ராஜஸ்தானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசானது, தேர்தலில் போட்டியிடும் உரிமையை பழைய நடைமுறைப்படியே தக்க வைத்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், மற்றும் முந்தைய பாஜகஅரசினால் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்தல் போன்ற பல முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் அஷோக் கெலாட் முந்தைய வசுந்தரா ராஜே அரசு மாநிலத்தில் மேற்கொண்ட முக்கிய முடிவுகள் பலவற்றைத் தலைகீழாக மாற்றியமைத்துள்ளார். தலைமைச் செயலரிடம் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையை அளிக்கையிலேயே அது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஆவணமாக இருக்கும் என்றும் அது வலுவாக நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
வசுந்தரா ராஜே அரசினால் மூடப்பட்ட டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கழைக் கழகம் (டாக்டர் அம்பேத்கர் லா யுனிவர்சிட்டி) ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்புக்கான ஹரிதேவ் ஜோஷி பல்கழைக்கழகம் (ஜோஷி யுனிவர்சிட்டி ஆஃப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) ஆகியவற்றை மீண்டும் துவக்குவது, பஞ்சாயத் ராஜ் தேர்தல்களில் போட்டியிடுவதற்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம் என்கிற விதியை நீக்குதல் மற்றும் அரசாங்க அலுவலக் ஆவணங்களில் இருந்த தீன்தயாள் உபாத்யாயாவின் சின்னங்களை (லோகோ) நீக்குதல் போன்றவையும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் உள்ளன.
கடன் தள்ளுபடி அறிவிப்பைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக துறைகளுக்கு இடையேயான குழுவை அமைத்து அதன் மூலம் குறுகிய காலப் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதற்கு கெலாட் அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்குழுவானது கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், மண்டல கிராமப்புற மற்றும் லேண்ட் டெவலப்மண் வங்கிகள் ஆகியவற்றில் கடன் பெற்றவர்களில் கடன் தள்ளுபடி செய்யப்படக்கூடியவர்களின் தகுதி குறித்த வரையறைகளை வகுக்கும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசானது முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளில், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அடங்குவர். தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அளிக்காமல் நிறுத்தியபோது ராஜே தலைமையிலான பாஜக அரசை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் பதவி விலகுமாறு கோரியது. ”கடந்த ஐந்து வருட காலமாக ராஜே அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தவேயில்லை. அதற்கு முந்தைய எங்கள் அரசு நிர்ணயித்த தொகையே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 55 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு ஓய்வூதியத் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், 75 வயதிற்க்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும் நாங்கள் உயர்த்தியுள்ளோம்” என்று ராஜஸ்தான் மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரான மாஸ்டர் பாவர்லால் மேக்வால் ‘தி வயர்’ வலைதள செய்தி இதழ்க்குப் பேட்டி அளிக்கையில் கூறினார்.
தேசிய ஊரக சுகாதார மிஷன் (நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் – NRHM) துணை ஆசிரியர்கள், உருது துணை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வித் துறையில் பணிபுரிபவர்கள், பஞ்சாயத் உதவியாளர்கள் மற்றும் இது போன்று மாநிலம் முழுதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக குழு ஒன்றை அமைப்பது என்று மாநில ஆலோசனைக் குழு (ஸ்டேட் கவுன்சில்) முடிவெடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு துவக்கத்தில் ராஜேவின் ஆட்சிக் காலத்தில் நிரந்தரப் பணியை உறுதி செய்யுமாறு கோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டிய NRHM ஊழியர்கள் பலர் கோஷம் எழுப்பியதற்காகவும், காவல் துறையினரை அவர்களின் கடைமையச் செய்யவிடாமல் தடுத்தற்காகவும் கைது செய்யப்பட்டனர்
பஞ்சாயத் ராஜ் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடக் குறிப்பிட்ட அளவு கல்வித் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் என்று முந்தைய பாஜக அரசு நிர்ணயித்திருந்த விதியைத் தற்போதைய அரசாங்கமானது ஒழித்துக்கட்ட முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் உரிமையை அனைவருக்கும் உறுதி செய்துள்ளது.
பாஜக தலைமையிலான மாநில அரசு 2014 பஞ்சாயத்து தேர்தல்களுக்குச் சில நாட்களே இருந்த நிலையில் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத் சமிதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கிராம பஞ்சாயத்துத் (சர்பஞ்ச்) தேர்தல்களில் போட்டியிடுபவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.
