ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த பேட்டியின் போது தீவிரமான கேள்விகளோ குறுக்குக் கேள்விகளோ எழுப்பபடவில்லை என்பதோடு, முக்கியமன பல கேள்விகள் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றன.
பெரும் செல்வாக்கு பெற்ற இந்தியத் தலைவர்களுக்கு யதார்த்தத்தைப் புரியவைப்பதில் இந்திய ஜனநாயகம் தனித்துவமான வழியைப் பெற்றுள்ளது.
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதும் இந்திரா காந்திக்கு மகத்தான தோல்வி அளிக்கப்பட்டது. பல் ஆண்டுகள் கழித்து, அவரது மகன், ராஜீவ் காந்தி, போபர்ஸ் ஊழலில் சிக்கினார். 1984 தேர்தலில் 414 இடங்களை வென்ற காங்கிரஸின் இடங்களை 1989இல் 197க்குக் கொண்டு வந்தார்.
இந்தியாவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான பாஜகவின் வாஜ்பாயி, 2004இல் அது வரை இல்லாத வகையில் இந்தியா ஒளிகிறது எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தலில் மண்ணைக் கவ்வினார்.
நிகழ் காலத்திற்கு வந்தால், பிரதமர் நரேந்திர மோடி , புதிய இந்தியாவை உருவாக்குவதாக உறுதி அளித்தார். அண்மையில் இந்தி பேசும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தோல்வி அடைவதற்கு முன், மோடியும் பாஜகவும் தொடர்ந்து தேர்தல் வெற்றிகளைப் பெற்று வந்தனர். கடந்த ஆண்டில் கர்நாடகாவில் அக்கட்சியால் அரசு அமைக்க முடியாமல் போனது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைக்கத் தடுமாற வேண்டிய நிலைக்குக் கட்சி தள்ளப்பட்டது. இவற்றுக்குப் பிறகு இந்தி பேசும் மாநிலங்களில் தோல்வி கிடைத்துள்ளது.
2019ஆம் ஆண்டின் முதல் நாள், இதுவரை செய்தியாளர்கள் சந்திப்புகளைத் தவிர்த்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, தனக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனும் கருத்தைச் சமாளிக்கும் வகையில் ஏஎன்.ஐ எடிட்டர் ஸ்மிதா பிரகாஷிற்கு பேட்டி அளித்தார். இதில், தனது அரசு மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிக்க முயன்றார்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் அவர் அளித்த மற்ற பேட்டிகளைப் போலவே, இந்தப் பேட்டியும் தீவிரமான கேள்விகளோ குறுக்குக் கேள்விகளோ இல்லாமல் அமைந்திருந்தது.
காங்கிரசைத் தாக்க மோடிக்கு அளிக்கப்பட்ட மேடையாகவும், இந்திய அரசியல் அமைப்பு என்பது தனக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையிலான போட்டி மட்டுமே என்றோ அல்லது மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி போன்றது என்றோ மக்களை நம்ப வைப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே இந்தப் பேட்டி அமைந்தது.
தனது அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தெளிவில்லாத, சுற்றி வளைக்கும் பதில்களை மோடி அளிப்பதற்கான மேடையாகவும் இது அமைந்தது. நாட்டின் பிரதமரை அவரது முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வைப்பதற்கான கேள்விகளுக்கு பதிலாக, பாஜக பிரச்சார உத்தியின் ஒரு அங்கம் போலவே இந்தக் கேள்வி பதில்கள் அமைந்தன.
கடந்த சில ஆண்டுகளில், பிரதமர், தனக்கு விசுவாசமான மீடியா சேனலுக்கோ அல்லது முன்கூட்டியே கேள்விகளைப் பிரதமர் அலுவலகத்தில் சமர்பிக்க ஒப்புக்கொள்பவற்றுக்கோ மட்டுமே பேட்டி அளித்துள்ளார். பல சந்தர்பங்களில் விமர்சனபூர்வமான கேள்விகளை நீக்குமாறு அல்லது பிரதமரின் பதிலுக்கு ஏற்ற வகையில் அவற்றை மாற்றிக்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் காமிரா முன் நிற்கத் தேவையில்லாத சந்தர்பங்களில், பிரதமர் அலுவலகம் மின்னஞ்சல் பேட்டியை வலியுறுத்தியுள்ளது. 2015இல் பிரான்ஸ் நாளிதழ் லே மாண்டேவுக்கு அவர் மின்னஞ்சல் பேட்டி அளித்தது இதற்கு உதாரணம். ஆனால் இந்த அந்நாளிதழ் இதை வெளியிடவில்லை.
