கிராமப்புற இந்தியாவுடன் துளிகூட தொடர்பில்லாத பலர் இழப்பு, சோகம் நிறைந்த பல கதைகளைக் கேட்டிருப்பர்
2016ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று நானும் எங்களின் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் சிலரும் ஹூக்லி மாவட்ட கிராமம் ஒன்றில் எங்களது பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த சிலரை நேர்காணல் செய்யவிருந்தோம். உள்ளூர் கூட்டுறவு விவசாய சங்கத்தின் அழைப்பின் பேரில் பயிற்சித் தொடர் நடத்த நாங்கள் சென்றிருந்தோம். பொதுவாக இவ்வகை நேர்காணல்கள் நட்புறவுடன், மகிழ்ச்சியாக, பேச்சு / பதில்களுடன் நடக்கும். அவ்வப்போது எமது தொடருக்குப் பொருந்தாத சிலரையும் (அதிக வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள்) காண நேரிடும்; சிலசமயம் எங்களால் கையாள முடிந்ததை விட அதிக அளவு விண்ணப்பதாரர்கள் வந்து விடுவர்; ஆனால் இந்த முறை 20-க்கும் அதிகமான இடங்களுக்கு 28 விண்ணப்பதாரர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் நேர்காணல் சுமுகமாகப் போயிருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு நிகழவில்லை.
எங்களது நேர்காணலில் ஒரு சோகம் – செய்வதறியாத நிலை – சூழ்ந்திருப்பது போலிருந்தது; பொருளாதார ரீதியாகவும் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் தான் எதிர்நோக்கும் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றி ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பேசினர்; மகளைக் கல்லூரிக்குப் படிக்க அனுப்புவது, மருமகனுக்குத் திருமணம் செய்து வைப்பது, நோயுற்றவருக்குச் சிகிச்சை அளிப்பது, கடை வைக்க உறவினருக்குக் கடன் கிடைப்பது போன்றவை நடக்கவே நடக்காது என்பது போல அனைவரும் பேசினர்.
ஆச்சரியத்துடன் இதை அணுகிய எங்களுக்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை 08.11.2016 அன்று அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகிறது என்றும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (இப்போது மதிப்பிழந்த) ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வாங்கவோ மாற்றம் செய்யவோ கூடாது என்று அறிவித்து 6 நாட்களாகிவிட்டது என்றும் உணர்ந்தோம். நாங்கள் சந்தித்த அனைவருமே தமது சேமிப்பின் பெரும்பங்கைக் கூட்டுறவு சங்கங்களில் வைத்திருந்தனர்; சங்கங்கள் பெரும்பாலும் கூட்டுறவு வங்கிகளுடன் இணைந்திருந்தன. தமது பெரும்பாலான வணிகச் செயலை வங்கிகளுடன்தான் இச்சங்கங்கள் செய்துவந்தன. இச்சங்கங்களும் / கூட்டுறவு வங்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரூயா நோட்டுகளை மாற்றித்தந்த சில நாட்களில் பலநூறு கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிமாற்றம் நடந்துவிட்டது. பல மணிநேரம் வரிசையில் மக்கள் காத்திருந்தாலும், இச்சங்கங்கள் தமது வேலைநேரத்தை அதிகரித்து கவுண்டர்களில் அதிகம் பேரைப் பணிக்கு வைத்தன.
ஆனால், இப்போது அது எல்லாம் முடிந்துவிட்டது. தொடருக்கான விண்ணப்பதாரர்கள், குடும்பத்தார், நண்பர்கள், சங்க உறுப்பினர்கள், கிராமத்தினர் ஆகியோருக்கு இக்கொடுமை எப்போது முடியும் என்று தெரியவில்லை; முடியுமா என்றும் தெரியவில்லை. 25 மாதங்களுக்கு முன் குளிர் நிறைந்த அந்த நவம்பரிலும் அறை முழுவதும் சோகமும் பயமும் வெப்பமூட்டிக் கொண்டிருந்தன. அடுத்த சில வாரங்கள், மாதங்கள் வரை நிலைமை அவ்வளவாக மாறவில்லை; ஓராண்டு கழிந்தும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். பல சட்டரீதியான போராட்டங்களுக்குப் பின் அடுத்த ஆண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் ரிசர்வ் வங்கியிலிருந்து பழைய நோட்டுக்கு பதில் புது நோட்டு பெற்றுக்கொள்ளவும் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை லட்சக்கணக்கான சாதாரண இந்தியர்களின் வாழ்வில் ஏற்படுத்திய கொடுமையான விளைவுகள் பற்றி விவரமாக மீரா ஹெச். சன்யாலின் ‘The Big Reverse: How Demonetization Knocked India Out’ (பெரும் பின்னடைவு: இந்தியாவை வீழ்த்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை) புத்தகத்தைப் படிக்கும்போது இந்நினைவுகள் மனதில் ஓடின. உலகின் பெரும் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் பல உயர் பதவிகளை வகித்த சன்யால் இந்தியாவின் பெருவெற்றிகரமான வங்கி அதிகாரிகளுள் ஒருவர். அவர் ஒரு சோஷலிஸ்ட்; சந்தைகள், போட்டிகள், சிறு-பெறும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் 08.11.2016 அன்று அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்குகளான கறுப்புப் பணத்தை ஒழித்தல், ஊழலுக்கு முடிவுகட்டுதல், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துதல் ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை என்றும் நாட்டுப் பற்றுள்ள எந்த இந்தியனும் இதற்கு எதிர்வாதம் புரியக் கூடாதென்றும் நம்மில் பலர் போல அவரும் நினைத்தார். இந்த மூன்று அடிப்படை இலக்குகளுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சில நாட்களுக்குப் பின்னர் அரசுப் பேச்சாளர் அறிவித்த ஐந்து பிற இலக்குகளையும் சேர்க்கிறார் சன்யால்: ரொக்கப் பணமற்ற சமூகத்தை உருவாக்குவது, வரி ஆதாரங்களைப் பெருக்குவது, பொருளாதாரத்தின் முறைசாராத் துறையை முறையானதுடன் ஒருங்கிணைப்பது, வட்டி விகிதங்களைக் குறைத்தல், ரியல் எஸ்டேட் விலைகளைக் குறைத்தல் ஆகியவையே அவை. ‘பணமதிப்பிழப்பு ரிப்போர்ட் கார்டு’ எனும் 6ஆவது அத்தியாயத்தில் அரசு புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி மேற்சொன்ன 8 இலக்குகளில் எதுவுமே நிறைவேறவில்லை என்கிறார். ஐந்து அத்தியாயங்களில் (முன்னுரை, முடிவுரை தவிர) பணமதிப்பிழப்பு நடவடிக்கை விளைவுகளை மக்கள், நிறுவனங்கள், பொருளாதாரம் மற்றும் வரலாற்றுக் கோணங்களில் சன்யால் ஆராய்கிறார். அவர் சொல்வதைப் படிக்கும்போது மனம் வருந்துகிறது.
