச்சுறுத்தலுக்கும் சட்டரீதியான தீர்வு காத்திருக்கிறது.
முஸ்லிம்கள் தமது கல்வி, சுகாதாரநலம் மற்றும் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இந்த அளவுகோல்களை வைத்துத்தான் நாம் பாஜக உள்ளிட்ட எந்த அரசையும் மதிப்பிட வேண்டும்.
ஸஃபர் சரேஷ்வாலா
(பத்திரிகையாளர் ஃபாத்திமா அஸ்லம் கானுக்கு கூறியபடி)
(மௌலான ஆசாஹ் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றியவர்தான் ஸஃபர் சரேஷ்வாலா)