கிராமப்புற இன்னல்கள் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புன்மையைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என அரசு விமர்சனத்திற்கு இலக்காகியிருக்கும் நிலையில் ஏஎன்.ஐ பேட்டி நிகழ்ந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் குறைகள் நிறைந்த ஜிஎஸ்டி ஆகிய இரட்டைத் தாக்குதல்கள் இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்திருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும்கூட நாட்டின் பெரும்பகுதி இந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.
சமூகப் பிரச்சனைகளை பொறுத்தவரை, முஸ்லிம்கள் மீதான கும்பல் வன்முறை அதிகரித்துள்லது. பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியா பல மடங்கு கீழே இறங்கியிருக்கிறது. இந்துத்துவச் செயல்பாட்டாளர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளும் தன்மை அதிகரித்திருப்பது, அவர்கள் ஒரு காவலரைக் கொல்லத் தயங்காத அளவுக்கு அதிகரித்துள்ளதை புலந்த்சஹாரில் பார்த்தோம்.
ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பலமாகி வரும் நிலையில் அரசு நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் முதல், வங்கிக் கடன் செலுத்தாத வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வரை, எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவருகின்றன.
இந்தப் பிரச்சினைகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அரசு அமைப்புகளை பலவீனமாக்கி, பெரும்பான்மைவாத்தை முன்னிறுத்துவதாகவும் மோடி அரசு விமர்சிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், பிரதமரின் பேட்டி ஏமாற்றம் அளிக்கிறது. விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்றாலும் அவற்றைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படாமல், ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்கட்சிகள் மீது பழி போட்டுத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்தப் பேட்டியைப் பிரதமர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊடகம் தனது கண்காணிப்புக் கடமையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்தப் பேட்டி வேறு விதமாக இருந்திருக்கும்.
பணமதிப்பு நீக்கம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் எதிர்மறை விளைவு தொடர்பான கேள்விக்கு, பிரதமர் இப்போது தூய்மையாக்கம் முடிந்துவிட்டது, பொருளாதாரம் மீண்டு வரும் என பதில் அளித்துள்ளார். அமைப்பில் ரொக்கம் குறைந்திருக்கிறது, வரி செலுத்துபவர்கள் அதிகமாகி உள்ளனர், கருப்பு பணம் வங்கி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பேட்டிக்கான தனது முன்தயாரிப்பை முறையாக மேற்கொண்டிருந்த எந்தப் பத்திரிகையாளரும் இந்த நான்கு கேள்விகளை உடனே கேட்டிருப்பாபர்கள்.
- பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, 4 லட்சம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த நிறுவனங்களில் 50 பேருக்கு மேல் பணியாற்றவில்லை என வைத்துக்கொண்டால்கூட, இது 2 கோடி வேலை இழப்புகளைக் குறிக்கிறது.
- ரொக்கப் பணத்தின் புழக்கம் ஆண்டுதோறும் 22.7 சதவீதம் அதிகரிப்பதாக் ரிசர்வ் வங்கியின் அண்மை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, 17.01 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. 2018 நவம்பரில், 18.76 லட்சம் கோடி புழக்கத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
- ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின்படி பணமதிப்பு நீக்கப்பட்ட ரொக்கத்தில் 99.3 சதவீதம் வங்கி அமைப்புக்குள் திரும்பி வந்துவிட்டது. கறுப்புப் பணத்தை அமைக்குள் கொண்டுவந்தது மட்டும்தான் இந்த கடும் நடவடிக்கையின் பலனா?