பின்னர் இதுகுறித்து ராஜஸ்தான் பஞ்சாயத்து சட்டம் 1994இல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் உரிமையை மீண்டும் நிலை நிறுத்துவதற்காகத் தொடர்ந்து போராடி வந்த சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். “இந்தச் சட்டம் பாரபட்சமானது, மேல்தட்டு மக்களுக்கானது. பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் அதை முறியடிப்பதற்காகவே இந்தச் சட்டம் கெட்ட நோக்கத்துடன் ராஜஸ்தானில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65% பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். இந்தச் சட்டமானது போதுமான கல்வி அறிவு இல்லாத வயதில் மூத்த நபர்களையும், பழங்குடி மக்களையும் அடியோடு ஓரம் கட்டிவிட்டது. கிராமப்புறங்களில் பாஜகவின் ஒரே அடித்தளமான இளைஞர்களை அவர்களின்பால் ஈர்ப்பதுதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவாஸ்தா ‘தி வயர்’ இதழிடம் கூறியுள்ளார்.
அலுவலக ரீதியான தொடர்புகளுக்காக அமைச்சர்கள் பயன்படுத்தும் லெட்டர் ஹெட்களில் இருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயவின் உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை (லோகோ) நீக்குமாறும் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற உபாத்யாயவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஒட்டி இந்த லோகோவைப் பயன்படுத்துவதை ராஜே அரசு கட்டாயம் ஆக்கியது. “இந்த தீன்தயாள் உபாத்யாய யார்? பெரிய தலைவர்களின் லோகோகூட அரசாங்கத்தின் அலுவல் கடிதங்களில் உபயோகப்படுத்தப்பட முடியாத போது இவரது லோகோ எப்படி அனுமதிக்கப்படலாம்?” என்று மேக்வால் மேலும் கேள்வி எழுப்புகிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகளில் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், சேர்மன், மேயர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்தல்கள் நடத்துவது, மாநில அமைச்சர்கள் காலை 9 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களைச் சந்தித்துக் குறை கேட்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையயும், பொறுப்புணர்வையும் உறுதிப் படுத்துதல் மற்றும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய கனவுத்திட்டமான பார்மர் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி முடித்தல் போன்றவையும் உள்ளடங்கும். மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தைத் (MNREGA) திறம்படச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உடனடி செயல்திட்டம் ஒன்றை வகுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக மாநிலக் கல்வி அமைச்சர் (தனிபொறுப்பு) கோவிந்த் சிங் டோடசரா முந்தைய பாஜக அரசினால் பாடப் புத்தகங்களின் உள்ளடக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைக் குறித்து அவரது துறையானது மறு ஆய்வு செய்யும் என்று அறிவித்துள்ளார். “பாடப் புத்தகங்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைப் பறைசாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களில் வரலாற்று உண்மைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளமை மற்றும் பிற பிற்போக்குத்தனமான உள்ளடக்கங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காகக் கல்வியாளர்களைக் கொண்ட தனிக் குழு ஒன்றை அமைக்க நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என்று டொடசரா ‘தி வயர்’ இதழிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளிச் சீருடைகளின் வண்ணம் மாற்றப்பட்டது, மாணவர்களுக்குக் காவி நிற மிதிவண்டிகள் வழங்கப்பட்டது போன்று கல்வித் துறையில் செய்யப்பட்ட வேறு சில மாற்றங்களைக் குறித்துக் கூறுகையில் “ராஜே அரசினால் செய்யப்பட்ட இந்தச் சீருடை மற்றும் மிதிவண்டிகளின் நிறமாற்றம் போன்றவற்றைச் சரி செய்யுமாறு எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
ராஜஸ்தான் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (Board of Secondary Education) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மோடி அரசை மேன்மைப்படுத்தும் விதமாகவும் பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவக் கொள்கையைப் பரப்புரை செய்யும் விதமாகவும் வசுந்தரா ராஜே தலைமியிலான பாஜக அரசினால் மாற்றி அமைக்கப்பட்டது இங்கு கவனிக்கத் தக்கது.
சாவர்க்கரை முன்னிலைப்படுத்தி ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரை ஓரங்கட்டும் விதமாக வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்களிப்பையும் அதன் புகழையும் குறைக்கும் விதமாக “மேல் தட்டினரான காங்கிரஸ்வாதிகள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இன்னும் சில காலம் தொடர வேண்டும் என்று விரும்பினர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, பாடப் புத்தகத்தில் அக்பரின் பெயருக்குப் பின்னால் இருந்த ‘கிரேட்’ என்னும் அடைமொழியை நீக்கிய ராஜஸ்தான் பல்கலைக்கழகம், வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு சிபாரிசு செய்திருந்த நூல்களின் பட்டியலில் மஹாராணா பிரதாப் ஹல்திகாட்டி போரின் வெற்றியாளர் என்று கூறப்படும் புத்தகத்தையும் சேர்த்துள்ளது.
இத்தகைய மாற்றங்களை ஆய்வு செய்வதற்காகவே கல்வியாளர்களைக் கொண்ட தனிக் குழு ஒன்றைத் தற்போதைய ராஜஸ்தான் அரசு நியமித்துள்ளது.
ஸ்ருதி ஜெயின்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/from-restoring-right-to-contest-to-education-rajasthan-congress-reverses-bjp-decisions