ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான அரசு ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பு, விரும்பியவர்களுக்குச் சலுகை காட்டியது தொடர்பான காங்கிரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அரசு அப்படித்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். மாறாக, தீர்ப்பில் இருந்த முக்கியமான பிழை மற்றும் கசிந்த ஆடியோ கோப்பு உள்ளிட்ட தொடர்ந்து வெளியான தகவல்கள் இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன. இவற்றுடன், ரஃபேல் விஷயத்தில் முடிவெடுக்கப்பட்ட செயல்முறை குறித்த கூடுதல் தகவல்கள், ரஃபேல் ஒப்பந்தம் மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர விவாதத்திலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.
“ரஃபேல் மோசடி, உச்ச நீதிமன்ற விசாரணை வரையறைக்குள் வரவில்லை என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படக் கூடாது என தெரிவிக்கவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தங்கள் கட்சியின் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி மீதான நேரடித் தாக்குதலை உள்ளடக்கிய ராகுல் காந்தியின் பேச்சு, ஒரு சிலருக்கு இயல்பாகவே உண்மை பிடிக்காது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பதில் அளிக்க வைத்தது. தொடர்ந்து விவாதத்தில் அனல் பறந்தது.
ரஃபேல் ஒப்பந்தம் எப்படிச் செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை கோரிய மனுக்களை 2018, டிசம்பர் 14ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குறைந்த விலையில் கிடைக்கும் விமானங்களை இந்தியா அதிக விலை கொடுத்து வாங்குகிறதா, பிரான்ஸ் பங்குதாரரான ரஃபேல் நிறுவனத்துடன் பங்குதாரராக இருக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு, இந்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில் பங்கு என்ன என்னும் கேள்விகளில் மனுக்கள் கவனம் செலுத்தின. விலை விஷயம் அல்லது அம்பானியின் பங்கு குறித்து ஆய்வு செய்ய மாட்டோம் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், உள்நோக்கம் மற்றும் சலுகை காட்டுதல் இல்லை எனத் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.
தீர்ப்பு வெளியானவுடன் அதில் ஒரு பிழை இருப்பது தெரியவந்தது. ரஃபேல் விலை தொடர்பாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆய்வு செய்திருப்பதாகவும், அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவிடம் பகிர்ந்துகொண்டதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை எதுவுமே நிகழவில்லை. இது தவறான புரிதலால் ஏற்பட்டிருக்கலாம் என அரசு விளக்கம் அளித்தாலும், எதிர்க்கடசிகள் அரசு பொய் கூறியதாகக் குற்றம் சாட்டின.
தீர்ப்பில் பிழை தொடர்பான கேள்விகள், தவறான புரிதல் தொடர்பான அரசின் ஒப்புதல் ஆகியவை, அரசு எதிர்பார்த்தது போல இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்பதை உணர்த்தியுள்ளது. மாறாக இது அரசைத் தொடர்ந்து தாக்க காங்கிரசுக்கு வாய்ப்பளித்துள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் மேலும் சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின:
- கோவா மாநில அமைச்சர் என நம்பப்படும் ஒருவரின் தொலைபேசி உரையாடல் பதிவை காங்கிரஸ் வெளியிட்டது. தற்போதைய கோவா மாநில முதல்வரும் முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பரிக்கர், காபினெட் கூட்டம் ஒன்றில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் தன்னிடம் இருப்பதாகக் கூறியதாக அந்த நபர் கூறியிருப்பது இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தி எழுப்பியது அரசு தரப்பில் கடும் எதிர்வினையை உண்டாக்கியது. ரஃபேல் தொடர்பாக நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், பரிக்கர் இது தொடர்பாக மோடியை மிரட்டும் நிலையில் இருப்பதாகவும் காங்கிரஸ் ஏற்கனவே குற்றம்சாட்டிவருகிறது.
- விமானங்களை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து ஆலோசனை அளிக்கப் பணிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகக் குழுவின் பேச்சுவார்த்தை செயல்முறையில் பிரதமர் அலுவலகம் தலையிட்டதை அதிகாரபூர்வக் குறிப்புகள் பதிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தி வயர் செய்தி வெளியிட்டது. இந்தச் செயல்முறை குறித்து அறிந்த மிகவும் நம்பகமான தரப்பு, பிரதமர் அலுவலகம் தனது பேச்சுவார்த்தை செயல்முறையில் சமசரசத்தை ஏற்படுத்த நிர்பந்திப்பதாக 2015 டிசம்பரில் குறிப்பிட்டதாக இந்தச் செய்தி தெரிவிக்கிறது.
- ஜனவரி 1ஆம் தேதி அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விநோதமான பதில் அளித்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் அவர் மீது தாக்குதல் நடத்தும் நிலையில், தான் நேரடியாக பதில் சொல்லாமல், அமைச்சர்கள் மூலம் பதில் அளிப்பது ஏன் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தனக்கு எதிரானவை அல்ல என்று பிரதமர் பதில் அளித்தார். “இது எனக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. என் அரசுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு. என் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு இருந்தால், அவர்கள் யார் எப்போது, எங்கு என்ன கொடுத்தார்கள் என்பதை அவர்க்ள் சொல்லட்டும் “ என்று பிரதமர் கூறினார். நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த குற்றச்சாட்டுகள் மோடி மீதானவைதான் என்று கூறினார்.
- முன்னாள் பாஜக அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோரும், இந்த விஷயத்தில் நீதிபதிகள் கவனிக்க வேண்டிய கேள்விகள் மற்றும் விஷயங்கள் எனத் தாங்கள் கருதுபவற்றை சுட்டிக்காட்டி சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் எதுவுமே உரையாடலை முன்னெடுத்துச்செல்லவில்லை. ஆடியோ கோப்பு ஆதாரமில்லாதது. எனவே அதிக தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. பரிக்கர் இதை மோசடியானது என மறுத்துள்ளார். கோப்பில் உள்ள குறிப்புகள் குறித்த அறிக்கை பொதுவெளியில் வெளியாகாதவரை அல்லது சிஏஜி போன்றதொரு அமைப்பால் பரிசீலிக்கப்படாத வரை இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
ஆனால், ஒட்டுமொத்த விளைவு என்பது, உச்ச நீதிமன்றம் மனுக்களைத் தள்ளுபடி செய்த பிறகு ரஃபேல் விவகாரம் புதைக்கப்பட்டுவிட்டது என்பதாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்துக்கொண்டு, ராகுல் காந்தி அரசு மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் செய்ய இருந்தது. இப்போதும் அது கட்சியின் திட்டமாக இருக்கிறது. ஆனால், தீர்ப்பை தொடர்ந்து நிகழந்தவை, பாஜக விரும்பும் திசையில் இது அமையவில்லை என உணர்த்துகின்றன.
நாடாளுமன்றத்தில் போராட்ட அமளிக்கு இடையே நடைபெற்ற விவாதமும் எதையும் மாற்றிவிடவில்லை. ரஃபேல் கேள்வி உயிருடன் இருப்பதையும் அது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகிறது. எனினும் வாக்காளர்களிடம் இது எதிரொலிக்குமா என்பதைத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும். சிஏஜி அறிக்கை வெளிவரும்போது, பிரச்சினை தீரும் என பாஜக நம்பினாலும், அதில் விலை பற்றிய பார்வை இருக்காது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக, பொதுத்தேர்தல் வரை ரஃபேல் சர்ச்சை நீடிக்கும் என்றே தோன்றுகிறது.
ரோகன் வெங்கட்ராமகிருஷ்ணன்
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/907924/rafale-tape-and-fresh-allegations-mean-the-issue-is-still-alive-despite-scs-clean-chit