- பணமதிப்பு நடவடிக்கைக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகும், அமைப்பு சாரா துறையும் விவசாயத் துறை இன்னமும் மீண்டு வரவில்லை.
வெறுப்பின் அடிப்படையில் நடக்கும் குற்றங்கள்
இந்தப் பிரச்சினையில், பசு பாதுகாப்பு போன்றவற்றில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் சக்திகளைப் பிரதமர் கண்டித்தார். ஆனால், மக்கள் பரஸ்பரம் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், கும்பல்களால் கொலை செய்யப்பட்டவர்கள் மீது பழி சுமத்தியதன் மூலம் அவர் இந்த சக்திகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளர். “அந்த உணர்வுகளை மதித்தால், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்” என்றார்.
அவரிடம் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டிருக்கலாம்.
- கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளிப்படையாக ஆதரிக்கும் பாஜக தலைவர்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? உதாரணமாக, அமைச்சரவையில் மோடியின் முன்னாள் சகாவான, ஜெயந்த் சின்ஹா, 2018 ஜூலையில் குற்றவாளிகளான பசுக் காவலர்களுக்கு மாலை அணிவித்தார். அதே போல, பசுக் கொலையாளிகளைக் கண்டறிந்து தண்டிப்போம் என்று பதில் அளித்ததன் மூலம், புலந்த்சஹாரில் இந்துத்துவ நபர்களால் காவலர் ஒருவர் கொல்லப்பட்ட விஷயத்தைப் புறந்தள்ளியது பற்றி என்ன கூறுகிறார்?
- இந்த சம்பவங்களில் எல்லாம் காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன், ஒரு கும்பல் பசுவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் மீது பாய்ந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பலரும், பசுக்களை வேறிடத்திற்குக் கொண்டு சென்றனர் என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. இதைச் சட்டம் ஒழுங்கு சீர்குலைவாக அவர் கருதவில்லையா?
- ஒரு சிலர் இதைத் தேர்தலுக்கு முன் எழுப்புவதாக நீங்கள் கூறினீர்கள். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அச்சத்தில் இருக்கும்போது, அதை வெளிப்படுத்தும்போது. இதை அரசியல் சதி எனப் புறந்தள்ளாமல் இந்த அச்சத்தைப் போக்குவது உங்கள் கடமை அல்லவா? இந்தியாவில் அச்சமாக உணர்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறியுள்ளனரே.
பாலினச் சமத்துவம்
முத்தாலக் பிரச்சினை பெண்கள் உரிமைகள் தொடர்பானது என்றும், கேரளாவில் சபரிமலையில் பெண்கள் வழிபடுவது நம்பிக்கை சார்ந்தது என்றும் பிரதமர் கூறினார். இந்தத் தர்க்கம் கேள்விக்குரியது என்றாலும், இந்த முரணை அவருக்கு உணர்த்த முயற்சிக்கப்படவில்லை. தொடர்ந்து கேட்கப்பட வேண்டிய கேள்விகளும் கேட்கப்படவில்லை.
- உங்கள் பிரச்சாரத்தில் சிறுபான்மையினரைத் திருப்திபடுத்துவது என்னும் விஷயத்தைப் பேசியிருக்கிறீர்கள். இப்போது முத்தாலக்கில் ஈடுபடும் முஸ்லிம் ஆண்களைக் குற்றவாளியாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால், தங்கள் மனைவியை கைவிடும் இந்துக்கள் பற்றி மவுனமாக உள்ளீர்கள். (0.28 மில்லியன் முஸ்லிம் பெண்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்றால், 1.19 மில்லியன் இந்துப் பெண்கள் பிரிந்து வாழ்வதாக கூறுகின்றனர்). இந்துப் பெண்கள் கைவிடப்படுவதை தவிர்க்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
- 2013இல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தும், மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அதைக் கொண்டுவர முயற்சிக்காதது ஏன்?, நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா 188 நாடுகளில் 147ஆவது இடத்தில் உள்ளது.
