36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில், ரஃபேல் ஒப்பந்தத்தின் பின் உள்ள செயல்முறை சரி என வாதிட்ட அரசு, தான் தாக்கல் செய்த விவரங்களில் இந்த உள் முரண்களை மறைத்துவிட்டது. பகிரப்பட்ட செயல்முறை என்று மட்டும் தெரிவித்திருந்தது.
தி கேரவன் முன்பே வெளியிட்டபடி, ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட்ட ஒரு அம்சம் விலை. 36 விமானங்களுக்கான ஆரம்ப ஒப்பீடு விலை 5.2 பில்லியன் யூரோவாக இருந்தது. 2016இல் கையெழுத்தான ஒப்பந்தத்தை விட இது 2.5 பில்லியன் யூரோ அதிகமாகும். விலை தொடர்பாக ஆலோசனை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்ட குழுவின் அதிகாரி எம்.பி.சிங்கால் ஆரம்ப விலை பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இரண்டு அதிகாரிகள் இவரது விலையை ஆதரித்தனர்: இணைச் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர் ராஜீவ் வர்மா (விமானப்படை) மற்றும் நிதி மேலாளர் (விமானப் படை) அனில் சுலே ஆகியோர் ஆதரித்தனர். குழுவின் ஏழு உறுப்பினர்களில், சிங், வர்மா, சுலே ஆகியோருக்கு விலை விஷயத்தில் அதிக நிபுணத்துவம் இருந்தது. குழுவின் மற்ற நான்கு உறுப்பினர்கள் இது சாத்தியம் இல்லை எனக் கூறி விலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நான்கு உறுப்பினர்களில், குழுவின் தலைவரான, விமானப் பணியாளர்களின் துணைத் தலைவரான ராகேஷ் குமார் சிங் பஹதூரியாவும் அடங்குவார். விலை விவகாரம், பாதுகாப்பு நலன் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய, பாதுகாப்பு அமைச்சரை தலைவராக கொண்ட பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பொருத்தமான ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான கவுன்சில், மாற்றுக் கணக்கை முன்வைத்தது. ரஃபேல் ஒப்பந்தத்தை வழி நடத்தும் கொள்முதல் விதிமுறைகளான, பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை – 2013க்கு எதிராக இது அமைந்திருந்தது. இதன் விளைவாக, அதிக ஒப்பீடு விலை உண்டானது. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டி.ஏ.சி.) , இறுதி முடிவுக்காக, பிரதமர் தலைமையிலான பாதுகாப்பிற்கான காபினெட் குழுவிடம் இதைச் சமர்ப்பித்தது. விலை போன்ற தொழில்நுட்ப விவரங்களைத் தீர்மானிக்கும் திறன் இல்லை என்றாலும், நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான காபினெட் குழு (சி.சி.எஸ்.), அதிக ஒப்பீடு விலையை அங்கீகரித்தது.
பேச்சுவார்த்தைக் குழுவின் மற்ற உள் முரண்கள் இதே போக்கில் அமைந்திருந்தன. சிங், வர்மா மற்றும் சுலே ஆட்சேபனை கருத்துக்களை எழுப்பினர். அவர்கள் பஹதூரியா மற்றும் பிற உறுப்பினர்களால் எதிர்கொள்ளப்பட்டனர். சர்ச்சைக்குறிய விஷயங்கள் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் வைக்கப்பட்டன. ஒரு சில எதிர்ப்பு கருத்துக்களை தானே தள்ளுபடி செய்துவிட்டு, மற்றவற்றை மோடி தலைமையிலான கேபினெட் குழுவுக்கு அனுப்பி வைத்தது. பேச்சுவார்த்தை அதிகாரிகள் எதிர்த்து தெரிவித்த கருத்துகளை மீறி, பாதுகாப்பிற்கான காபினெட் குழு, ரஃபேல் ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
ரஃபேல் ஒப்பந்தத்திற்கு, பேச்சு வார்த்தை குழுவின் முரண்பட்ட உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை கருத்துகள் வருமாறு:
- “ஒப்பீடு விலையான 5.2 பில்லியன் யூரோ, இறுதியில் தீர்மானிக்கப்பட்ட 7.89 பில்லியம்ன் யூரோவை விட மிகவும் குறைவு என்பதால், விலை தொடர்பான பொறுப்பு கேள்விக்குள்ளாகிறது”. The
முதலில் சிங் பரிந்துரைத்த விலையை விட, 2.5 பில்லியன் யூரோ அதிகமான புதிய விலை, மிகவும் அதிகமானது என எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
- “எந்த முன்பணம் மற்றும் செயல்பாடு வங்கி உத்திரவாதம், டசால்ட் ஏவியேஷனிடம் இருந்து பெறப்படவில்லை மற்றும் டெலிவரிக்கு முந்தைய முன்பணம் ஈட்டுறுதி செய்யப்பவில்லை”.
