முக்கிய விருந்தினர்கள் வந்ததும், ஒரு வழியாக மாலை 6.30க்கு விழா தொடங்கியதும், பார்வையாளர்களிடம் “அப்பாடா.. இப்பவாவது தொடங்கினாங்களே” என்ற நிம்மதியை காண முடிந்தது.
முதலில் சவுக்கின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சவுக்கு தனது வரவேற்புரையில், இந்தப் புத்தகம் இப்போது வெளி வருவதற்கான அவசியம் என்ன என்பதை உணர்தியது. அமேரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு, படுகொலை செய்யப் பட்டதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளையும், அவரை சுட்டுக் கொன்ற, லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவர் கைது செய்யப் பட்டு, பிறகு, மற்றொரு நபரால் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்தும், அமேரிக்க அரசாங்கத்தால் நடத்தப் பட்ட பல்வேறு விசாரணைகள் இந்தக் கொலையில் ஆஸ்வால்ட் மட்டுமே சம்பந்தப் பட்டுள்ளார் என்று முடிவெடுத்த பிறகு, 15 ஆண்டுகள் கழித்து நியமிக்கப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, ஆஸ்வால்ட் மட்டும் இந்தக் கொலையில் சம்பந்தப் படவில்லை, பெரிய சதித்திட்டம் ஒன்று இருந்ததை உறுதி செய்ததை விளக்கியது.
கென்னடி படுகொலையில் விசாரணை நடத்தப் படுவதை விட, ராஜீவ் கொலையில் விசாரணை நடத்தப் பட வேண்டிய அவசியம் என்னவென்றால், ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டு 7 பேர் இன்னமும் சிறைச் சாலையில் வாடிக் கொண்டிருக்கும் விவகாரத்தை சுட்டிக் காட்டியது.
அதன் பிறகு, நூலை தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் வெளியிட, முதல் பிரதியை ஊடகவியலாளர் கஜேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டு, உரையாற்றினார்.
தோழர்.கஜேந்திரன், இந்தப் படுகொலை விசாரணை எப்படி, திராவிட இயக்கத்தை ஒடுக்குவதற்கு பயன்பட்டது என்பதையும், இந்தக் கொலையை பற்றி பேசுவதைக் கூட அபாயகரமான ஒரு விவகாரமாக எப்படி ஆக்கப் பட்டது என்பதையும், விளக்கினார். சவுக்கு தளத்தைப் பற்றி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்த தோழர் கஜேந்திரன், சவுக்கு தளம், விக்கிலீக்ஸ் இணைய தளம் போல, ரகசியங்களை வெளியிடுவதற்கு, இணைய தொழில்நுட்பத்தை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு வழிமுறைகள் மூலமாக விஷயங்களை சேகரித்து, வெளிப்படுத்துவதால், சவுக்கு தளம், விக்கிலீக்ஸ் தளத்துக்கு நிகரானது என்று தெரிவித்தார். இந்த நூல், ஒரு பெரிய அதிர்வலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது உறுதி என்று தெரிவித்தார்.
அடுத்து பேசிய தோழர் விடுதலை ராசேந்திரன், இந்த நூலின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நூலை வெளியிடும் சவுக்கு பதிப்பகம் மற்றும், மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஆகிய இருவரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், நூலில் உள்ள பல கருத்துக்கள், புலிகள் இயக்கத்துக்கு எதிரானதாகவும், உண்மைக்கு மாறானதாகவும் இருப்பதாக தனது கண்டனங்களை பதிவு செய்தார். ஏழு தமிழர் விடுதலை என்பது சவுக்கு மற்றும் ஆனந்தராஜின் நோக்கமாக இருப்பதால், அந்த விடுதலைக்கு பயன்படும் விஷயங்களும், இந்த நூலில் இருப்பது, இந்நூலின் சிறப்பம்சம் என்பதைத் தெரிவித்தார்.
ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும், பிரச்சார பயணத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக சென்னை திரும்பிய தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர், தோழர் புகழேந்தி அடுத்துப் பேசினார். இந்த நூல் அவர் கையில் மேடையில்தான் வழங்கப் பட்டது என்பதால், நூலுக்குள் செல்லாமல், ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டு இருக்கும் ஏழு தமிழரைப் பற்றிப் பேசினார். அவர்களோடு, கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் கூறினார். ராஜீவின் கொலையானது, இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களால் பாதிக்கப் பட்ட, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்ட யாரோ ஒரு சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், பழிவாங்கும் உணர்ச்சியால் செய்திருக்கக் கூடியதே, இதை ஒரு இயக்கம் செய்திருக்கும் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் குறைவே, இதற்காக ஒரு இனத்தையே அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது என்று கூறினார்.