- உங்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. சதவீதத்தில் தண்டிக்கப்படும் அளவு (18.9) 10 ஆண்டுகளில் மிகக் குறைவானதாக இருக்கிறது. அரசின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த விவரங்களை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
விவசாய நெருக்கடி
தனது முயற்சி காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் அதிக பயிர் விளைச்சல் இருப்பதாக மோடி கூறியுள்ளார். 22 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்பட, விவசாயிகளுக்கான வர்த்தகச் சூழல் மேம்படத் தமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
புதிய காங்கிரஸ் மாநில அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி குறித்துக் கேள்வி எழுப்பியவர், விவசாயத்தை அமைப்பு நோக்கில் சீர்திருத்த வேண்டும் என கூறியுள்ளார். நல்லது, ஆனால் இந்தக் கேள்விகள் எழுகின்றன.
- உங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும்,. எம்.எஸ்.சாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்றாதது ஏன்?
- விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்குவதாக உங்கள் அரசு உறுதி அளித்தது. விவசாய அமைச்சகத்தை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என பெயர் மாற்றினீர்கள். இவை எல்லாம் மீறி, உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் மோசமான சந்தை எனும் இரட்டைப் பிரச்சனையால் அவதிப்படும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அரசுத் தரப்பில் இருந்து போதிய நிவாரணம் இல்லை.
ரபேல் ஒப்பந்தம்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செயத்தை வைத்துத் தப்பித்துக்கொண்ட பிரதமரிடம் இது குறித்துக் கேட்கப்படவில்லை.
இதில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டிய விஷயங்கள்:
- ஏற்கனவே வாங்கத் திட்டமிடப்பட்ட 126 விமானங்களிலிருந்து 36 விமானங்களாகக் குறைக்கும் வகையில், டசால்ட் ஏவியேஷனுடனான முந்தைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
- முந்தைய ஐமுகூ அரசு வாங்க இருந்த, ரூ.1600 கோடியை விட மூன்று மடங்கு விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்ட்டுவது சரியா?
- பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் அறியாமல் பிரதமர் எப்படித் தனியாக பிரான்சுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்?
- பாதுகாப்புக் கொள்முதல் நெறிமுறைகள் மீறப்பட்டனவா? பாதுகாப்பிற்கான காபினெட் குழுவின் முன்கூட்டி அனுமதி ஷரத்து மீறப்பட்டதா?
- முந்தைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களில் 108 விமானங்களைத் தயாரிக்க இருந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (எச்.ஏ.எல்.) ஏன் புதிய ஒப்பந்தத்தில் ஆப்செட் பாட்னராகக் கருதப்படவில்லை?
- இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிரான்ஸ் அதிபரான ஹாலண்டே, எச்.ஏ.எல்.லுக்கு பதிலாக அனில் அம்பானியை ஆப்செட் பாடனராக ஏற்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார். ஒரு தனியார் நிறுவனத்திற்கு இப்படிச் சலுகை காட்டியது ஏன்?
அரசியல் வன்முறை
கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற எதிர்கட்சி மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் தாக்கப்படுவதாகப் பிரதமர் கூறியுள்ளார். அவரது ஆதங்கம் சரியானதே.
ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், பிகார் திரிபுரா போன்ற மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுவது குறித்து அவரது பதில் என்ன?
பிரதமரிடம் விடாமல் கேள்வி கேட்கப்பட்டிருக்ககூடிய சில சந்தர்பங்கள் இவை. ஆனால் தற்போதைய அரசியல் விவாதத்தைத் தவிர்த்துவிட்டு, நலத் திட்டங்கள் பற்றிப் பேசுவதில் தான் வல்லவர் என மோடி உணர்ந்த்தியதால் இவை நிகழவில்லை.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ராமர் கோயில் கட்டத் தனது அரசு சட்டத் திருத்தம் கொண்டுவராது என்பது மட்டுமே அவர் உறுதியாக அளித்த பதில்.
