யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனு, அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டதாக தெரிவிக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர், கடந்த புதன்கிழமை அன்று ரஃபேல் ஒப்பந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சீராய்வு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் தங்கள் மூல மனுவைச் சரியாகப் பரிசீலிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதம், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, குறிப்பாக பிரான்ஸ் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்டிக்சர் தொடர்பான ஆப்செட் ஏற்பாடு தொடர்பாக, விசாரணை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவற்றில் ஒரு மனு, சின்ஹா, ஷோரி பூஷன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. முறைகேட்டிற்கான பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கருதுவதால், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து இந்த மூவரும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். டிசம்பர் மாதத் தீர்ப்பில் உள்ள பிழைகள் சீராய்வுக்கு உரியவை என்று அம்மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு;
சிபிஐ விசாரணை
முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டாலும், சிபிஐ விசாரணைக்கான மனுதாரர்களின் கோரிக்கையைப் பதிவு செய்ததே தவிர, சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அதன் மீது தீர்மானிக்கவில்லை எனச் சீராய்வு மனுவில் வாதிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருத்தமான அமைப்பு அல்லது கமிஷன் மூலம் விசாரணை நடத்தாமலே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக முன்கூட்டியே ஆய்வு செய்ததன் மூலம் நீதிமன்றம் தவறு செய்யவிட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சின்ஹா, ஷோரி, பூஷண் தாக்கல் செய்த புகார் தொடர்பான நிலை குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேதகு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கை அல்ல என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குத் தகுதி உடைய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என உணர்த்துவதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான் கோரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கை
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கை இருப்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தவறான தகவல் அளித்துள்ளதாகவும் சீராய்வு மனு குற்றம்சாட்டியுள்ளது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை பொதுக் கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சுருக்கமான வடிவம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள மனு, இத்தகைய ஒரு அறிக்கை இல்லை எனத் தெரிவிக்கிறது. தணிக்கையாளர் அறிக்கை எப்படிக் கையாளப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் நீதிபதிகளால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனும் அரசு விளக்கத்தைப் பொருத்தவரை, மூடப்பட்ட கவரில் அளிக்கப்படும் விவரங்கள் தொடர்பாக எப்படி மூன்று நீதிபதிகளும் தவறாக புரிந்து கொண்டிருக்க முடியும் என மனுவில் கேள்வி எழுப்ப பட்டுள்ளது.
“சிஏஜி அறிக்கை மீதான மேதகு நீதிமன்றத்தின் கருத்து எழுத்து அல்லது கணக்கு தவறு அல்ல. தற்செயலான பிழையோ அல்லது நீக்கமோ அல்ல” என்று மனு மேலும் குறிப்பிடுகிறது. நீதிமன்றம் நன்றாக யோசித்து செயல்பட்டு, இல்லாத ஒரு தகவலைச் சார்ந்து தீர்ப்பு வழங்கும் தவறைச் செய்துள்ளது. இது தற்செயலான தவறு அல்ல, குறிப்பிடத்தக்க தவறாகும். இந்தத் தவறு, சீராய்வு தொடர்பான XLVII ஆணை மூலம் சரி செய்யப்பட முடியும் அல்லது நீதிமன்றம் தனது தீர்ப்பைப் திரும்ப பெறலாம். விதி 3 கீழ்,XII ஆணை செல்லத்தக்கதல்ல.”
சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் எப்படித் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பொதுக் கணக்குகள் குழு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் மனு தெரிவிக்கிறது.“எனவே, சிஏஜியின் இறுதி அறிக்கை சுருக்கப்படும் எனத் தெரிவிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை”.
விமானப்படை சாட்சியம்
உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட இந்திய விமானப் படை அதிகாரிகள், ரஃபேல் விமானத்தின் தன்மை, படையின் தேவை, போர் விமானத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் பேசினாலும், இந்தச் சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தின் கீழ் ரஃபேல் போர் விமானங்களின் விலை பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.
