இக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக்கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும்? 2018 நவம்பர் முடியும்போது இலக்கை மீறி 115% பணத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.
உலகில் மாசுப் பிரசினை அதிகமுள்ள நகரங்களுள் ஒன்றான புதுதில்லியில் அமர்ந்து இதை நான் எழுதுகிறேன். போனவாரம் நான் சுட்டிக்காட்டிய வசந்தம் வருவதற்கு இன்னும் பல வாரங்கள் பிடிக்கலாம்.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியபோதிலும், பாஜக தலைமை ஆவேசத்துடன் நாடாளுமன்றத்தை அவமதித்து அதற்கான மரியாதையைத் தர மறுத்துவருகிறது. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஜனவரி 01 அன்று அளித்த நேர்காணலில் பிரதமர் மோடி “தெலங்கானாவிலும் மிசோரத்திலும் பாஜக வெற்றி பெறுமென்று யாருமே சொல்லவில்லை. மக்கள் தெளிவான முடிவை அளித்துள்ள சத்தீஸ்கரில் மட்டும் பாஜக தோற்றுள்ளது. ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் தொங்கு சட்டசபைகள்தான் அமைந்துள்ளன,” என்றார்.
உறுதியான தீர்ப்பு
தொங்கு சட்டசபை என்றால் அரசு அமைக்கும் நிலையில் எக்கட்சியும் இல்லை என்று அர்த்தம். இந்த 3 மாநிலங்களிலும், உண்மையில் இருமுனைப் போட்டிதான் நிலவியது. தேர்தல் முடிவிற்குப் பின் பாஜகவுக்கு அரசு அமைக்கத் துளியும் வாய்ப்பு இல்லாதிருந்தது; காங்கிரசுக்குத்தான் வாய்ப்பு இருந்தது: எந்தத் தடையுமின்றி அக்கட்சி 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தது. இதை உறுதியான தீர்ப்பு என்றுதான் நான் கூறுவேனே தவிர, தொங்கு சட்டசபை எனக் கூற மாட்டேன்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 34 தொகுதிகளிலும் (49லிருந்து 15), ராஜஸ்தானில் 90 தொகுதிகளிலும் (163லிருந்து 73), மத்தியப் பிரதேசத்தில் 56 தொகுதிகளிலும் (165லிருந்து 109) பாஜக தோற்றுள்ளது. இது மக்கள் உறுதியாக பாஜகவை நிராகரித்ததைக் காட்டுகிறது.
தேர்தல் முடிவுகள் பற்றிய திரு நரேந்திர மோடியின் ஆய்வை யாரும் நம்பத் தயாரில்லை. உதாரணமாக, இது பெரிய தோல்வி என்பதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து; இந்துத்துவ எஞ்ஜினைத் திரும்பவும் இயக்க ஆரம்பித்துள்ள ஆர்எஸ்எஸ்ஸானது உச்ச நீதிமன்றத்தில் தேங்கியுள்ள மேல்முறையீடுகள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ஒரு அவசரச் சட்டம் தேவையெனக் கோரிக்கை விடுக்கிறது.
ஊடகத்தினர் மொழியிலும் மக்களின் பார்வையிலும் மோடியின் நேர்காணல், பருவம் முடிந்தபின் தரப்படும் ஒரு ரிப்போர்ட் கார்டு போலவே இருந்தது. இரு விதங்களில் இது முக்கியமானதாகும்: பிரதமர் சொன்ன விஷயத்துக்கும் அவர் சொல்லாமல் விட்டு விட்ட விஷயத்துக்கும்.
சொல்லப்பட்டவையும் விடுபட்டவையும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சர்ஜிகல் ஸ்ட்ரைக், வெறி கொண்ட கூட்டத்தால் அடித்துக் கொல்லப்படுதல், ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா, சபரிமலை விவகாரம், முத்தலாக் மசோதா, ரஃபேல் ஜெட் விமான பேர ஊழல் பிரதமர்), விவசாயக்கடன் ரத்து ‘மகா கூட்டணி (எதிர்க்கட்சிகள் ஒன்றிணைதல்) போன்ற பிரதமர் பேசிய விஷயங்களை எடுத்துக்கொள்வோம். எப்போதும்போல் எதையும் வெளியிடாமல், தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அரசு செய்ததெல்லாம் சரி என்றும் “மோடி என்றாலே பொதுமக்களின் அன்பும் வாழ்த்துக்களும் கலந்தவர்” என்றும்தான் சொன்னார்.
