‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும்.
4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று.
4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது.
டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் இருந்தது. தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், மற்றும் உச்சத்திலிருந்து கீழே சரிந்து கார்பரேட் இந்தியாவை அசைத்த வங்கி அதிகாரிகள் ஆகியோர்.
பல விஐபிக்கள் பெயர் அடிபட்ட ‘#MeToo’ இயக்கமும் இப்பட்டம் பெறும் நிலையில் இருந்தது. கலந்துகொண்டவர்களை விட வெற்றி பெற்றவர்கள் அதிகமாக அட்டைப்படங்களில் இடம் பிடித்தனர்.
காங்கிரஸின் வெற்றிகள் அவரை ‘நியூஸ் மேக்கராக’ ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க தூண்டின. 2009இல் முதன்முறை எம்.பி.யாக புதிய பாணி அரசியலைப் பின்பற்றுவதாக வாக்களித்தபோதும் காங்கிரஸ் தலைவர் ‘இந்தியா டுடே நியூஸ் மேக்கராக’ இருந்திருக்கிறார். முழுதும் நம்பகத்தன்மை நிறைந்த ஒரு அரசியல்வாதியாகப் பரிமளிக்க அவருக்கு கிட்டத்தட்ட தலைமுறைக்காலம் வரை தேவைப்பட்டிருக்கிறது.
கடந்த டிசம்பரில் அன்னை சோனியா காந்தியின் நிழலிலிருந்து வெளிவந்து கட்சித்தலைவரான பின் பிரதமர் மோடியின் கோட்டை குஜராத் தேர்தலில் கட்சியைச் சிறப்பான முறையில் வழிநடத்தியபோதும் நியூஸ் மேக்கர் பட்டத்தை ராகுல் காந்தி மயிரிழையில் நழுவ விட்டார்.
4½ ஆண்டுகளில் 11 மாநிலங்களில் தோற்று ‘இந்தி பெல்ட்’ எனப்படும் முக்கிய 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது வரை காங்கிரஸின் அற்புதமான தேர்தல் செயல்திறன் ஓராண்டுகளுக்குள் மாறியுள்ளது இந்திய அரசியலின் உயர்பதவிக்குத் தீவிரமான போட்டிக்கு இவர் தயாராகியதையே குறிக்கிறது.
இப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் பிராந்தியத் தலைவர்கள் அதிகம் இருக்கும் ஒரு குழுவில் முதல்வராகவும் இருக்கிறார். தன் முக்கிய எதிரியை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு பிம்பத்தை வளர்த்து 2019 மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா போன்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு ராகுல் காந்தி தயாராகிவருவதைப் போல் தெரிகிறது.
முன்னணியில் நின்று தலைமை வகிக்கும் ராகுல் காந்தியிடம் தமாஷாகப் பேசுவது, உடனடியாகப் பதிலளிப்பது, செய்தியாளர்களிடம் பயமின்றிப் பேசுவது போன்ற குணங்களுடன் கடந்த 11 மாதங்களில் 17 மாநிலங்களில் 50 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனுபவமும் உண்டு. அடிக்கடி விடுமுறை கழிக்க வெளிநாடு சென்றுவிடுகிறார், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நேரங்களில் ஊரில் இருப்பதில்லை என்றெல்லாம் விமரிசனம் செய்யப்பட்ட தலைவரிடம் இது மிகவும் பாரட்டத்தக்க மாற்றம்தானே. இப்புதிய ராகுல் சுறுசுறுப்பாக இயங்குவதுடன் விவசாயிகள் பிரச்சினை, பொருளாதாரம், வேலையில்லாமை, ரஃபேல் பேரம் ஆகிய விஷயங்களில் இடைவிடாமல் பிரதமரை மடக்கி பாஜகவின் சமூக ஊடகப் போரில் சலிக்காமல் பதிலளிக்கும் ஒரு எதிரியாக உருப்பெற்றிருக்கிறார்.
அவரது திறன்களில் இப்போது சேர்ந்துள்ள மாபெரும் ஆயுதம் அவருடைய எளிமை. கட்சிக்குள் அனைத்துத் தலைவர்களுடனும் வயது வித்தியாசம் பாராமல் இணைந்து பணிபுரிவதுடன் வெளியிருக்கும் கூட்டணிக் கட்சிகளை அடையாளம் காணும் வேலையையும் – சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.கே. ஸ்டாலின் (திமுக), சீதாரம் யெச்சூரி (கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சி) மற்றும் தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதாதளம்) சரிவரச் செய்கிறார்.
பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகள் பொறுமையிழந்திருக்கையில் இந்நண்பர்களும் கூட்டாளிகளும் வரும் பொதுத்தேர்தலின்போது முக்கியப் பங்காற்றுவார்கள் என்று ராகுலுக்கும் தெரியும்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிராந்திய முக்கியத் தலைவர்களையும் உயர்பதவி குறித்த அவர்களது குழப்பமான விருப்பங்களையும் சமாளித்து பாஜகவின் கட்டமைப்பு பலத்தையும் பிரதமரின் மாபெரும் இமேஜையும் எதிர்த்து நிற்க ஒரு மாபெரும் தலைவர் என்ற அவரது பெரும்பங்களிப்பு தேவை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘பிராண்ட் மோடி’ முத்திரையை தன்னால் முடிந்தவரை மதிப்பிழக்கச் செய்துவருகிறார் ராகுல்.
ஆயினும், வெற்றிக்கு அவருக்கு இது போதாது என்று நான் நினைக்கிறேன். (எதிர்கால) இந்தியா பற்றிய தனது மாற்றுக் கருத்தை, பிம்பத்தை அவர் இன்னும் தெளிவாகத் தந்தாக வேண்டும்.
2014இல் வளமான இந்தியாவுக்கான நம்பிக்கை என்ற வாகனத்தின் மீது மோடி பயணித்தார். மோடி தன் வாக்கைக் காப்பாற்றவில்லை என்று சொல்வதுடன் இன்னும் அதிகமாகக் கூற வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது. அரசியல் வனத்தில் அரசராக விரும்பினால் இப்போது பதுங்கியிருக்கும் காளையாக இருக்கும் ராகுல் சீக்கிரமே சிங்கமாக மாறியாக வேண்டும்.
இது கடினமான வேலை இதில் அவர் வெற்றி பெறுவாரா என்பது அடுத்த 5 மாதங்களுக்குள் தெரிந்துவிடும்.
வாசகர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அருண் புரி
(‘த எவல்யூஷன் ஆஃப் ராகுல் காந்தி’ என்ற தலைப்பில் 07.01.2019 தேதியிட்ட இந்தியா டுடே இதழின் ஆசிரியர் எழுதிய கட்டுரை,)