நானொரு பொருளாதார வல்லுநரோ அரசியல் அறிஞரோ கிடையாது, கடந்த மூன்று தசாப்தங்களாக இலக்கியச் சொற்களைப் புரிந்துகொள்ள முயன்றுவருகிறேன். பல்வேறு வகையான மக்களுடன் பேசிவௌகிறேன். இவற்றின் மூலம் இரு விஷயங்களை நான் புரிந்துகொண்டேன்: கதைகள் முக்கியம், நினைவாற்றல் குறைவு. சம்பளத்தை நம்பி நகரத்தில் வசிக்கும் என் போன்ற பலருக்குப் பணமதிப்பிழப்பு என்பது அரசு அளித்த அதிர்ச்சி; அதிலிருந்து நாங்கள் வெகு சீக்கிரமே மீண்டுவிட்டோம். 08.11.2016க்குப் பிந்தைய நாட்களில் நம்மில் பலர் இதைத்தானே செய்தோம்: எங்களுடைய அக்கம்பக்கத்திலுள்ள கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிய விவரங்களைக் குறித்துக்கொள்வார்கள். அவற்றுகான தொகை ரூ.2000-த்தைத் தாண்டியபோது பணத்தைத் தரச்சொல்லி வியாபாரம் நடத்தினார்கள். பல நிறுவனங்கள் கடன் அட்டை அல்லது வங்கிக் கணக்கு அட்டை மூலம் பணம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன; வங்கிகள் / ஏடிஎம் மையங்கள் வாசலில் பணம் பெற மக்கள் பெரிய வரிசைகளில் காத்திருந்தது பேருந்து நிலையக் காட்சிகளை நினைவுபடுத்தின. ரிசர்வ் வங்கி அடிக்கடி வெளியிட்ட (மாறுபாடான) ஆணைகள் நகைச்சுவை உணர்வைத் தூண்டின.
கஷ்டம் நிலவியது என்பது உண்மைதான். வீட்டில் வேலை செய்பவர்கள், மளிகை சாமான் வாங்குபவர்கள், டீக்கடை வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் உடனடியாகச் சில்லறை கேட்காமல், செல்லாது என்று ஆகிவிட்ட ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்குச் செல்லும் நோட்டுகளைக் கொடுத்தும் சம்பளத்தில் முன்பணம் கொடுத்தும் சிறிய, முக்கியமான உதவிகளைச் செய்துள்ளோம். கிராமப்புறப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். கிராமங்களில் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள், சிகிச்சை பெற முடியாத நோயாளிகள், அன்றாடத் தேவைக்கெனக் கந்து வட்டிக்காரரிடம் கொடுத்த கூடுதல் வட்டிப் பணம், பணமில்லாததால் ரத்து செய்யப்பட்ட குடும்ப / சமூக நிகழ்வுகள் பற்றி நமக்குத் தகவல் இல்லை. கிராமப்புறத்துடன் சிறிதளவேனும் சம்பந்தம் கொண்டுள்ள எவருமே பல்வேறு நஷ்டக் கதைகளையும் சோகக் கதைகளையும் கேள்விப்பட்டிருப்பர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் மூன்றாவது ஆண்டின் இரண்டாவது மாதத்தின் 21ஆவது நாளில் செய்தித்தாளைப் படிக்கும் அனைவரும் சாதாரண மக்கள் அனுபவித்த கஷ்டங்கள், பொருளாதாரத்தின் எல்லாப் பிரிவுகளிலும் நிலவிய குழப்பங்கள், தோல்விகளை மறந்துவிட்டனர்; பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தியவர்கள் அவற்றை வெற்றிகரமாக மறைத்துவிட்டனர். கடின உழைப்புடனும் மிகுந்த கவனத்துடனும் திரட்டித் தந்துள்ள ஆவணங்களின் மூலம் அவற்றை சன்யால் பதிவுசெய்கிறார். இந்த ஆவணங்களின் உதவியுடனும் மனிதநேயமிக்க உணர்வுடனும் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் மூலம் இந்தியாவின் வினோதமான, கொடுமையான அண்மைக்கால வரலாற்றை உருவாக்கிய பல கதைகளை அவற்றின் காரணங்களுடன் நமக்கு நினைவூட்டுகிறார் சன்யால்.
சமந்தக் தாஸ்
(கட்டுரையை எழுதியவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்; கிராமப்புற வளர்ச்சிக்குப் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சாதாரண ஆர்வலராகக் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்)