ரஃபேல் உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷனுக்கு, டெலிவரிக்கு முன் பெரிய தொகைகளை அளிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது. ஒப்பந்த மீறலின் போது பயன்படுத்தி கொள்ளக்கூடிய வகையில் பிரான்ஸ் அரசு அல்லது டசால்ட்டிடம் இருந்து எந்த நிதி உறுதியையும் பெறவில்லை. இத்தகைய பத்திரங்கள் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களில் சகஜமானவை. உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கும் போது,உற்பத்தி நிறுவனம் இத்தகைய பத்திரத்தை அளிக்கும். அரசு இறையாண்மை உறுதி அளிக்கும், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில், அயல்நாட்டு அரசு உறுதிப் பத்திரம் அளிக்கிறது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இதற்கு இந்தியா விலக்கு அளிக்கிறது. இந்த நாடுகளின் சட்டம் அனைத்து வெளிநாட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும், அதிகாரபூர்வ வழிகளில் நிறைவேற்றப்பட வழி செய்கிறது மற்றும் வாக்குறுதி அளித்தபடி டெலிவரி செய்யப்படாவிட்டால், அரசு அதற்கு பொறுப்பேற்கிறது. தி கேரவன் எற்கனவே செய்தி வெளியிட்டபடி, பிரான்சில் இத்தகைய நடைமுறை இல்லை. பிரான்ஸ் அரசிடமிருந்து உறுதி அளிக்கப்படாததால், மொடி அரசு கூறுவதற்கு மாறாக, ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை,
- “36 ரஃபேல் விமானங்களுக்கான டெலிவரி அட்டவனை, முந்தைய 126 விமானங்களுக்கான டெலிவரி அட்டவணையைவிடச் சிறந்ததாக இல்லை.”
- “ செயல்பாடு அடிப்படையிலான உறுதி உள்ளிட்ட 36 ரஃபேல் விமானங்களுக்கான பராமரிப்பு விதிகள் மற்றும் நிபந்தனைகள், 126 விமானங்களுக்கான ஒப்பந்ததைவிட மேம்பட்டதாக இல்லை”.
மோடி அரசுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கீழ், இந்தியாவுக்கு 126 மீடியம் மல்டி ரோல் கம்பேட் ஏர்கிராப்ட் வழங்குவதற்கான போட்டி அடிப்படையிலான டெண்டரில் டசால்ட் ஏவியேஷன் வெற்றி பெற்றிருந்தது. அடுத்து வந்த மோடி அரசு, டெண்டரின் கீழ் 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கு மாறாக 36 விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்திய விமானப்படை தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள், 36 விமானங்கள் ஒப்பந்தம், ரத்து செய்யப்பட்ட 126 விமானங்கள் ஒப்பந்தத்தைவிட விரைவான டெலிவரி மற்றும் மேம்பட்ட நிபந்தனைகளை அளிப்பதாகக் கூறிவந்துள்ளனர். பேச்சு வார்த்தை குழுவில் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் இவ்வாறு கருதவில்லை. இந்த இரண்டு ஆட்சேபணைகளையும், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தள்ளுபடி செய்தது. காபினெட் குழு முடிவை ஏற்றுக்கொண்டது.
