2019ல் நாம், ‘புனிதமில்லாக் கூட்டணி’ பற்றி நிறையவே கேள்விப்பட இருக்கிறோம். ஏற்கனவே சிலவற்றைக் கேட்டிருந்தாலும், இன்னும் பெரியவை காத்திருக்கின்றன.
பாஜக தலைவர்கள் மற்றும் அரசுக்கு நட்பான அதிகாரிகள் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலைக் குற்றம்சாட்டக் கடந்த ஆண்டு இந்தப் பதத்தை உருவாக்கினர். நாடு முழுவதும், தீவிர எதிரிகள் தங்கள் பகையை மறந்துவிட்டுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்றாக நிற்க, மகாபந்தன் கூட்டணியை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் ‘புனிதமில்லாக் கூட்டணி’ உண்டானது. மே மாதம் கர்நாடகாவில் உண்டானது. நவம்பரில் ஆந்திராவில் அதன் பிறகு ஜம்மு காஷ்மீரில் உருவானது.
இப்போது கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத் தொண்டர்களிடையே இது பற்றி விவரித்தார்:
“இந்தக் கட்சிகள் மற்றும் தலைவர்கள், காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த டாக்டர் ராம் மனோகர் லோகியாவால் ஊக்கம் பெற்றதாகக் கூறுகின்றனர். ஆனால், காங்கிரசுடன் சந்தர்ப்பவாத, ‘புனிதமில்லாக் கூட்டணி’யை அமைத்துக்கொள்ள முயற்சிப்பது லோகியாவுக்கு என்ன வகையான பெருமையாக இருக்கும்?”
தனிப்பட்ட மற்றும் கொள்கை நோக்கிலான சமரசங்கள் கொண்ட நடைமுறை சார்ந்த கூட்டணி இது என்பது உண்மையானதுதான்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பலவீனமானவர்களின் ஒற்றுமைதான் மகாபந்தன் என்று கூறியதுபோல, இது வேறு வழியில்லாத உத்திதான்.
பாஜக தலைவர்கள் இன்று எதிர்கட்சிகள் ஒற்றுமையைப் புனிதமில்லாதது என கூறுகின்றனர் என்றால், அவர்கள் கட்சி முதலில் எப்படி ஆட்சிக்கு வந்தது, 1977இல் இந்தியா எப்படி காங்கிரஸ் அல்லாத அரசைத் தேர்வு செய்தது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க மாட்டோம் என்று அவர்கள் நம்புவதுதான் காரணம்.
அவசர நிலையை முடிவுக்குக் கொண்டுவருவது
1977 ஜனவரி வரை, பிரதமர் இந்திரா காந்தி நாட்டை 19 மாதங்கள் அவசர நிலையின் கீழ் வைத்திருந்தார். அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், ஜனவரி 18ஆம் தேதி, அவர் அவசர நிலை முடிவுக்கு வருவதாகவும், 2 மாதங்களில் இந்தியா புதிய அரசைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அறிவித்தார்.
தேர்தலில் கட்சியின் வாய்ப்புக்கு – குறிப்பாக அவரது மற்றும் மகன் சஞ்சயின் வாய்ப்புக்கு – சாதகமாக இந்த அறிவிப்பு வெளியான நேரம் அமைந்ததாகக் கருதப்பட்டது. இந்திரா, குறைந்த பெரும்பான்மையுடனேனும் மீண்டும் வெற்றி பெறுவார் என்று எல்லா நோக்கர்களும் கருதினர்.
அதற்கு முந்தைய 19 மாதங்களில் காங்கிரஸ் செய்தி ஊடகத்தைக் கட்டுப்படுத்தியது. 2018இல் வெளியான, ‘ஏ பியூப்பில் பிட்ரேய்ட்’ புத்தகத்தில் அத்வானி இதை விவரித்துள்ளார்: “வெகுஜன ஊடகத்தின் அனைத்து தொடர்புகளும், சுதந்திரம், சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் எல்லாம் மேட்டுக்குடி கருத்தாக்கம் என நம்ப வைக்கும் அளவுக்கு மக்களை மூளைச் சலவை செய்யப் பயன்படுத்தப்பட்டது”.
ஆக, நாட்டின் நினைவில் இந்திரா உயர்ந்து நின்றார். அவர் ஜனநாயகத்தை நம்பியதை விட, நாட்டிற்குத் தான் தேவை என நம்பினார். அவரது உறவினரான நயன்தாரா சாகல், “இந்திரா இன்றி இந்தியா இல்லை என அவர் நினைத்தார்” என்று அவரைப் பற்றி எழுதினார்.