ஒன்றரை மணிநேர உரையாடலில் மற்ற விஷயங்கள் வெளிக்கொணரப்படவில்லை. ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் முன்னேறவில்லை. இந்திய திறன் வளர்ச்சித் திட்டமும் அப்படித்தான். ஐடி துறை சரிவில் உள்ளது. ஸ்டார்ட் அப்கள் மோசமான முதலீட்டுச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகம் விளம்பரம் செய்யப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் தாக்கம் பற்றித் தெரியவில்லை. இந்திய வங்கிகளின் வாராக்கடனுக்கு இது மேலும் வலு சேர்க்கும் என்பது மட்டுமே தெரிந்திருக்கிறது.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பற்றிப் பேசினாலும், ஆர்டிஐ சட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய முயன்றுள்ளது. வாக்குறுதி அளித்தபடி லோக்பாலை உண்டாக்கவில்லை.
பேட்டி முழுவதும், பிரதமர் அமைச்சரவை உதவி இல்லாமல் தான் செயல்படுவதுபோல முன்னிறுத்திக்கொண்டார். 2014 முதல் அவரது அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு அமைச்சகங்கள் என்ன செய்துள்ளன எனப் பத்திரிகைகள் அறிய வாய்ப்பில்லை.
சர்ஜிகல் தாக்குதல் பற்றி பேசிய போதுகூட, அது நிகழ்வும் போது ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். இது வெற்றி பெற்ற பிறகுதான் ராணுவம் பாதுகாப்பிற்கான காபினெட் குழுவிடம் தெரிவித்தது. இதில் பாதுகாப்பு அமைச்சரின் பங்கு என்ன எனத் தெரியவில்லை.
மோடியின் கீழ் நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத்தில் ஆழமான விவாதம் தேவை எனப் பேட்டியில் அவர் குறிப்பிட்டாலும், நாடாளுமன்றத்தில் அவரது பங்கேற்பு மோசமாகவே இருக்கிறது. மோடியின் கீழ் நாடாளுமன்றக் கூட்டங்கள் குறைந்துள்ளன. 57 அமர்வுகளுடன் 2017 மோசமான ஆண்டாக அமைகிறது.
அரசியல் உரையாடலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் பாஜகவின் முயற்சியாக மட்டுமே பிரதமரின் பேட்டி அமைந்தது. நான்கு ஆண்டுகளாக இதுதான் நிகழ்கிறது.
ஆனால் முக்கியக் கேள்விகள் கேட்கப்படவில்லை, பதில்களும் வரவில்லை. மோடி பிரச்சாரத்தில் கூறியதற்கும் நான்கு ஆண்டுகளில் நடந்துகொண்ட விதத்திற்கும் பெரிய இடைவெளி உள்ளது. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பவில்லை எனப் பலரும் கருதுகின்றனர். இதை மோடி ஒப்புக்கொள்கிறாரா?
அஜாய் ஆசீர்வாத் மகாபிராசாஸ்தா
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-ani-interview-questions
I just stopped reading after this.
உங்கள் பிரச்சாரத்தில் சிறுபான்மையினரைத் திருப்திபடுத்துவது என்னும் விஷயத்தைப் பேசியிருக்கிறீர்கள். இப்போது முத்தாலக்கில் ஈடுபடும் முஸ்லிம் ஆண்களைக் குற்றவாளியாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால், தங்கள் மனைவியை கைவிடும் இந்துக்கள் பற்றி மவுனமாக உள்ளீர்கள். (0.28 மில்லியன் முஸ்லிம் பெண்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்றால், 1.19 மில்லியன் இந்துப் பெண்கள் பிரிந்து வாழ்வதாக கூறுகின்றனர்). இந்துப் பெண்கள் கைவிடப்படுவதை தவிர்க்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
You also don’t know where to see religious partiality. This line is similar to how RSS speaks.
தான் என்ற நினைப்பு ஒருவரை நிச்சயம் அழித்துவிடும் . ஆட்சியின் சாதனைகளுக்கு தான் என்றும் ஆட்சி பொறுப்பில் உள்ள மற்றவர்கள் வெறுமனே இந்த ஆட்சியில் அதிகாரத்தை அனுபவித்து வாழும் உங்களது கட்சியினர் என்று கொடுத்துக்கொள்ளலாமா ?