உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில், அது பதிலளித்ததை விட ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசியல் சாசனத்தின் பிரிவு 32இன் வரம்பிற்குட்பட்ட ஆளுகைக்குள், உச்ச நீதிமன்றம்36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதைக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்வது மற்ற ஒப்பந்தங்களைப் போலன்றி ஒரு வேறுபட்ட பரிசீலினை தரத்தை கோருகின்றது. அந்தத் தரத்தின் வறையரைகளிலிருந்து உச்ச நீதிமன்றமானது திருப்தி கொள்கிறது.
சர்ச்சைக்கிடமில்லாத ஏராளமான உண்மைகள் பொது வெளியில் உள்ளன. அவை ரஃபேல் வாங்கியதை அதிகமான சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. நான் சிலவற்றைக் கூறுகிறேன், 2015 மார்ச் 13இல் டசால்ட் மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited –HAL) பணி பிரித்துக்கொள்வது தொடர்பாக ஒப்பந்த்த்தை இறுதி செய்தது. அதன் இந்த ஒப்பந்தமானது முடியும் நிலையில் இருப்பதாக சமிக்ஞை அளிக்கப்பட்டது. 2015 மார்ச் 25இல் டசால்ட் தலைமை நிர்வாகி எரிக் ட்ராப்பியர், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் தலைவருடனும் விமானப் படையின் தலைவருடனும் பெங்களுருவில் இருந்தார். அவர்கள் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லத் தயாரான நிலையில் இருந்தனர்.
95 விழுக்காடு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் மீதி 5 விழுக்காடு ஒப்பந்தம் விரைவில் முடிந்துவிடும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ட்ரப்பியர் கூறினார்.
டசால்ட்டுக்கும் ஹாலுக்கும் இடையிலான பிரச்சினைகள்தான் 2015 ஏப்ரலில் பிரதமர் 36 ரஃபேல் விமானங்கள் வாங்கும் முடிவை எடுப்பதற்குக் காரணம் என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக இந்த உண்மை உள்ளது. டசால்ட்டுக்கும் தங்களுக்கும் இடையில் ஒப்பந்தத்திற்கு எந்தத் தடையும் இல்லை, அது குறித்த குறிப்புகள் கோப்பில் உள்ளன, அவை பொது மக்கள் முன்பாக வைக்கப்பட்டால் அனைத்துப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்தும் என்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் தலைவர் பகிரங்கமாக அறிவித்தார். ஒப்பந்தத்தின் துணைப் பிரிவானது தனியார் ஒப்பந்த்திலிருந்து அது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாக மாற்றப்பட்டது என்பதும் பொது வெளியில் பதிவாகியிருக்கிறது.
அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திற்குள் நுழையும் முன்னர் வழிகாட்டுதல்களின்படி, அதன் விதிகளும் நிபந்தனைகளும் ஒப்பந்த பேர கமிட்டியிலும் விலை பேரக் கமிட்டியிலும் பேரம் பேசப்பட வேண்டும். அதன் பின்னர் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சிலில் அனுமதி பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். 2015 ஏப்ரல் 10ஆம் தேதியன்று பிரதமர் அறிவித்தபோது இது எதுவுமே நடக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில் இது, சிக்கலுக்குப் பதிலளிப்பதற்கு பதிலாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. 2012இல் ரிலையன்ஸ் வாயு தோண்டும் கிணறு வெட்டுவதிலிருந்து ஃபால்கான் விமானத்தின் இறக்கை தயாரிப்பது வரை தனது செயல்பாடுகளைப் பன்முகமாக விரிவாக்கம் செய்ய விரும்பியது, அந்தத் திட்டமானது கைவிடப்பட்டது. அதற்கும் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட்டுக்கும் (Reliance Aerostructure limited—RAL – ரால்) எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நீதிமன்றமானது அதை உணராமல் ரிலையன்ஸ் பேரத்தில் இருப்பதாகத் தவறான முடிவுக்கு வந்தது.
பொது வெளியில் பதிவாகியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவெனில் டசால்ட்டின் இணை பார்ட்னரான ரிலையன்ஸின் ரால் கம்பெனியானது 2015 ஏப்ரல் 24இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இணை பார்ட்டனராக 2015 ஏப்ரலில் தங்களுடன் இணைந்தது என்று ட்ராப்பியர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் இந்த இணைப்பு ஏற்பாடு ஏப்ரல் 25இலிருந்து 30ற்குள் முடிந்திருக்க வேண்டும். ரால் இணைந்தபோது அதற்கு எந்தச் சொத்தும் இல்லை, முதலீடு இல்லை, அனுபவம் இல்லை, நிலமும் இல்லை. ரால் தொடங்கப்பட்டு 5 நாட்களுக்குள் ஏன் அதைத் தன் இணைக் கூட்டாளியாக டசால்ட் ஒப்புக்கொள்ள வேண்டும்? ராலைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே உத்தரவு ஏதும் வழங்கப்பட்டிருந்தாலொழிய இப்படி நடப்பதற்குச் சாத்தியமே இல்லை அல்லவா?