மேலும், நளினியை சோனியாவின் மகள் பிரியங்கா சிறையில் சந்தித்த பிறகுதான் ஈழத்தில் போர் தீவிரமடைந்தது என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டுவதற்கான தீவிரமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருவதாகவும், அது முறியடிக்கப் பட வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து தோழர் தியாகு பேசினார். இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்களையும், அதனால் ஒரு இனத்தை அழிக்க நடந்த முயற்சிகளையும் பட்டியலிட்டார். இந்திய அமைதிப் படையில் தளபதியாக பணிபுரிந்த மேஜர் ஹர்கிரீத் சிங் என்பவரிடம், பேச்சு வார்த்தைக்கு என அழைத்து, பிரபாகரனை சுட்டுக் கொல்லும் படி ராஜீவ் காந்தி உத்தரவிட்டார் என்ற தகவலை, ஹர்கிரீத் சிங் தனது நூலில் வெளியிட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த நூல் ஏழு தமிழர் விடுதலைக்கு நிச்சயம் உதவக்கூடிய பல தரவுகளை கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
நூலாசிரியர் ராஜீவ் ஷர்மா பேசும் போது, அவரது நூலில், விடுதலைப் புலிகளை மோசமாக சித்தரித்திருப்பதாக எழுந்த குற்றச் சாட்டுக்கு, இந்த நூல் வெளி வந்த போது, மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளை மிக மிக திறமையானவர்களாக சித்தரித்திருப்பதாக அவரை கடிந்து கொண்டதை சுட்டிக் காட்டினார். இது போல இரண்டு கருத்துக்கள் இருப்பதே இந்த நூலுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். ஏறக்குறைய 6 ஆண்டுகள், யுனைட்டட் நியூஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளராக, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகியவற்றை ஒரு நாள் விடாமல், கவனித்து, பல்வேறு அதிகாரிகள் அளித்த தகவல்களையும், ஆதாரங்களையும் வைத்தே இந்த நூல் எழுதப் பட்டதாகவும், வேறு யாரும் தெளிவாக ஒரு நூலைக் கொண்டு வருவதற்கு முயலாத காரணத்தாலேயே இந்த நூலை அவர் எழுதியதாகவும் குறிப்பிட்டார். இந்த நூல் படிக்கும் அனைவரையும் வசீகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் பேசுகையில், வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் மென் பொறியாளராக பணியாற்றி அனுபவத்தின் போது, பல்வேறு விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், அப்போதெல்லாம், அவர்கள் தமிழர்கள் ராஜீவைக் கொன்றார்கள் என்று குற்றச் சாட்டு சுமத்தும் போது, அவர்களை மறுதலிக்க தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது என்றும், தி.நகரில் உள்ள ஒரு நூலகத்தில், இந்த புத்தகத்தைப் பார்க்கும் போது, கட்டாயம், இது தமிழ் மொழியில் வந்தே தீர வேண்டும் என்பதால் இந்த முயற்சிகளை எடுத்ததாக தெரிவித்தார். இந்த நூல் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக விழாவுக்கு பேச்சாளர்களுக்கு முன்னதாக குறித்த நேரத்துக்கு வந்திருந்த, மத்திய உளவுத் துறை (Intelligence Bureau) மாநில உளவுத் துறை (Special Branch CID) க்யூ பிரிவு (Q Branch CID) மற்றும், சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவு (City Intelligence Services) ஆகியோருக்கும், விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது. இந்த விழாவுக்கு மொத்தம் ஏழு காவல்துறையினர் உளவுப் பணிக்காக வந்திருந்தனர் என்பதே, அரசு, இந்த விழாவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதற்கு சான்று.
விழா முடிந்ததும், சவுக்கு வாசகர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது. அவர்களை சவுக்குக்கு அடையாளம் தெரியாவிட்டாலும், அவர்களாக தேடி வந்து, தங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் பொழிந்தார்கள். ஏதோ நாலு வார்தை இணையத்தில் கிறுக்குகிறான் என்று இல்லாமல், அவர்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. இந்த வாசகர்களின் அன்பைப் பார்க்கும் போது, என்ன சிரமம் வரினும், சவுக்கை மேலும்,சிறப்பாக நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது.
விழாவுக்கு நேரில் வந்த அன்புத் தோழர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வாழ்த்து தெரிவித்த அன்பு உறவுகளுக்கும், சவுக்கின் நன்றிகள் என்றும் உரியது.
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். ஆனந்தராஜ். 9940339748