- “விமானங்கள் மற்றும் ஆயுத அமைப்பு படிநிலைகளுக்கான, ஐ.ஜி.ஏ ஷரத்துகள் மற்றும் பிரிவுகள் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்’.
தி கேரவன் ஏற்கனவே செய்தி வெளியிட்டபடி, சட்ட ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட போது, 36 ரஃபேல் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பாக சட்ட அமைச்சகம் பல அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்தக் கருத்துகள் இறுதி ஒப்பந்தத்தில் நிராகரிக்கப்பட்டன. சட்ட அமைச்சக ஆட்சேபணைகள் நிலுவையில் இருக்கின்றன என்று தெரிந்தே, சி.சி.எஸ். இதற்கு அனுமதி அளித்தது. சட்ட எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து அதன் மூலம் அவற்றைச் சரி செய்வதற்கான எதிர்கால முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பிரான்ஸ் தரப்புடன் கூட்டு ஆவணத்திற்கு ஒப்புக்கொண்ட இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இருந்தார். இந்த கொள்முதல் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்குச் சட்டபூர்வமான தகுதி இல்லை. உச்ச நீதிமன்றத்தில் அரசு சமர்பித்த பதிலில், தோவல் பங்கேற்பு குறித்துத் தெரிவிக்காமல் தவிர்த்துவிட்டது.
- “126 விமானங்கள் டெண்டரில் இ.ஏ.டி.எஸ் -ன் 20 சதவீத தள்ளுபடியும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பேச்சுவார்த்தை குழு, 36 ரஃபேல் விமானங்களுக்கான சமமான இ.ஏ.டி.எஸ்.ஸைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விலையை ஒப்பிட வேண்டும்”.
யூரோப்பியன் ஏரோனாடிக்ஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி அல்லது இ.ஏ.டிஎஸ். தயாரிக்கும் யூரோபைட்டர் டைபூன், எம்.எம்.ஆர்.சி.ஏ. டெண்டரில் ரஃபேல் தவிர தொழில்நுட்பச் சோதனையில் தேர்வான ஒரே விமானமாகும். 126 விமானங்களுக்குக் குறைவான விலையைத் தெரிவித்ததால், இ.ஏ.டி.எஸ்.ஸுக்குப் பதிலாக டசால்ட்டுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. அதன் பிறகு இ.ஏ.டி.எஸ். டசால்ட்டை விடக் குறைந்த விலை அளிப்பதற்காக 20 சதவீத தள்ளுபடி தருவதாகக் கூறியது. ஆனால் இந்திய அரசு தன் முடிவில் நின்றது. பேச்சுவார்த்தைக் குழுவின் ஆட்சேபணை தெரிவித்த உறுப்பினர்கள், தள்ளுபடி கொண்ட யூரோபைட்டர்களுக்கான விலையை 36 ரஃபேல் விமானங்களுக்கான விலை ஒப்பீட்டில் பரிசீலிக்கப்பட வேண்டும் என விரும்பினர். மற்ற நான்கு உறுப்பினர்கள், இ.ஏ.டி.எஸ். தள்ளுபடி கோரப்படாதது மற்றும் டெண்டர் செயல்முறை முடிந்த பிறகு தெரிவிக்கப்பட்டதால் கொள்முதல் செயல்முறைக்கு விரோதமானது என்பதால் அது செல்லாதது என வாதிட்டனர். ரஃபேல் ஒப்பந்தத்தின் கீழ், ஒரு விமானத்திற்கான விலை, எம்.எம்.ஆர்.சி.ஏ. செயல்முறையின் கீழ் டசால்ட் அளித்த விமானத்திற்கான விலையை விட மிக அதிகமாக இருந்தது.
- “இந்தியாவுக்கான குறிப்பிட்ட மேம்பாடுகளுக்கான (ஐ.எஸ்.இ) மிக அதிகமானது”.