ரிலையன்ஸுக்கு பெங்களுர் விமான நிலையத்திற்கு அருகில் நிலம் உள்ளதால் அதன் செயல்பாடுகளை எளிதாக நடத்திக்கொள்ள முடியும், ஹாலுக்கு விமான நிலையத்திற்கு அருகில் அது போன்ற வசதிகள் இல்லை என்ற அடிப்படையில் இந்த இணைப்பை ட்ரப்பியர் நியாயப்படுத்தினார். இரு கூற்றுகளும் பொய்யானவை. ரிலையன்ஸ் நிலத்தைப் பெறுவதற்கான மனுவை 2015 ஜீன் 16ஆம் தேதியன்றுதான் தாக்கல் செய்தது. ஆனால் ஹாலுக்கு 2015 ஏப்ரலுக்கு முன்னரே விமான நிலையத்திற்கு அருகில் ஏராளமான நிலங்கள் இருந்தன.
கோப்புகள் தமக்கே உரிய கதைகளைப் பேசும். அவை இவ்விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் உத்தரவாதக் கடிதம் கேட்டு வலியுறுத்தியதாகக் காட்டும். இந்த நடவடிக்கைகளில் பிரதமர் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் காட்டும். உச்ச நீதிமன்றம் எந்த நிகழ்விலும் கோப்புகளைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தால், அவர்களின் நடவடிக்கைகளிலுள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டிருந்தால், உண்மை வெளிவந்திருக்கும்.
பிரதமர் ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது என உறுதி செய்த பின்னர் அதற்குப் பின்னர் நடந்த நடவடிக்கைகள் அவரின் தன்னிச்சையான முடிவை மீற முடியாது. இந்த நடவடிக்கைகள் எந்த வழிகாட்டுதல்களுடனாவது ‘பொருந்தி வருவதாக எப்படிக் கருத முடியும்?
கவனத்தைக் கோரும் இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலண்டேவின் அறிக்கையானது அதிபர் எமானுவேல் மார்கோனால் மறுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ளாததால் அது குறித்து எதுவும் கூற முடியாது என்றார். ஹாலண்டேவின் அறிக்கையைப் பிரதமர் மறுக்கவில்லை.
இரு தரப்புக் கூட்டத்தில் அதன் நிகழ்ச்சி நிரலானது பொதுவாகப் பதிவு செய்யப்படுவது வழக்கம், அது என்ன நடந்தது என்பதைக் காட்டிவிடும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ட்ராப்பியரும் எதுவும் கூறுவதற்கு சாத்தியமில்லை. எனவே உச்ச நீதிமன்றம் அதிபர் ஹாலண்டேவின் அறிக்கையானது மறுக்கப்பட்டது என்று கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உண்மை என்னவென்றால், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சருக்கோ, வெளியுறவுத் துறை அமைச்சருக்கோ அல்லது பிரான்சிலுள்ள இந்தியத் துதருக்கோ அல்லது டசால்ட்டுக்கோ தெரியாது. பிரதமர் இந்த முடிவை, சம்பந்தப்பட்டவர்களைக் கலந்துகொள்ளமால் தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. ஒப்பந்தத்தின் தன்மையானது அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தமாக மாற்றப்பட்டதுடன் வெறும் உத்தரவாதமளிக்கும் கடிதமாக இல்லாமல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசு உத்தரவாதமாக மாற்றிவிடுகிறது.
எந்த சந்தேகமுமின்றி இந்த விவகாரம் விகாரமாகிவிட்டது.. உண்மைகள் பேசப்பட வேண்டும். அது எப்படி, எப்போது என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது எந்த வழியிலும் இந்தப் பிரச்சினையை தீர்க்கவில்லை. உண்மையில் அது பதிலளிப்பதற்கு பதிலாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிமன்றம் வெளிப்படைத்தன்மைக்கான கொள்கைகளை எப்போதும் உயர்த்திப் பிடிக்கிறது. ஒவ்வொரு முடிவு குறித்தும் தகவல் அளிக்கப்பட வேண்டும் என்பதை நிலை நிறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் அது நியாயத்திற்கான சோதனையில் வெற்றி பெற முடியாது என்பதே நீதிமன்றம் எப்போதும் வலியுறுத்தும் கருத்து.
கடந்த காலத்தில், ஒட்டுமொத்தமாக எல்லா டெலிகாம் லைசன்ஸ்களையும் எல்லா நிலக்கரி ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து அவை குறித்து நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்படிச் செய்யும்போது அரசியல் சாசனத்தின் பிரிவு 32 உச்ச நீதிமன்றத்தைத் தடுக்கவில்லை. பொதுமக்களின் புரிதலும் நீதிபதிகளின் புரிதலும் காலத்திற்கேற்ப மாறுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. முடிவெடுப்பதில் எப்போதும் சீரான அணுகுமுறையைக் கொண்டிருப்பது சாத்தியமில்லைதான். சூழல்கள் மாறினால் முடிவுகளும் மாறத்தான் செய்யும். ஆனால், முடிவெடுப்பதில் சீரற்ற போக்கு என்பது சில நேரங்களில் நீதிமன்றத்தின் ஞானத்திற்கான அறிகுறியாகக் கருதப்படாமல்போகலாம். சூழல்கள் மாறும்போது நீதிமன்ற ஞானமும் மாறலாம். ஆனால், அது நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை இழக்கும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது.
கபில் சிபல்
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/opinion/columns/rafale-supreme-court-congress-iaf-bjp-narendra-modi-rahul-gandhi-5519133/