“நீதிமன்ற விசாரணையில், 36 ரஃபேல் விமானங்கள் விலை தொடர்பாக அல்லது முடிவு எடுக்கப்பட்ட செயல்முறை தொடர்பாக விமானப் படை அதிகாரிகளிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை அல்லது அவர்களால் பதில் அளிக்கப்படவில்லை எனத் தாழ்மையோடு தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச திட்டக் கோரிக்கை
ரஃபேல் விமானத்திற்கான உத்தேச திட்டக் கோரிக்கை தகவல்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மனு தெரிவித்துள்ளது. 126 விமானங்களுக்கான உத்தேச திட்டக் கோரிக்கை 2015 மார்ச் மாதம் துவங்கியதாக அரசு தெரிவித்தாலும், பதிவுகள் இதற்கு எதிராக அமைந்துள்ளன.
“மேலே சொன்ன அறிக்கை, 126 விமானம் தொடர்பான உத்தேச திட்டக் கோரிக்கை விலக்கலுக்கான செயல்முறை 2015 மார்ச் மாதம் துவங்கியதாகச் சொல்லப்படுவதை அல்லது பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த அறிக்கை பதிவாகியுள்ளது.
126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் கீழ் எச்.ஏ.எல். நிறுவனத்தால் மேக் இன் இந்தியா திட்டம் கைவிடப்படுவதற்கான அறிவிப்பு வெளியான 2015 எப்ரல் 10ஆம் தேதி, இதுபோன்ற நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்குப் பிரதமருக்கு அதிகாரம் வழங்குவதற்கான அவசியம் இல்லை என்று அரசு ஒப்புக்கொண்டது.
மேலும், விமானப் படை 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை கோரியதற்கான ஆதாரம் எதுவும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என்று மனு தெரிவிக்கிறது.
ஆப்செட் ஒப்பந்தம்
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ரிலையன்ஸ் ஏரோஸ்டிக்சர் நிறுவனம் ஆப்செட் ஒப்பந்தம் பெற தகுதி உடையது அல்ல என்பதை பரிசீலிக்கவில்லை. பொருத்தமான பொருட்களைத் தயாரிக்கும் அல்லது பொருத்தமான சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட வேண்டும் என ஆப்செட் நெறிமுறைகள் தெரிவிக்கின்றனர். அம்பானி நிறுவனம் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யவில்லை என்பது, அதன் ஆண்டு அறிக்கையில் தெளிவாகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் தேவை என நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ள போதிலும், டசால்ட் நிறுவனத்துடன் ஆப்செட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், பாதுகாப்பு அமைச்சர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும், 2016 ஜூன் வழங்கப்பட்ட உற்பத்தி உரிமத்தின் நிபந்தனைகளை ரிலையன்ஸ் மீறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவ பயன்பாட்டிற்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்காக அதற்கு உரிமம் வழங்கப்பட்டது. மாறாக, நிறுவனம் இதே உரிமத்தின் கீழ் சிவிலியின் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக டசாலட் நிறுவனத்துடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டது.
2015 மார்ச்சில் 36 விமானங்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு முன் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இது பற்றி அறியாதது, விலை விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் உரிமையை முந்தைய அரசுகள் கோராதது, முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவின் துணைவி எடுக்கும் திரைப்படத்திற்காக ரிலையன்ஸ் நிறுவனம் நிதி வழங்கியது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுளன.
இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவின் ஆட்சேபணையை மீறி அரசு ரஃபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்ததுச் சென்றது உள்ளிட்ட, தீர்ப்புக்குப் பிறகு வெளியான புதிய தகவல்களையும் மனு தொகுத்தளிக்கிறது. குழுவின் ஆட்சேபணை நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கப்படவும் இல்லை.
நன்றி
https://scroll.in/article/907920/rafale-review-petition-claims-supreme-courts-order-refusing-inquiry-contains-serious-errors