தன் தவறை ஒப்புக்கொள்ளாத மனிதர்களை நான் எப்போதும் நம்பவே மாட்டேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை இமாலயத் தவறு, கட்டமைப்புத் தவறுகள் நிறைந்த ஜிஎஸ்டி அமலாக்கத்தில் இன்னும் மோசமாகிவிட்டது, சர்ஜிகல் ஸ்டிரைக் தனித்துவமாக இல்லாமல் ஊடுருவல் / தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமைந்தது, முத்தலாக் மசோதா பாரபட்சமானது, விமானப் படையும், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் ரஃபேல் பேரத்தில் ஏமாந்தன; தவறான கொள்கைகளின் காரணமாக விவசாயக் கடன் ரத்து செயலற்றுப் போனது. இந்த முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்வது போல் தோன்றினாலும் பிரதமரது கருத்துக்கள் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளன.
பிரதமர் பேசாத விஷயங்களை இப்போது நாம் பட்டியலிடலாம்: பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் துயர்கள் / தற்கொலைகள், பெண்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக் குழுக்கள், தண்டனை பெறாமல் தப்பிப்பவர்கள், ஜம்மு காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம், சிறு – குறு – நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுதல், தேங்கி நிற்கும் திட்டங்கள், திவாலான கம்பெனிகள், வரவு – செலவுத் திட்ட இலக்குகளை அடைய முடியாத தோல்வி, நிதிப் பற்றாக்குறை, அரசுக் கட்டமைப்பில் பொருளாதார வல்லுநர்கள் விலகிச் செல்லுவது.
பின்னால் வரும் வண்டிகளைப் பார்ப்பதற்கான கண்ணாடியை மட்டுமே பார்த்து கார் ஓட்டுபவராகத்தான் பிரதமர் எனக்குத் தெரிகிறார். கடந்த காலம் பற்றிப் பேசிய அவர் எதிர்காலத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அவரால் முன் பக்கம் பார்க்க முடியவில்லை, மக்களின் உணர்வுகளை ஆக்கபூர்வமாக மாற்றவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. ரிப்போர்ட் கார்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘ஃபெயில்’ என்ற வார்த்தைதானே இருக்கும்!
ஆற்றொணா நடவடிக்கைகள்?
புத்தாண்டில் எதுவுமே மாறியுள்ளதாகத் தோன்றவில்லை. ஜனவரி 02 அன்று மக்களவையில் ரஃபேல் பேரம் பற்றி சூடான விவாதம் நடந்தபோது பிரதமர் அவையில் இல்லை, பாதுகாப்பு அமைச்சர் பார்வையாளராக அமர்ந்திருந்தார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி (எதற்கும் காரணம் கண்டுபிடிப்பவர்) முக்கியக் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை
வசந்த காலம் வருவதற்கு இன்னும் 10 வாரங்கள் இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் முன் எதை எதிர்பார்க்கலாம்? என்னால் யூகம் மட்டுமே செய்ய முடியும்.
மாற்றம் வந்துவிடும் என்பது மக்களிடையே சொல்லப்படும் கதையாடல். ஆனால் இக்கதையாடலை மாற்ற அரசு ஏதாவது செய்தாக வேண்டுமென்பது தெளிவு. இக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக் கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும்? 2018 நவம்பர் முடியும்போது இலக்கை மீறி 115% பணத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும், வேறு வழியற்ற அரசு சில வகை ‘நிவாரணங்களை’ அறிவிக்கலாம், கடன் வாங்கலாம், ஆக்கபூர்வ அக்கவுண்டிங்கினால் அரசியல் அலையைத் திசைமாற்ற முயற்சிக்கலாம். இந்நடவடிக்கைகளால் பலன் கிடைக்காவிட்டால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலைக் கட்டத் தேவையான அவசரச்சட்டத்தை இயற்றலாம். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருப்பதுடன் பலரைக் கோபப்படுத்தி பிரிவினைவாதத்தையும் வளர்க்கும்.
பொதுவாக, தேர்தலுக்குப் பத்து வாரங்களுக்கு முன் அரசு செய்யும் எந்தச் செயலையும் மக்கள் சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். ஆகவே, ரிப்போர்ட் கார்டில் இருக்கும் ‘ஃபெயில்’ என்ற வார்த்தையை அழிப்பது அவ்வளவு சுலபமாக இராது.
ப. சிதம்பரம்
*
Mr. PC is the biggest corrupt in UPA… Unless he proves him self in court I hope he doesn’t have any rights to comment the ceñteal government