36 விமான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்படும் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கான குறிப்பிட்ட மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் என இந்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதற்கான விலை மிக அதிகமானது என்று, 3 உறுப்பினர்கள் தெரிவித்தனர். மற்ற நான்கு உறுப்பினர்கள் இந்தச் செலவு மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லாதது என்றும், வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்படாதது எனவும் தெரிவித்தனர். எம்.எம்.ஆர்.சி.சி. ஒப்பந்தமும் இந்தியாவுக்கான குறிப்பிட்ட அம்சங்களை கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். டி.சி.ஏ., சி.சி.எஸ். ஆகியவை, நான்கு உறுப்பினர்களின் கருத்தை ஆதரித்தன. ரஃபேல் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விமானத்திற்கென இந்தியாவிற்கான குறிப்பிட்ட அம்சங்களுக்கான விலை, எம்.எம்.ஆர்.சி.ஏ. டெண்டரை விட அதிகமானது.
- “பிரான்ஸ் படை, எகிப்து மற்றும் (கத்தார்) ஆகியவற்றுடனான் தற்போதைய ஒப்பந்தம் காரணமாக, ஐ.ஜி.ஏ.வின்படி, டசால்ட்டால் டெலிவரி செய்ய முடியாது.”
முரண்பட்ட அதிகாரிகள், பிரான்ஸ் ராணுவம் தவிர, எகிப்து மற்றும் கத்தாருக்கு விமானங்கள் வழங்க வேண்டியிருப்பதால், இந்தியாவிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைப்படி டசால்ட்டால் விமானங்களை வழங்க முடியாது என கவலை தெரிவித்தனர். டி.சி.ஏ. நான்கு அதிகாரிகள் கருத்தை ஏற்றது. சி.சி.எஸ். இதை அங்கீகரித்தது.
- “டசால்ட்டின் நிதி நிலை, அதன் வெளியிடப்பட்ட நிதி முடிவுகளின்படி வலுவாக இல்லை. எனவே அதனால் 36 ரஃபேல் விமானங்களைச் சொன்னபடி வழங்க முடியாமல் போகலாம்.”
முரண்பட்ட மூன்று அதிகாரிகள் டசால்ட்டின் நிதி நிலை நம்பிக்கை அளிப்பதாக இல்லை எனத் தெரிவித்தனர். தி கேரவனில் முன்னர் செய்தி வெளியிட்டதுபோல், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தனது பொறுப்புகளை பிரான்ஸ் அரசு டசால்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது. உற்பத்தியாளர்களிடமிருந்து டெலிவரியை உறுதி செய்வதற்கான சட்டபூர்மாகச் செயல்படுத்தக்கூடிய உறுதியைப் பெற இந்திய அரசு தவறிவிட்டது. ஏதேனும் காரணத்தினால், டசால்ட் 36 விமானங்களை வழங்கத் தவறினால் இந்திய அரசுக்கு எந்த சட்டபூர்வமான நிதிப் பாதுகாப்பும் இல்லை.
- “டசால்ட் நிதி நிலை முடிவுகள் உணர்த்தும் விலையின்படி அது, இந்தியாவுடன் ஒப்பிடும்போது எகிப்து மற்றும் கத்தாருக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளது.”
டசால்ட்டின் நிதி நிலை பற்றிய தகவல்கள், எகிப்து மற்றும் கத்தாருக்கு விற்கப்பட்டதை விட இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை உணர்த்துவதாக முரண்பட்ட 3 அதிகார்கள் கருதினர். மற்ற நான்கு அதிகாரிகள் மாறுபட்டனர். தனது நிதி நிலை முடிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்குக் குறைந்த விலையில் அளிக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்ததாகவும், தி கேரவனிடம் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.ஏ.சி., நான்கு அதிகாரிகள் பக்கம் நின்று இதை அலட்சியம் செய்தது. சி.சி.எஸ். இதை அங்கீகரித்தது.
ஹர்தோஷ் சிங் பால், சுரபி கங்கா
(ஹர்தோஷ் சிங் பால் தி கேரவனின் அரசியல் எடிட்டர் மற்றும் வாட்டஸ் குளோஸ் ஓவர் அஸ்; எ ஜர்னி அலாங் தி நர்மதா புத்தக ஆசிரியர். சுரபி கங்கா, தி கேரவன் இணைய எடிட்டர்.)
நன்றி: தி கேரவான்
https://caravanmagazine.in/government/rafale-objections-indian-negotiating-team