வலதுசாரி மற்றும் இடதுசாரி எதிர்கட்சித் தலைவர்கள் அதற்கு முந்தைய ஓராண்டாகச் சிறையில் இருந்தனர். அவர்கள் பொதுமக்கள் பார்வையில் இல்லை, நிதி திரட்ட அல்லது பிரச்சாரம் செய்ய முடியாமல் இருந்தனர். தேர்தலை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதுவரை தேர்தலில் தோல்வி அடைந்திராத காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திரள்வதற்கு அவர்களுக்கு ஆறு வாரங்கள் மட்டுமே இருந்தன.
இருப்பினும் சுவாரஸ்யமான ஒன்று நிகழ்ந்தது- சிறையில் இருந்த பொதுவான அனுபவம், அதிலும் குறிப்பாக சில நேரங்களில் ஒரே சிறைப்பிரிவில் இருந்தது, வேறுபட்ட கொள்கைகளை கொண்ட பல்வேறு தலைவர்கள் இடையே ஒருவித பிணைப்பை உண்டாக்கியிருந்தது. இந்திராவுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்திய ஜேபி எனப்படும் ஜெயபிரகாஷ் நாராயணன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் தான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அறிவித்தார்.
இந்திரா காந்தி தேர்தலை அறிவித்த 5 நாட்கள் கழித்து ஜனவரி 23ல், நான்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றாக சேர்ந்தனர்:
- இடதுசாரிகள் தரப்பிலிருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ராஜ்நாராயன் தலைமையிலான சோஷலிசவாதிகள்.
- மொராஜி தேசாய் தலைமையிலான காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த பிரிவு, காங்கிரஸ் ஓ.
- உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் நாயகனாகக் கருதப்பட்ட சரண் சிங் தலைமையிலான பாரதிய லோக்தளம்.
- அத்வானி மற்றும் வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜன சங்கம். இதுதான் பின்னாளில் பாஜகவானது.
இவர்கள் கூட்டணி மட்டும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை, தத்தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு ஜனதா கட்சி எனும் புதிய கட்சியை உண்டாக்கினர்.
இது துவக்கம்தான். சில வாரங்கள் கழித்து, முன்னணி தலித் தலைவரான ஜகஜீவன் ராம், இந்திரா காந்தி காங்கிரசின் ஒரு பிரிவுடன் (ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்) வெளியே வந்து ஜனதா கூட்டணியில் இணைந்தார்.
பத்திரிகையாளரான நிஹால் சிங் அப்போது தனது பத்தியில், “ஜகஜீவன் ராம் வெளியேறியது மற்றும் பல குறைகளை மீறி காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக விளங்க வேண்டும் என்பதில் ஜனதா கட்சி காட்டும் உறுதி, கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதாக உள்ளது” என்று எழுதினார்.
துவக்கத்தில் இருந்து, முன்னாள் போட்டியாளர்களிடையே கடும் அவநம்பிக்கை இருந்தது. கூட்டணிக்குள் அதிகாரப் பகிர்வுக்குப் போட்டி இருந்தது. மொராஜி தேசாய் தலைவராக நியமிக்கப்பட்டார். சரண் சிங் துணைத் தலைவராக இருக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வட இந்தியாவில் இடப் பகிர்வில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். இந்த சமரசம், ஜனசங்க உறுப்பினர்களுக்குக் கடும் அதிருப்தி அளித்தது பற்றி அத்வானி எழுதியிருக்கிறார்.
இடதுசாரி, வலதுசாரிகளை இணைப்பது எப்படி?
அகாளி தளம், மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் ஆகிய இரண்டு முக்கியக் கட்சிகள், ஆர்எஸ்எஸ் தாக்கம் கொண்ட இந்தக் கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அவசர நிலை காலத்தில் மிகுந்த இன்னலுக்கு உள்ளானதால், காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காகத் தேர்தல் களத்தில் நடைமுறை உடன்பாட்டைச் செய்துகொண்டது.
கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்யவில்லை. சரண் சிங் இதற்குத் தீவிரமாக முயன்றார். ஜகஜீவன் ராமும் முயன்றார். எனினும் கூட்டணியை வழிநடத்திய ஜேபி, 81 வயதான மொராஜி தேசாயை ஆதரித்தார்.
ஆறு வாரங்கள் முடிவில், 1977இன் ‘புனிதமில்லாக் கூட்டணி’ ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. பிராமணக் கட்சிகள், மத்திய தர வகுப்புத் தலைவர்கள் மற்றும் தலித் தலைவர்களைக் கொண்டிருந்தது.இந்திராவுடன் கருத்து வேறுபாடு கொண்ட நயன்தாரா சாகல், “யதார்த்தத்திற்கு பொருந்தாத லட்சியவாதி என கூறப்பட்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வெற்றிக்கு வழிகாட்டியிருப்பது அவரது மிகச்சிறந்த நடைமுறை சாதனையாகும்” என ஜேபி பற்றி எழுதினார்.
அப்படித்தான் நடந்தது.
1977 தேர்தலில் ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸின் வலிமை மக்களவையில் 350 இடங்களிலிருந்து 153 இடமாகக் குறைந்தது. இந்திரா, சஞ்சய் இருவரும் தோற்றனர். உ.பி., பிகார், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
எதிர்பாராத இந்த வெற்றிக்குப் பிறகே ஜனதா கட்சி பிரதமரைத் தேர்வு செய்தது. ஜேபியும் கிருபாளினியும் இதைக் கையாண்டனர். இதன் விளைவாக நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக மொரார்ராஜி தேசாய் பதவியேற்றார்.
40 ஆண்டுகள் கழித்து,நிதி வாரி இறைக்கும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வளைந்து கொடுக்கும் மீடியா ஆதரவுடன் பாஜக ஆட்சி அதிகாரத்தின் மீது இறுக்கமான பிடி கொண்டிருக்கிறது. மீண்டும் ஒரு முறை எதிர்க்கட்சிகள் அரசியல் அதிசயத்தை நிகழ்த்த மாபெரும் கூட்டணி ஒன்றே வாய்ப்பு என்பதை உணர்ந்துள்ளன.
இன்றைய மாபெரும் கூட்டணியும் ‘புனிதமில்லாக் கூட்டணி’யா? 1977இல் இருந்து போல் இல்லை எனலாம். அப்போது, மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிசுக்கு எதிராக அரசியலின் எதிர் எதிர் துருவங்கள் ஒன்றிணைந்தன. இப்போது, வலுதுசாரித் தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராகக் கூட்டணி உருவாகிறது.
1977 தேர்தல் இன்றைய எதிர்க்கட்சிகளுக்கான பாடங்களைக் கொண்டுள்ளது. முதல் பாடம் எளிமையானது: எதிர்க்கட்சிகள் வாக்குகளை சிதற அனுமதிக்காமல், ஒருங்கிணைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ள பெரிய கட்சியை வீழ்த்தலாம்.
ஆனால் ஜனதா கட்சியை ஒருங்கிணைக்க ஜெபி இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளில் அப்படி யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்க ராகுல் காந்தி தகுதியானவரா என்பதை அறிய 2019 தேர்தல் முடிவுகள் வரை காத்திருக்க முடியாது. வாக்குப் பதிவிற்கு முன் இது தீர்மானிக்கப்படும். மோடி குறிப்பிட்டதுபோல, பல ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியைத் தங்கள் எதிரியாக கருதிய பல கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அவர் வெற்றி பெறுவதைப் பொறுத்து இது அமையும்.
வேறு மாற்று இல்லை எனும் பாடமானது ஒரு மாயை. மாறாக தேவையான மாற்று ஒன்று உள்ளது. எந்தத் தலைவரும் இன்றிமையாதவர் அல்ல. 1976இல் சிறையில் இருந்தபடி அத்வானி, “ஒருவரின் இன்றிமையாத தன்மையும் ஜனநாயகம் இணைந்திருக்க முடியாது” என்று எச்சரித்தார்.
அதற்குச் சரியாக ஓராண்டு கழித்து இந்திராவின் உறவினர் நயன்தாரா சாகல் இவ்வாறு எழுதினார்: “இன்றியமையாத தன்மையின் மாயை தேர்தலில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. தனது நாட்டு மக்கள் சுதந்திரத்தில் வாழந்து, வளர வேண்டும் எனும் நேருவின் கனவை மெய்பித்துள்ளது”.
ரகு கர்நாட்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/the-unholy-alliance-against-modi-and-the-election-he-wants-us-to-forget